வலையை விரித்தவர்களே அறுத்தெறிந்த நிகழ்வு

-இதயச்சந்திரன்

"தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்' என்கிற வரலாற்று ஆவணத்தை மறுபடியும் வாசித்தேன்.
கனமான நூல் அது. இந்திய அமைதிப்படை காலத்தில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகள் குறித்து விபரிக்கப்பட்ட விடயங்கள், சமகால அரசியல் மாற்றங்களுடன் ஏதோவொரு வகையில் இணைந்து செல்வது போலிருந்தது.
நண்பனாக உட்புகுந்த எதிரிக்கும், நிரந்தரமான பகைவனிற்குமிடையே இருந்த முரண்பாடுகளை, மிக நுணுக்கமாகக் கையாண்டு, போராட்ட முனைப்பினை தக்க வைத்த இராஜதந்திரம் அந்நூலில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.
அதைப்படிக்கும் போது, ஜப்பானிய மேலாதிக்கத்திற்கெதிராக, சீன ஆட்சியாளர் சியாங்கோ சேக்குடன் கூட்டுச் சேர்ந்த மாவோ, அந்த முரண்பாடுகளைச் சரியாகக் கையாண்ட சூத்திரம் நினைவிற்கு வந்தது.
ஆனையிறவு மீட்பு, கட்டுநாயக்கா விமானப் படைத்தள அழிப்பினால் உருவாகிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தோடு, சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டம், பல விதமான முரண்பாட்டுச் சக்திகளை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டது.
22 பெப்ரவரி 2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நுண்ணரசியல் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை, விடுதலைப் புலிகள் மிகக் கவனமாகக் கையாண்டனர்.
இந்த சமாதான காலத்தில், மக்கள் இயக்க அடித்தளங்கள் தோற்றம் பெற்று, இதுகாலவரை ஈட்டப்பட்ட இராணுவ வெற்றிகளுக்கு நாட்டுருவாக்கப் பரிமாணம் கொடுக்கப்பட்டது.
சமரில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் தேச நிர்மாணிப்பு அடித்தளங்களும், விடுவிக்கப்படாத பகுதிகளில் அரசியல் செயற்பாடுகளும், ஏககõலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீடமேற்றப்பட்டார்.
பண்டா செல்வா ஒப்பந்தத்திலிருந்து பிரபா ரணில் ஒப்பந்தம் வரை, கிழிப்பு வேலைகள் யாவும் சிங்களப் பேரினவாதக் கைகளால் நிறைவேற்றப்பட்டதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு, சர்வதேசம் விரித்த வலைப்பின்னலை, அரசாங்கத்தின் கரங்களால் கிழித்தெறியவைத்த, விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் மதிநுட்ப அரசியல் உத்தியினை, தமிழ் மக்கள் தற்போது உணர்கிறார்கள்.
முரண்பாடுகளை எதிர்கொண்டு, அதற்கேற்ப நகர்வுகளை மேற்கொள்வது, பொதுவான நடைமுறை.
அதற்கு எதிர் நிலையாக, வலிந்து, முரண்பாடுகளை உருவாக்கி, அதனூடாக இலக்கை நோக்கி, சகல முரண்பாட்டுச் சக்திகளையும், நகர வைப்பது இன்னொரு வகையான அரசியல் தந்திரோபாய நகர்வாக இருக்கும்.
அவ்வகையான முரண்பாடுகள் உருவாகும் காலவெளியில், இழப்புக்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்ளும் வலிமையும், நிதானப் போக்கும் முரண்நிலை உருவாக்கச் சக்திகளிடம் காணப்பட வேண்டும்.
மாவிலாற்றுப் பொறிக்குள் சிங்கள தேசம் காலடி வைத்த நாளில் இருந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கிழித்த காலம் வரையான நிகழ்வுகளை தொகுத்துப் பார்த்தால், விடுதலைப் புலிகளின் அரசியல் இராஜதந்திர முதிர்ச்சியும், நவீன முரண்பாட்டுத் தத்துவ பொறிமுறைகளும் புரியப்படலாம்.
