தராக்கி'சிவராம்: தமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம்



ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது.

தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன முரண்பாடு உச்சத்தைத் தொட்டபோது அகிம்சையும் வாய்ப் பேச்சும் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தராது என்ற புரிதல் இளைஞர் மத்தியிலே உருவாகி அவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தமது மார்க்கமாகத் தேர்ந்தேடுத்த போது இன உணர்வு மிக்க ஒவ்வொரு தமிழ் இளைஞனும் விடுதலைப் போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டான்.

பார்வையாளனாக இருப்பதைவிட பங்காளியாக மாறுவதே மேல் என்ற கொள்கையுடன் தனது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்ந்து சிவராம் எடுத்த முடிவும் அவர் பயணித்த பாதையில் அவருக்குக் கிட்டிய அனுபவமும், அதனால் சம்பாதித்துக் கொண்ட அறிவுமே பிற்காலத்தில் ஊடகத்துறையில் அவர் தனக்கெனத் தனியான முத்திரை பதிக்க பெரிதும் உதவியது.

போராளியாக இருந்த காலத்தில் கூட பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப்போக அவர் விரும்பவில்லை என்பது அவரது முன்னாள் தோழர்கள் தற்போதும் நினைவு கூரும் ஒரு விடயம்.

இலக்கியத் துறையின்மீது இருந்த அதீத ஈடுபாடு காரணமாகவே பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த சிவராம் ஆரம்பம் முதலே கடைப்பிடித்துவரும் தீவிர விமர்சனக் கண்ணோட்டம் அவரது பிற்கால எழுத்துக்களில் நன்கு பரிணமித்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவராமின் பங்கு எனும் தலைப்பிலே ஆய்வு செய்யப் புறப்படும் ஒருவர் சிவராமை வகைப்படுத்துவதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வார் என்பது நிச்சயம். ஏனெனில் சிவராமின் ஆளுமையும் இயங்குதளமும் அத்துணை விசாலமானது.

ஒரு ஊடகவியலாளராகவே சிவராம் வெளிச்சத்துக்கு வந்தார். ‘தராகி’ என்ற புனைபெயருடன் சிங்கள இனத்துவேசத்தைக் கக்கும் பத்திரிகை என வர்ணிக்கப்படும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகையிலேயே அவர் பத்தி எழுத்தாளராக அறிமுகமானார்.

தீவிரத் தமிழ்த் தேசியவாதியான சிவராம் ஒரு சிங்கள இனவெறிப் பத்திரிகையில் எழுதுவதனூடாகத் தனது எழுத்துலக வாழ்வை ஆரம்பித்தமை ஒரு முரண்நகையே.

ஆரம்ப காலங்களில் சிவராமின் எழுத்து கவனிக்கப்படாது விடப்பட்ட போதிலும் தான் சார்ந்த விடுதலை இயக்கமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடனான தொடர்புகளைத் துண்டித்த பின்னர் அவரின் எழுத்துக்களில் புதிய உத்வேகமும் சடுதியான மாற்றமும் ஏற்பட்டன.

ஆனால், சிவராமின் கருத்தின்படி 90 களின் நடுப்பகுதியில் அவர் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மேற்கொண்டிருந்த பயணமே அவரின் பிற்கால வாழ்க்கைக்கான செல்நெறியைத் தீர்மானித்தது எனலாம்.

இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக அறியப்பட்ட சிவராம் தீவிர தேசியவாதத்தைக் கைக்கொள்ளக் காரணமான இந்த பயணத்தின் விளைவு சிவராமுடைய எழுத்தின் போக்கை மட்டுமன்றி அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் போக்கையும் மாற்றியமைத்தது.

தமிழர்களின் போராட்டம் ஒரு ‘நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம்’ எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார்.

எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. தான் பத்திரிகைகளில் முன்வைத்த கருத்துக்களுக்காக நேரில் கேள்வி எழுப்பப்பட்ட போதுகளில் அவற்றுக்கு அவர் ஆணித்தரமாகப் பதில் கூறவேண்டி ஏற்பட்டது.

தனது கருத்துக்களுக்காக சிங்கள ஊடகவியலாளர்களுடன் மோதவேண்டிய சூழல் உருவான பேதிலும் அவர்களுடனான தொழில்முறை உறவை வளர்த்துக் கொள்ள சிவராம் தவறவில்லை.

அது மட்டுமன்றி சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் மாற்றின ஊடகவியலாளர்களுடனும் பல்வேறு தளங்களில் அவர் கரங் கோர்த்துக் கொண்டார்.

மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் ‘கண்டு கொள்ளாமல்’ விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார்.

