‘இலங்கையின் படுகொலைக்களம்’ சனல்-4 நிகழ்ச்சி தொடர்பாக பிரித்தானிய பிரதான பத்திரிகைகளில் விளம்பரம்

பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14-06-2011) இரவு 11:05 இற்கு ஒளிபரப்பு செய்யவுள்ள ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற நிகழ்ச்சி தொடர்பாக பிரித்தானியாவின் பிரதான பத்திரிகைகள் இன்று (12-04-2011) விளம்பரம் வெளியிட்டுள்ளன.

த சண்டே ரைம்ஸ் The Sunday Times), த இன்டிபென்டன் (The Independent), மற்றும் மெயில் ஒன் சண்டே (Mail on Sunday) ஆகிய பிரதான பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகி உள்ளன.

A3 அளவில் வர்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரங்களுக்கு மிக அதிக பணச் செலவு இருக்கின்ற போதிலும், சனல்-4 தொலைக்காட்சி பல மில்லியன் மக்களைச் சென்றடையும் வகையில் இந்த விளம்பரங்களை வெளியிட்டுள்ளமை பாராட்டுக்குரியது.

சிறீலங்கா அரசாங்கம் வெளிநாட்டவரைக் கவர சுற்றுலா விளம்பரங்களுக்குப் பயன்படுத்தும் இலங்கைத்தீவின் தென்னைமரம் கொண்ட அழகிய கடற்கரைப்படத்தில், கடல் இரத்த நிறமாக இருப்பதாக இந்தப்படம் சித்தரிக்கின்றது.
இதன் ஊடாக சுற்றுலாத் தளமாக விளங்கும் இந்த நாட்டில் இன அழிப்பு இடம்பெற்று இரத்த ஆறு ஓடி, அந்த இரத்த நிறம் இன்னும் காயவில்லை என்பதையும் இந்தப் படம் சித்தரிப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘இலங்கையின் படுகொலைக்களம்’ என கீழே வசனம் எழுதப்பட்டுள்ளதுடன், இந்தத் தீவில் ஓடிய இரத்த ஆற்றின் இரகசியம் பற்றி செவ்வாய் இரவு 11:05 இற்கு ஜொன் ஸ்னோவ் (Jon Snow) புலானாய்வு செய்கின்றார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் செய்ய வேண்டிய காரியங்களை பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி செய்து வருவதை நாம் இங்கு அவதானிக்கலாம். ஈழத்தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற படுகொலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது மட்டுமன்றி இதனை வேற்றினத்தவர் பார்க்க வைப்பதற்கு பெரும் பணச்செலவில் இவ்வாறான விளம்பரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, பிரித்தானிய மக்களும், ஏனைய வேற்றினத்தவர்களும் இந்தக் காணொளி விவரணப்படத்தை பார்வையிட வைப்பதற்காக பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றது.

இது தொடர்பாக அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் இரண்டு இலட்சம் பிரித்தானியாவாழ் தமிழ் மக்களால் பெற்றுச்செல்லப்பட்ட நிலையில், மேலும் பல இலட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக, பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்தது.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும், மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் இந்தப் பரப்புரைப் பணியில் ஈடுபட்டு வருவதுடன், சனல்-4 தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரும் Early day motion 1882 எனப்படும் நாடாளுமன்ற மனுவில் இன்றுவரை (12-06-2011) 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தமது ஆதரவைத் தெரிவித்து கையெழுத்து இட்டுள்ளனர்.

எனவே பிரித்தானியாவிலுள்ள தமிழ் மக்கள் தமது பரப்புரை முன்னெடுக்கும் அதேவேளை, தமது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்புகொண்டு இந்த மனுவில் கையெழுத்திட வேண்டும் எனவும், சனல்-4 நிகழ்ச்சி ஒளிபரப்பான மறுநாள் புதன்கிழமை (15-06-2011) இடம்பெறும் பிரித்தானியப் பிரதமர் கலந்துகொள்ளும் கேள்வி நேரத்தில் இது பற்றிக் கேள்வி எழுப்புமாறும் கோரிக்கை விடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

Comments