போர்க் குற்ற விசாரணைகள் உண்மையும் அதன் விளைவுகளும் - பிரித்தானிய சஞ்சிகை

விடுதலைப் புலிகளது முதன்மைத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போர்க் குற்ற விசாரணைகள் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் எதிரானதாகவே இருக்கிறது.

இவ்வாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட புகழ்மிக்க The Economist எழுதியுள்ளது.


அதன் முழுவிபரமாவது,

அண்மைய ஆண்டுகளாக சிறிலங்காவினது இராசதந்திரிகள் கொண்டிருக்கும் மாறாத பண்புகளை நோக்குமிடத்து அவை தேசிய கௌரவத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அப்பாவிகளாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் இந்த இராசதந்திரிகளின் முகமூடிக்குள் அவர்களது உண்மை முகம் ஒழிந்து கிடக்கிறது.

சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுகால இனப்போரின் இறுதிநாட்களில் நடந்தது என்ன என்பது தொடர்பான ஐ.நா வல்லுநர்கள் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர் சிறிலங்காவினது இராசதந்திரிகள் பலர் 'கலந்துரையாடலுக்காகக்' கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை மறுப்பதற்கான தங்களது திறனை வளர்த்துக்கொள்வதற்காக இது இருக்கக்கூடும்.

மே 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டதுடன் சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்தது. கொடூரத்தனம் மற்றும் மனித வாழ்வினை அவமதிக்கும் பண்பு ஆகிய இரண்டினது கலப்பாக போரின் முடிவு அமைந்தது.

"அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்களையும் மோசமாக மீறும் வகையில் இரண்டு தரப்பினரும் செயற்பட்டிருக்கிறார்கள் என நம்புவதற்காக நம்பத்தகு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன" என வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளது முதன்மைத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போர்க் குற்ற விசாரணைகள் என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் எதிரானதாகவே இருக்கிறது.

தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் புதியதொரு அணுகுமுறையினைக் கைக்கொள்ளும் என எதிர்பார்க்கமுடியாதுதான். ஏற்பட்ட மனித இழப்புக்களை விட போரை முடிவுக்குக் கொண்டுவந்ததன் ஊடாகக் கிடைத்த பலாபலன்களே அதிகம் எனச் சிறிலங்கா அரசாங்கம் வாதிடக்கூடும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் தேசிய விடுதலைக்கான மூலோபாயமாக ஒரு கொடூரம் நிறைந்த உத்திகளைக் கைக்கொண்டிருந்தனர்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இராணுவத்தினர் காட்டிய அதியுச்ச வீரம் மதிக்கப்படவேண்டும் என்றும் ஆனால் குறித்த சில மீறல் சம்வங்கள் இடம்பெற்றிருப்பது வருந்துதற்குரியதே என்றும் அரசாங்கம் வாதிடக்கூடும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்படும் என்ற நம்பிக்கையினையும் அது வழங்க முடியும்.

பதிலாக, அரசாங்கம் மூன்றாவது ஒரு பாதையினைத் தேர்ந்தெடுத்தது, ஏற்கனவே அது கூறிய பொய்யினை நியாயப்படுத்துவதற்காக அது இன்று ஆயிரம் பொய்களைக் கூறுகிறது.

போரின்போது எந்தவொரு பொதுமக்களையும் தாங்கள் வேண்டுமென்று இலக்குவைக்கவில்லை என்கிறது அரசாங்கம். 330,000 பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய பாதுகாப்பு வலையப் பகுதியினை இலக்குவைத்து செறிவான எறிகணைத் தாக்குதல்களைச் சிறிலங்கா அரச படையினர் நடாத்தியிருந்தனர்.

ஆனால் தான் இதுபோல எந்தத் தாக்குதல்களை நடாத்தவில்லை என்றும் பாதுகாப்பு வலயங்களை இலக்குவைத்துக் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப்போவதில்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால், தான் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரச படையினர் இறுதிவரை காப்பாற்றவில்லை.

சனவரி 2009 தொடக்கம் மே 2009 வரையிலான காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் இவர்களில் பலர் சிறிலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதலின் விளைவாகவே உயிர் நீத்ததாகவும் வல்லுநர்கள் குழு தனது அறிக்கையில் கூறுகிறது.

மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டாத எதனையும் வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் உள்ளடக்கவில்லை என்றுதான் கூறுவேண்டும்.

ஆனால் மருஸ்கி தருஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவினது அறிக்கையில் சிறிலங்கா அரசாங்கத்தின் மோசமான வன்முறைசார் உபாயங்கள் தொடர்பாக பெரும்பாலும் சுற்றிவளைத்தே சுட்டிக்காட்டப்பட்டிக்கின்றன.

"சிறிலங்காவில் போர் முன்னெடுக்கப்பட்ட முறையானது போர் மற்றும் அமைதிக் காலங்களின்போதான தனிமனித கௌரவத்தினைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்துலக நீதி முறையின் மீது விழுந்த அடி" என வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

எது எவ்வாறிருப்பினும் போர்க்குற்றங்களோ அன்றி மனித உரிமை மீறல்களோ என எதுவுமே இடம்பெறவில்லை என முற்றாக மறுக்கும் தனது நிலைப்பாட்டிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் மாறுவதாகத் தெரியவில்லை.

ஐ.நா வல்லுநர்கள் குழுவினது அறிக்கை வெளிவந்தமை சிறிலங்காவில் முன்னெடுக்கப்பட்டுவரும் இன நல்லிணக்க முனைப்புகளைப் பெரிதும் பாதித்துவிட்டதாம் என்கிறது சிறிலங்கா.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த எதிர்ப்பினைப் பொருட்படுத்தாத செயலாளர் நாயகம் வல்லுநர்கள் குழுவினது அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார். இது ஐ.நாவின் மீதான சிறிலங்காவினது தேசிய ரீதியிலான கோபத்தினை அதிகரித்திருக்கிறது.

நாட்டிலுள்ள வீடுகள் தொடக்கம் மேல்மட்டம் வரை இந்தக் கோப உணர்வு காணப்படுகிறது. இதுபோல வெளிநாடுகள் மகிந்த ராஜபக்சவினை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதானது பெரும்பான்மையினச் சிங்களவர்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு அதிகரிப்பதற்கே வழிசெய்யும்.

வல்லுநர்கள் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த அதிபர் ராஜக்ச, நாட்டினது நலனுக்காக மின்சாரக் கதிரையில் அமருவதற்குத் தான் தயார் என அறிவித்தார். வல்லுநர்கள் குழுவின் அறிக்கைக்கான எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு அணிதிரள்வோம் என அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தொழிலாளர் தினத்தன்று பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நாவின் அறிக்கையானது உள்ளூரில் குறுகியகால அரசியல் இலாபத்தினை அவருக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறதெனில், நாடு எதிர்கொண்டிருக்கும் இரசாதந்திரப் பின்னடைவினையும் சீர்செய்துவிடலாம் என மகிந்தர் நம்பக்கூடும்.

அனைத்துலக ரீதியில் சிறிலங்காவிற்கான ஆதாரவாளர்கள் இல்லாமல் இல்லை. மே 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐ.நாவின் மனித உரிமைச் சபையில் சிறிலங்கா பெற்ற பெருவெற்றியினை வரவேற்று, விடுதலைப் புலிகள் கைக்கொண்ட வன்முறைப் பாதையினைக் கண்டித்து, சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட போர்க் குற்றங்கள் உண்மைக்குப் புறம்பானவை எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அப்போது சிறிலங்காவிற்கு பல நாடுகளும் முண்டு கொடுத்தமை உண்மைதான். ஆனால் சீனா மற்றும் ரசியா போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கான தமது ஆதரவினை இன்னமும் தொடர்கின்றன. இறையாண்மையுள்ள ஒரு நாட்டினது விடயங்களில் அனைத்துலகம் தலையிடுவதை இவர்கள் விரும்பவில்லை.

இறையாண்மையுள்ள நாடுகளில் நியாயாதிக்க எல்லைப்பரப்புக்குள் தலையிடக்கூடாது என்ற இந்த நாடுகளின் கொள்கைக்கு விதிவிலக்கானதாகவே லிபியா மீதான தலையீட்டுக்கான ஐ.நாவின் அங்கீகாரம் அமைகிறது.

