பிரான்சு பாரிசில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் ஈக நினைவுப்பேரணி

உலகத்தில் 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் இன அழிப்பான முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் ஈக நினைவுப்பேரணி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்று பிரான்சு பாரிசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொள்ள மிக உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

பாரிசின் பிரதான சுற்றுலாத் தலமான Ecole militaire பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. சிறுவர் சிறுமிகள் இரு புறமும் நிரையாக நின்று மலர் தூவப் பேரணி நகர்ந்து செல்ல ஆரம்பித்தது.

சிறிலங்காவின் மனிதப் படுகொலைகளின் காட்சிப்படுத்தல் மற்றும் வாசகங்கள் அடங்கிய பதாதைகள் அணியில் காட்சிப்படுத்தப்பட்டன. இம்முறை மனிதப் படுகொலைப் பேரவலத்தின் ஓவியங்களும் பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலர் தமது கைகளில் தாங்கியிருந்தனர்.
கலந்து கொண்ட மக்கள் அமைதியான முறையில் இரு கரைகளிலும் அமைதியாக உலக மக்களே வியக்கும் அளவிற்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தமது பாதவலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கலந்து கொண்டமை காண்பவரை வியப்பில் ஆழ்த்தியது.

சுமார் இரண்டரை மணிநேரப் பயணத்தின் பின்னர் மாலை 4.30 மணியளவில் பேரணி
Trocadero பகுதியைச் சென்றடைந்தது. அணியில் வந்தவர்கள் அமைதியாக அங்கு அமரவைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்னால் ஈகச் சுடர் ஏற்றப்பட்டது.
அகவணக்கம், மலர் வணக்கம் என்பனவற்றைத் தொடர்ந்து மாணவிகளின் மலரஞ்சலி நடனம் இடம்பெற்றது.

பின்னர் இன்றைய நிகழ்வின் சிறப்புநிகழ்வான தீயதுமூட்டிய தீராத நீரம் எனும் இறுவட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது. லெப்.கேணல் அன்புவின் சகோதரர் அனுசரணை வழங்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் இந்த இறுவட்டு வெளியீடுசெய்யப்பட்டது. நிகழ்வில் செவ்ரோன் மேயர் மற்றும் கொமினிஸ்கட்சி உறுப்பினர் செவ்ரோன் நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட பல பிரெஞ்சு பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்து உரை நிகழ்த்தினர்.

அத்துடன் பல தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சிறப்புரைகளை ஆற்றினர். தொடர்ந்து தமிழ்மாணவ மாணவிகளின் எழுச்சி நடனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. பேரணியில் மகிந்தா மற்றும் கோத்தபாய இருவரையும் சிறைக்கூண்டில் நிற்பது போன்ற காட்சியும் அவர்களினால் கோரமாகப் படுகொலைசெய்யப்பட்டவரின் சேதமடைந்த உடல் போன்ற காட்சிகள் அனைவரையும் நியம் என உணரவைத்தது. நிகழ்வில் நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் நிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது.

Comments