சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த ரமேஸ் எங்கே?' காணொலி ஆதாரத்துடன் கேள்வி எழுப்புகிறது மனிதஉரிமை கண்காணிப்பகம்

போரின் முடிவில் சரணடைந்த புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேணல் ரமேசை சிறிலங்காப் படையினர் விசாரணை செய்யும் புதிய காணொலி ஆதாரத்தை வெளியிட்டுள்ள மனிதஉரிமைகள் கண்காணிப்பகம், சரணடைந்தவர்கள் கட்டாயமாகக் காணாமற் போனதற்குக் காரணமாக இருந்த படை அல்லது குடியியல் அதிகாரிகள் உடனடியாக நீதியின் முன்நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.


இதுதொடர்பாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவில் அரச படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட அனைவருக்கும் சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பலர் காணாமற் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தமது உறவுகளின் கதி என்ன என்று அறியும் வகையில் இவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் சிறிலங்கா அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போதும் இதுதொடர்பான முறையான விசாரணைகள் ஏதேனும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை.

போரின் இறுதிநாட்களில் இடம்பெற்ற கட்டாயக் காணாமற்போதல்களுக்கு இதுவரை தீர்வு எதுவும் கிட்டவில்லை.

போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த போது சிறிலங்கா அரச படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் புரிந்ததாகக் கூறப்படும் பல்வேறு உரிமைமீறல்களை விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்மொழிந்திருக்கும் செயற்பாடுகளில் மேற்குறித்த இந்த அம்சமும் உள்ளடக்கப்பட வேண்டும்.

சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பான பொறுப்புச்சொல்லும் பொறிமுறை தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்திருக்கும் வல்லுநர்கள் குழுவானது தனது இறுதி அறிக்கையினை இந்த ஆண்டு ஏப்பிரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"போரின் இறுதிநாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணாமற்போதல்களை எடுத்த எடுப்பில் மறுத்து விடுவதை விடுத்து சிறிலங்கா அரசாங்கமானது முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

காணாமற்போனவர்களின் குடும்பங்களைப் பொறுத்தவரையில் தங்களது அன்புக்குரியவர்கள் உண்மையில் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என அறியும் உரிமை அவர்களுக்கு உள்ளது" என மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிறட் அடம்ஸ் கூறுகிறார்.

காணாமற்போனவர்களின் உறவினர் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்கள் வழங்கும் தகவல்கள், ஊடகங்களில் வெளிவந்த வாக்குமூலங்கள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு மே 16 2009 தொடக்கம் மே 18 வரையிலான காலப்பகுதியில் இருபதுக்கும் அதிகமானவர்கள் காணாமற்போயிருக்கிறார்கள் என்பதை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப்படுத்துகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வட்டுவாகல் பகுதியில் வைத்து சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படையினருக்குமான இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலின் வடகிழக்குப் பகுதியான வட்டுவாகலில் அமைந்திருக்கிறது. அப்போது சிறிலங்கா இராணுவத்தின் 59வது படைப்பிரிவின் பொறுப்பிலேயே இந்தப் பிராந்தியம் இருந்தது.

குறித்த ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்து விட்டு, பின்னர் தாங்கள் அந்த நபரைக் கைது செய்யவில்லை என்றும் அவர்களது எங்கிருக்கிறார்கள் என்றோ அன்றி அவர்களது விதி என்னவென்றோ தமக்குத் தெரியாது எனவும் அதிகாரிகள் கூறுவதுதான் அனைத்துலக சட்ட நியமங்களின் அடிப்படையில் கட்டாய காணாமற்போதல் ஆகும்.

உயிர்வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாகத் திரிவதற்கான உரிமை மற்றும் சித்திரவதை, மோசமாக நடத்தப்படுவதற்கு எதிரான பாதுகாப்பு ஆகிய அனைத்துலகச் சட்ட நியமங்களை மீறும் வகையில் கட்டாயக் காணாமற்போதல்கள் அமைகின்றன.

காணாமற்போனதாகக் கருதப்படும் இவர்கள் வேறுபட்ட சந்தர்ப்பங்களில் படையினரால் தடுத்து வைக்கப்பட்டவர்களே.

மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆவணப்படுத்தியிருக்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில், காணாமற்போனவர்களில் அரைப்பங்கிற்கும் அதிகமானவர்கள், மே 18ம் நாளன்று கத்தோலிக்க மதகுரு பிரான்சிஸ் ஜோசப் என்பவருடன் இணைந்து வட்டுவாகல் பாலத்தின் தென்முனையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களே.

ஜோசப் அடிகளாருடன் இணைந்து சரணடைந்தவர்களை பேருந்து ஒன்றில் ஏற்றிய படையினர் அங்கிருந்து சென்றதாக காணாமற்போன ஒருவரின் மனைவியான ஆனந்தி [உண்மைப் பெயரல்ல] மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்திடம் கூறியிருக்கிறார்..

மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் நேர்கண்ட பிற சாட்சியங்கள் மற்றும் எண்ணற்ற ஊடக அறிக்கைகள் ஆனந்தியின் இந்தக் கூற்று உண்மையென்பதை உறுதிப்படுத்துகிறது.

விடுதலைப் புலிகளின் போராளி ஒருவரது துணைவியும் அவரது ஐந்து வயது மற்றும் மூன்று வயதுப் பிள்ளைகளையும் மேற்குறித்த இந்தப் போராளிகளுடன் படையினர் ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். கிறிஸ்தவ மதகுரு ஜோசப் அடிகளார் மற்றும் இந்தக் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

அதற்குப் பின்னர் தனது கணவர் தொடர்பான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என ஆனந்தி கூறுகிறார்.

"போராளிகள் தடுப்பிலுள்ள அனைத்து முகாம்களுக்கும் சென்று நான் தேடினேன். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குக் கூட நான் சென்றேன். சனவரி 2010 அன்று சிறிலங்கா காவல்துறையிலும் முறைப்பாடு ஒன்றைக் கொடுத்தேன்.

இருப்பினும் எனது கணவர் தொடர்பான எந்தத் தகவலும் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. எனது கணவர் காணாமற்போன பிரதேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் தமக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகப் பொலிசார் கூறுகிறார்கள்.

எனது கணவனுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் எனக்குக் கூறுவேண்டும். அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரியவேண்டும். நான் இங்கு எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு பதிலைத் தான்" என்றார் அவர்.

குறிப்பிட்ட இந்தப் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறுப்படும் யோகரத்தினம் யோகி என்பவர் தொடர்பாக சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளரிடம் யூலை 2010 அன்று கேட்கப்பட்டிருந்தது. அப்போது தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 11600 போராளிகளுள் யோகி இல்லை என புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட இந்தப் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட பலரது பெயர் விபரங்கள் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்திற்குக் கிடைத்திருக்கின்ற போதும் அவர்கள் தற்போதும் காணாமற்போன நிலையில் தான் இருக்கிறார்களா என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் உறுதிப்படுத்த முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் காணாமற்போன இன்னொரு சம்பவத்தில், போரின் இறுதி நாட்களில் மக்களுடன் இணைந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினரான கேணல் ரமேசை, சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட இரண்டு புலி உறுப்பினர்கள் அடையாளம் காட்டிய பின்னர், அவரையும் மேலும் மூவரையும் அருகிலிருந்த கொட்டிலுக்குள் சிறிலங்காப் படையினர் அழைத்துச் சென்றதைத் தான் கண்டதாக இன்னொரு சாட்சி மனிதஉரிமைகள் காண்காணிப்பகத்திடம் கூறியிருக்கிறார்.

இதன் பின்னர் ரமேசினது குடும்பத்திற்கு எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை. உலகத் தமிழர் பேரவைக்குக் கிடைத்த, ரமேஸ் இராணுவத்தினரின் தடுப்பில் இருப்பதைக் காட்டும் காணொலிக்காட்சி ஒன்றை டிசம்பர் 2010ல் பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

ரமேஸ் சிறிலங்கா படையினரின் தடுப்பில் இருப்பதை உறுதிப்படுத்தும் பிற காணொலி ஆதாரங்களைத் தற்போது மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் பெற்றிருக்கிறது.

குறிப்பிட்டதொரு காணொலியில் ரமேஸ் கடற்கரையில் பொதுமக்கள் உடையில் படுத்திருக்கிறார். ஏனைய நான்கு காணொலிகளில் அவரைச் சுற்றி நிற்கும் படையினர் ரமேசிடம் விசாரிக்கிறார்கள்.

இந்தக் காணொலியில் எந்த இடத்தைச் சேர்ந்தவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி எங்கே, முதுகில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது போன்ற கேள்விகளைப் சிறிலங்காப் படையினர் ரமேசிடம் தொடுக்கிறார்கள்.





குறிப்பிட்ட ஒரு காணொலியில் இன்றைய திகதி 22 என சிறிலங்காப் படையினன் ஒருவர் கூறுகிறார். 2009 மே 22, அன்றுதான் இந்த காணொலி எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.

கிடைக்கப் பெற்றிருக்கும் ஆறாவது காணொலியில் எப்போது இயக்கத்தில் இணைந்தீர்கள், இயக்கத்தில் வழங்கப்பட்ட பொறுப்பு என்ன மற்றும் குடும்ப உறுப்பினர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகள் ரமேசிடம் கேட்கப்படுகின்றன.

இந்த காணொலி ஆவணம் போலியானது என்றும் போரின் இறுதிநாட்களில் ரமேஸ் கொல்லப்பட்டு விட்டார் என்றும் கடந்த டிசம்பரில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியிருந்தார்.

