முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தமிழ் மக்கள் முகங்களில் முதற் தடவையாக சிரிப்பு மலர்ந்தது

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலை இலங்கை வல்வையில் சிறீலங்கா இனவாத இராணுவத்தால் உடைத்துத் தகர்க்கப்பட்ட கவலையுடன் புலம் பெயர் தமிழ் மக்கள் அதிகமு தலைவி செல்வி ஜெயலலிதாவைப் பார்க்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களுக்காக உண்மைக்குண்மையாக பாடுபட்டவர் புரட்சித் தலைவர் என்பது உலகறிந்த உண்மை. புதுமாத்தளனிலும், முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்ட தமிழ் மக்களை காக்கத் தவறிய மு.கருணாநிதி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பதவியேற்பதற்கு முன்னரே ஈழத் தமிழ் மக்களுக்காக மாநில அரசின் அதிகாரத்திற்குள் போராடுவேன் என்று செல்வி ஜெயலலிதா அறிவித்திருப்பது புரட்சித் தலைவி மீது பாரிய மதிப்பை உருவாக்கியுள்ளது.

செல்வி. ஜெயலலிதாவின் வெற்றிச் செய்தி கேட்டதும் மேலை நாடுகள் முழுவதும் புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரு மகிழ்ச்சியடைந்தார்கள். தமது வெற்றிபோல இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். புதுமாத்தளன் பேரழிவில் கண்ணீர் வடித்த இலங்கைத் தமிழ் மக்கள் முதல் தடவையாக கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு தமிழக வாக்காளருக்கு நன்றி கூறினார்கள். கருணாநிதிக்கு மக்கள் படிப்பித்துள்ள பாடத்தால் திரும்பின பக்கமெல்லாம் தமிழ் மக்கள் முகங்களில் பெரு மகிழ்ச்சி காணப்படுகிறது. மு.கருணாநிதி எவ்வளவு பாரிய தவறை இழைத்துள்ளார் என்பதற்கு இதைவிட வேறொரு உதாரணமும் தேவையில்லை.

சிறீலங்கா ஆட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ போர்க்குற்றத்திற்காக நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு பின் புலம் பெயர் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக மாறியுள்ளார் செல்வி ஜெயலலிதா.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழக மக்களுடன் கொண்ட நல்லுறவுக்கு புதிய பாலம் அமைக்க செல்வி ஜெயலலிதா ஆவன செய்வார் என்று எதிர் பார்க்கிறார்கள். தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகத் தமிழ் மக்களின் குரலாக அவருடைய குரல் ஒலிக்க வேண்டும், அகில இந்திய அளவில் இந்த விவகாரத்தை முன்னெடுத்து அவர் வெற்றிநடை பயில வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

கடந்த காலங்களில் சிலருடைய தவறான கருத்துக்களால் ஏற்படுத்தப்பட்ட இடைவெளிகளை மறந்து, ஈழத் தமிழ் மக்களுக்கு மரியாதைக்குரிய தீர்வு மலர செல்வி ஜெயலலிதா உதவுவார் என்ற நம்பிக்கையை எங்கும் காண முடிகிறது.

அதேவேளை தமிழக சட்டசபையில் முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்ற புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் ஆதரவும் இருப்பது மகிழ்வு தருகிறது. ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கறுப்பு எம்.ஜி.ஆரின் கரங்களும் பலமாகிவிட்டது இரட்டிப்பு வெற்றியாக போற்றப்படுகிறது.

அதேவேளை நாம் ஈழத் தமிழ் மக்களுக்காக மட்டும் பேச முடியாது. தமிழ் சினிமா முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது. சிறிய தயாரிப்பாளர் திரையரங்குகள் இல்லாமலே தவிக்க சன் பிக்ஸ்சர்ஸ் படங்கள் மட்டும் காண்பிக்கப்பட்டது. விஜய் என்ற சிறந்த நடிகரே பாரிய பாதிப்பை சந்தித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் திரைப்படமே சன் பிக்சர்சை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. கமல் மௌனமாக காலத்தை ஓட்டினார். அஜித் மீது பாரிய அநீதிகள் நடாத்தப்பட்டன. தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாகவும், கலைஞர் குடும்பத்தின் ஜீரோக்கள் எல்லாம் ஹீரோக்களாகவும் வலம் வருகிறார்கள் என்று செல்வி ஜெயலலிதா கூறினார். ஆனால் தமிழ் சினிமாவின் நிலை தொடர்ந்து மோசமானது. இப்போது செல்வி. ஜெயலலிதா முதல்வராக வருவதால் தமிழ் சினிமா புதிய பரிமாணம் பெறும் என்ற புதிய நம்பிக்கை மலர்ந்துள்ளது.

அதேவேளை தமிழக மக்களின் வாழ்விலும், சட்டம் ஒழுங்கு நிலைபெறவும், தமிழக மக்களின் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றன நீக்கப்படவும் அவர் ஆவன செய்வார் என்றும் எதிர் புலம் பெயர் தமிழர் எதிர்பார்க்கிறார்கள். புலம் பெயர் தமிழ் மக்களுடன் நல்லுறவை வளர்க்க தமிழக அரசின் சார்பில் தனியான நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும். கையாட்கள் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உலகத் தமிழினத்திற்கான சென்ரல் போட் அமைக்கப்பட வேண்டும். செம்மொழி மாநாடு போல பாரபட்சமும், ஊழல்களும் நடைபெறாமல் புலம் பெயர் தமிழருக்கும் உரிய மரியாதையை தமிழக அரசு வழங்க வேண்டும். புலம் பெயர் தமிழர் – தமிழக அரசு உறவுப்பாலம் புதிய பரிமாணங்களை ஏற்படுத்த வேண்டும்.

சகல துறைகளிலும் பின்தங்கிக் கிடந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கும் – தமிழக அரசுக்குமிடையேயான உறவுகள் விஸ்தரிக்கப்பட வேண்டும். மீண்டும் எம்.ஜி.ஆர் காலத்தை செல்வி ஜெயலலிதா ஏற்படுத்துவார். அவருடைய வெற்றிக்கும், அவரது கூட்டணிக் கட்சிகள் அனைத்துடைய வெற்றிக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள் மனமார பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வாங்கையா வாத்தியாரையா..
வரவேற்க வந்தோம் ஐயா..
புரட்சித் தலைவரின் நல்லாட்சியையும், புரட்சித் தலைவியின் புதிய பாதையையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

அலைகள் ஆசிரிய பீடம் 13.05.2011

Comments