ஏனெனில் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் இந்த விடுதலைப் போராட்டக் களமானது, பிராந்திய சர்வதேச வல்லாதிக்க நலன்களிற்கும், பேரினவாதத்தின் இன அழிப்புக் கோட்பாட்டிற்கும் முகங்கொடுத்தவாறு, கடினமான பாதையிலேயே நகர்வினை மேற்கொள்ள வேண்டிய அழுத்தத்திலுள்ளது.
சர்வதேச மயமானவுடன், இப்போராட்டத்தளப்பரிமாணமே, புதிய வடிவமொன்றிற்குள் புகுந்து விட்டது.
விடுதலைப் போராட்டத்திற்கெதிராகச் சர்வதேசமே திரண்டுள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டினை, சிங்களம் நிலைநாட்ட முயன்றபோது, தடுமாறிய தமிழர்கள், புலிகளின் சமாதான காலத்து பொறுமையினையும், பின்னகர்வுகளை தற்போது தெளிவாகப் புரியும் காலம் அண்மித்து விட்டதென்பதே உண்மையாகும்.
ஆகவே, இனிவரும் காலமே, ஈழத் தமிழ் மக்களின் கனவிற்கு பெரும் சவால்களை அளிக்கப் போகும், கடினமான நகர்வுகளைக் கொண்டதாக அமையப் போகிறது.
அதனை எதிர்கொள்ளத் தயாராகும் இவ்வேளையில், 35 வருடகால ஆயுத வழிப்போராட்டம் உணர்த்தும், ஆழமான சில விடயங்களை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.
1948 இல், காலனி ஆதிக்கத்திலிருந்து சிங்களத்திடம் கைமாறிய இலங்கைத்தீவின் ஆட்சியில், மிதவாத தமிழ் தலைமைகள், புதிய அரசியல் அமைப்பு வரையறைக்குள் இருந்தவாறே ஜனநாயக வழிப்போராட்டம் நடத்தின.
எழுதிய ஒப்பந்தங்கள், மை காய முன் கிழித்தெறியப்பட்டன.சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டினை ஏட்டளவில் வைத்திருந்த நாடாளுமன்ற சோசலிஷவாதிகள் பலர், சிங்களத்திடம், தோசை, மசால வடை விற்றனர்.
"ஒருமொழி இருநாடு, இருமொழி ஒருநாடு' என தத்துவம் பேசிய சமதர்மவாதி சிங்களப் பேரினவாத அரசியலமைப்பினை வரைந்தார்.
திட்டமிட்ட குடியேற்றங்களும், கல்வியில், இனரீதியான தரப்படுத்தலும், இன ஒழிப்பு அரசியலின் ஆணிவேராக மாறியது.
இந்த ஆணிவேர் அழிப்பிற்கு 70களில் ஆயுதமேந்திய புதிய தமிழ் புலிகள், இன்று தாயக மீட்பின் இறுதிக்கட்டத்துக்குள் தரித்து நிற்கின்றனர்.
சுருட்டு, அணைய முன் அழிக்க நினைத்தவர்களும், வெற்றி நிச்சயமென்று புறப்பட்டு மரணப் பாதையில் மடிந்தவர்களும் சொல்லாத செய்தியை தான் கூறப்போவதாக,தொப்பிகல வெற்றியை தலையில் சுமந்தபடி வன்னிக்குப் புறப்பட்டுள்ளது அரசாங்கம்.
சர்வதேசப் பரப்பில் பிளவுபட்டுள்ள சகல அணிகளையும், அதற்கிடையேயுள்ள முரண்நிலைத் தன்மையின் அடிப்படையில் கையாண்டு, தனது பேரினவாத படைப்பல விரிவாக்கத்தினை வளர்த்தெடுக்கும்போது, பாதையொன்றினை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமொன்றும் உருவாகிறது.
உதவி புரிந்த முதன்மைச் சக்திகள், அரசியல் தீர்வொன்றினை முன்வைக்குமாறு அழுத்தும் பொழுதே, முரண்நிலை தோற்றமுறுகிறது.
இதன் எதிர்வினையாக, முரண் நிலையற்ற, நிர்ப்பந்தமொன்றினைத் திணிக்காத, பிராந்திய வல்லரசு ஒன்றின் அணி நோக்கியே மஹிந்த சிந்தனைக் கோட்பாடு நகருமென்பதே இயங்கி யல் நியதியாகும்.
