ஐரோப்பிய முள்ளிவாய்க்காலுக்கு தயாராகும் சில நாடுகள்: தடுக்க முடியுமா தமிழர்களால் ?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து 26 ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அனுப்பப்படும் செய்திகேட்டு, தமது வேலைகளை விட்டுவிட்டு சனல் 4 தொலைக்காட்சி படப்பிடிப்புக் குழுவும், அதன் அறிவிப்பாளரும் கட்விக் விமானநிலையம் விரைந்தனர். ஆனால் தமிழர்களாகிய நாம் என்னசெய்தோம்? அங்கே திரண்டு ஒரு பாரிய போராட்டத்தை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்த தவறியுள்ளோம். ஒரு புறம் பாராளுமன்றக் கூட்டம் மறு புறம் நாடக ஒத்திகை, அதுஎல்லாம் வழக்கறிஞர்கள் பார்க்கவேண்டிய வேலை நாங்கள் தலையிட முடியாது என்று ஒரு கும்பல் கதைபேசி மணித்தியாலங்களைச் செலவிட்டதே அன்றி நாடுகடத்தப்படுவதை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனை சனல் 4 தொலைக்காட்சி 14ம் திகதி மிகத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இந் நிலையில் பிரித்தானிய அரசு தமிழர்களைத் திருப்பி அனுப்புகிறது. அங்கே அவர்களுக்கு என்ன நிகழும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தற்சமயம் அவர்களை இலங்கை அரசு வெளியே விட்டுள்ளது. ஆனால் இன்னும் சில தினங்களில் அவர்கள் வீதிகளில் வைத்து இல்லையேல் தங்கும் விடுதிகளில் வைத்து கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஐரோப்பாவில் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் நிலை தோன்றியுள்ளது. முள்ளிவாய்க்காலில் ஆயிரம் ஆயிரம் மக்கள் அகப்பட்டு இறுதியில் இறந்தார்கள்.

ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைதிகளாக இலங்கை என்னும் சவக்காலைக்கு அனுப்பப்படுகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதனை நான் வெளிநாடுகளுக்கு உணர்த்தவேண்டும். போர் குற்றங்களையும் இன அழிப்பையும் முன்னெடுக்கும் அதேவேளை தமிழ் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதையும் பிரித்தானிய தமிழர்கள் எதிர்க்கவேண்டும். இங்குள்ள பல அமைப்புகள் பிரித்தானிய அரசுடன் சுமூகமாக ஒத்துப்போக நினைக்கின்றதே தவிர அவர்களிடம் கேள்விகேட்க எவருக்கும் விருப்பமில்லை. பிரித்தானிய ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி அவர்களோடு இருக்கும் தமிழ் அமைப்புகள் ஒத்துப்போகும் மனப்பான்மையை மாற்றி நெருக்கடியான நிலைகளில் தமது எண்ணங்களையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தவேண்டும்.

இன்னுமொரு அதிர்ச்சியான தகவல் காத்திருக்கிறது. மேலும் பல ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளனர் என்பதே அதுவாகும். முதல் முறை அவர்கள் நாடுகடத்தும் போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காட்டியிருந்தால், தற்போது மீண்டும் ஒரு முறைசெய்ய பிரித்தானிய அரசு யோசித்து இருக்கும். ஆனால் நாம் அந்தப் பிழையைச் செய்துவிட்டோம். அதற்கான பரிகாரங்கள் என்ன என்பது குறித்து நாம் நிச்சயம் ஆராயவேண்டும். அடுத்து அனுப்பப்பட இருக்கும் மற்றுமொரு தொகுதி ஈழத்தமிழர்களையாவது நாம் காப்பாற்றவேண்டும். பல வழக்கறிஞர்களும், சட்ட நிறுவனங்களும் ஈழத் தமிழர் விடயத்தில் செயல்பட்டாலும், சில நிறுவனங்கள் காசுக்காகவே மட்டும் சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறது. இந் நிலை மாறவேண்டும்.

மற்றுமொரு ஐரோப்பிய முள்ளிவாய்க்கால் நிலை ஏற்படு முன்னர் அது தடுக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக இலங்கைக்கு தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவதும், அங்கே சகஜநிலை தோன்றிவிட்டது என்று ஒரு பொய்யான பிரச்சாரத்துக்கு வழிகோலும் என்பதனை தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. இங்கு வதிவிட உரிமை பெற்ற தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இலங்கைக்கு செல்வதை நிறுத்துங்கள். நீங்கள் கூட்டம் கூட்டமாக அங்கு செல்லும்போது, அதையே காரணமாக குடியகல்வு திணைக்களம் சொல்கிறது. ஆகவே, இவர்களின் உயிரைக் காப்பாற்றவாவது, நீங்கள் இலங்கைக்கு செல்லாமல் இருக்கலாமே.

---------------------------------------------
Comments by: சந்திரமெளலீசன்

தமிழர்களுக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஒன்று உண்டு அது எங்கே ? தமிழர்கள் அனுப்பப்படும் போது வேறு கூட்டங்களை நடத்தியதும் பத்தாது என்று மக்களை கட்விக் விமான நிலையம் வருமாறு ஏன் எந்த நிறுவனமும் அழைக்கவில்லை ? விமான நிலையம் பக்கம் இருக்கவேண்டிய கவனத்தை திசை திருப்பியது யார் பிரித்தானிய அரசியல் வாதிகளின் வழிநடத்தலில் இருப்பவர்களா ? சிறீலங்கா அரசின் வழி நடத்தலில் இருப்பவர்களா ? அல்லது சனல் 4 காணொளி அதிர்ச்சியில் இருப்போரை வழைத்துப்போட்டு சுரண்டல் நடத்தவா ?

athirvu

Comments