Skip to main content

அடிபணிவு அரசியலிற்குள் தலையைப் புதைத்துக் கொள்பவர்கள் போராடத் தேவையில்லை

seemippu

தமிழ் மக்களின் வாழ்வு மட்டும் அழிக்கப்படவில்லை, போராட்டமுனைப்பும் அழிக்கப்பட்டுள்ளதென, சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலண்டன் கருத்தரங்கில், அரந்ததிராய் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, கவலை தெரிவிப்பதாலோ, அல்லது கண்டனம் செய்வதாலோ, எதுவித பயனுமில்லையென்று கருத்துரைத்த அருந்ததிராய், இப் போராட்டம் ஏன் பிழைத்துப் போனது என்பது குறித்து சுயபரிசோதனைக்கு உட்படும் வகையில், ஆழமான கலந்துரையாடல் ஒன்றின் தேவை உணரப்படுவதாக கூறினார்.

மனித உரிமை மீறல், போர்க் குற்றம் என்கிற குறுகிய வரையறைக்குள் இதனை அடக்கி விடாமல், அங்கு நடைபெற்றது- இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருப்பது, அப்பட்டமான இனப்படுகொலைதான் என்று ஆணித்தரமாக வலியுறுத்தினார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு இந்திய எழுத்தாளரின் கருத்து, இலங்கையில் நடைபெறுவது ‘இனப்படுகொலை’தான் என்று உறுதியாகக் கூறும்போது, அங்கு நடைபெற்றது போர்க்குற்றம் தான் என்று இங்கு சிலர் அடம் பிடிக்கிறார்கள்.

உலக நீதி என்பதற்கு முன்னால் ‘மனித உரிமை’ என்கிற சொல்லாடல் அர்த்தமிழந்து போவதாக அருந்ததிராய் நம்புகின்றார். உண்மைதான், மனித உரிமை மீறல், மானுடத்திற் கெதிரான குற்றச் செயல்கள், போர்க் குற்றங்கள் என்கிற குறிப்பிட்ட சம்பவங்களை விபரிக்கும் சொல்லாடல்கள், திட்ட மிட்ட இனப்படுகொலைதான் என்பதை இவ்வுலகம் எப்போது புரிந்து கொள்ளும்?

சனல் 4 தொலைக்காட்சி, கடந்த 14ம் திகதி வெளியிட்ட ஆவணப்படம், உலக மக்களின் அறம்சார்ந்த உணர்வினை உசுப்பி விட்டுள்ளது. இது கேரளாவில் தயாரிக்கப்பட்டதென மறுபடியும் பொய் சொல்லுகிறது சிங்களம். மகிந்தரின் சிகப்புச் சால்வையில் தொங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள், சொலபடான் மிலோசொவிச் போன்று மகிந்தர் கூண்டில் ஏற்றப்பட்டால், தங்கள் பதவிக்கு ஆபத்து வருமென்பதால் நிபுணர் குழு அறிக்கைகள், சனல் 4 காட்சிகளெல்லாம் தேவையற்ற விடயமென்று வலியுறுத்துகிறார்கள்.
புலம்பெயர் நாட்டிலுள்ள ‘கேள்விநேரம்’ நாயகர்களும், இது பற்றி வாய்திறப்பதில்லை. விடுதலைப் புலிகளின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தினால்தான், முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களை மகிந்த இராணுவம் கொன்றதென வியாக்கியானம் கூறுகின்றார்கள். உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்குவதற்கு, ஆட்சி செய்யும் அரசுகளுக்கு பூரண அதிகார முண்டென ஏகாதிப்தியங்களின் மனநிலையில் இருந்து பேசுவது அபத்தமாக இருக்கிறது.

காற்றடிக்கும் திசையில், இலகுவாகப் பறந்து செல்லும் பல சருகுப்புலிகளை, மே 18 க்கு பின்னர் காணக்கூடியதாக உள்ளது. அவர்களின் நியாயங்களை, துயரப்படும் பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். தொலைக்காட்சி ஊடகங்களின் ஆதரவோடு, சரணடைவிற்கான சுயநியாயப்பாடுகளை மக்களின் மீது திணித்த, ஒடுக்குமுறையாளனோடு தாங்கள் மேற்கொள்ளும் அடிபணிவு அரசியலுக்கு விளம்பரம் தேடுகின்றார்கள். இவர்கள் எதிர்பார்க்கும் கூட்டு மனமாற்றம் மக்கள் மத்தியில் நிகழவில்லை என்பதை, இந்த மகிந்த சிந்தனையாளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?

கோத்தபாயா திறந்துவைத்துள்ள அபிவிருத்தி பாதைக்குள், தேசிய விடுதலை உணர்வாளர்களை எவ்வாறு இழுத்து வரவேண்டும் என்பதில் அதிக சிரத்தை கொள்ளும் இவர்கள், மின்னஞ்சல் மற்றும் கையடக்கத் தொலைபேசிக் குறுஞ் செய்திகள் ஊடாகவும், விசமப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார்கள். மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தாவது, கடந்த முப்பது வருடங்களாக தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டமொன்று நடைபெறவில்லை என்பதை அடுத்த தலைமுறை அறிந்துகொள்ளக் கூடாது என்றவகையில், அடியழிப்பு வேலைகளை சிங்களம் மேற்கொள்கிறது. அதேபோன்று, போராட்ட உணர்வினை முற்றாகச் சிதைப்பதற்கு தமிழீழம் தேவையா? தேசியக் கொடி வேண்டுமாவென, புலம்பெயர் நாட்டுத் தொலைக்காட்சிகளில் மூளைச் சலவை முன்னெடுப்புக்கள் தொடர்கின்றன.