உள்முரண்பாடுகள் மீது, சம்பந்தப்பட்ட இருதரப்பு வெளிச்சக்திகளின் பாதிப்பும் அவற்றிலிருந்து உருவாகும் மாறுதல்களையும் இனி விரிவாகப் பார்க்கலாம்.
இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினை குறித்த பார்வையும், அதற்கான தீர்வு பற்றியும் சர்வதேசத்திற்கு ஒரே விதமான பொதுநலனடிப்படையில் அமைந்த கருத்து நிலையொன்று உண்டு.
அதாவது ஐக்கிய இலங்கைக்குள், சகல இன மக்களும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே சர்வதேசக் கரிசனையாகவிருக்கிறது.
தாயகக் கோட்பாட்டை மறுத்து, மாவட்ட சபை முறைமையே அதிகூடிய தீர்வாக சிங்களம் வழங்குமெனத் தெரிந்தும், ஐக்கிய இலங்கை என்கிற கோஷத்தையே சர்வதேசம் தொடர்ந்தும் ஒலிக்கிறது.
தமிழ் மக்களின் பூர்வீக தேசிய இன அடையாளத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அபிலாஷைகளை, சிங்களம் ஏற்றுக்கொள்ளாது என்பதனை சமாதõன கால பேச்சுவார்த்தைகளில் சர்வதேசம் உணர்ந்திருக்கும்.
ஆனாலும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை வேறு வடிவம் கொண்டது.
தமிழ் மக்கள் தமது தாயகத்தில் பிரிந்து சென்று வாழ்வதே, நிரந்தரத் தீர்வினை உருவாக்குமெனத் தெரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்வதால், தமது பிராந்திய, நலன்கள் பாதிப்படையலாமென்கிற அச்சமே அவர்களிடம் மேலோங்கிக் காணப்படுகிறது.
எவ்வகையான குறைந்தபட்ச தீர்வுத்திட்டத்தையும் சிங்களம் முன்வைக்காதென்பதை, முன்னாள் இந்திய உயர் நிலை அதிகாரிகளான ஏ.பி. வெங்கடேசன், ஏ.கே. வர்மா போன்றோர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர்.
இக் கருத்தோடு பி.இராமன் போன்றவர்கள் உடன்படும் அதேவேளை, விடுதலைப் புலிகளே, தீர்விற்கு இடையூறாக நிற்கிறார்களென வலியுறுத்தும் பின்புலம், பல அரசியல் இராஜதந்திரச் சிக்கல்களை வெளிச்சமாக்குகிறது.
அதாவது இலங்கை பிளவடையும் நிலை நோக்கியே இறுதியில் நகருமென்று புரியப்படுவதால், அதை எவ்வாறாயினும், தடுத்து நிறுத்தவே இவர்கள் தமது பலத்தினை பல வழிகளிலும் பிரயோகிக்கிறார்கள்.
ஏனெனில் நாடு பிளவடைந்தால் அடுத்து என்ன நடக்குமென்பதை இவர்கள் எப்பொழுதே ஊகித்து விட்டார்கள்.
ஒரு பகுதியில் தமக்குச் சார்பான அணியும், மறுபக்கத்தில் எதிரான அணியும் நிலை கொள்ளலாமென்பதே இவர்களிடையே நிலவும் ஆழமான அச்சத்திற்கு அடிப்படைக் காரணியாக அமைகிறது.
பிராந்திய நலன் பேண விழையும், மேற்குலகம், இந்தியா, சீனா, போன்ற மூன்று அணிகளும், போர்நிறுத்த, ஒப்பந்தக் கிழிப்பு நடைபெறும் வரை, ஒரே திசையில் பயணமாகி, இலங்கையைப் பலப்படுத்தியது.
இந்த பலப்படுத்தல் நகர்வுகளிற்கும், அவர்களிடையே நிலவும் முரண்பாடுகளும், முக்கிய பங்கினை வகித்தது.
அதை சிங்களம், தமக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொண்டதுதான் உண்மை நிலவரம்.
