சிறிலங்காவில் ஐ.நாவின் தோல்வி தொடர்பாக வெளிவரும் உண்மை

ஆனால் உண்மை வேறு விதமானது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் படைத்தரப்பினரால் நடாத்தப்படுகின்ற தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள், காணாமற் போதல்களும், பாலியல் வல்லுறவுகளும் சித்திரவதைச் சம்பவங்களும் மலிந்த பூமியாக தமிழர் தேசம் மாறிவிட்டது.

அவுஸ்ரேலியா நோக்கி படகுகள் மூலம் வரும் அகதிகளில் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்குக் காரணம் இதுதான்.

இவ்வாறு அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட theage.com என்னம் ஊடகத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் Dr Sam Pari தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவது தி.வண்ணமதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவில் வாழுகின்ற தமிழர்களுக்கு எதிராக சாட்சியமற்றதொரு போர் தொடுக்கப்பட்டிருந்தது.

செப்ரெம்பர் 2008ம் ஆண்டு ஐ.நா அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை வன்னிப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட சிறிலங்கா அரசாங்கம் கொடூரமானதொரு படை நடவடிக்கையினை முன்னெடுத்தது.

விடுதலைப் புலிகளுடனான போரையே தாங்கள் முன்னெடுத்ததாகவும் பொதுமக்கள் எவரும் பாதிக்காத வகையிலேயே தாங்கள் படை நடவடிக்கையினை முன்னெடுத்ததாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்ற போதும், கிடைக்கப்பெறுகின்ற ஒளிப்படங்கள், சலனப்படங்கள் மற்றும் ஊரிலுள்ள எங்களது உறவுகளுடனான தொலைபேசி உரையாடல்கள் என்பன வேறுபட்ட கதையினையே கூறி நிற்கின்றன.

படுகாயமடைந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இறந்த பொதுமக்களின் உடலங்களை உள்ளடக்கிய ஒளிப்படங்களை நாங்கள் பேரச்சத்துடன் பார்க்கிறோம்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டிருக்கிறது. ஏன் அகதிகள் முகாம்கூட இலக்குவைக்கப்பட்டிருக்கிறது. சரணடைந்த பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த கொடூரத்தினை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தவேண்டும் எனக் கோரி புலம்பெயர் தமிழர்கள் தொடர் போராட்டத்தினை நடாத்திய போதும் உலகம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தது.

உலகெங்கும் பரந்துவாழும் 100,000 தமிழர்கள் வீதிக்கிறங்கிப் போராட்டத்தினை நடாத்தியபோதும், எங்களது குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பர்மா, சிம்பாவே மற்றும் லிபியா தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கொண்டிருந்த நிலைப்பாடு எதுவோ அதற்கு எதிரான வகையில் அப்போதைய அவுஸ்ரேலியப் பிரதமர் கெவின் ருட் சிறிலங்கா தொடர்பாக 'இலகு இராசதந்திரத்தினைக்' கைக்கொண்டார்.

போர் இடம்பெற்ற பகுதியில் பொதுமக்கள் இழப்புக்கள் என்றுமில்லாதளவு அதிகரித்துக் காணப்பட்டது ஐ.நாவுக்கும் தெரியும் என்பதை நாங்கள் மெதுவாக அறிந்துகொள்கிறோம். பொதுமக்கள் இலக்குகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட அதேநேரம் வான் வழித் தாக்குதல்களும் நடாத்தப்பட்டதை ஐ.நா அறியும் என்பதை தற்போது கசிந்திருக்கும் செய்மதி ஒளிப்படம் தெளிவாக்குகிறது.

ஐ.நாவின் சிறிலங்காவிற்கான பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர் எனக் கூறியிருந்தார். ஆனால் ஏனைய சிலர் இந்தத் தொகை இதனைவிட அதிகம் எனக் கூறுகிறார்கள். இதுபோல பொதுமக்கள் பெருந்தொகையில் படுகொல்லப்படுவதை அனைத்துலகம் அனுமதித்தது ஏன்?

