உள்ளாட்சித் தேர்தலில் ஈழத்தமிழர் தீர்ப்பு

இடர்மிகு வந்தாலும் சுதந்திர தேவி உன்னை மறக்கிலேனே என்ற பாடல் வரிக்கு அமைவாக ஈழத் தமிழர்கள் விடுதலைக்கு வாக்களித்துள்ளனர். ஆளுங் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் அதன் சகபாடிக் கட்சி ஈபிடிபீயும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் படுதோல்வி அடைந்துள்ளன.


திருகோணமலை நகராட்சியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. 9 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சியில் கூட்டமைப்பு 5 தொகுதிகளைக் கைப்பற்றியதோடு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுள்ளது. ராஜபக்ச அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி3 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.


திருகோணமலை கிரவெற்ஸ் பிரதேச சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமோக வெற்றி ஈட்டியதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் உட்பட இரு முக்கிய பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வடக்கு, கிழக்குத் தமிழர் ஒன்றிணைவை யாராலும் பிரிக்க முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது.


யாழ் மாவட்டத்தின் வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகராட்சிகள் அனைத்தையும் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ் – கிளி மாவட்டங்களின் 18 பிரதேச சபைகளில் 16ல் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நெடுந்தீவு, ஊர்காவற்துறை ஆகிய தொகுதிகளுக்குள் பிரசாரப் பணிகளுக்குச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை.


நெடுந்தீவு, ஊர்காவற்துறை தீர்வுத் தொகுதிகள் கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்கு வாழும் மக்கள் கடற்படையின் கட்டளைப்படி அரசின் சுதந்திர முன்னணி ஈபிடிபிக் கூட்டணிக்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். தீவகத்தின் முன்னாள் கடற்படை அதிகாரி இப்போது கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகிக்கிறார்கள்.


அவர் தேர்தல் பிரசாரத்திற்காகத் தீவகம் வந்து தேர்தல் முடியும் வரை தங்கி விட்டார். அவரைப் போல் 13 அமைச்சர்கள், மகிந்த ராஜபக்ச ஆகியோர் வடக்கில் முகாமிட்டு மிரட்டல் பணியில் ஈடுபட்டனர். மகிந்தரின் மகன் நாமல் ராஜபக்ச தேர்தல் பிரசாரப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.


மக்களை மிரட்டிப் பணிய வைப்பதற்காக ஆக்கிரமிப்பு இராணுவம் பரவலாகப் பயன் படுத்தப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு வீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர். வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டாமென்று கூறித் தாக்குதல் நடத்தினர். மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அட்டைகளை இராணுவத்தினர். பறிமுதல் செய்தனர். அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அமைப்புத் தலைவர் சுந்தரலிங்கம் லோகீஸ்வரன் கிளிநொச்சியில் ஈபிடிபி துணை இராணுக் குழுவினரால் தாக்கப்பட்டார். திருவையாறு தமிழ் வித்தியாசாலை ஆசிரியரான லோகீஸ்வரன் படுகாயமடைந்து யாழ் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெறுகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் மக்களைத் தாக்கும் படி நாமல் ராஜபக்ச கட்டளையிட்டார். பச்சிலைப்பள்ளி, கரைச்சி பிரதேச சபைத் தேர்தல் தொகுதிகளில் நியாயமான தேர்தல்கள் நடைபெறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவர் இரா. சம்பந்தன் மறு தேர்தல் நடத்தும்படி தேர்தல் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


கிளிநொச்சி வாக்களிப்பு குறைவாக இருந்தாலும் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. முல்லைத்தீவில் கூட்டணியினர். வெற்றியீட்டினர். பத்திரிகைக்குச் செய்தி வழங்கிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூட்டணி வெற்றி பெற்றாலும் ராஜபக்சவின் உதவியில்லாமல் அவர்களால் ஈழத்தமிழர்களுக்கு என்னத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று கேட்டார்.


ஈழத்தமிழ் மக்களுக்கு நல்லிணக்கம், மேம்பாடு, புரிந்துணர்வு என்று பேசிய ராஜபக்ச விரித்த வலையில் தமிழர்கள் விழ மறுத்துவிட்டனர். தமிழரெல்லாம் உன் பக்கம் என்று தேர்தல் வெற்றி மூலம் காட்ட முயற்சித்த சிங்கள அரசிற்கு ஈழத்தமிழர்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.

Comments