தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடைபெறுகின்றது - பிரித்தானிய யூத இன நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்கள் மீது இன அழிப்பு நடைபெறுகின்றது என, பிரித்தானிய ஆளும் மரபுவாத (Conservative) கட்சியின் யூத இன நாடாளுமன்ற உறுப்பினரான றொபேட் காபொன் (Robert Halfon) தெரிவித்துள்ளார்.


போர்க்குற்றம் பற்றி பேசிவந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டபோது இனப்படுகொலை பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும்.


லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் கடந்த 18ஆம் நாள் (18-05-2011) பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வில், பிரித்தானிய ஆளும் கூட்டணிக் கட்சிகளான மரபுவாத மற்றும் தாராண்மைவாதக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களில் யூதர்களான ஆளும் கொன்ஸ்சவேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லீ ஸ்கொட் (Lee Scott) மற்றும் றொபேட் காபொன் (Robert Halfon) ஆகியோரின் உரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


ஹார்லோ (Harlow) தொகுதியைச் சேர்ந்த றொபேட் காபொன் (Robert Halfon) ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள்:


அனைவருக்கும் மாலை வணக்கம். தமிழ் மக்களிற்கு இறைவன் துணை நிற்பார்.


இங்கு வந்திருப்பதையிட்டு நான் பெருமையடைகின்றேன். ஏனெனில் சிறீலங்கா அரசாங்கம் பூமியிலுள்ள மிக மோசமாக நரகாட்சிகொண்ட, குற்றம் புரிந்த அரசாங்கமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டியே 40 ஆயிரம் பொதுமக்களை இன அழிப்புச் செய்திருப்பதுடன், 3 இலட்சம் மக்களை முகாம்களில் அடைத்துள்ள சிறீலங்கா அரசாங்கம் கண்டனத்திற்கு உரியது.
இனப்படுகொலை சந்தித்திருந்த யூத இனத்தவனாக, அதே நிலையை எதிர்நோக்கியுள்ள தமிழ் மக்களிற்காக என்னால் முடிந்தளவு உதவியை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்ததை நான் செய்வேன். அதற்காகவே நான் உங்களுடன் இணைந்துள்ளேன்.

சிறீலங்கா அரசாங்கத்தை அதன் கூட்டாளிகள் யார் என்பதை வைத்து நீங்கள் தீர்மானிக்கலாம். கேணல் கடாபியின் உற்ற முன்னணி நண்பனாக உலகத்தில் இருக்கும் நாடு சிறீலங்காவாகும். கேணல் கடாபிக்கு அடைக்கலம் கொடுத்த சிறீலங்கா அரச அதிபரின் செயற்பாடு ஒரு விபத்து அல்ல. திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். சிறீலங்கா அரச அதிபர் அவரைக் கூப்பிட்டாலும் கடாபி இலங்கையில் தமிழ் மக்களின் பிரதேசத்திற்கு செல்ல மாட்டார்.

மத்திய கிழக்கு நாடுகள் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்கும்போது திரும்பிப் பார்க்கும் இந்த உலகம், பல்லாயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டு, பல இலட்சக்கணக்கில் அடைத்து வைக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான குரலை இந்த உலகம் ஏன் செவி மடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? அனைத்துலகின் இந்த செயற்பாடு, பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் கொடுத்த விலைக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் என்றே ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை நான் பார்க்கின்றேன். இந்த அறிக்கையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

நான் இங்கே எனது நண்பர்களுடன் வந்திருப்பது உங்களுக்கான அதரவைத் தெரிவிக்கவே. அதேபோன்று நாடாளுமன்றத்திலும் என்னால் முடிந்த ஆதரவை நான் வழங்குவேன்.

தமிழ் மக்கள் சுதந்திரத்திற்கும், சுய மரியாதைக்கும், தாங்கள் விரும்பும் அல்லது வேணவா கொண்டிருக்கும் விடுதலைக்கும் உரித்துடையவர்கள். இது இந்த உலகிலுள்ள எந்த இனத்திற்கும் பொருந்தும். அதுவே தமிழ் மக்களிற்கும் பொருந்தும்.

நன்றி.

Comments