‘படுகொலைக்களம்’ சனல்-4 நிகழ்ச்சியை வேற்றினத்தவர் அறியச் செய்வோம்

பிரித்தானிய தமிழர் பேரவை(மக்களையும் இணைந்து செயற்படுமாறு அழைப்பு)

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் ஜூன் 14ஆம் நாள் இரவு 11:00 மணிக்கு 'இலங்கையின் படுகொலைக்களம்' என்ற ஒரு மணித்தியால காணொளி விவரணப் படத்தை வெளியிட இருக்கின்றது.

இந்தக் காணொளி கடந்த 3ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் அனைத்துலக மன்னிப்புச்சபை, மற்றும் சனல்-4 தொலைக்காட்சி ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் ஐ.நா பிரதிநிதிகளுக்குக் காண்பிக்கப்பட்டது.

இதனைப் பார்வையுற்ற ஐ.நா மற்றும் மனிதநேய அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்தது மட்டுமன்றி, ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கைக்கும் அப்பால் முள்ளிவாய்க்காலில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி எண்ண தலைப்பட்டுள்ளனர்.

இது பற்றி செய்தி வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சி, ஐக்கிய நாடுகள் சபை உரிய நேரத்தில் செயற்படத் தவறியமையை சுட்டிக்காட்டி, இது தமிழ் மக்கள் தமக்கிழமைத்த துரோகமாகப் பார்க்கின்றனர் எனக் கூறியதுடன், இனியும் ஐ.நா விரைந்து செயற்படாது மௌனம் காக்கக்கூடாது எனக் கூறியிருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இடம்பெற்றுவரும் 17வது கூட்டத்தொடர் விவாதத்தில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றனவும் சிறீலங்கா அரசாங்கம் மீதான கண்டனங்களை வெளியிட்டு, அழுத்தங்களைப் பிரயோகித்துள்ள போதிலும், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் அங்கு அமைதி காத்துள்ளமை புலம்பெயர்ந்த மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் மிக நெருங்கிய உறவைப்பேணி தமிழ் மக்களிற்கு என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றி தொடர்ச்சியாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்ற போதிலும், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக்குழு உருவாக்கப்பட்டு அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்ற போதிலும், நாம் இன்னும் கடும் பணியாற்றி இந்த அரசாங்கத்தின் ஆதரவை முழுமையாகப் பெற வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டுமன்றி, எமது பிரச்சினையை வேற்றின மக்கள் மற்றும் அரசாங்க மட்டத்தினர், தொழிற்சங்கங்கள், தொழிலாளர் வர்க்கம், உரிமைக்காகக் குரல் கொடுப்போர், பாடசாலை மற்றும் கல்விச் சமூகம், சதாரண பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டு செல்லும்போது அரசாங்கத்திற்கான அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என நம்புகின்றோம்.

நாம் ஏற்கனவே முன்னெடுத்துவரும் பரப்புரைப் பணியின் மத்தியில் சனல்-4 தொலைக்காட்சியின் இந்த காணொளி விவரணத்தை வேற்றினத்தவர்கள் பார்க்க வைப்பதன் ஊடாக அந்தப் பணியை இலகுவாக்க முடியும் எனவும், இந்த நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வெல்ல முடியும் என்றும் வலுவாக நம்புகின்றோம்.

பார்ப்போர் மனங்களில் மிகுந்த தாக்கத்தை உருவாக்கும், எமது மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பல இந்தக் காணொளி விவரணத்தில் அடங்கியிருப்பதால், இதனைப் பார்ப்பவர்கள் நிச்சயமாக தமிழ் மக்களின் உரிமைக்காகவும், இன அழிப்பை தடுத்து நிறுத்தவும், அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தவும், தமிழ் மக்களின் வேணவாவிற்கும் குரல் கொடுக்க முன்வருவர் என்பதில் ஐயமில்லை.

சனல்-4 தொலைக்காட்சியில் 'இலங்கையின் கொலைக்களம்' நிகழ்ச்சி தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை துண்டுப் பிரசுரம் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதனை அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும் விரைவில் வெளியிடுவோம். எமது இணையத்தளத்திலும் பெறலாம். இந்தத் துண்டுப் பிரசுரங்களை இங்குள்ள ஒவ்வொரு மக்களும்; பிரதியெடுத்து, ஒருவர் 10 முதல் 50 வேற்றின மக்களிற்கு கையளித்தாலே அது பல மில்லியன் மக்கள் இதனைப் பார்க்க வழி செய்யும்.

