“சமகால நிலவரம்” டென்மார்க் மக்கள் பேரவையின் பேச்சாளர் றேமனுடன் நேர்காணல்

டென்மார்க் மக்கள் பேரவை பேச்சாளர் றேமன் வோசின்டன் அவர்களுடன்- “சமகால நிலவரம்” எனும் நேர்காணல் ஊடாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைக்கின்றோம்.

கேள்வி – சிறிலங்கா அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்த முடியுமா?


அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றத்தை உருவாக்கிய 2002ம் ஆண்டின் ரோம் உடன்படிக்கையில் சிறிலங்கா அரசு கையொப்பம் இடவில்லை. சிறிலங்கா அரசானது அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றத்தின் உறுப்பினர் இல்லாத பட்சத்தில் குற்றங்கள் தொடர்பான வழக்குகளைச் சிறிலங்கா அரசுக்கு அல்லது குடிமக்களுக்கு எதிராக அனைத்துலகக் குற்றவியல் நீதி மன்றத்தால் வழக்கு தொடர முடியாது. ஐநா பாதுகாப்புச் சபை போர்க் குற்றம் தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றி அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு வழக்குத் தொடரும் அதிகாரத்தை வழங்கவேண்டும்
போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக தமிழர்கள் வாழும் நாடுகளில் வழக்கு தொடுப்பதன் மூலம் அனைத்துலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வழக்கை கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கும் படி தூண்டலாம்.


கேள்வி – அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடொன்றில் பணி புரியும் அல்லது வதியும் போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?


ஆம் முடியும். அதற்கு போர்க் குற்றவாளி தங்கியிருக்கும் நாட்டின் அரசு விரும்பினால் சாத்தியமாகும். முதற்கண் அந்த நாடு குறிப்பிட்ட நபர் போர்க் குற்றவாளி தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கையாகக் குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கை தொடரும். சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் இராசதந்திர அந்தஸ்துடன் சிறிலங்காத் தூதரகங்களில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு இராசதந்திரிகளுக்குரிய சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. இதன் காரணமாக அவர்களைக் கைது செய்ய முடியாது. இவர்களுடைய இராசதந்திர அந்தஸ்து களையப்பட்டால் அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியும்.


கேள்வி – இரட்டைப் பிரசாவுரிமை உள்ள போர்க்குற்றவாளிகள் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள் ஏன் விசாரணை செய்யவில்லை ? இதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா ?


இரட்டைப் பிரசாவுரிமை உள்ள போர்க் குற்றவாளிகள் மீது அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் அந்தந்த நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் காத்திரமான முறையில் வழக்குத் தொடருவதன் மூலம் அந்நாடுகளை விசாரணையை மேற்கொள்ளும் நிலைக்குத் தூண்ட முடியும். இவ்விடயம் தொடர்பான வேலைத்திட்டங்கள் பல தமிழ் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கேள்வி – மே 18 போர்க் குற்றவியல் நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே ?


ஆம். ஏற்கனவே பலதடவைகள் சிறீலங்கா அரசு தமிழின அழிப்பை மேற்கொண்டிருந்தாலும் 2009ம் ஆண்டு, மே 18ம் நாளன்று குறுகிய நிலப்பரப்புக்குள் போர் வரையறைகளை மீறியும், தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மூலமும் வயது, பால் வேறுபாடின்றியும் சரணடைந்த மக்களையும் போராளிகளையும் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்ததோடு ஏனையோரை தடுப்பு முகாம்களிலும் சித்திரைவதைக் கூடாரங்களிலும் அடைத்து வைத்துத் துன்புறுத்தியும் வருகிறது. எனவே இந்நாளைப் போர்க்குற்றவியல் நாளெனப் பிரகடனப்படுத்தியமையே சாலப் பொருத்தமானதாகும்.


கேள்வி – மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற முக்கியமான கேள்வியாக கையெழுத்து விடயம் இருக்கின்றது. இவ்வாறாக கையெழுத்துககளை வைப்பதால் அது என்ன முடிவை நமக்குப் பெற்றுத் தரும் என்ற கேள்வி மக்கள் மனதில் நிறையவே உண்டு. அதற்கு உங்கள் பதில் என்ன?


டென்மார்க்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதியாக டென்மார்க் தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனுடைய ஏற்பாட்டில் சட்டவல்லுனரின் உதவியுடன் ஐசீசீக்கு (ICC) மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைதான் இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இது டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் கடமையல்ல. உலகம் வாழ் அனைத்து தமிழ் மக்களினுடைய கடமை. ஐரோப்பாவில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் அனைவரும் கையெழுத்திடவேண்டும். இவ்வாறு நாம் கையெழுத்து வைத்து அனுப்பப்படுகின்ற ஒப்பந்தத்தின் மூலமாக சிறிலங்கா அரசின் மீது இன்னும் அழுத்த நிலையை உருவாக்கலாம். அதே போல, சிறீலங்கா அரசின் முக்கிய அதிகாரிகளை 144 நாடுகளுக்கு வரவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாகவும் இது அமையும். இவ்வாறு மெது மெதுவாக நாங்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் அவர்களை ஒருநாள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் என்பதில் ஐயமில்லை. உலகமக்கள் ஒன்று திரண்டு மாபெரும் சக்தியாக திரண்டால் பாதிக்கப்பட்டு தாயகத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களுக்கு விடிவை நாம் பெற்றுக் கொடுக்கலாம்.


கேள்வி – இறுதியாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?


டென்மார்க்கில் இருந்து கொலண்ட் நோக்கி 1000 கிலோ மீற்றர் ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றவர்கள் மே 18ம் திகதி அன்று கொலண்டில் இருக்கின்ற சர்வதேச போர்க் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையை வந்தடையவுள்ளார்கள். அன்றைய தினம் பெரிய ஒன்று கூடல் ஒன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவல்லுனருடன் இணைந்து மனுவும் கையளிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய வாழ் உறவுகளே ஒன்று சேர்ந்து வலுச்சேர்க்க கையெழுத்து இடுங்கள், திரண்டு வாருங்கள். உங்கள் கடமைகளில் இதுவும் ஒன்று. இவ்வாறு நாங்கள் செய்வதின் மூலம் தாயகத்தில் இருக்கின்ற மக்களை நாங்கள் கைவிடவில்லை என்பதை அவர்களுக்கு நாங்கள் எடுத்துக் காட்ட முடியும். உறவுகளே சற்றே சிந்தியுங்கள்! விரைந்து வாருங்கள் என உங்களை இரு கரம் நீட்டி அன்புடன் பற்றி நிற்கின்றோம்.

Comments