சிங்கள அரசுக்கு பிரித்தானியாவின் "நல்லிணக்கம்"

maviirai_kallarai_20090822mபிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் கடந்தவாரம் அயர்லாந்துக்கு நான்கு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்தப் பயணத்தின் போது அவர் முக்கியமாக பங்கு பற்றியது, அயர்லாந்து போர்வீரர்களின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தியது தான்.

கடந்த 17ம் திகதி ஐரிஸ் சுதந்திரப் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களின் நினைவாக டப்ளின் தோட்டத்தில் உள்ள கல்லறைக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

15 நிமிடங்கள் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது.

மகாராணியின் அருகே அயலர்லாந்து அதிபரும் நின்றிருந்தார்.

மறுநாள் ஐலன்ட் பிறிட்ஜ் மற்றும் குறோக் பார்க் நினைவிடங்களுக்கும் சென்று மகாராணியார் வணக்கம் செலுத்தினார்.

irish-1

பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக நீண்டகாலப் போராட்டம் நடத்தியே அயர்லாந்து விடுதலை பெற்றது.

இதன்போது உயிர்துறந்தவர்களுக்காக- அதாவது பிரித்தானிய படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்காகவே பிரித்தானிய மகாராணி அஞ்சலி செலுத்தினார்.

இது அண்மைக்காலத்தில் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம்பெற்ற ஒரு நல்லிணக்க நடவடிக்கையாக கருதப்பட்டிருக்கிறது.

அயர்லாந்து சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் முறையாகப் பிரித்தானிய அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அங்கு சென்றுள்ளதும், நல்லிணக்கத்துக்காக மகாராணியார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் பெரும் பாராட்டைக் குவித்துள்ளது.

இப்போது நல்லிணக்கம் என்ற சொல் மிகவும் பிரபல்யத்துக்குரியதொன்றாகி வருகிறது.

குறிப்பாக சிறிலங்காவைப் பொறுத்தவரையில் இது மிகவும் அவசியமானதொன்று என்று உலக நாடுகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் சிங்களதேசம் உண்மையான நல்லிணக்கத்தில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்கிறது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் ஒப்பீடு செய்து கொள்வது பொருத்தமுடையது.

இறந்தோரை நினைவு கொள்வது மனிதனின் நீண்டகாலப் பண்பாகவும், வழக்கமாகவும் இருந்து வந்துள்ளது.

இறந்தோரை கடவுளாக வழிபடுகின்ற முறையும், அவர்களுக்கு கல்லறை கட்டி வழிபடும் வழக்கமும் நீண்டகாலப் பாரம்பரியம்.

irish-2

பெரும்பாலான மதங்களும் இறந்தோரை வழிபடுகின்ற- மதிக்கின்ற வழக்கத்தையே போதிக்கின்றன.

இறந்தவர்களுக்காக ஆடி அமாவாசையிலும், சித்திரைப் பௌர்ணமியிலும் விரதம் இருந்து வழிபடும் முறை இந்து மதத்தில் உள்ளது.

கத்தோலிக்க மதத்தில் கல்லறைத் திருநாள் என்று ஒரு சிறப்பான நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.

பௌத்த மதத்தில் கூட இதுபோன்ற வழிபாட்டு முறைகள் உள்ளன.

இறந்தோரை அடக்கம் செய்த இடத்தில் கல்லறை எழுப்பி நினைவு கூரும் மனித வழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே இருந்து வந்ததால் தான் எகிப்தின் பண்டைய நாகரிகத்தை பிரமிட்கள், மம்மிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் கூட ஈமத்தாழிகள் பல தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தோரை மதிக்கும்- அவர்களின் நினைவைப் போற்றும் மனிதகுல வழக்கம் மனித நாகரீகத்துடன் ஒன்றிப் போன ஒன்று.

அதிலும் போரில் மடிந்த வீரர்களை மதிப்பது உலக வழக்கமாகவே உள்ளது.

எதிரிநாட்டு வீரனுக்கும் மரியாதை செலுத்தும் பண்பு, போரில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த காலம் ஒன்று உள்ளது.

போர் பற்றிய உலக விதிமுறைகள்- போரில் மடிந்த எதிரிவீரர்களை கௌரவமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் சிங்களதேசம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதொன்று.

தன்னுடன் போரிட்டு மடிந்த எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் நினைவாக, அந்த இடத்தில் அனைவரும் இறங்கி வணங்கிச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்ட துட்டகெமுனுவின் பரம்பரையில் வந்ததாக கூறிக்கொள்ளும் சிங்களதேசம், எதைச் செய்தது.

போரில் மடிந்த ஆயிரமாயிரம் புலிவீரர்களின் கல்லறைகளைத் தோண்டியெடுத்தது.

அந்த இடத்தை தரைமட்டமாக்கி அதன்மேல் படைத்தளம் அமைத்து தமது இறுமாப்பை வெளிப்படுத்துகிறது.

போரில் மடிந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட துயிலுமில்லங்களை ஒன்று கூட மிச்சம் விடாமல் துடைத்தழித்து, அவர்களின் நினைவுகளை அகற்ற முனைகிறது.

இவையெல்லாம் தமிழரின் கண்களில் தென்பட்டால் மீண்டும் சுரந்திரப் போரைத் தொடங்கி விடுவார்கள் என்று அஞ்சுகிறது சிங்களதேசம்.

