
“அழிக்கவே முடியாத பயங்கரவாத அமைப்பு என்று கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்தொழித்த ராஜபக்சே நமது பாராட்டுக்கு உரியவர். இத்தகைய பயங்கரவாத அமைப்புக்களால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு இலங்கை ஒரு முன்னுதாரணம்”
மூன்றாவதாக, மூன்றாம் உலக நாடுகளில் பிரிவினைக்கு முயலும் இயக்கங்களுக்கு ஆதரவளித்து அரசை பலவீனமாக்கி பிளவுபடுத்தும் வட அமெரிக்க சதியாக இலங்கைத் தமிழர் ஆதரவைப் புரிந்து கொண்டது.
இத்தகைய ஐயங்களுக்குக் காரணமில்லாமல் இல்லை. அறுபதுகளில் காங்கோவில் லுமூம்பா தலைமையிலான முற்போக்கு அரசை பலவீனப்படுத்தி வீழ்த்த சி.ஐ.ஏ. அந்நாட்டின் ‘கத்தங்கா’ என்ற பிரிவினைவாத இயக்கத்திற்கும் ஆதரவளித்தது. இறுதியில் லுமூம்பா படுகொலை செய்யப்பட்ட நிகழ்வானது, பிரிவினைவாத இயக்கங்கள் குறித்து கியூபாவின் கண்ணோட்டத்தை மாற்றியது. இன்று வெனிசுவேலாவின் எண்ணெய் வளமிக்க மாகாணங்களையும் பொலிவியாவின் இயற்கை எரிவாயுவும் பிற கனிமங்களும் விளையும் மாகாணங்களையும் பிரிக்க முயலும் அரசுக்கு எதிரான பெருமுதலாளிகளுக்கு வட அமெரிக்காவின் கூலிப்படைகள் உதவி வருகின்றன.
நான்காவதாக, கடந்த 50 ஆண்டுகளாக வட அமெரிக்க வர்த்தகத் தடையின் கீழ் திணறிக் கொண்டிருக்கும் கியூபா, ஐ.நா. சபை போன்ற சர்வதேச அரங்குகளில் முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெறுவதற்காக, இயன்றவரை மூன்றாமுலக நாடுகளுடன் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள முயல்வது. நட்பு நாடுகள் தனது சொந்த மக்களையே ஒடுக்கும் போது விமர்சிக்காமல் விட்டுவிடுவதான் இதில் வேதனை. சர்வதேச சமூகம் கியூபாவுக்கு ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவதற்குக் காரணம் அதன் போற்றத்தக்க அயலுறவுக் கொள்கை தான்.
கியூபா அங்கோலாவுக்கு அளித்த ஆயுத உதவி தான் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை வீழ்த்தியது. உலகின் பல நாடுகளின் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்க மருத்துவக் குழுக்களை கியூபா அனுப்புகிறது. இயற்கைச் சீற்றங்களால் பேரழிவுகளைச் சந்திக்கும் நாடுகளுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து(வட அமெரிக்க மாணவர்களுக்கும் கூட) வரும் ஏழை மாணவர்களுக்கு 5 ஆண்டுகால மருத்துவப் பட்டப்படிப்பை இலவசமாக வழங்குகிறது.
போற்றத்தக்க இந்த மனிதாபிமான சர்வதேசக் கொள்கை “மனித உரிமைப் பாதுகாப்பு” என்ற பெயரில் இலங்கைவாழ் தமிழ் இன அழிப்பிற்கு துணைபோனது தான் கியூபா வரலாற்றின் ஒரு சறுக்கல் தமிழ் இனத்தின் மிகப்பெரும் சோகம்.
பொலிவார் கனவுகண்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டிணைவைச் சாதிக்கின்றன. லத்தீன் அமெரிக்காவிற்கு மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளுக்கும் லத்தீன் அமெரிக்காவின் சோசலிச மாற்றங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுதலை தரக்கூடிய அரசியல் நடவடிக்கைகள் இக்கண்டத்தில்தான் முன்னெடுக்கப் படுகின்றன. இயற்கை வளங்கள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன. காடுகள் வளர்க்கப்படுகின்றன. நீராதாரங்களை விட்டு அந்நிய முதலாளிகள் விரட்டப்பட்டுள்ளனர். கல்வி, உணவு, மருத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகள் உழைக்கும் மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்கப்படுகின்றன. தேசிய வளங்களும் ஆற்றலும் பெருமிதமும் மீட்கப்பட்டு வருகின்றன. எனவே சர்வதேசிய ஒருங்கிணைவை விரும்பும் நாம், 21ஆம் நூற்றாண்டின் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், லத்தீன் அமெரிக்காவுடனான ஒருமைப் பாட்டை உருவாக்கிக் கொள்ளும் தேவையிருக்கிறது.