ஆதலினால், தானே அமைத்திருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைத் தாண்டி இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு வேறெந்த வழிமுறையும் கைக்கொள்ளப்படாது என்ற தனது நிலைப்பாட்டில் சிறிலங்கா உறுதியுடன் தொடரும். சிறிலங்கா அமைத்துக்கொண்ட இந்த ஆணைக்குழுவானது தகுந்த நன்மதிப்பினைப் பெறத் தவறியபோதும் அதனது இறுதி அறிக்கை வெளிவரவிருக்கிறது.

கால ஓட்டத்தில் ஐ.நாவினது வல்லுநர்கள் குழுவினது அறிக்கையில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் சிறிலங்காவினைப் பாதிக்கப்போகிறது. சிறிலங்காவினது தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்லும்போது அங்கிருக்கும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்குவதோடு பொறுப்புச்சொல்லும் செயல்முறை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற அழுத்தத்தினை இவர்கள் வெளிநாட்டு அரசாங்கங்களின் மீது திணிப்பார்கள்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பிணக்கினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய சிறிலங்காவினது இராசதந்திரிகள் தமக்கு மேற்கினது ஆதரவும் இனியும் தேவையில்லை என வாதிடலாம்.

இந்தியா மற்றும் சீனாவினது படைத்தளபாடங்கள் போர் காலத்தில் சிறிலங்காவினது படைத்துறைக்குப் பெரிதும் உதவியது. ஆனால் தாங்கள் நினைப்பதைச் சரியெனச் சாதிக்கும் திறன்பொருந்திய சிறிலங்காவினது இராசதந்திரிகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை மூடிமறைக்கும் தமக்கேயுரிய நடவடிக்கையில் இறங்குவார்கள். இது இவர்களிடம் காணப்படும் தனித்திறமை.

போர்க்குற்றங்கள் தொடர்பான கொழும்பு மீதான அனைத்துலகக் குற்றச்சாட்டு நாட்டில் அரசாங்கத்திற்கான ஆதரவினையே அதிகரித்திருக்கும் நிலையில், போர் தொடர்பான உண்மைகள் சிறிலங்காவிற்கான பாதிப்பினை ஏற்படுத்துவதைத் தடுக்கமுடியாது. இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்களுக்குச் சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதால் சிக்கல்கள் எதுவுமில்லை என்றாகிவிடாது.

போரின் இறுதி நாட்களில் உண்மையில் நடந்தது என்ன என்பதை 300,000 பொதுமக்கள் நன்கறிவார்கள்.

சிறிலங்கா அமைத்திருக்கும் கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது கடந்த மாதங்களில் வடக்கில் தனது அமர்வுகளை நடாத்தியபோது, தங்களது அன்புக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போன் துன்பக் கதைகளை போரில் உயிர்தப்பிப்பிழைத்தவர்கள் கண்ணீருடன் எடுத்துக் கூறினர்.

எங்களது உறவுகள் எங்கே என்ற இவர்களது கேள்விகளுக்கு விடைகாணாமல் நல்லிணக்கத்தினைக் காணுவது எவ்வாறு.

நாட்டினது சிறுபான்மைத் தமிழர்களின் துன்ப துயரங்களைப் போக்குவதற்கு ஏதுவாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விடயத்திலும் சிறிலங்கா அரசாங்கம் எந்தவிதமான முன்னேற்றத்தினைக் காட்டவில்லை.

இந்த நிலையில் மேற்கு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் தமிழர்களின் தொகைதான் அதிகரிக்கும் என ஐ.நாவின் சிறிலங்காவிற்கான பேச்சாளராகச் செயற்பட்ட கோர்டன் வைஸ் எதிர்வு கூறுகிறார்.

உரிமைகள் மறுக்கப்பட்ட நிலை, அச்சத்தின் மத்தியில் மக்கள் தங்களது வாழ்வினைத் தொடர்வது, அரசியல் அளவில் தமிழர்கள் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுவது என்பன இதுபோல புலம்பெயர்நாடுகளை நோக்கித் தமிழ் அகதிகள் படையெடுப்பதை அதிகரிப்பதற்காக பிரதான காரணிகள் என்கிறார் அவர்.

போர் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை முறையாக விசாரிப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்துவருவதும் இதற்கான இன்னொரு காணரமாகும்.

தி.வண்ணமதி.

Comments