அதனால் தான் ஒன்றைக் கூட மிச்சம் வைக்காமல் எல்லாத் தடயங்களையும் அழித்து விடுகிறதாம்.

பிணங்களையும், எலும்புகளையும் தோண்டியெடுத்து அவமதிக்கும் அளவுக்கு சிங்களத்தின் சிந்தையில் தமிழர் மீதான வன்மம் குடிகொண்டிருக்கிறது.

பிரித்தானியாவில் உள்ள தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றுகின்றவர் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா.

இவர் இறுதிப்போரில் 55வது மற்றும் 59வது டிவிசன்களின் தளபதியாக இருந்தவர்.

அண்மையில் இவர், தானோ, தனது படையினரோ எந்தப் போர்க்குற்றங்களையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

அது மட்டுமன்றி இறந்து போன புலிப் போராளிகளின் சடலங்களைக் கூட தாம் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்து- அந்த இடத்தின் ஆள்கூறை குறித்து படைத்தலைமைக்கு அனுப்பி வைத்ததாக அவர் கூறியிருந்தார்.

அவர் தன் மீது போர்க்குற்றங்கள் வந்து விடக் கூடாதென்பதற்காக அவ்வாறு கூறியிருந்தார்.

ஆனால் அது உண்மையாகவா இருக்கப் போகிறது.?

வெளிப்படையாகவே துயிலுமில்லங்களை அழித்து- கல்லறைகளை புல்டோசர் போட்டு சிதைத்து- கொண்டாட்டம் நடத்திய சிங்களப் படைகள் தமிழ் வீரர்களுக்கு எப்படி மரியாதையைக் கொடுத்திருக்க முடியும்?

சிங்களதேசம் போராட்டத் தடயங்களையும்,வரலாற்றுச் சின்னங்களையும் அழிப்பதன் மூலம் தமிழரின் சுதந்திர வேட்கையை அழித்து விடலாம் என்று கனவு காண்கிறது.

maviirai_kallarai_20090822

ஆனால் அது முடியாது என்பது உலக வல்லரசுகளுக்குப் புரிந்தளவுக்கு சிங்களதேசத்துக்குத் புரியவில்லை.

ஒன்றுக்கு இரண்டுமுறை ஆயுதக்கிளர்ச்சி நடத்திய ஜேவிபியினர் இறந்து போன தமது தோழர்களுக்காக அஞ்சலி செலுத்த முடிகிறபோது தமிழரால் மட்டும் அது முடியாதுள்ளது.

சிங்களப் படைகளை எதிர்த்துப் போரிட்டவர்கள் என்பதால் மட்டும் வந்த வன்மம் அல்ல இது.

தமிழன் என் இனவெறியால் வந்த வன்மம்.

சிங்களதேசத்துக்கு மானுடம், மனிதம் என்ற வார்த்தைகளின் அர்த்தமே தெரியாது.

அதற்குத் தெரிவதெல்லாம் போர்வெறியும், இனவெறியும் தான்.

இவற்றின் மூலம் தமிழரை அடிமை கொள்ளலாம் என்பதே சிங்களத்தின் கற்பனை.

ஆனால் அதெல்லாம் சாத்தியமாகாது என்பது இதுபோன்ற போர்களின் மூலம் அனுபவப்பட்ட நாடுகளின் கருத்து.

பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பல போர்களைக் கண்டவை.

நல்லிணக்கத்தை உருவாக்கத் தவறினால் என்ன நடக்கும் என்ற விடயத்தில் நன்கு அனுபவப்பட்டவை.

irish-5

எலிசபெத் மகாராணியாரின் அன்றைய வருகையை எதிர்த்தும்கூட ஐரிஸ் மக்கள் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். ஒரு போரும் அதன் வலியும் ஆற்றுப்படுத்தமுடியாதவை. பொருத்தமான தீர்வு அமையாவிட்டால் நல்லிணக்கம் என்பதும் இணைந்துவாழ்தல் என்று இப்போதும் ஐரிஸ் மக்கள் சொல்லும்போது தமிழர்களின் நிலை என்ன?

எனவே, நல்லிணக்க வாய்ப்புகளை சிறிலங்காவும் பின்பற்ற வேண்டும் என்று அனுபவப்பட்ட நாடுகள் கூறுகின்றன.

ஆனால் அதை சிங்களதேசம் ஏற்கத் தயாரில்லை.

தமிழரின் கல்லறைகளைக் கூட விட்டு வைக்காத சிங்களத்திடம் இருந்து தமிழர்கள் ஒருபோதும் நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது.

இலங்கைத் தீவில் சிங்களவர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று சிங்களதேசம் ஆசை கொண்டால்- அதற்கு முதலில் பிரித்தானிய மகாராணிக்கு வந்தது போன்ற துணிச்சல் வரவேண்டும்.

அத்தகைய துணிவோ அல்லது மனமோ சிங்களப் பேரினவாதத்துக்கு ஒருபோதும் வரப்போவதில்லை.

இந்தப் பேரினவாத வெறி தான் சிங்கள அரசுக்கும், தமிழருக்கும் இடையிலான மாபெரும் சுவராக நிலைத்து நிற்கிறது.

எத்தனை கல்லறைகளை அழித்து, சிதைத்து தடயங்களை அழித்தாலும், இந்த அசைக்க முடியாத மனச்சுவரை சிங்கள அரசினால் ஒருபோதும் தகர்க்க முடியாது.

- முகிலன்

Comments