பொலிவியா, வெனிசுவேலா போன்ற நாடுகளில் இயற்கை வளமிக்க மாகாணங்களில் வட அமெரிக்காவின் தூண்டுதலால் அதிகார வர்க்கத்தினர் நடத்தும் அரசுக்கு எதிரான போராட்டங்களையும், இலங்கையின் சிறுபான்மைத் தமிழினம் நடத்தும் தன்னாட்சி உரிமைக்கான போராட்டங்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறிவிட்டன கியூபா, பொலிவியா, நிகரகுவா, வெனிசுவேலா ஆகிய நாடுகள்.
“மனித குலத்தின்பால் சகோதரத்துவ உணர்வை உண்டாக்கும் மனநிலை மாற்றம் நிகழாதபோது, சோசலிசம் நிலைபெற முடியாது. அத்தகைய உணர்வுநிலை சோசலிசம் உருவாகிவிட்ட அல்லது உருவாகிவரும் நாடுகளிலுள்ள மக்கள்மீது மட்டுமின்றி, உலகளவில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட அனைத்து நாடுகளின் மக்கள் மீதும் உருவாக வேண்டும்” - என மிகத் தெளிவாக தனது கருத்தைக் கூறிச் சென்றிருக்கிறார் அவர்.
இன்று கியூபாவில் சீன வளர்ச்சி மாதிரியை ஏற்றுக் கொண்டு பின்பற்றும் போக்கு நிலவுகிறது. சீனாவின் சந்தை சோசலிசம் கியூபாவை மீண்டும் முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்தும் அபாயமிருக்கிறது. இத்தகைய போக்கிற்கு எதிராக மீண்டுமொரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. ஐந்து ஆண்டுகள் தொழில்துறை அமைச்சராக இருந்து சேகுவேரா செயல்படுத்திய சோசலிச பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் கியூபாவில் நடைமுறைக்கு வரவேண்டும். அதுபோல, இன்று சேவின் கருத்துக்களின் அடிப்படையில் சமூக மாற்றங்களைச் செயல்படுத்தி வரும் வெனிசுவேலா, சர்வதேச ஒருங்கிணைவுக்கான சரியான வழிமுறைகளை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்.
மக்களை அதிகாரப்படுத்துதல் என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களிலிருந்து நாம் நமக்குத் தேவையான பாடங்களைக் கற்க வேண்டும். அதே வேளையில் அந்நாடுகளின் செயல்பாடுகளை விமர்சன ரீதியாக ஹிμமீ வேண்டும்.
பெரும்பாலான லத்தீன் அமெரிக்கத் தலைவர்களுக்கும் இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் ஈழத்தமிழர் போராட்டம் குறித்த தகவல்கள் தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. எடுத்துக்காட்டாக, “வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை” Socialism of the 21st Century by Michael Lebovitz என்ற நூலை எழுதியவரும், கடந்த சில ஆண்டுகளாக வெனிசுவேலாவில் தங்கியிருந்து அந்நாட்டின் சோசலிச மாற்றங்களை திட்டமிடும் மார்க்சிய அறிஞர் குழுவில் இடம்பெற்றவருமான மைக்கேல் லெபோவிட்ஸ் கூறியிருப்பதைப் பார்க்கலாம்.
ஈழப்போராளிகளும், ஈழ ஆதரவாளர்களும் மக்கள் உரிமை பீடம் கியூபா, வெனிசுவேலா, பொலிவியா போன்ற நாடுகளுடன் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தை அவர்களுக்குத் தெரியச் செய்ய வேண்டும். ஈழத்தமிழரின் தேசிய இனப் போராட்டத்திற்கு லத்தீன் அமெரிக்க அரசுகளின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். அது இன்று சிறுமைப்படுத்தப்பட்டு, வதைக்கப் பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்க உதவும். அது தான் ‘வடக்கின் வசந்தம்’ கிழக்கின் உதயம் போன்ற இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியை முறியடிக்க உதவும்.

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்
நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் மனித நரபலி வேட்டைக்கு பின்னும் தமிழினம் தமது கடமையை இன்னும் உணர்ந்தபாடில்லை.
ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்.,எத்தனை மக்களை சுயாதினமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் உலகத்தமிழினமும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது.
உலக அரசியல், பொருளாதார,சமூக,பிராந்திய நலன் சார்ந்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நமது இலட்சியமான ