சிறிலங்காவின் இனப்போரில் எறிகணைத் தாக்குதல்களுக்கு நேரடியாக முகம்கொடுத்த கனேடியர்

சிறிலங்காவில் போர் உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த சிதைத்து அழிக்கப்பட்ட அந்தக் கடற்கரையில் எறிகணை ஒன்று பாரிய சத்தத்துடன் வீழ்ந்து வெடித்தபோது இவள் அதிலிருந்து 100 மீற்றர் தொலைவில் ஒரு பதுங்குகுழியினுள் இருந்தாள்.

வேகமாகப் பாய்ந்துவந்த எறிகணைச் சிதறலொன்று இவளது மார்பினைப் பதம் பார்த்தது. இந்தக் குண்டுச் சிதறல் நீண்ட தூரத்திலிருந்து பயணித்தமையினால் அது தன் வேகத்தினை இழந்த நிலையில் தோலை ஊடறுத்து சிறிது தூரம் சென்றிருந்தது.

வகைதொகையின்றி வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்த எறிகணைகளுக்குத் தான் இரையாகி உயிர் துறந்தால் தனது பெற்றோர் எந்தளவிற்குக் கலங்குவார்கள் என இந்தக் கனேடிய பெண் அங்கிருந்தபோது எண்ணிப்பார்த்தாளாம். ஆனால் இவள் நல்வாய்ப்பு பெற்றவள். இவளது மார்பினை அந்தக் குண்டுச்சிதறல் தாக்கியபோது அது தன் வேகத்தினை இழந்திருந்தது. இந்த நிலையில் சிறியதொரு காயமே இவளுக்கு ஏற்பட்டிருந்தது.

"ஒவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கது. போரின் போது உயிர்கள் இழக்கப்படுவதை நான் அடியோடு வெறுத்தேன்" என இவள் National Post ஊடகத்திற்கு தெரிவித்தாள். [தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் நன்மைகருதி பெயரினை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாள்]

போர் இடம்பெற்ற பகுதியில் பல மாதங்களாகச் சிக்கியிருந்த இந்தப் பெண் ஈற்றில் அங்கிருந்து தப்பிவரும் வரைக்கும் மோசமான எறிகணைத் தாக்குதல்களை நேரடியாகக் கண்ணுற்றதாகக் கூறுகிறாள். இவளது இந்தக் கூற்று உண்மையென நிரூபிக்கும் வகையிலேயே ஐ.நா வல்லுநர் குழுவின் அறிக்கையும் வெளிவந்திருக்கிறது.

செப்ரெம்பர் 2008 தொடக்கம் மே 2009 வரையிலான காலப்பகுதியில் பெருமெடுப்பிலமைந்த எறிகணைத் தாக்குதல்களைச் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டதை உறுதிப்படுத்தும் நம்பத்தகு குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

மோதல்களிலிருந்து தப்பிச்சென்ற பொதுமக்கள் அடைக்கலம் தேடிய பாதுகாப்பு வலயப் பகுதியினை இலக்குவைத்து அரச படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடாத்தியதாக வல்லுநர்கள் குழு கூறுகிறது. மே 04 2009 அன்று பாதுகாப்புவலயப் பகுதியில் வைத்துத்தான் இந்தக் கனேடிய மாது காயமடைந்திருக்கிறாள்.

ஐ.நாவின் உணவு நிவாரணப் பொருட்களை வழங்கும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளை இலக்குவைத்து அரசபடையினர் தாக்குதல் நடாத்தியதாக இந்த அறிக்கை கூறுகிறது. 'போரின் இறுதிநாட்களில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்பட்டமைக்கு அரச படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதல்களே காரணம்' என்கிறது இந்த அறிக்கை.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக பொறுப்புச்சொல்லும் செயல்முறைக்குத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் கடந்த ஆண்டு வல்லுநர்கள் குழு என்ற ஒன்றை அமைத்திருந்தார்.

ஐ.நா வல்லுநர்கள் குழுவின் 196 பக்கங்களைக்கொண்ட இந்த அறிக்கை கடந்த திங்களன்று வெளியிடப்பட்டது. போரின் போது அரச படையினர் பொதுமக்களை இலக்குவைத்து எந்தவொரு சூட்டுவலுவினையும் பயன்படுத்தவில்லை என அரசாங்கம் கூறுகின்றபோதும் சிறிலங்கா அரச படையினர் அனைத்துலகச் சட்டங்களை மீறும் வகையில் செயலாற்றியிருக்கலாம் என்கிறது ஐ.நாவின் இந்த வல்லுநர்கள் குழு.

