கனடா: ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் அகதி தொடர்பான வழக்கு விசாரணை

'எம்.வி சண் சீ' என்ற அகதிகள் கப்பலில் பயனித்தவர்கள் தொடர்பான கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் அவையினது விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. இந்த நிலையில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம்சுமத்தப்படும் அகதி ஒருவரின் விசாரணை நேற்றையதினம் இடம்பெற்றிருக்கிறது.


கனேடியச் சட்டங்களுக்கு அமைவாக இந்த அகதியினை பெயர் விபரங்களை வெளியிடமுடியாத போதும் அவர் சண் சீ என்ற கப்பலில் பயணித்த 492 பேரில் ஒருவர். இந்தக் கப்பலில் பயணித்த 41 பேரைத் தவிர ஏனையவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும் அதேநேரம் ஏனையவர்களுக்கான வழக்கு விசாரணைகள் தொடர்கிறது. இவர்களுள் கனேடியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவார்கள் எனக் கருதப்படும் அனைவரும் திரும்பியனுப்பப்படுவார்கள்.

கனடாவில் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் இந்தக் கப்பலில் பயணித்த இருவர் நாடுகடத்தப்படவேண்டும் என்ற உத்தரவு முன்னரே பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

"சண் சீ என்ற இந்த அகதிகள் கப்பலில் பயணித்தவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக கனேடிய எல்லைச் சேவைகள் அமைப்பு குற்றம் சுமத்தும் ஒருவர் தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெறுவது இதுவே முதன்முறை" என கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் அவையின் பேச்சாளர் மிலீசா அன்டசன் கூறுகிறார்.

இந்தக் கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படாத 41 பேர் தொடர்பான விபரங்கள் குடிவரவு மற்றும் அகதிகள் அவையிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் 15 பேர் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் இவர் கூறுகிறார்.

34 அகதிகள் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தார் எனக் குற்றம்சுமத்தப்பட்ட பிறிதொரு அகதி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த புதனன்று வன்கூவரில் இடம்பெற்றிருந்தது.

சிறிலங்காவினைச் சேர்ந்த இவரது மனைவி அனுப்பிய கடிதம் ஒன்றின் விளைவாக இவர் எட்டு மாதங்களுக்கு மேலாகத் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

கனடாவிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பிய பெண் ஒருவர் குறிப்பிட்ட இந்த நபரைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் கனடாவிற்குத் திரும்பிய இந்தப் பெண் தனது கணவரைக் கனடாவிற்குச் சட்டபூர்வமாக அழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பிட்ட இந்த வேண்டுகை தொடர்பாக குடிவரவு மற்றும் குடியுரிமைத் திணைக்களம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடிவுகள் எதனையும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில் இந்தத் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அவர்களது உறவில் பாதிப்பினை ஏற்படுத்தியதாம்.

தனது திருமணத்தினை முறித்துக்கொள்ள எண்ணி குறிப்பிட்ட பெண், தனது கணவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தார் எனத் தான் அறிவதாகவும் ஆதலினால் திருமணத்தினை முறித்துக்கொள்வதற்குத் தான் விரும்புவதாகவும் இந்த நிலையில் தான் தனது கணவருக்கு நுழைவு அனுமதியினைக் கோரி மேற்கொண்ட விண்ணப்பத்தினை மீளப்பெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது அந்தக் கடிதம் வெறும் பொய் என கடந்த புதனன்று இடம்பெற்ற வழக்கில் குறிப்பிட்ட இந்தப் பெண் சாட்சியமளித்திருக்கிறார்.

"எனது கணவரை நான் கனடாவிற்குள் அழைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் காலமெடுத்தது. இந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் எடுத்தமையினால் எங்களது உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது கணவர் குடிபோதைக்கு அடிமையானார்" என்கிறார் இந்தப் பெண்.

"அப்போது நான் எதனைப் பற்றியும் யோசிக்கவில்லை. எனது இந்தத் தனிப்பட்ட தகவல்களை இணைப்பதற்கு நான் விரும்பவில்லை, ஆதலினால்தான் நான் பொய்யான தகவல்களுடன் கூடிய வேண்டுகையினை விடுத்திருந்தேன்" என்றார் அவர்.

ஆனால் தமக்கிடையே இப்போது சுமூகமான உறவு நிலவுவதாகக் கூறிய இந்தப் பெண் தனது கணவனைக் கனடாவிற்கு அழைப்பதற்கான முயற்சிகளில் மீண்டும் இறங்கினாள்.

இவளது கணவன் பின்னர் சண் சீ கப்பல் வழியாகக் கனடாவிற்கு நுழைந்திருந்தார். இந்தப் பெண் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனக் கருத்தப்பட்டுத் தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.

குறிப்பிட்ட இந்த நபர் விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு இந்தப் பெண் எழுதிய கடிதம் மாத்திரம் ஆதரமாக இல்லை. பிரித்தானியாவில் ஏற்கனவே அகதி அந்தஸ்துக் கோரி விண்ணப்பித்திருந்த இந்த நபர் தான் விடுதலைப் புலிகளின் ஓர் உறுப்பினர் என பிரித்தானியக் குடிவரவு அதிகாரிகளிடம் கூறியிருந்தார் என எல்லைச் சேவைகள் அமைப்பினைச் சேர்ந்த கெவின் ஹச் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனப் பொய்யுரைத்தால் மாத்திரமே இலகுவாக அகதி அனுமதி கிடைக்கும் என பிரித்தானியச் சட்டவாளர்கள் ஆலோசித்தமையினாலேயே தான் அவ்வாறு பொய்யுரைத்ததாக தற்போது இந்த அகதி கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் அவையினது விசாரணையில் குறிப்பிட்டிருக்கிறார். கனேடிய அதிகாரிகளிடம் தான் உண்மையினைத் தவிர வேறு எதனையும் கூறவில்லை எனக்கூறும் இவர் தான் விடுதலைப் புலிகள் அமைப்பினது உறுப்பினராகவோ அன்றி அந்த அமைப்பின் அனுதாபியாகவோ ஒருபோதும் இருந்ததில்லை எனக் கூறுகிறார்.

சிறிலங்காவிற்குத் தான் இறுதியாகச் சென்றிருந்தபோது கடத்தப்பட்டிருந்தாகக் கூறும் இந்த நபர் மீண்டும் சிறிலங்காவிற்குத் திரும்பியனுப்பப்படுமிடத்து தனக்கு என்ன நடக்கும் எனத் தெரியாது என்கிறார். குடிவரவு மற்றும் அகதிகள் அவையின் நீதியாளர் லூறா கோ இந்த வழக்குத் தொடர்பான தனது தீர்ப்பினை வெளியிடவில்லை.

செய்தி வழிமூலம்: The Globe and Mail

Comments