மாற்றுக் கருத்துக்கள் விவாதிக்கப்படுவதில் தவறேதுமில்லை. அது மக்களின் நலன்களுக்கு பொருத்தப்பாடான விடயமாக இல்லாதவிடத்து, மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியமானது. இவைதவிர, புலம்பெயர் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதோடு, தமது போராட்டங்களை மட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற வகையில் ‘புலம்பெயர் சமூகத்தை அரசியல் ரீதியாக விளங்கிக் கொள்ளல்’ என்ற தலைப்பிட்டு திருமலை நகரில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

விமர்சனங்களை முன்வைப்பதில் ஒரு எழுத்தாளனிற்குரிய உரிமையை மறுதலிக்கும் வகையில், ஆய்வாளர் ஒருவர் கூறிய கருத்து புலம்பெயர் தேசத்தில் தற்போது நிகழ்த்தப்படும் சரணாகதியை ஏற்றுக் கொள்ளும் சிந்தனைத் திணிப்புக்களை நினைவூட்டுகிறது. திருமலை மாவட்டத்தில் 5000 ஏக்கர் நிலங்களை அரசு சுவீகரித்து, பன்னாட்டு முதலைகளுக்கு தாரைவார்க்கும் நிலஆக்கிரமிப்பினை இந்த ஆய்வாளர் தெரிந்திருந்தும், சுதந்திர சிந்தனையாளர் என்ற முகமூடிக்குள் தன்னை மறைத்துக் கொண்டுள்ளார். சம்பூரிலிருந்து விரட்டப்பட்ட பூர்வீக தமிழ் குடிமக்களும், அங்குதான் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். அனல் மின்நிலையம் அமைக்க சம்பூர் நிலத்தை இந்தியாவிற்கு கொடுக்காவிட்டால் இராணுவத்தின் படைத் தளமொன்று அங்கு நிறுவப்பட்டுவிடுமென, அம்மண்ணின் மக்கள் பிரதிநிதி கூறும் வியாக்கியனங்களையிட்டு அம்மக்கள் வெறுப்புற்று இருப்பதை இவர் அறிந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக, தமது பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுவதை உணரும் இந்திய மலைப் பிரதேசங்களில் வாழும் ஆதிவாசிகள், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் செய்தியை, இந்த மாக்சிய சிந்தனையாளர் அறிந்திருக்க வேண்டும். பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புச் சூத்திரத்தை, தெளிவாகப் புரிந்து கொள்ள திருமலை மக்களிடம் போராட்ட உணர்வினை கைவிட்டு, அடிபணிவு அரசியல் சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவோர் அதிகரித்துச் செல்வது ஆபத்தான விடயம்.

ஆயுதப் போராட்டம் முடக்கப் பட்டாலும், கொதி நிலையிலுள்ள மக்களின் தாயக விடுதலை உணர்வு பற்றியதான குறைந்தபட்ச மதிப்பீடும் இவர்களிடம் இல்லை. மிக் 24 ரக போர் விமானங்களை, ஐ.நா அமைதிப்படைக்கு வழங்கத் தயாராகவுள்ளோம் என்று அரசு கூறுகிறது. சுயாதீன விசாரணையொன்றினைத் தடுப்பதற்கு, ஐ.நா விற்கு இலங்கை அரசு கொடுக்கும் லஞ்சமாவென்று தெரியவில்லை. அதாவது போர்க் கருவிகள் தேவையில்லையென்றால், இராணுவ முகாங்களும் தேவையற்றதுதான். அவ்வாறாயின் பல இராணுவ தளங்களையும், முகாங்களையும் திருமலை மாவட்டத்தில் இலங்கை அரசு ஏன் வைத்திருக்கிறது என்கிற கேள்வியை இந்த கார்ல் மாக்சின் காவலர் எழுப்ப வேண்டும். இத்தகைய அரசிற்கெதிரான கேள்விகளை, திருமலை நகரசபை மண்டபத்தில் நின்று கொண்டு இவரால் முன்வைக்க முடியாது.

அளவெட்டியில், கூட்டமைப்பின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அகோரத் தாக்குதல்தான் அங்கும் நடக்கும். புலம்பெயர் மக்களின் அரசியல் போராட்ட முன்னெடுப்புக்களின் மீது, காழ்ப்புணர்வுமிக்க விமர்சனங்களை வைப்பதற்கு ,பல மெத்த படித்த புத்திஜீவிகள் களமிறங்கவுள்ளார்கள். இவர்களின் பின்புலத்தில் எத்தகைய சக்திகள் இருக்கின்றன என்கிற கற்பனைகளை ஒருபுறம் தள்ளிவைப்போம். அதிகாரமிக்கோர் மடியில் தலையைப் புதைத்துக் கொள்பவர்கள் போராடத் தேவையில்லை. அதை வலி சுமக்கும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

- இதயச்சந்திரன்

Comments