சிறிலங்காவில் துடுப்பாட்டமும் அரசியலும் ஒரு பார்வை

சிறுபான்மைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போரினால் அவர்கள் பெரிதும் நொந்துபோயிருக்கிறார்கள். துடுப்பாட்டத்தினை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அவர்களுக்கு உண்டு. சிங்களவர்களைப் நினைவுபடுத்தும் சிங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட சிங்கக் கொடியினை துடுப்பாட்டப் போட்டிகளின் போது தாங்கி நிற்பதற்கு இந்தத் தமிழர்கள் விரும்பவில்லை.

இவ்வாறு சவூதி அரேபியாவை தளமாகக் கொண்ட The Saudi Gazette என்னும் ஊடகத்தில் Namini Wijedasa எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

2011ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் சிறிலங்கா இந்தியாவிடம் தோல்விகண்டிருந்தபோதும் சிறிலங்காவினது துடுப்பாட்ட வீரர்கள் வெற்றி வீரர்களாக அங்கு வரவேற்கப்பட்டனர். இதுவும் ஒரு அரசியலா அன்றி தோல்வியினைத் தழுவினாலும் அவர்களை இறுதிவரை போராடித் தோற்றதை வரவேற்கும் மனப்பாங்கா?

சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் துடுப்பாட்டம் என்பது நாளுக்கு நாள் அரசியல்சார் செயற்பாடாக மாறிவருகிறது. சிறிலங்காவினது துடுப்பாட்டச் சபையில் அந்த நாட்டினது விளையாட்டுத்துறை அமைச்சர் அதிக செல்வாக்குச் செலுத்திவருவதோடு துடுப்பாட்ட சபையின் நிர்வாகக் கட்டமைப்பினை தேர்ந்தெடுப்பதில் சிறிலங்காவினது அதிபரே முதன்மையான பங்கினை வகிக்கிறார்.



தற்போது சிறிலங்காவில் இடைக்கால நிர்வாக அணியே இருக்கிறது. சிறிலங்கா துடுப்பாட்ட கட்டுப்பாட்டுச் சபையினைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் 2004ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெறவில்லை. சிறிலங்காவிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் இடைக்கால நிர்வாக அலகொன்று துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபைக்குப் பெறுப்பாக இருக்கமுடியும்.

அத்துடன் நாட்டினது அதிபர்தான் இதற்கான பரிந்துரைகளை மேற்கொள்வார். தேர்தல்கள் ஊடாக துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச்சபை தெரிவுசெய்யப்படுமிடத்து அது ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு கீழ்ப்படியாமல் செயற்படக்கூடிய நிலையினைக் கருத்திற்கொண்டுதான் 2004ம் ஆண்டு முதல் சிறிலங்காவில் இடைக்கால நிர்வாக சபையே இருந்து வருகிறது.

ஏப்பிரல் இரண்டாம் நாள் உலகக்கிண்ண இறுதிப்போட்டி இடம்பெற்ற வேளையில் சிறிலங்காவினது துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச்சபை தெரிவுசெய்யப்படும் முறை தொடர்பாக அந்த நாட்டின் சர்ச்சைகளும் பிரச்சினைகளும் நிறைந்த அரசியல் வட்டகைகளில் அதிகம் விவாதிக்கப்பட்டது.

1996ம் ஆண்டு சிறிலங்காவிற்கு உலகக் கிண்ணத்தினை பெற்றுகொடுத்த துடுப்பாட்ட அணியின் தலைவர் அருச்சுனா ரணதுங்க கூறிய கருத்துக்களே இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு வழிவகுத்தது.

சிறிலங்காவினது துடுப்பாட்ட அணிக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனைதான் என்ன என அணியின் முன்னாள் தலைவர் அருச்சுனா ரணதுங்கவிடம் இந்தியத் தொலைக்காட்சி ஒன்று கேள்வியினைத் தொடுத்திருந்தது. இந்தப் பொறுப்பினை அதிபர் ராஜபக்ச எடுத்துக்கொண்டமையினால் சிறிலங்கா அணிக்கு ஆலோசனை வழங்கும் பணியினைத் தான் நிறுத்திவிட்டதாகப் பதிலளித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தினையும் அதிபர் ராஜபக்சவினையும் தூண்டும் வகையிலேயே ரணதுங்க இந்தக் கருத்தினை வெளியிட்டிருந்தால் அதில் அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.