அரசாங்கமானது பொதுமக்களை இலக்குவைத்து எறிகணைத்தாக்குதல்களை மாத்திரம் நடாத்தவில்லை. மாறாக, போரின் மத்தியில் சிக்கியிருந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளும் அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

போதிய வசதிகளின்றிக் காணப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மக்களை அடைத்து வைக்கப்பட்டனர். கொலை மற்றும் ஆட்கடத்தல் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த ஊடகங்களினது வாய் மூடப்பட்டது.

தங்கள் பங்கிற்கு, விடுதலைப் புலிகளும் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திபோது தப்பிச்செல்ல முற்பட்ட பொதுமக்களை இலக்குவைத்துத் துப்பாக்கிச் சூடுகளை நடாத்தியிருக்கிறார்கள், சிறுவர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் பலர் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர், தமக்கான பதுங்குகுழிகளை அமைப்பதற்குப் பொதுமக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அந்த அறிக்கையில் தொடர்ந்து கூறுப்படுகிறது.

"பொதுமகக்கள் இழப்புக்கள் வேகமாக அதிகரித்தபோதிலும் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறுவதைப் புலிகள் அனுமதிக்கவில்லை. நிலைமைகள் மோசமடைவதானது அனைத்துலகத் தலையீடு ஒன்றுக்கான வழியினை ஏற்படுத்தும் என நம்பிய புலிகள் இவ்வாறு செயலாற்றியிருக்கிறார்கள்" என அந்த அறிக்கை தொடர்கிறது.

இதுபோன்றதொரு விசாரணைக்குத் தான் ஒருபோதும் ஒத்துழைப்புத் தரப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆனால் இதுபோன்ற ஒரு விசாரணையினை முன்னெடுக்கும் உரிமை ஐ.நாவிற்கு உள்ளது என கனேடியர்கள் நம்புகிறார்கள். பாதுகாப்பு வலயப் பகுதியில் தினமும் எறிகணை மழைக்கு முகம்கொடுத்துநின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்களில் தானும் ஒருத்தி என்கிறாள் இந்தப் பெண்.

மருத்துவமனை ஒன்றுக்குச் சென்ற தான் அங்கு தன்னாலான உதவிகளைச் செய்ததாகக் கூறுகிறாள்.

"ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் வாகனங்களில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுவார்கள். நோயாளர்களை அனுமதிக்கும் பகுதியில் நான் பணிசெய்தேன். ஆரம்பகட்ட முதலுதவிகளைச் செய்தபின்னர் அவர்களைச் சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு அனுப்புவோம். இறந்தவர்களின் பெயர் விபரங்கள் தொடர்பான பதிவுகளை நாங்கள் மேற்கொண்டோம். மருத்துவமனைப் பதிவேட்டில் இறந்தவர்களின் பெயர் விபரங்களைப் பதிவதற்குக்கூட எங்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கவில்லை" என தனது அனுபவத்தினை விபரிக்கிறாள் அந்த யுவதி.

"மோசமாகக் காயமடைந்த நிலையில் நான்கு வயதிற்கும் குறைவான சிறார்கள் கூட அங்கு கொண்டுவரப்பட்டார்கள். அவயவங்கள் துண்டிக்கப்பட்ட மற்றும் சிதைந்த நிலையிலும், தலைக்காயங்களுடனும் பெண்கள் அங்கு கொண்டுவரப்பட்டனர். ஏன் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து ஒரு கி.மீ தொலைவிலிருந்த முன்னணிப் பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள் கூட பொதுமக்களைக் காயப்படுத்தியிருந்தது. மருத்துவமனை வளாகத்தில் கூட எறிகணைகள் தொடராக வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தது" எனத் தனது அனுபவத்தினை அந்த பெண் விபரித்தாள்.

"எறிகணை ஏவப்பட்ட சத்தம் கேட்டவுடன் குண்டுச் சிதறல்களிலிருந்து தப்புவதற்காக மருத்துவமனையில் நாங்கள் பணியாற்றிய இடங்களிலேயே வீழ்ந்து படுத்தோம். மருத்துவனை வளாகத்தில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளின் விளைவாக ஏலவே காயமடைந்த பலர் மீண்டும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் கூடக் கொல்லப்பட்டனர்".

ஐ.நாவினது அறிக்கை அவ்வாறே கிடப்பில் போடப்பட்டுவிடாது என நான் நம்புகிறேன். "அனைத்துலக சமூகத்தின் இன்னொரு கண்துடைப்பு நடவடிக்கையாக இது அமையாது என நான் நம்புகிறேன். ஐ.நாவின் இந்த முயற்சியானது போரின் போது பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்துநின்ற இந்த மக்களுக்கு உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் என நான் வெகுவாக நம்புகிறேன்" என்கிறாள் இந்தப் பெண்.

செய்தி வழிமூலம்: National Post
மொழியாக்கம்: தி.வண்ணமதி.

Comments