பிரித்தானியா 300 தமிழர்களை தனி விமானத்தில் ஏத்தி நாடு கடத்த திட்டம் !

பிரித்தானியாவில் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 பேரை பிரித்தானியா திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி விமானம் ஒன்றில் இவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளது. அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலருக்கு பிரித்தானிய எல்லை முகவரகம் வெளியேற்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் சட்டவாளர் நிஷான் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படும் அசாதாரன நிலையில், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது முறையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இலங்கை அரசானது புலம்பெயர் தமிழர்களில் அதுவும் பிரித்தானிய தமிழர்கள் மேல் கடும் கோபமாக உள்ள நிலையில், இவ்வகதிகளைத் திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என பலராலும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட இருக்கும் தமிழர்களின் அநேகமாநோர் இளைஞர்களாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரித்தானியாவில் உள்ள சகல தமிழ் அமைப்புகளும் இது குறித்து கவனம் எடுப்பது நல்லது. பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் தனி விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து இந்த 300 அகதிகளையும் திருப்பி அனுப்ப முற்படுகின்றனர் என்ற செய்தி அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. இவர்களை நிச்சயம் இலங்கை அரசு கைதுசெய்து சிறையில் அடைக்கும் எனவும், கால எல்லை இன்றி இவர்கள் இலங்கைச் சிறையில் அடைபட்டு இருக்கவேண்டிய நிலை தோன்றலாம் என்றும் கருதப்படுகிறது. இந் நிலையில் பிரித்தானியாவில் இயங்கும் சகல தமிழ் அமைப்புகளும் தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் என மக்கள் சார்பாக அதிர்வு இணையம் வேண்டி நிற்கிறது.

Comments