அவுஸ்ரேலியா: ஈழத் தமிழர்களின் தொலைதூர நம்பிக்கை?

கடந்த பத்து ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை இலக்குவைத்துச் செயற்பட்ட சட்டவிரோதக் கடத்தற்காரர்கள் படகுகள் மூலம் இவர்களை அவுஸ்ரேலியா நோக்கி அனுப்பிவந்தார்கள். ஆனால் தற்போது இந்தக் கடத்தல்காரர்களது கவனம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இது தொடர்பான சிறப்பு வானொலி நிகழ்ச்சியொன்று அண்மையில் அவுஸ்ரேலிய வானொலியில் [Australian Broadcasting Corporation - ABC] ஒலிபரப்பாகியிருந்தது. தமிழ்நாட்டிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாமொன்றில் வாழும் ஜி.அமர்நாத், ஆட்கடத்தற்காரர்களிடம் ஏமாந்த இளைஞனின் தாய் பூங்கோதை, ஈழ அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ். வேலாயுதம் மற்றும் மலேசியாவினைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரான நிலாகிருஸ்ணா ஜேம்ஸ் ஆகியோர் இந்த வானொலி நிகழ்ச்சியில் பங்கெடுத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியை வானொலியில் வழங்கியவர் லூக் ஹன்ற் [Presenter: Luke Hunt]

HUNT: சிறிலங்காவில் தொடராக இடம்பெற்ற போரின் விளைவாக இடம்பெயர்ந்த 70,000க்கும் அதிகமான தமிழ் அகதிகள் தென்னிந்தியாவிலுள்ள 100 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசித்துவருகிறார்கள். எவ்வாறிருப்பினும் சிறிலங்காவில் தற்போது போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் இந்த மக்கள் நாடுதிரும்பவேண்டும் எனக் கொழும்பு விரும்புகிறது.

ஆனால் இதுபோன்றதொரு முகாமில் வசிக்கும் 29 வயதான ஜி.அமிர்தராஜ் போன்றவர்கள் மீண்டும் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்லுவதற்கு மறுக்கிறார்கள். தமிழநாட்டிலுள்ள கொட்டபதி என்ற முகாமில் இவர் 1985ம் ஆண்டுமுதல் வசித்துவருகிறார். 400 குடும்பங்கள் தங்கியிருக்கும் இந்த முகாமில் வசதிகள் போதியதாக இல்லாதபோதும் தான் சிறிலங்காவிற்குத் திரும்புவதற்கு ஒருபோதும் விரும்பவில்லை என்றும் இந்தியாதான் தனது வீடு என்றாகிவிட்டது என்றும் கூறுகிறார்.

அமிர்தராஜ்: கடந்த 25 ஆண்டுகளாக நான் இந்தியாவில் வாழுவதால் நாங்கள் இங்கேயே தொடர்ந்தும் இருக்க விரும்புகிறோம். சிறிலங்காவில் எங்களுக்குச் சொத்துக்கள் எதுவுமில்லை, போதிய வேலைவாய்ப்புகளும் அங்கில்லை. முகாமில் எங்களுக்கு ஒரு அறை மாத்திரமே கட்டித்தரப்பட்டிருக்கிறது. தனியாக கழிப்பிட வசதிகள் எதுவுமில்லை. பெரும்பாலும் முகாம்களின் நிலை இதுதான்.

HUNT: இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் அரசாங்க வேலைகளில் இணையமுடியாது. அத்துடன் குறைந்தளவிலான ஊதியத்தினைக் கொண்ட வேலைகளே இவர்களுக்கு வழங்கப்படுகிறன. தவிர 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வாழும் இவர்களுக்குக் குடியுரிமையினை வழங்குவதற்கு புதுடில்லி தயாராக இல்லை.

முகாம்களுக்கு வெளியே வசிக்கும் சிறிலங்காவினைச் சேர்ந்த தமிழர்களும்கூட இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். ஒடியூர் என்றதொரு குக்கிராமத்தில் பூங்கோதை என்ற இந்தத் தாய் வசித்து வருகிறாள்.

சில மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்த ஆட்கடத்தல் முகவர் ஒருவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருவதாகக் கூறியிருக்கிறான். இந்த நிலையில் இவளது மகன் கனடாவிற்குப் போவதென முடிவெடுக்கிறான். இதற்காக 10,000 அவுஸ்ரேலிய டொலர்களை வழங்கவேண்டும் எனச் சட்டவிரோதக் கடத்தல்காரர்கள் கூறியிருக்கிறார்கள்.

இடிந்துபோயிருக்கும் பூங்கோதை மெதுவாக வாயைத் திறக்கிறாள்.

