போர்க்குற்றம் : சிறீலங்காவிற்கு சீனா – ரஸ்யா – இந்தியா உதவி செய்ய இனி வாய்ப்புக்கள் இல்லை.

சர்வதேச சட்டத்தை சிங்களவரும், தமிழரும் இணைந்து மதிப்பதைத் தவிர புதிய உலகில் மாற்று வழிகள் இல்லை.

சீனாவும், ரஸ்யாவும் நமக்கு ஆதரவாக ஐ.நாவில் முழங்கும், அவர்களுக்குள்ள வீட்டோ அதிகாரத்தால் அதைத் தடுக்கும் என்று சிங்கள இனவாத அரசியல் சிந்தனையளர் கடந்த சில தினங்களாக முழங்கி வருகிறார்கள்.

ஆனால் ஐ.நாவின் அடுத்த கட்ட பணிகளுக்கான நிகழ்ச்சி நிரல்களை அவதானிக்கும்போது இந்தக் குரல்கள் கிணற்றுத் தவளைகளின் முழக்கம் போலவே தென்படுகின்றன. 21 ம் நூற்றாண்டின் உலக நகர்வை 20 ம் நூற்றாண்டு கோட்பாடுகளால் தீர்க்க முடியாது என்பதை இன்றைய உலகத் தலைவர்கள் அனைவரும் புரிந்துவிட்டார்கள், சிறீலங்காவைத் தவிர.

பிரான்சின் தலைமையில் உலகத்தின் புதிய அணி மாற்றம் ஒன்று மிக இரகசியமாக நடந்துவிட்டதையும், கிறீஸ்துவின் கடைசி இராப்போசனம் போல அதுவும் முக்கியமான விடயமே என்றும் சென்ற மாதம் இதே பகுதியில் எழுதியிருந்தோம்.

இன்று அதனுடைய சரியான தாக்கம் வெளியாகியுள்ளது.

தாக்கம் 01

நேற்று ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் உரையாற்றிய பிரான்சின் பிரதிநிதி கராட்அருட் கூறும்போது, பாலஸ்தீன தனியரசை பிரான்ஸ் பிரகடனம் செய்ய யோசித்துள்ளதாக தெரிவித்தார். இதற்கான பேச்சுக்களை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே அமெரிக்கா இந்த விவகாரத்தில் இனி தலையிடாமல் விலகிக் கொள்ளும் என்ற கருத்து பாதுகாப்பு சபையில் உணர்த்தப்பட்டுள்ளது. பல புதிய நாடுகளும், புதிய தீர்வுகளும் வரப்போகின்றன. உலக நாடுகளின் பழைய உறுதிகளும், தோம்புகளும் திருத்தி எழுதப்படப்போகின்றன என்பதற்கு இது ஓர் அடையாளம்.

தாக்கம் 02

லிபியா மீதான ஐ.நாவின் பிரேரணை வந்தபோது சீனா, ரஸ்யா இரண்டும் கேணல் கடாபிக்கு சாதகமாக வீட்டோவை பயன்படுத்தவில்லை.

ரஸ்யா தனது எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும் என்று பிரதமர் புற்றின் கேட்டிருந்தார். அதனால் அவருக்கும் அதிபர் றிமிட்ஜி மிடேவ்விற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது புற்றின் தான் மறுபடியும் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார். ஆக ரஸ்யா இனி புற்றினின் ரஸ்யா இல்லை.

ரஸ்யா இனிமேல் வீட்டோவை சமர்ப்பிக்கும் சிறீலங்காவை காப்பாற்றும் என்று கருத வாய்ப்பில்லை. காரணம் எண்ணெயை கப்பல் கப்பலாக வழங்கிய கடாபியையும், பணத்தை கெட்டியிறைத்த ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட்டையும், உயிர்போல நம்பியிருந்த சதாம் உசேன் தூக்கில் ஏற்றப்படும்வரையும் ரஸ்யா மௌனம் காத்தது. அது நம்பியவருக்கு உதவும் நாடல்ல.

தாக்கம் 03

இன்று வெள்ளி அதிகாலை 04.30 மணிக்கு பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க ஏவுகணைகள் ஐந்து ஏவப்பட்டு பாகிஸ்தானிய இராணுவத்தினர் ஐவர் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த மார்ச் 17ம் திகதி ஏவப்பட்ட ஏவுகணையில் 39 பேர் மடிந்தது தெரிந்ததே.

இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக கம்போடியாவும் – தாய்லாந்தும் தமக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஐவர் கொல்லப்படுமளவுக்கு எல்லைப்புற மோதல்களை நடாத்தியுள்ளன.

இப்படி தெற்கு ஆசியாவின் ஓரப்புற சேலைகள் மெல்ல தீப்பற்ற ஆரம்பித்துவிட்டன. இதில் முதலில் பற்றப்போவது சிறீலங்கா பின் பர்மா, கம்போடியா, தாய்லாந்து என்று வரிசையாக கச்சேரிகள் நடக்கப் போவது தெரிகிறது..

தாக்கம் 04

கடந்த 1973ம் ஆண்டு ஐ.நாவின் சட்டத்தின் மீள்வரவு அமோகமாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐ.நாவால் வழங்கப்பட்ட அத்தனை அதிகாரங்களையும், நாடுகளை வைத்திருக்கும் ஆட்சியாளர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். இதற்கு சிறீலங்கா, யுகோசுலாவியா, வடக்கு ஆபிரிக்கா, மத்தியகிழக்கு, ஐவரிக்கோஸ்ட் என்ற நாடுகள் நல்ல உதாரணம். இவைகள் அனைத்தையும் பட்டியலிட்டால் அணிசேரா நாடுகள் என்ற தலைப்பு தானாக வெளிவரக் காணலாம். இந்த நாடுகளில் பல 1973ம் ஆண்டு ஐ.நா சட்டத்தை மதித்து நடக்கவில்லை.

