இன்று வரை 43000 இறுவட்டுக்கள் வினியோகம் - கனடியத் தமிழர் தேசிய அவை

கனடியத் தமிழர் தேசிய அவையின் சனல் 4 'இலங்கையின் கொலைக்களம்' காணொளியின் தொடர் இறுவட்டுப் பரப்புரை.


இன்று வரை 43000 இறுவட்டுக்கள் கனடியத் தமிழர் தேசிய அவையினால் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டதுடன் ஏனைய நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


யூன் மாதம் 27ம் திகதி 2011 திங்கட்கிழமை கனடியத் தமிழர் தேசிய அவையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க ஜனநாயகவாதிகளும் இணைந்து ஒட்டோவா பாராளுமன்றத்திற்கு முன்பாகவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' காணொளி இறுவட்டுப் பரப்புரையினை மேற்கொண்டனர். இக்காணொளிப் பரப்புரைக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. அன்றையதினம் 2000 காணொளி இறுவட்டுக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதனைப் பார்த்து உங்கள் தொகுதிப் பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு உண்மை நிலையினைத் தெரிவியுங்கள் என்று எடுத்துக் கூறப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மிக ஆவலுடன் விளக்கம் கேட்டுப் பெற்றுக் கொண்டனர்.


கனடியத் தமிழர் தேசிய அவையின் இறுவட்டுப் பரப்புரை யூன் 17. வெள்ளி 2011 ரொறன்ரோ மையப் பகுதியில் அமைந்துள்ள மைய ஊடகங்களான City TV, CP 24, Global TV மற்றும் டண்டாஸ் சதுர்க்கம் (Dundas Square), அமெரிக்கத் துணைத் துதரகம் முன்பாக வைத்து வேற்றின மக்களுக்கு இரண்டாயிரம் (2000) இறுவட்டுக்கள் கையளிக்கப்பட்டன.


16 யூன் 2011 வியாழக்கிழமை ஆயிரம் (1000) இறுவட்டுக்கள் வன்கூவரில் நடைபெற்ற புதிய ஜனநாயகக் கட்சி மாநாட்டில் அரசியல் பிரமுகர்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்டன. அம்மாநாட்டில் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். உலகெங்கும் வாழும் பல்லின மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களம் காணொளி இறுவட்டு கடந்த இரண்டு வாரமாகக் கனடியத் தமிழர் தேசிய அவையினால் பல்லின மக்களுக்கும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் கையளிக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் யூன் 20.2011 திங்கட்கிழமை யூனியன் தொடருந்து நிலையம் (Union Station, Downtown) முன்பாக வைத்து 2000 இறுவட்டுக்கள் வேற்றின மக்களுக்கு வழங்கப்பட்டன. மாலை 4.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை வழங்கவென்று 2000 இறுவட்டுக்களுடன் சென்றவர்கள் 5.30 மணிக்கே 2000 இறுவட்டுக்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


அதேவேளை மொன்றியலிலும் மைய ஊடகங்களை நேரில் சென்று சந்தித்துக் காணொளி இறுவட்டையும் ஐ.நா அறிக்கையையும் கனடியத் தமிழர் தேசிய அவையின் அறிக்கையையும் கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்கள் வழங்கியதுடன் வேற்றின மக்களுக்கும் காணொளி இறுவட்டை வழங்கினார்கள்.


யூன் 21.2011 செவ்வாய்க்கிழமை கனடியத் தமிழர் தேசிய அவை உறுப்பினர்கள் ஒன்ராறியோவின் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவி அன்ட்றியா கோர்வாத் (Andrea Howrath, NDP Ontario Leader) மற்றும் போல் பெறைறா (Paul Ferreira, Ontario NDP Cadidate for York South Western) ஆகியோரை நேரில் சந்தித்து காணொளி இறுவட்டையும் ஐ.நா அறிக்கையையும் கனடியத் தமிழர் தேசிய அவையின் அறிக்கையையும் கையளித்துள்ளனர்.


யூன் 24.2011 வெள்ளிக்கிழமை மிஸ்ஸிஸ்ஸாகாவில் அமைந்துள்ள Square One வர்த்தக மையத்திலும் பிரம்ரனில் (Brampton) அமைந்துள்ள பிரமலியா நகர மையத்திலும் (Bramalea City Center) காணொளி இறுவட்டுப் பரப்புரை மாலை 4.00 மணி தொடக்கம் 7.00 மணிவரை நடைபெற்றது.


யூன் 26.2011 ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோ மையப்பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களின் முன்வைத்தும் இறுவட்டுக்கள் வழங்கப்பட்டன.


கனடியத் தமிழர் தேசிய அவைப் பணிமமையில் வந்து தங்களால் இயன்ற பண உதவியையும் சரீர உதவியையும் வழங்கிக்கொண்டிருக்கின்ற எம்முறவுகளுக்கு நாம் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும் கனடியத் தமிழர் தேசிய அவை இவ்விறுவட்டுப் பரப்புரையில் ஈடுபடவுள்ளதால் கூடுதலான தொண்டர்கள் இணைந்து காலத்தின் தேவைக்கு உதவுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது.


மேலதிக தொடர்புகளுக்கு

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

பணிமனை: 5310 Finch Avenue East, Unit 10

தொலைபேசி: 1.866.263.8622 – 416.646.7624

மின்னஞ்சல் : info@ncctcanada.ca
இணையத்தளம் : www.ncctcanada.ca

Comments