ரணதுங்கவின் இந்தக் கருத்து நாட்டினது துடுப்பாட்ட அணியின் உளவுரனைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் அனைத்துலக ரீதியில் சிறிலங்காவினது பெயருக்குக் களங்கத்தினை ஏற்படுத்திவிட்டதாகவும் சிறிலங்காவினது அரச ஊடகங்கள் பொரிந்து தள்ளின. ரணதுங்கவின் இந்தக் கருத்துத் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் உலகக்கிண்ணப் போட்டிகள் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்ந்தன.

தவறான ஆலோசனையின்பால் அடைந்த அரசியல் காரணங்களினால் உந்தப்பட்ட இறுதிப்போட்டிக்கு முன்னர் ரணதுங்க வெளியிட்ட கருத்துக்ககளையும் சிறிலங்கா சந்தித்த தோல்வியினையும் தொடர்புபடுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன.

சிறிலங்காவில் தொடரும் அரசியல் இதுதான். துடுப்பாட்டத்தின் நிலையும் இதுதான். சிறிலங்காவினது துடுப்பாட்ட அணியின் இரண்டு முன்னாள் நட்சத்திரங்கள் அந்த நாட்டினது அரசியலில் எதிர் எதிர் துருவங்களில் இருந்து செயற்படுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட அருச்சுனா ரணதுங்க எதிர்க்கட்சி வரிசையிலும் ஜெயசூரிய ஆளும் கட்சியின் வரிசையிலும் இடம்பிடித்திருக்கிறார்கள்.

2011ம் ஆண்டுக்கான துடுப்பாட்டப் போட்டிகளில் தானும் பங்கெடுங்கமுடியும் என்ற கனவில் இருந்த ஜெயசூரியவிற்கு அது முடியாமற் போய்விட்டது. இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சிறிலங்கா அணி கொண்டிருக்கும் என ஜெயசூரிய கடைசிவரைக்கும் நம்பினார்.

அதிகளவிலான ரசிகர்களைக் கொண்ட பணப்புழக்கம் அதிகமுள்ள, காத்திரமானதொரு விளையாட்டு இதுவென்பதால் சிறிலங்காவில் துடுப்பாட்டத்துடன் தொடர்புடைய விடயங்களில் மறைமுக அரசியல் ஈடுபாடு அதிகமுள்ளது.

துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபையினது அல்லது துடுப்பாட்ட அணியினது ஊடகவியலாளர் மாநாடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையேற்று நடாத்துவது சிறிலங்காவினைப் பொறுத்தவரையில் ஒன்றும் வழமைக்கு மாறான விடயமன்று. இந்த நிலையில் ஓர் உலகக் கிண்ணச் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டபின்னர் நாடு திரும்பிய, அதுவும் சிறிலங்கா அணி அபாராமாக விளையாடிய போட்டிகளின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் அதிகளவிலான அரசியல்வாதிகளைக் காணமுடிந்தது.

சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இறுதிப்போட்டி இடம்பெற்ற நாளன்று கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லிமிறர் பத்திரிகையின் ஆசிரியர்பத்தி கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது. "இன்றைய போட்டியின் வெற்றியாளர்கள் யாரென்பது தெரிவதற்கு முன்னரே, சிறிலங்காவினது அரசியல்வாதிகள் தமக்கேயுரிய பாணியில் சிறிலங்காவினது துடுப்பாட்டு அணியின் மீது சவாரி செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்" என அந்த ஆசிரியர் பத்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறுதிப்போட்டியில் சிறிலங்கா தோல்வியடைந்த நிலையில், "ஊழல்கள் மலிந்துகிடக்கும் நாட்டினது துடுப்பாட்டக் கட்டமைப்பினை இனியாவது சிறிலங்கா மாற்றியமைத்துவிட்டு 2015ம் ஆண்டு இடம்பெறவுள்ள போட்டிக்குத் தன்னைத் தயார்ப்படுத்துமா" எனவும் கேள்வி எழுப்பியிருந்தது.