அதேநேரம் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்காவினது விடயம் கலந்துரையாடப்படுவதை சீனாவும் ரசியாவும் இணைந்து தடுத்திருக்கின்றன. சிறிலங்காவில் அதிக முதலீடுகளைச் செய்திருக்கும் சீனா மற்றும் ரசியா ஆகிய இரண்டு நாடுகளும் கொழும்பினது நட்பு நாடுகளாகச் செயற்பட்டு வருகின்றன.

சிறிலங்காவில் இறுதிக்கட்டப்போரின் போது 20,000 பொதுமக்கள்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா செயலாளர் நாயகத்தினது தலைமை அலுவலராகச் செயற்பட்ட விஜய் நம்பியாரிடம் ஐ.நா அலுவலர்கள் கூறியிருந்தனராம். ஆனால் இதனை வைத்துக்கொண்டு ஐ.நா அலுவலர்கள் எவரும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடாது என நம்பியார் கோரியிருக்கிறார்.

சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முதன்மைத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களது சரணடைவுக்கான ஏற்பாடுகளில் விஜய் நம்பியார் உள்ளிட்ட ஐ.நா அலுவலர்கள், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட சிறிலங்காவினது அதிகரிகளும் ஈடுபட்டிருந்தார்கள் எனக் குற்றம் சுமத்தப்படுகிறது.

போர் முடிவுக்குவந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் முறையான போர்க்குற்ற விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலையில், தமிழ் மனித உரிமை அமைப்புக்கள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.

ஆனால் உண்மை வேறு விதமானது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் படைத்தரப்பினரால் நடாத்தப்படுகின்ற தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள், காணாமற் போதல்களும், பாலியல் வல்லுறவுகளும் சித்திரவதைச் சம்பவங்களும் மலிந்த பூமியாக தமிழர் தேசம் மாறிவிட்டது.

அவுஸ்ரேலியா நோக்கி படகுகள் மூலம் வரும் அகதிகளில் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதற்குக் காரணம் இதுதான்.

மனித உரிமை அமைப்புக்களும் புலம்பெயர் தமிழர்களும் தொடராகக் கொடுத்த அழுத்தங்களின் விளைவாக ஈற்றில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புச்சொல்லும் செயல்முறைபற்றித் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் வல்லுநர்கள் குழு என்ற ஒன்றை அமைத்திருந்தார். ஆனால் பான் கீ மூனின் இந்த முடிவினை சிறிலங்கா கடுமையாகக் கண்டித்ததோடு இந்தக் குழு சிறிலங்காவிற்குப் பயணம் செய்வதற்கும் தடைவிதித்தது.

இரண்டு வாரங்களின் முன்னர் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டிருந்த வல்லுநர்கள் குழுவின் இறுதி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. சிறிலங்காவில் போர்க் குற்றங்களும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றதைக் காட்டும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தனதறிக்கையில் கூறும் வல்லுநர்கள் குழு, பெருந்தொகையில் பொதுமக்கள் கொல்லப்பட்டபோதும் ஐ.நா அமைப்புக்கள் அவர்களைப் பாதுகாப்பதற்கு தவறிவிட்டன எனக்கூறுகிறது.

இன்று ஆயிரக்கண்ககான பொதுமக்கள் காணமற்போயிருக்கிறார்கள். 500 சிறார்கள் உள்ளிட்ட 14,000 பேர் இரகசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தவிர வடக்கிலுள்ள மக்கள் இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் தங்களது காலத்தினை ஓட்டும் அதேநேரம் தமிழர் தாயகப் பகுதிகளின் குடிப்பரம்பலை மாற்றும் வகையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2009ம் ஆண்டினது முதற்பகுதியில் மக்கள் ஆயிரக்கணக்காக் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோது அதனைத் தடுப்பதற்குத் தவறியதுடன் மாத்திரமில்லாத ஐ.நா சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் துணைபோயிருப்பதுதான் உண்மை.

*Dr Sam Pari is a spokeswoman for the Australian Tamil Congress.

தி.வண்ணமதி

Comments