மே 17ம் நாளன்று வட்டுவாகல் பாலத்திற்குத் தெற்காக பரமானந்தன் கோகுலகிருஸ்ணன் என்பவரை சிறிலங்கா இராணுவத்தினர் தடுத்து வைத்திருக்கிறார்கள். 1996ம் ஆண்டு ஏற்பட்ட காயத்தினால் கண் பார்வையிழந்திருந்த தனது கணவனுடன் இணைந்து தானும் பயணிப்பதற்கு இராணுவத்தினர் மறுத்து விட்டதாக கோகுலகிருஸ்ணனின் துணைவி கூறுகிறார்.

விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டு விடுவார் என உறுதியளித்த படையினர் கண்பார்வையற்ற இவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பின்னர் இந்த நபர் தொடர்பான எந்தத் தகவலும் குடும்பத்தினருக்குக் கிடைக்கவில்லை.

ஒக்ரோபர் 2010ல் கோகுலகிருஸ்ணனது குடும்பத்தினர் இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையில் முறையிட்டிருக்கிறார்கள். விசாரணையின் பின்னர் தகவல் தருவதாகப் பொலிசார் உறுதியளித்த போதும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

மே 17ம் நாளன்று வட்டுவாகல் பாலத்திற்குத் தெற்காக தங்களுடன் பயணித்த ஐந்து பேரை சிறிலங்கா அரசபடையினர் தனிமைப்படுத்தி அழைத்துச் சென்றதாக பிறிதொரு சாட்சி மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்திடம் கூறியிருக்கிறது.

இவ்வாறு படையினரால் தடுத்து வைக்கப்பட்டவர்களில் சுதர்சினி கிருஸ்ணகுமாரும் ஒருவர். இவரது குடும்பத்தினர் மனிதஉரிமை ஆணைக்குழுவிலும் சிறிலங்காவினது காவல்துறையிலும் முறைப்பாடுகளைச் செய்திருக்கின்றபோதும் இதுவரை இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

இதுதவிர 2010ம் ஆண்டு மே மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் தங்களது குடும்ப உறுப்பினர்கள் சிறிலங்கா அரசபடையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாகப் பலர் சாட்சியமளித்திருந்தார்கள்.

அரச அதிகாரிகள் மற்றும் ஏனையோர் ஆணைக்குழுவிற்கு வழங்கிய வாக்குமூலங்களைத் தனது இணையத்தளத்தில் இந்த ஆணைக்குழு வெளியிட்டிருக்கின்ற போதும் படையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமற் போனவர்களது உறவினர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் எதனையும் அது வெளியிடவில்லை.

போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த போது தான் இந்தக் கட்டாயக் காணாமற்போதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அவர்களது பதிவுகளை மேற்கொண்ட அரச படையினர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் அரச படையினரால் நிர்வகிக்கப்படும் புனர்வாழ்வு முகாம்கள் எனப்படும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் இவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்ட ஏனைய பலருக்கு என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது.

பெப்ரவரி 2010 ல் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வந்த மக்களைப் பதிவு செய்த மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைத் தனிமைப்படுத்திய சிறிலங்காவின் செயற்பாடு வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆவணத்துடன் உறுதிப்படுத்தியிருந்தது.

குறிப்பிட்ட இந்தச் சம்பவங்களின் போது காணாமற்போன ஒவ்வொரு சம்பவத்தினையும் சிறிலங்கா அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்றும் காணாமற்போன ஒவ்வொருவரது நிலையினையும் கண்டறிய வேண்டும் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருகிறது.

குறிப்பிட்ட இந்தக் கட்டாயக் காணாமற்போதல்களுக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அது படை அதிகாரிகளாகவோ அன்றில் சிவில் அதிகாரிகளாகவோ இருக்கலாம் அவர்களை உடனடியாகவே நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

கட்டயாக் காணாமற்போதல்கள் தொடர்பான ஐ.நாவின் செயற்குழுவின் பிரதிநிதிகள் சிறிலங்காவிற்கு பயணம் செய்யும் வகையில் அவர்களுக்கான அழைப்பினைச் சிறிலங்கா அரசாங்கம் விடுப்பதோடு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

கட்டாயக் காணாமற்போதல்களுக்கு எதிரான அனைத்துலக சாசனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடுவதோடு கட்டாயக் காணாமற்போதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அது உள்நாட்டில் மேற்கொள்ள வேண்டும்.

'போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றவை எவையோ அவற்றுக்கான பொறுப்புச்சொல்லும் பொறிமுறையினை ஏற்படுத்துவதற்குச் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பின்னடித்து வருவதானது தங்களது உறவுகளைத் தொலைத்து விட்டு நிற்கும் இந்த மக்களைப் பொறுத்தவரையில் பெரும் துன்பியல் நிகழ்வாக அமைந்துவிட்டது' என்கிறார் அடம்ஸ்.

"இந்த மக்களின் உறவுகளுக்கு உண்மையில் நடந்தது என்ன என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாய தேவை மற்றும் இதுபோன்ற புதிய சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கவேண்டிய கடப்பாடு என்பன அரசாங்கத்திற்கு உண்டு" என மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் அடம்ஸ் தொடர்ந்து தெரிவித்தார்.

Comments