ஊடகவிலாளர்கள் தமது ஊடகப் பணிக்கு அப்பால் எத்தகைய சமூகப்பணியை ஆற்ற முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்த சிவராம் செய்தி அளிக்கை தொடர்பிலும் ஒரு புதிய மாதிரியை அறிமுகஞ் செய்தார். அவரால் தொடங்கப்பட்ட ‘தமிழ்நெற்’ இணையத்தளம், ‘நோர்த் ஈஸ்ரன் ஹெரல்ட்’ ஆங்கில வாரப்பத்திரிகை ஆகியவை எழுத்தில் புதிய மாதிரியையும், பரிபூரண அளிக்கையின் பெறுமானத்தையும் அறிமுகஞ் செய்தன.

ஊடகவியலாளராக சிவராம் மேற்கொண்ட பணிகளுக்கு அப்பால் ஒரு தமிழ்த் தேசியவாதியாக அவர் மேற்கொண்ட துணிகரச் செயற்பாடுகளே அவரது உயிருக்கு உலை வைத்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டதன் பின்னான இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் தலைமையை ஏற்றுச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவராமின் சாதனைகளுள் ஒன்று எனக் கூறினால் அது மிகையாகாது.

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தன்னளவில் மகத்தான சாதனைகளைப் படைத்த போதிலும் அது மக்கள் சார்ந்த போராட்டமாகப் பரிணமிப்பதில் சில பின்னடைவுகள் இருந்தே வந்தன. எனினும் சிவராமைப் போன்றோரின் முயற்சிகள் இப் போராட்டத்திற்கு குடிமக்கள் சார்பு முகத்தைத் தந்திருந்தது.

பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்வுகளாகட்டும், கடையடைப்பு போன்ற எதிர்ப்பு நிகழ்வுகளாகட்டும் அவற்றை ஏற்பாடு செய்வதிலும் நேரடியாகச் சென்று பங்கெடுத்துக் கொள்வதிலும் அவை தொடர்பிலான செய்திகளை அளிக்கை செய்வதிலும் சிவராம் எடுத்துக் கொண்ட சிரத்தை அபரிமிதமானது.

இது தவிர, இலங்கைத் தீவில் கொடூரமான சட்டங்களே அமுலில் இருந்த போதிலும் அவை குடிமக்களுக்கு வழங்கியுள்ள அற்ப சொற்ப பாதுகாப்பு நெறிமுறைகளை அறிந்து கொண்டு அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் ஊடாக, கொடுமைகளையும் அநீதிகளையும் தட்டிக் கேட்கும் வல்லமையுள்ள ஒரு சமூகத்தைப் படைக்க வேண்டும் என்ற ஆவல் சிவராமிடம் நிறையவே இருந்தது.

அதன் விளைவாக மட்டக்களப்பில் உதயமான தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் செயற்பாடுகளில் குறைவாகவே வெளிப்படுத்தப்பட்ட போதிலும் கழகத்தின் அறிக்கைகள் சிவராமின் கைவண்ணத்தில் அர்த்தம் பொதிந்தவையாகவும் அறிவூட்டக் கூடியவையாகவும் அமைந்திருந்தமையை மறுப்பதற்கில்லை.

‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்ற தத்துவத்தில் சிவராமுக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை. வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதே அவரின் நிலைப்பாடு. படைத்துறை வெற்றிகளே தமிழர்களின் நியாயங்களை எதிரிக்குப் புரிய வைக்கும் என்பதில் அவர் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

சிவராமின் வகிபாகம் தமிழர் அரசியலைப் பொறுத்தவரை எவ்வளவு காத்திரமானதாக விளங்கியதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிரிகளைப் பொறுத்தவரை அது அவர்களது செயற்பாடுகளுக்குப் பெருந்தடையாக விளங்கியது. தனது உயிருக்கு இருந்த அச்சுறுத்தல்கள் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்த சிவராம் தனது பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் அக்கறை கொண்டிருந்தார்.

ஆனாலும் கூட அவரது உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டு விட்டது. சிவராமைக் கொலை செய்வதன் ஊடாக அவரின் சிந்தனைகளை தமிழர் மத்தியில் இருந்து அகற்றிவிட முடியும் எனக் கொலைகாரர்கள் மனப்பால் குடித்தனர்.

ஆனால், சிவராமின் எழுத்துக்கள் இன்றும் உயிர்வாழும் நிலையில் அவரைக் கொலை செய்தவர்களுக்கு சிவராமின் மரணம் ஒரு தோல்வியே அன்றி வேறில்லை.

சண் தவராஜா

Comments