சிறிலங்கா - ஆதாரங்கள் புதைக்கப்பட முடியாதவை: த கார்டியன்

போரின் போது பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்துவது பாரதூரமானதொரு போர்க் குற்றம். இந்தக் குற்றம் நிரூபிக்கப்படுமெனில், சிறிலங்கா அரசபடையினர் மற்றும் அரசாங்கத்தினது உயர்மட்டம் வரை அனைவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்படமுடியும்.

இவ்வாறு பிரித்தானிய ஊடகமான த கார்டியன் [Sri Lanka evidence of war crimes that won't be buried The Guardian,Wednesday 15 June 2011] தனது ஆசிரியத் தலையங்கத்தில் எழுதியுள்ளது.

பிரித்தானியத் தொலைக்காட்சிகளில் மிகவும் காண்பிக்கப்பட்ட அதிக கொடூரம்நிறைந்த காட்சியாக 14ம் நாளன்று இரவு சனல்-4 தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட விவரணப் படத்தின் காட்சிகள் அமைகின்றன.

ஆடைகள் களையப்பட்ட சிறைக்கைதிகள் தலையில் சுடப்படும் காட்சிகள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் உடலங்கள் உழவூர்தி ஒன்றில் ஏற்றப்படும் காட்சிகள், தற்காலிக மருத்துவமனையின் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததன் பின்னான நிகழ்வுகள் என்பவற்றை இந்த ஆவணப்படம் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் சிறிலங்கா அரச படையினர் புரிந்த இந்த அட்டூழியங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதியப்பட்டிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளின் முன்னர் தொடர்ந்தும் சுருங்கிக்கொண்டிருந்து மிகவும் குறுகிய நிலப்பரப்பினுள் சிறிலங்கா அரச படையினர் அச்சத்தில் உறைந்துபோயிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை முடக்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களையே இந்த விவரணப்படம் விபரிக்கிறது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசாங்கத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க்குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்கான காத்திரமான ஆதாரங்கள் இருப்பதைத் தாங்கள் கண்டறிந்திருப்பதாக ஐ.நாவினது வல்லுநர்கள் குழு தனதறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் சனல்-4 தொலைக்காட்சியினது ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கைதிகள் சுட்டுக்கொலைசெய்யப்படும் காட்சிகள் சில புதியவை.

அத்துடன் இத்தகைய காட்சிகளை சேகரித்து அவற்றை வடிகட்டும் விடயத்தில் மனித உரிமை அமைப்புகள் எத்தகைய நடவடிக்கையினைச் செய்திருக்கவேண்டுமோ அதனை சனல்-4 தொலைக்காட்சி செய்திருக்கிறது.

தப்பியோடும் பொதுமக்களாலோ அல்லது குற்றங்களைப் புரிந்த படையினரால் ஒரு நினைவுச்சின்னமாகவோ பதியப்பட்டிருக்கும் இந்த காணொலிப்படங்கள் கண்கொண்டு பார்க்கமுடியாத அளவிற்குக் கொடூரம் நிறைந்ததாகக் காணப்படுகிறது.

நேயர்களுக்கு மனக்கவலை உண்டாகாமல் பார்த்துக்கொள்ளும் ஒளிபரப்பாளர்களுக்கு இருக்கும் பொறுப்பினை அவர்கள் ஏன் இந்த ஒளிபரப்பின்போது தட்டிக்கழித்தார்கள் என்பதற்கான காத்திரமான காரணங்களை இங்கு காண முடிகிறது.

முதலாவதாக, சேர்பினிக்காவில் நடந்தேறியதைப் போலவே போர் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து ஐ.நாவினை வலிந்து வெளியேற்றிய சிறிலங்கா அரசாங்கம் சாட்சிகளற்ற ஒரு போரை தயவு தாட்சணியமின்றிக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற இந்தக் கொலைகளுக்கு சிறிலங்காவினைப் பொறுப்புக்கூறவைப்பதற்கு அனைத்துலக சமூகம் தவறியமைக்கான பிராயச்சித்தமாக சனல்-4 இன் இந்த ஆவணப்படம் அமைகிறது.

இரண்டாவதாக, சேர்பினிக்காவில் இடம்பெற்றதைப் போலவே சம்பவங்கள் அனைத்தும் உண்மையானவையே.

போரற்ற பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனைகளை இலக்குவைத்து 65 தடவைகள் எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருக்கின்றன.

இதனை தவறுதலாக இடம்பெற்ற ஒன்று என்றே பரவலான எறிகணைத் தாக்குதலின்போது இலக்கின்றி வீழ்ந்த எறிகணைகள் என்றோ கூறிவிடமுடியாது.

மருத்துவமனையின் அமைவிடம் தொடர்பான ஆள்கூற்று புள்ளிகளை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் அரசாங்கத்திற்கு வழங்கியபின்னரும் ஒருமுறை எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கிறது.

இதுபோல மருத்துவமனைகள் இலக்காவதைத் தடுப்பதற்காக அதன் அமைவிடம் தொடர்பான விபரங்களை வழங்குவது ஒரு நடைமுறையாக இருந்து வந்தது.

போரின் போது பொதுமக்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடாத்துவது பாரதூரமானதொரு போர்க் குற்றம். இந்தக் குற்றம் நிரூபிக்கப்படுமெனில், சிறிலங்கா அரசபடையினர் மற்றும் அரசாங்கத்தினது உயர்மட்டம் வரை அனைவருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்படமுடியும்.

2009ம் ஆண்டு யூலையில் இடம்பெற்ற தேர்தலுக்கு முன்னர் நடந்தேறிய நூற்றுக்கணக்கான கொலைகள் தொடர்பாக ஈரானைக் கண்டிக்க முடியுமெனில்,

றற்கோ லடிக் மற்றும் றடோவன்கறட்சிக் [Ratko Mladic and Radovan Karadzic] ஆகியோர் ஹேக்கில் போர்க் குற்ற விசாரணையினை எதிர்கொண்டிருக்கிறார்களெனில்,

1300 சிரியர்கள் கொல்லப்பட்டதொரு தாக்குதலுக்காக பசார் அல் அசாத் ஐ.நாவின் தடை உத்தரவிற்கு முகம்கொடுத்திருக்கிறாரெனில்,

40,000 பொதுமக்கள் கொல்லப்பட்ட பின்னர் அதிபர் ராஜபக்சவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் எப்படி இதிலிருந்து தப்பித்துக்கொள்ளமுடியும்?

தமிழீழ விடுதலைப் புலிகள் நாடுகளின் அரச தலைவர்களைக்கூடக் கொலைசெய்தார்கள் என்றும் தற்தொலைத் தாக்குதல் பாணியினைக் கைக்கொண்டார்கள் என்றும் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்று வாதிடப்பட்டாலும் தங்களது தடுப்பிலிருந்து கைதிகளை இவ்வாறு சிறிலங்காப் படையினர் மிருகத்தனமாகப் படுகொலைசெய்தார்கள் என்ற குற்றச்சாட்டிற்கான காப்பாக ஒருபோதும் அதனைப் பயன்படுத்த முடியாது.

நாட்டில் பொருளாதாரமும் உல்லாசப்பயணத்துறையும் துரித வளர்ச்சியினைக் காணும் இந்த வேளையில் போரை முடிவுக்குக் கொண்டுவந்த சம்பவத்தினை அரசாங்கம் ஒரு வரலாறாகக் காட்ட முடிகிறது.

இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களைச் சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

தி.வண்ணமதி.

Comments