"பாக்கு நீரிணையின் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த மீனும் கிடையாது"

சிறிலங்காவில் கடந்த பல ஆண்டுகளாக மோதல்கள் இடம்பெற்றுவந்த நிலையில் சிறிலங்காவினது வடக்குப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதன் விளைவாக பாக்கு நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் ஏகோபோகத்தினை அனுபவித்தார்கள் எனலாம்.

ஆனால் தற்போது போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் சிறிலங்காவினது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் கடலுக்குத் திரும்பியபோது தங்களது வாழ்வாதாரத்திற்கு இந்திய மீனவர்கள் அச்சுறுத்தலாக அமைவதைக் கண்டுகொண்டனர்.

கடந்த மாதம் தங்களது கடற்பிராந்தியத்திற்கும் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 136 இந்திய மீனவர்களைச் சிறிலங்காவினது அதிகாரிகள் தடுத்துவைத்தனர். இரு நாடுகளுக்கும் இடையில் துரிதமாக இடம்பெற்ற இராசதந்திர சந்திப்புகளைத் தொடர்ந்துதான் இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த சனவரி மாதம் தங்களது இரண்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினரால் கொல்லப்பட்டதாகத் தமிழ்நாட்டு மீனவர்கள் குற்றம் சுமத்தினர். தங்களது கடற்பிராந்தியத்திற்குள் இந்திய மீன்பிடி இழுவைப்படகுகள் [trawlers] நுழைவதற்கு சிறிலங்காவின் வடக்கினது மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

சிறிலங்காவினது அதிகாரிகள் மேற்கொண்ட சில தலையீடுகளைத் தொடர்ந்து தங்களது வாழ்வாதாரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் தற்போதுள்ளார்கள்.

"பாக்கு நீரிணையின் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த மீனும் கிடையாது. இந்த நிலையில் சிறிலங்காவினது கடற்பிராந்தியத்திற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடவேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். ஆனால் இதுவும் எங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்றாகிவிட்டது இப்போது" என நாகபட்டினத்தைச் சேர்ந்த ஆர்.குமாரவேலு என்ற மீனவர் கூறுகிறார்.

சிறிலங்காவினது மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான உறவு காலம் காலமாக சுமூகமானதாகவே இருந்திருக்கிறது. சிறிலங்காவில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் சிறிலங்காவினைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கு தங்குமிடத்தையும் தொழிலையும் பெற்றுக்கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் உதவியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பாக்கு நீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்தார்கள். கடந்த ஒக்ரோபர் 2008ம் ஆண்டு இரண்டு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதிப்பத்திரத்தினை இந்திய மீனவர்கள் கொண்டிருப்பின் அவர்கள் சிறிலங்காவினது கடற்பரப்பிலும் மீன்பிடியில் ஈடுபடலாம்.

தற்போது சிறிலங்காவினது வடக்குப் பகுதியிலுள்ள தமிழ் மீனவர்களின் நன்மை கருதி அவர்களது வாழ்வாதாரத்தினைப் குறிப்பிட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்குச் சிறிலங்கா தற்போது விரும்புகிறது போலும்.

இந்திய மீனவர்கள் நவீன வசதிகளைக் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளைப் பயன்படுத்துவதுதான் இந்த இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிணக்கின் அடிப்படை. சிறிலங்காவினது கடற்படையினர் தரும் தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களில் 6500 இந்திய மீன்பிடி இழுவைப்படகுகள் [trawlers] எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டிருக்கின்றன.

"கடலின் அடிப்பாகத்தினையே வருடிச்செல்லும் வகையிலான அளவில் பெரிய வலைகளை இந்த இழுவைப்படகுகள் [trawlers] கொண்டிருக்கின்றன. இந்த வலைகள் வேறுபட்ட கடல்வாழ் உயிரினங்களை அழிப்பதோடு சிறிய மீன் கூட்டங்களையும் அழித்துவிடுகிறது. இந்த வலைகளைப் பயன்படுத்தவது மீன் இனங்களில் வாழ்க்கைச் சுற்றுவட்டத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இந்த மீன்பிடி முறைதான் இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பிராந்தியத்தில் மீன் வளம் குன்றியமைக்கான பிரதான காரணம்" என சுற்றுச்சூழலியலாளரான ஜெயசிறீ வெங்கடேசன் கூறுகிறார்.

இதுபோலச் செயற்படும் இந்திய இழுவைப்படகுகளைத் [trawlers] தமது கடற்பிராந்தியத்தில் செயற்பட அனுமதித்தால் தமது மீன்வளமும் இல்லாதுபோய்விடும் என சிறிலங்காவினது மீனவர்கள் அஞ்சுகிறார்கள். இதுபோன்ற மீன்பிடிமுறை சிறிலங்காவில் தடைசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்த மீனவர் பிரச்சினையும் முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற இதர பிராந்தியக் கட்சிகளிடமிருந்து எழுந்த அழுத்தத்தின் காரணமாக மீனவர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் அரசாங்கம் ஈடுபட்டு வரும் அதேநேரம் இருநாட்டு உறவுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறது.

"இந்தப் பிரச்சினையின் பிரதான தரப்பான மீனவர்கள் தமக்கிடையேயான கலந்துரையாடல்களை மேற்கொள்ளாதவிடத்து தொடரும் இந்தப் பிரச்சினைக்கு உருப்படியானதொரு தீர்வினை எட்டிவிடமுடியாது" என சென்னையிலுள்ள ஆசியக் கற்கைகளுக்கான மையத்தினைச் சேர்ந்த சூரியநாராயணன் கூறுகிறார்.

எத்தனை மீன்பிடி இழுவைப் படகுகளளைப் [trawlers] பயன்படுத்தலாம் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்ன என்பது போன்ற நடைமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என துறைசார் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மார்ச் மாதத்தின் இறுதிப்பகுதியில் இருதரப்புச் சந்திப்பு ஒன்று புதுடில்லியில் இடமபெற்றிருந்தது. இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர் சமூகங்களுக்கிடையில் சிறந்ததொரு புரிந்துணர்வு ஏற்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதை இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

இந்த மாதத்தின் முதற்பகுதியில் இந்திய மீனவர்களின் தூதுக்குழு ஒன்று சிறிலங்காவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தப் பிராந்தியத்திலுள்ள கடல்சார் வளம் போன்றவை தொடர்பான ஒரு உறுதித்தன்மையினை ஏற்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டுவது எனவும் இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

செய்தி வழிமூலம்: பிபிசி

Comments