"சிறிலங்காவினது துடுப்பாட்ட அணியினது அடுத்த நிர்வாகக் குழுவில் யார் இருப்பார்கள் என எமக்குத் தெரியாது" என அந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் "சிறிலங்காவில் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டுச் சபையினது கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்பது சூரியன் மேற்கே உதிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது" என டெய்லி மிறரின் ஆசிரியர் பத்தியில் தொடர்ந்து குறிப்பிடப்பட்டிருந்தது.

துடுப்பாட்ட இறுதியாட்டத்தில் கிடைக்கும் வெற்றியின் ஊடாக அரசியல் ஆதாயம் தேட முனைந்த அரசியல்வாதிகள் யாரோ அவர்கள்தான் சங்கக்காரவின் தலைமையிலான அணி இந்தியாவிடம் தோல்விகண்ட நிலையில் கடும் ஏமாற்றமடைந்தார்கள். சிறிலங்கா அணி தோல்வியினைச் சந்திக்கப்போகிறது என்பது உறுதியான நிலையில், சரி இறுதிப்போட்டிவரை முன்னேறியிருந்தார்களே எனத் தங்களைத் தாங்களே திருப்திப்படுத்தியதோடு கிடைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதாயத்தினைப் பெற்றுக்கொள்வோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.

இறுதிப்போட்டி இடம்பெற்ற மறுநாளான ஏப்பிரல் மூன்றாம் திகதி சிறிலங்கா அணி நாடு திரும்பியிருந்தது. தொழில்துறை மற்றும் தொழிலாளர் உறவுகளுக்கான அமைச்சர் வானூர்தி நிலையத்தில் வைத்துத் துடுப்பாட்ட அணியினை வரவேற்றார். அங்குவைத்து மாலைகள் அணிவிக்கப்பட்டு மேளதாளங்களுடன் கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிறிலங்கா அரசாங்கம் துடுப்பாட்ட வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு வரவேற்று நிகழ்வினை ஒழுங்குசெய்திருந்தது. இந்த வரவேற்பு நிகழ்வில் தொழில்துறை அமைச்சரைத் தவிர, சிறிலங்கா அணி பயணித்த தனி வானூர்தியில் இருந்த வேறு சில அமைச்சர்களும் பங்குகொண்டனர்.

அரசாங்கத்தினால் சுதந்திர சதுக்கத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சிறிலங்கா அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது தமக்குக் கிடைத்த வெற்றிதான் எனப் புகழ்பாடப்பட்டது. இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அமைச்சரும் பங்கெடுத்தார். இது இவ்வாறிருக்க கடந்த திங்களன்று அலரி மாளிகையில் அதிபர் ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த துடுப்பாட்ட வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் ஏராளமான அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

என்ன சிறிலங்கா அணி உலகக் கோப்பையினைத் தனதாக்கிவிட்டதா என்ற ஒரு எண்ணம் மேலிட்டது. துடுப்பாட்ட வீரர்களுடன் ஒளிப்படமெடுப்பதற்கு அமைச்சர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் இதற்கும் நேரெதிர் மாறானதாகவே பொதுமக்களின் செயற்பாடுகள் அமைந்தன. சிறிலங்காவினது பெருநகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட அளவில் பெரிய திரைகளில் சனியன்று இறுதிப்போட்டியின் நேரஞ்சலைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். வெற்றி நொடிப்பொழுதில் கைநழுவிப்போன நிலையில் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்திற்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

இருப்பினும் ஞாயிறன்று காலையில் தோல்வி தந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டெழுந்த மக்கள் தங்களது துடுப்பாட்ட அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியதே எனப் பெருமையடைந்தனர்.