மொழிபெயர்ப்பாளர் தொடர்கிறார்: வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களிடமிருந்து 10 வீத வட்டிக்கு 50,000 பணத்தினைப் பெற்றிருந்ததோடு வீடு மற்றும் காணிப்பத்திரங்களை வங்கியில் வைத்து மேலும் 50,000 பணத்தினைப் பெற்றிருக்கிறார். தங்களிடமிருந்த அனைத்து நகைகளையும் அடகுவைத்துவிட்டார்கள். தவிர நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் சிறுதொகைப் பணத்தினைப் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் இதுபோலக் கஸ்ரப்பட்டுப் பணத்தினை ஒழுங்குசெய்த இவர்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை. கடத்தற்காரர்கள் ஏமாற்றிவிட, வட்டியினைக் கட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

HUNT: இதுபோன்ற சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றிருப்பதை எஸ். வேலாயுதம் நன்கறிவார். தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதிகளுக்கான புனர்வாழ்வுக்கழத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில், தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களில் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இவர் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரி வருகிறார்.

வேலாயுதம்: அவுஸ்ரேலியா, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்லுமிடத்து தாங்கள் அதிக பணத்தினை உழைக்கலாம் என்றும் தமிழ்நாட்டிலோ அன்றி சிறிலங்காவிலோ இருப்பதைப் போலன்றி கனடா மற்றும் அவுஸ்ரேலியாவில் தங்களது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என இவர்கள் கருதுகிறார்கள்.

இங்கு போதிய வருமானமில்லை, வாழ்க்கைச்செலவு வேகமாக அதிகரித்துச்செல்கிறது. தமிழ்நாட்டில் அவர்கள் வேலைக்குச் செல்லுமிடத்து நாளொன்றுக்கு 100, 200 அல்லது 300 ரூபாய்களை மாத்திரமே பெறமுடியும். தமக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணம் இவர்களிடம் இல்லை. இதுதான் அடிப்படைப் பிரச்சினை.

HUNT: கனடா மற்றும் அவுஸ்ரோலியா ஆகிய நாடுகளுக்கான பயணங்கள் அதியுச்ச ஆபத்து நிறைந்தவை. அகதிகளைச் சிறிய மீன்பிடிப் படகுகளில் ஏற்றும் கடத்தற்காரர்கள் பின்னர் அவர்களை நடுக்கடலில் நிற்கும் தாய்ப்படகுகளுக்கு மாற்றுகிறார்கள். ஒவ்வொரு தாய்ப்படகும் 300 பேரை ஏற்றவல்லது. பின்னர் இப்படகுகள் அங்கிருந்து புறப்பட்டு அவுஸ்ரேலியாவின் மேற்குக் கரையினை அடைகின்றன.

எவ்வாறிருப்பினும் முதலாவதாக படகு இந்தியக் கடற்படையினரின் கண்களில் மண்ணைத் தூவவேண்டும். அண்மைக்காலங்களில் பல நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிய படகுகள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

வேலாயுதம்: உண்மையில் இந்த அகதிகள் அவுஸ்ரேலியாவிற்குச் செல்லவிரும்பினால் இந்தியாவிலுள்ள அவுஸ்ரேலியத் தூதரகத்தின் ஊடாக சட்ட ரீதியிலான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இதனை விடுத்து ஆபத்து நிறைந்த கடற்பயணங்களை மேற்கொள்ளத் துணியும் இந்த அகதிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பேராபத்து நிறைந்த பயணமிது.

HUNT: கடந்த டிசம்பரில் 100 தமிழர்கள் உள்ளிட்ட 500 சட்டவிரோத அகதிகள் அவுஸ்ரேலியாவின் தென்மேற்குக் கரையோரத்தினை வந்தடைந்திருந்தார்கள். இவர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் கவிழ்ந்த நிலையில் 50 பேர்வரை நீரில் மூழ்கினர்.

ஆயிரக்கணக்கான அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் மலேசியாவில் நிலாகிருஸ்ணா ஜேம்ஸ் என்பவர் மனித உரிமை வழக்கறிஞராக இருக்கிறார். உண்மையான அகதிகள் யார் பொருளாதார வளத்தினைத் தேடிப் புலம்பெயர்பவர்கள் யார் என்பதை வேறுபடுத்தி அறிவது கடினமானதொரு பணி என்கிறார் அவர்.

ஜேம்ஸ்: அகதி முகாம்களில் இருக்கும் அனைவரையும் நீங்கள் ஒரே கோணத்தில் அணுகவோ நடத்தவோ முடியாது. இவர்கள் உண்மையான அகதிகளா அல்லது கட்டாயத்தின் பெயரில் வேலைக்கு அமர்தப்படுவதற்காகக் கொண்டுசெல்லப்படும் தொழிலாளர்களா அல்லது பாலியல் தொழிலைக் கருத்திற்கொண்டு நகர்பவர்களா அல்லது பொருளாதார வளத்தினைத் தேடிப் புறப்படும் நபர்களா என ஆழமாக ஆராயவேண்டும்.

ஆனால் மலேசியா மனித உரிமைகளை மதித்துச் செயற்படும் நாடு என்ற வகையில் ஈற்றில் மனித உரிமைகளின் அடிப்படையிலான கடப்பாடுதான் முதன்மையாகிறது.

Comments