குருதியில் உறைந்த தேசம்

மே 18 … தமிழின அழிப்பினைக் குறிக்கும் நாள். போர்க்குற்றங்களை உலகிற்கு உணர்த்தும் நாள்.கொண்ட இலட்சியத்தினை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் இறுதிவரை போராடிய மைந்தர்களை நினைவுகூரும் நாள்.


தமது விருப்பத்தின் வழியே அவர்கள் பயணித்திருக்கின்றார்கள்.

இறுதிக் கணத்திலும் , அசாத்தியமான மனவுறுதியோடு நின்று,

"நீ அழக்கூடாது" என்கிற ஆறுதல் வார்த்தையைகூறிச் சென்றிருக்கின்றார்கள்.

இறப்பின் வலி புரிந்த,மனவிரிவுள்ள ஆளுமையின்சொந்தக்காரர்கள் அவர்கள்.

விழுப்புண் அடைந்த போராளிகளையும்,பொதுமக்களையும் காப்பாற்ற,அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்கள் வருமென்றுகாத்திருந்தார்கள்…. வரவில்லை.

சிங்களப் பேரினவாதம் அவர்களை வரவிடவில்லை.

முள்ளிவாய்க்கால்….

தமிழின அழிப்பின் அடையாளமா?……குறியீடா?

வலிசுமந்த மேனியர் கழித்த இறுதிக் கணங்களைத்

தாங்கி நின்ற வணங்கா மண்ணா?

அறம் சார்ந்த பொறுப்புக் குறித்து,

வார்த்தைகளை அள்ளி வீசும் மானுடர்கள் தலைகுனியும்,

நெருப்பாற்றின் இறுதிப் புள்ளிதான்

முள்ளிவாய்க்கால்.

சொந்த மண்ணில்,

வேற்று மனிதரால் கொல்லப்படுதல்

மனித உரிமை மீறலாம்.

அது ஒரு இனப்படுகொலை என்று விளிப்பதற்கு,

இந்த ஜனநாயகத்தின் காவலர்களுக்குத் தயக்கம்.

இழந்த இறைமையை மீட்க,

அரசியல் வாழ்வுரிமைப் போரை நடாத்துவோரை,

பயங்கரவாதிகள் என்று அழைப்பதில்

இவர்களுக்கு ஒரு மகிழ்வு.

போருக்குக்கூட தர்மங்கள், நியதிகள்,

நியாயங்களைவகுத்துவிட்டது இப்பூமி.

போர் நிகழும்போது,

சிறிதளவு மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம்

என்கிறது உலக யுத்த தர்மம்.

பெருமளவு மக்கள் கொல்லப்படுகையில்,

இத் தர்மங்கள் மீறப்படுவதாகக் கூறும் இவ்வுலகம்,

நல்லிணக்கத்தை உருவாக்கப்பாடுபடுங்கள் என்று

தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறுவது அபத்தமானது.

பாதுகாப்புவலயங்கள் , கொலைக்களமாக மாறியதென,

உலகப் பொதுச்சபையின் அறிக்கை கூறினாலும்,

சிங்களப் பேரினவாதம் அதனை

ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

வல்லரசு வல்லூறுகளின் துணையோடு,

வஞ்சகப் போர்புரிந்த சிங்கள தேசம்,

முள்ளிவாய்க்காலில், தான் நிகழ்த்தியது

மனிதாபிமானப் போரென்று நியாயப்படுத்துகிறது.

இந்த வன்மத்தின் ஊற்றுக்கண் ,

மகாவம்ச மயக்கத்திலிருந்து தோன்றுவதுதான் நிஜம்.

அதிகார ஆசையைத் துறந்த பௌத்தம்,

அதிகாரத்தை தக்கவைக்கும் கருவியாகக்

கையாளப்படுவதே கொடுமை.

போர் முடிந்துவிட்டது..

இனி செஞ்சிலுவைச் சங்கங்கள் தேவையற்றதென

மே 17 இல் பொய்யுரைத்தான் கோத்தபாய.

இன்று, மாவிட்டபுரத்தில் நின்றவாறு,

தமது இரத்தக்கறை படிந்த கரங்களை மறைப்பதற்கு,

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பேரம்பேசும் பொருளாக

மாற்றியுள்ளான் மஹிந்தரின் தம்பி பசில் ராஜபக்ச.

அதாவது, போர்க்குற்றச் சாட்சியங்கள் மௌனித்தால் ,

பறிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் திருப்பித் தரப்படுமாம்.

முள்ளிவாய்க்காலுக்கு இது பொருந்தாது.