ஆம், தோல்வியினையும் ஏற்றுக்கொண்டு சுதாகரிக்கும் மனப்பக்குவம் இதுதான். ஆனால் இறுதியாட்டத்தின்போது சிறிலங்காவினது துடுப்பாட்ட முதன்மையான நான்கு வாய்ப்புகளைத் தவறவிட்டது. சிறிலங்காவின் களத்தடுப்பு சோபிக்கவில்லை, முக்கியமானதொரு பிடியெடுப்பு தவறவிடப்பட்டது, ஆட்டமிகப்பினை ஏற்படுத்தக்கூடிய இன்னொரு வாய்ப்பும் கைநழுவியது அத்துடன் அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. சாமர கப்புக்கெதரவினை அணியினுள் உள்வாங்கியது யார்? இறுதிப்போட்டியின் போது சூதாட்டம் ஏதேனும் இடம்பெற்றதாக என்ற கேள்விகளும் எழுந்தன.

ஆனால் சிறிலங்காவிலுள்ள பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரையில் தங்களது துடுப்பாட்ட அணியின் உறுப்பினர்களை வீரர்களாகவே மக்கள் கருதுகிறார்கள். "என்னைப் பொறுத்தவரையில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய எங்களின் அணியினை இவ்வாறு வரவேற்பதில் எந்தத் தவறும் இல்லை" என சட்டவாளரும் துடுப்பாட்ட ரசிகருமான காஞ்சனா பீரிஸ் கூறுகிறார். "எங்களது நாட்டிற்குப் பெருமையினைத் தேடித் தந்தவர்கள் இவர்கள். இந்த நிலையில் எங்களது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் துடுப்பாட்ட அணியிருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்" என்றார் அவர்.

"எவ்வாறிருப்பினும் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஆதாயம்தேட முற்பட்ட நாட்டினது அரசியல்வாதிகளின் செயற்பாட்டினை நான் வெறுக்கிறேன். எங்களது அரசியல் வாதிகள், வெளிப்படைத்தன்மைகொண்ட, பகட்டு ஆரவாரம் எதுவுமற்ற அதிகாரப் பசியற்றவர்களாகவே இருக்கவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இதுபோல நாடுதிரும்பும் துடுப்பாட்ட அணியினை வரவேற்கும் நிகழ்வானது சரியான காரணங்களுக்காக ஒழுங்குசெய்யப்படவேண்டும். ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை" என அந்த வழக்கறிஞர் தொடர்ந்து தெரிவித்தார்.

சிறிலங்காவினைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் துடுப்பாட்டத்தினை அதிகம் நேசிக்கிறார்கள். இருப்பினும் பிளவுபட்டுப்போயிருக்கும் ஒரு தேசத்தில் துடுப்பாட்டம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு அம்சமாக இன்னமும் இல்லை.

சிறுபான்மைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த போரினால் அவர்கள் பெரிதும் நொந்துபோயிருக்கிறார்கள். துடுப்பாட்டத்தினை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அவர்களுக்கு உண்டு. சிங்களவர்களைப் நினைவுபடுத்தும் சிங்கத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட சிங்கக் கொடியினை துடுப்பாட்டப் போட்டிகளின் போது தாங்கி நிற்பதற்கு இந்தத் தமிழர்கள் விரும்பவில்லை.

இருப்பினும் நாட்டிலுள்ள வேறு எந்த அம்சத்தினை விட துடுப்பாட்டம்தான் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களை ஓரளவுக்கேனும் ஓரணியில் திரட்டுக்கிறது என்பது என்னவோ உண்மைதான்.

ஞாயிறன்று நாடு திரும்பிய தங்களது துடுப்பாட்ட வீரர்களை வரவேற்கும் வகையில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பலதரப்பட்டவர்களும் வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்ததோடு சுதந்திர சதுக்கத்திலும் கூடி நின்றார்கள். தோல்வியால் நொந்துபோய்க் கண்கள் சிவப்பாகிப்போன வீரர்களுடன் தாங்களும் துணையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த மக்கள் கூடிநின்றார்கள். சுதந்திரசதுக்கத்தில் கூடிநிற்பதனால் அவர்களுக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. ஆனால் வீரர்களை வரவேற்பதில் மகிழ்வடைந்தார்கள் இவர்கள்.

சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தங்களுக்குக் கிடைக்கப்போவது எதுவுமில்லை என்பதால்தான் அரசியல்வாதிகள் அங்கு அதிகம் வரவில்லைப்போலும்.

Comments