சிங்களமானது எதுவித தீர்வினையும் வழங்கப் போவதில்லையெனப் புரிந்து கொண்டாலும், அதற்கு மாற்றீடாக, படைவலுச் சமநிலையை சிதைத்து, தமிழர் தரப்பைப் பலவீனமடையச் செய்வதனூடாக, சிங்களம் வழங்குவதை தமிழர்கள், ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாமென கணிப்பிட்டது சர்வதேசம்.
அச்சிந்தனைக்கு உரமூட்டும் வகையில், சர்வதேச ஒப்பந்தத்தையும் பொருட்படுத்தாது, கிழக்கு ஆக்கிரமிப்பை தமது முழுப்பலங்கொண்டு அவசரமாக முன்னெடுத்தது அரசாங்கம்.
இனப்பிரச்சினை ஏதோவொரு வகையில் தீர்க்கப்படப் போகிறதென கற்பிதம் கொண்ட சர்வதேசம், கிழக்கு ஆக்கிரமிப்பு, மோசமான போர் நிறுத்த ஒப்பந்த மீறலெனப் புரிந்து கொண்டாலும், மௌனம் சாதித்ததோடு ஆயுத நிதி உதவிகளை அரசாங்கத்திற்கு வழங்கத் தொடங்கின.
வான் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்த வேளையில், ராடர்களையும் தற்காப்பு ஆயுதங்களையும், வழங்கினாலும், சிறிது தடுமாற்றமடைந்த நிலையிலேயே சர்வதேசம் இருந்ததெனலாம்.
இவ்வாறான சூழலில், ""நான்கு மாத காலக்கேடு'', ""தலைமையை அழித்தல்'', ""புலி அழிப்பிற்குப் பின்னரே'', அரசியல் தீர்வு என்கிற பேரினவாத கூச்சல்கள் அதிகரித்தன.
2007ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் அறிவிப்பாரென சிங்களம் ஆவலோடு எதிர்பார்த்தது. ஆயினும் சிங்களத்தின் பொறிக்குள் புலிகள் விளவில்லை.
ஆறுவருட காலமாக பொறுமை காத்த விடுதலைப் புலிகளின் இராஜதந்திரத்தை அரசாங்கம் இதுவரை உணரவில்லை. 16 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் ஆரம்பிக்கும் இறுதிப்போரில், சர்வதேசமே அத்தந்திரத்தின் சூத்திரத்தை புரியவைக்கும்.
இதுவரைகாலமும், நாடு பிளவுபடாமல், இருக்க சர்வதேசம் மேற்கொண்ட காய் நகர்த்தல்கள், சதிவலைகள் அனைத்தையும் கடந்த 2ஆம் திகதி, அரசாங்கம் சிதைத்துவிட்டது. அதிக சிக்கல்களில் மாட்டித் தவிப்பது இந்தியாவென்பது தற்போது புரிகிறது.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டால் ஒப்பந்த கிழிப்பின் சூத்திரதாரி தாமென, சர்வதேசம் சந்தேகம் கொள்ளும் என்பதால் அதனை தவிர்த்துவிட்டது இந்தியா.
தென்னிலங்கை மையமானது சீனாவிற்கு வாசலைத் திறக்காமலிருக்க, தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் பக்கத்தில் நிலையெடுத்து இருக்கவே இந்தியா விரும்பும்.
ஒப்பந்த கிழிப்பிற்கு ஆதரவாகவிருப்பதை வெளிப்படுத்தினால், தனது பிராந்திய தலைமைப் பதவியை, மேற்குலகம் பறித்து விடுமென்கிற கலக்கமும் இந்தியாவிற்கு உண்டு.
இறுதிப்போரின் முடிவு, அரசுக்கு சாதகமாகவிருக்குமென இந்தியா நம்புகிறது.அதன் முடிவுரை, தமிழ் மக்களிற்கான விடுதலைப் பாதைக்கு வழிசமைத்தால், சில ஆண்டுகளுக்கு, சிங்களத்தோடு சங்கமமாகியவாறு இந்தியா இருக்கும், சீனா உள்நுழையாமல் இருக்கும்வரை.

Comments