அதிகார மிகையுணர்ச்சி கொண்ட சிங்களதேசத்தின்,

இனஅழிப்பு வேட்டைக்காடாக மாறிய இம்மண்ணில் ,

பூர்வீக தமிழ்குடிகள் புதையுண்டு கிடக்கின்றார்.

ஆதலால் பிணம் தின்னும் சிங்கள தேசத்தின்,

இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்க ,

புதிய மானுடக்கவிகள் எழுந்து வரவேண்டும்.

சிரிய அதிபர் மேற்குலக எதிர்ப்பாளர் என்பதால்,

டாங்கிகளை ஏவி சொந்த மக்களை கொன்று குவிக்கும்

ஒடுக்குமுறைதனை, நியாயப்படுத்தும் மயக்கப்பார்வைகளை,

இறக்கி வைக்க வேண்டும்.

யூதர்களை ஜேர்மனிய நாசிக்கள் இனப்படுகொலை செய்கையில்

வெடித்துக் கிளம்பிய அதே ஆத்மாவேசம்,

பாலஸ்தீன மக்களை இஸ்ரேலியர்கள் அழிக்கும்போது

ஏற்பட வேண்டும்.

இன்று சர்வதேச அரசியலில் மட்டுமல்ல, கவிதைகளிலும் இரட்டை வேடங்கள்.

அன்று சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை.

தமிழின அடியழித்தல் பயணத்தை சிங்களம் கைவிடவில்லை.

இருப்பினும் மறக்கமுடியுமா அந்த நாளை!!


வெறியாட்டத்தை நிகழ்த்திவிட்டு, மே 18 , 2009 அன்று ,

சிங்களத்தின் ரூபவாகினி வெற்றிமுரசு கொட்டியது.

காணொளியில் காட்சிகள் விரிந்தன.

கருகியநிலையில் போராளிகளின் உடலங்கள்.

சிங்களப் பேரினவாதத்தின் நயவஞ்சகப் போரை-அதன் ஆற்றாமையை, எரிகாயங்கள் வெளிப்படுத்தின.

வரிப் புலிச் சீருடை தரித்தோர் மத்தியில்,

சிவில் உடையுடன் வீழ்த்தப்பட்டுக் கிடந்தார் ஒரு பெண்.

அவர்தான் , வான்படை தந்த கேணல் சங்கரின் துணைவி குகா அக்கா.

அந்த உணர்வற்ற உடலத்தின் சொந்தக்காரர் யாரென்பதை

சிங்களத்திடம் சொன்னான் முன்னாள் தளபதி ஒருவன்.

தன்னோடு தோளோடுதோள் நின்று களமாடிய தோழர்களின்,

வித்துடலை சுமந்து நிற்கும் பல துயிலுமில்லங்களை,

இனவெறியர்கள் சிதைக்கும்போது, மௌனத்தின் ஊடாக

அங்கீகாரம் வழங்கிய அந்த தளர்பதியின் செயலை எவர்தான் மன்னிப்பார்.

அண்ணனும், மண்ணும் தனதிரு விழிகளென ,

இறுதிவரை உறுதிபடக்கூறிய அந்த மாவீரப் பெண்ணின் முன்னால்,

இந்த முன்னாள்கள் எல்லோரும் வெறும் தூசிக்குச் சமம்.

வீழ்ந்தவர்கள் விரும்பியதோ,

எதிர்காலத்தின் மீதான தாயகக்கனவு

நிஜமாக வேண்டும் என்பதனையே…

பூசிமெழுகப்பட்ட முரண்கள் அவர்களின் ஆளுமையில்

துளியளவும் இல்லை.

எழுத்தின் திசையில் போராடிச் செல்லும்

மனவுறுதி கொண்ட மானுடக்கவி போல,

வாழ்வியல் நெருக்கடிகள் கடுமையாக முடக்கினாலும்

இருப்பிற்காய் போராடும் விளிம்புநிலை மனிதர்கள் போல,

விடுதலை வேட்கையோடு,

தலை வணங்கா வன்னி மண்ணில்,

இறுதிவரை போராடினார்கள் அம் மாமனிதர்கள்.

தொடரும் வாழ்க்கைப் பயணம்,

முடியும்போது தொடங்கும் என்கிற எதார்த்த நிலையை,

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்பது உணர்த்துகிறது.

நிபுணர் குழுவின் அறிக்கை,

உலகின் வாசல்களை திறந்திருக்கிறது.

பலமாகத் தட்டியபோது மூடியிருந்த கதவுகள்,

நிரந்தரமாக மூடப்பட்டு விட்டதோவென்று

சோர்வுற்று இருந்த மக்கள்,

விழிப்படையும் காலம் இதுதான்.

-இதயச்சந்திரன்-

Comments