பான் கீ மூன் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார்! -பிராட் அடம்ஸ்

இலங்கையைப் பொறுத்தவரை ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள் ஒரு உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார் என்று அழைனத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் ஆசிய இயக்குனரான பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் தலைமைச் செயலராக பான் கீ மூன் அவர்கள் இரண்டாவது பதவிக்காலத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இலங்கை உட்பட பல நாடுகளில் மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறிவிட்டார் என்று பல மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன.

இது குறித்துக் கருத்துக் கூறுகையிலேயே பிராட் அடம்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பான் கீ மூனின் செயற்பாடு ஒரு கலவையான விஷயம், என்று கூறிய பிராட் அடம்ஸ் அவர்கள், '' பர்மா விஷயத்தில் அவர் நிறைய அறிக்கைகளை விட்டார். ஆனால் பர்மிய அரசுக்கு எதிராக செயல்படுவதில் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார்.

அவருக்கு ஒரு கோர்வையான திட்டம், யுக்தி இல்லை. சீனாவைப் பொறுத்த வரை கடந்த இரு தசாப்த காலத்தில் நடந்த மிகவும் மோசமான ஒடுக்குமுறையின் போது அவர் அமைதி காத்தார்'' என்று கூறியுள்ளார்.

இலங்கை நிலைமை குறித்தும் அவர் தமிழோசையுடன் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

இலங்கையைப் பொறுத்தவரை அவர் மிகவும் உறுதியற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்தார். போர் முடிந்த பின், இலங்கைக்கு சென்று, மஹிந்த ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படுவதை அனுமதிக்க வேண்டாம் என்று நாங்களும் மற்றவர்களும் தந்த நல்ல அறிவுரையை மீறி, ங்கே சென்றார்.

மஹிந்த ராஜபக்ஷ, தனது அரசுக்கு நம்பகத்தன்மையைப் பெற அந்த விஜயத்தைப் பயன்படுத்திக் கொண்டார்'' என்றார் பிராட் அடம்ஸ்.

இலங்கையில் போர் தொடர்பான பிரச்சினைகள் பற்றி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பு சுமத்தும் வழிமுறை உருவாக்கப்படும் என்று மஹிந்த கொடுத்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒரு சரியான முடிவெடுப்பதில் பான் கீ மூன் தவறிழைத்துவிட்டார் என்றும் பிராட் அடம்ஸ் கூறினார்.

Comments