அதிகாரம் படைத்த ஓர் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மக்களையே கொலை செய்தால் அது ஐ.நாவாலும், சர்வதேச சமுதாயத்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமே என்பது ஐ.நாவின் உறுதியான கொள்கை. எகிப்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக் மீது நேற்று சுமார் 846 பொது மக்களை கொன்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிந்தனை 01

இந்த நான்கு நிகழ்வுகளையும் தொகுத்துப் பார்த்தால் புதிய உலக ஒழுங்கு போகும் போக்கில் சிறீலங்கா அரசு தனித்து விடப்படும். கடந்த 60 ஆண்டுகால இனவாத துஷ்பிரயோக ஆட்சிக்கான கொடுப்பனவுகளை அது கொடுக்க வேண்டிய பருவம் வந்துவிட்டதையே உணர முடிகிறது.

சிந்தனை 02

ஐ.நாவின் இன்றைய போக்கை இந்தியாவும் எதிர்க்காது. முறைப்படி பார்த்தால் 1973ம் ஆண்டு சட்டத்தின் வரவில் அதிகம் பாதிக்கப்படவேண்டிய நாடுகள் இந்தியாவும், சீனாவுமே. இந்த உண்மையை இனியும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

சோனியா காந்தி சென்ற மாதம் இங்கிலாந்து வந்தபோது இந்தப் புதிய தகவல்களை இங்கிலாந்து பிரதமருடன் விவாதித்திருப்பார். ஈழத் தமிழருக்கான கவலைப் படுவதாக அவர் நாக்கினால் சொன்னாலும்கூட இனி அதை உள்ளத்தால் பேசவேண்டியதே கடைசி வழி.

சிந்தனை 03

சீனாவும் வல்லரசு என்ற நிலையில் இருந்து கடந்த மார்ச் மாதம் 11 ம் திகதி குப்புற வீழ்ந்திருக்கிறது. ஜப்பானில் புக்குசீமா அணு உலை வெடிப்பு ஜப்பானிய பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. அதுபோல 24 அணுசக்தி நிலையங்களை கட்டி வைத்திருக்கும் சீனா தனக்கான தூக்குக் கயிறே அதுதான் என்பதை புரிந்துள்ளது.

சீனா – ரஸ்யா – ஜேர்மனி போன்ற நாடுகள் தத்தமது அணுசக்தி நிலையங்களின் றீ ஆக்டரை உருக வைத்தால் – அல்லது அதற்கான நீர்க்குழாயை உடைத்தால் 24 மணி நேரங்களில் குப்புற விழுந்துவிடுவோம் என்பதை உணர்ந்துவிட்டன.

புக்குசீமா உடைவு ஜப்பானின் உடைவு மட்டுமல்ல, பல வல்லரசுகளின் உடைவே. ஆகவே அனைவருமே சர்வதேசத்தின் தாள லயத்திற்கு ஆடுவதைத் தவிர வேறு சதுராட்டங்கள் எதையும் போட முடியாது.

( இதற்கான தலைமை இரகசியம் தெரிந்த முதல் நாடு அமெரிக்கா அல்ல பிரான்ஸ்தான்.. இது பின்னர் பார்க்கப்பட வேண்டிய தனிக்கட்டுரை. )

இதேவேளை ஈழத் தமிழர்கள் தமது பக்கத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிறீலங்கா அரசாங்கத்தைப் போலவே புலிகளும் பாரிய யுத்தக் குற்றங்களை புரிந்துள்ளார்கள் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. இதற்கான தார்மீகப் பொறுப்பை தமிழ் மக்கள் புறந்தள்ளி, சிங்களவர் மட்டுமே குற்றவாளிகள் என்று கூற முடியாது. அதற்கான இடம் ஐ.நா அறிக்கையில் இருப்பதாக தெரியவில்லை.

ஐ.தே.கவும், விக்கிரமபாகு கருணாரத்தின போன்ற இடதுசாரிகளும் விடும் மடைத்தனமான தவறுகளை நாமும் விடக்கூடாது.

ஐ.நாவின் 1973ம் ஆண்டு சட்டத்தை கையிலேந்தி வரும் இந்த சுனாமி அலை பழையவர்களை புறந்தள்ளி, இரத்தக்கறை படியாத கரங்கள் கொண்ட மக்கள் ஜனநாயகம் மலர உதவும் வாய்ப்புக்கள் உண்டு. தேர்தலில் மக்களே தமது தலைமைய தெரிவு செய்வர். அந்தத் தேர்தலில் இப்போதுள்ள பல கட்சிகள் போட்டியிட முடியாத நிலை வரும்..

இது ஒரு தூரப்பார்வை -

பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடாது. சிறீலங்கா கண்களை இறுகி மூடாது சர்வதேச சட்டங்களை மதித்து ஒழுக வேண்டும். சீனாவும், ரஸ்யாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் மதில்மேற் பூனைகளே. அவை இன்றைய உலக நகர்வை ஏற்று அமைதியாகப் படுத்துவிட்டன. இந்த நாடுகள் அநீதிக்கான உதவியை வழங்கி உலகத்தை ஏமாற்றிய 20 ம் நூற்றாண்டும் முடிந்துவிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த நாடுகள் செய்த செயலைப் பட்டியலிட்டால் இதன் அவசியத்தை உணர முடியும்..

சர்வதேச சட்டங்களையும், மாற்றங்களையும் ஏற்று வழிவிடாவிட்டால் தமிழராக இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும் இந்த உலகப்பேரலை அவர்களைத் தூக்கி வீசும்.

அலைகள் இலங்கை விவகாரப் பிரிவு 22.04.2011

Comments