அதேவேளை, எதிர்வரும் 13ஆம், 14ஆம் நாட்களில் (திங்கள், செவ்வாய்) லண்டன் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள தொடரூந்து நிலையங்களில் அன்று முழுவதும் நின்று துண்டுப் பிரசுரங்களை வழங்கல் செய்வதற்கும், பதாகைளைத் தாங்கி நிற்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கு பெருமளவிலான தொண்டர்கள் தேவைப்படுவதால் கீழுள்ள தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாகத் தொடர்புகொண்டு தங்களால் வர முடிந்த நாட்கள், அல்லது மணித்தியாலங்கள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை பல இடங்களில் உள்ளுர் அவைகளைத் தோற்றுவித்து அவை சிறப்பாக இயங்கி வருவதால், உள்ளுர் பேரவையில் இருப்பவர்கள் உங்களின் தொடர்பாளர்கள் ஊடாக இந்தத் துண்டுப் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கும், தொண்டர்களை ஒருங்கிணைத்து வழங்கல் செய்வதற்கும் உரிய ஏற்பாடுகளை இப்பொழுதே மேற்கொள்ள வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

அத்துடன், வேற்றின மக்களின் வீடு வீடாகச் சென்றும் இந்தத் துண்டுப் பிரசுரங்களை வழங்கல் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதால், அந்தந்தத் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் தயவுசெய்து எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் பணியாற்ற விரும்பும் பிரதேசங்கள், தேவையான அளவு துண்டுப் பிரசுரங்கள் போன்ற விபரங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

ஏ-4 தாளில் பல துண்டுப்பிரசுரங்கள் வெட்டி எடுக்கும் வகையில் சிறிதாக இது வடிவமைக்கப்பட்டிருப்பதால், ஒவ்வொரு மக்களும் வெள்ளை, கறுப்பு நிறத்திலும், வர்ணத்திலும் தாமாகவே பிரதி எடுத்தும் வேற்றின மக்களிற்கு வழங்கி, இந்தக் காணொளி விவரணத்தைப் பார்வையிடுமாறு கோர வேண்டும்.

இதேவேளை, எமது தமிழ் ஊடகங்களும் மக்கள் மத்தியில் இந்தத் தகவல் சென்று சேருவதற்கும், இதன் முக்கியத்துவம் பற்றிய தகவல்களைப் பரிமாறுவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும், இது பற்றிய நிகழ்ச்சிகளை செய்து மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்த வழமைபோன்று இணைந்து பணியாற்ற வேண்டும் என தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

சிறுவர்கள் பார்வையிடக்கூடாது என்பதற்காகவே இரவு 11:00 மணிக்கு ஒளிரப்பாகின்றது என்பதை கவனத்தில்கொண்டு, பாடசாலை செல்லும் எமது இளையோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உங்களின் நண்பர்கள், ஆசிரியர்களுக்கு இது பற்றி எடுத்துச்சொல்லி அவர்களையும் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களைப் பார்க்க வழி செய்ய வேண்டும்.

இதேபோன்று தமிழ் மக்கள் தமது வர்த்தக நிறுவனங்களுக்கு வருபவர்கள், வேலைத்தளங்கள், கோவில்கள், தேவாலயங்கள், சமய நிறுவனங்கள், மூதாளர் அமைப்புக்கள், விளையாட்டு அணிகள், மற்றும் எங்கெல்லாம் சந்தர்ப்பம் இருக்கின்றதோ தமிழ் மக்கள் இந்தக் காணொளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மிக இலகுவாக தமிழ் மக்களின் பிரச்சினையை ஏனைய இனத்தவர் மத்தியில் கொண்டு செல்ல முடியும்.

பிரித்தானிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் இந்த முக்கிய பணியில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புவர்கள் தயவுசெய்து எதிர்வரும் 10ஆம் நாளுக்கு முன்னர், உள்ளுர் பேரவையின் தொடர்பாளர்கள், அல்லது எமது அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நாம் வெளியிடவுள்ள துண்டுப் பிரசுரத்தை வெவ்வேறு அளவுகளில் கீழுள்ள எமது இணையத்தளத்திலும் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி

பிரித்தானிய தமிழர் பேரவை

Unit 1, Fountayne Business Centre,

Broad lane, London, N15 4AG

Tel - 020 8808 0465

admin@tamilsforum.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

www.tamilsforum.co.uk

Comments