2ஜியும், கருத்துக்கணிப்பும்: கலங்கி நிற்கும் திமுக!

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட டெஸ்மா, எஸ்மா,மதமாற்ற தடைச் சட்டம், அரசு ஊழியர்களை பந்தாடியது, பொடா சட்டம் துஷ்பிரயோகம் என அதிமுக ஆட்சிக்கு எதிரான கோபத்தைக் கிளற பல பிரச்சனைகள் வரிசைக்கட்டி நின்றன.


ஆனால் இந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராக மேற்கூறிய குற்றச்சாட்டுக்கள் போன்றவை இல்லாமல் போனாலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலும், முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் வளம் கொழிக்கும் தொழில்களை வளைத்துப் போட்டு, மற்றவர்களை தலையெடுக்க விடாமல் செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களும் எதிர்கட்சியினரின் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிலும் 2ஜி வழக்கில் சிபிஐ இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 120 பி, 468, 471, 420 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் சதி, போலி கையெழுத்து,மோசடி மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதை மையமாக வைத்து எதிகட்சியினரது பிரச்சாரம் இன்னும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

போதாதற்கு திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியும், ஊழலில் தான் திமுகவுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்பதுபோன்று காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என வரிசையாக ஊழல் சேறை பூசிக்கொண்டுதான் நிற்கிறது.

இதனையும் எதிர்கட்சிகள் கூறி திமுக கூட்டணியே ஊழல் கூட்டணிதான் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.

அதே சமயம் 2ஜி வழக்கு குற்றப்பத்திரிகையில் ராசாவின் பெயர் இடம்பெற்றும், கலைஞர் டி.வி. அலுவலத்தில் சிபிஐ சோதனை நடத்தி, அவரது மனைவி தயாளு அம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரிடத்தில் விசாரணையும் மேற்கொண்ட பிறகும் கூட, ஊழலில் தமது குடும்பத்தினருக்கோ, கட்சிக்கோ, கட்சி தோழர்களுக்கோ ஊழலில் தொடர்பு இல்லை என்றும், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூற முடியும் என்று கூறி சமாளித்து வருகிறார்.

ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வர தாமதமானாலும், கருணாநிதியே கூறுகிறபடி ஊடகங்கள் இந்த ஊழலுக்கு கொடுக்கிற முக்கியத்துவமும், எதிர்கட்சிகள் செய்கிற பிரச்சாரமும் தேர்தலில் 2ஜி ஊழல் ஒரு முக்கிய பிரச்சனையாக மையம் கொண்டிருப்பதை திமுகவால் தடுக்க இயலவில்லை.

திமுகவினர் வெளியில், வெற்றிபெறுவோம் என்று கூறி வந்தாலும், கட்சியின் முக்கியஸ்தர்களே நடக்கப் போகும் ஏப்ரல் 13 தேர்தல் நிச்சயம் தங்களுக்கு கடினமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.

போதாதற்கு அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கணிப்புகளும் திமுக தலைவர்களது வயிற்றில் புளி கரைப்பதாக உள்ளது.

"இந்த கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்; அவை திமுகவுக்கு எதிராக திட்டமிட்டே வெளியிடப்படுகிறது" திமுக தலைவர் கருணாநிதி ஒருபுறம் பிரச்சாரம் செய்துவந்தாலும், பல மொழிகளில் வெளியாகும் வார பத்திரிகை ஒன்றின் கருத்துக் கணிப்பை தாங்கி வந்த லட்சக்கணக்கான பிரதிகளை, மக்களிடம் சென்று சேர்ந்துவிடக்கூடாது என்று, திமுக தரப்பு மொத்தமாக விலை கொடுத்து வாங்கிச் சென்றுவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஒரு நிகழ்விலிருந்தே கருத்துக்கணிப்பு,திமுகவினருக்கு எந்த அளவுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் தேர்தலுக்கு இன்னமும் மீதமிருக்கும் 10 நாட்களுக்குள் ஜெயலலிதா ஏதாவது ஏடாகூடமாக பேசினாலோ அல்லது எதையாவது தடாலடியாக செய்தாலோ அது திமுகவுக்கு சாதமாக திரும்ப வாய்ப்புள்ளது. கூடவே தேமுதிக தலைவர் விஜயகாந்தும் மீண்டும் தனது கோமாளித்தனங்களை அரங்கேற்றாமல் இருக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி வாக்குப்பதிவுக்கு முந்தைய ஓரிரு தினங்களில் "திருமங்கலம்" பார்முலா அரங்கேறினால் இப்போதைய கருத்துக்கணிப்புகள் மாறிப்போகும் சாத்தியமும் உள்ளது.

தேர்தல் முடிவில் தெரியும் மாண்புமிகு வாக்காளர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது!

Comments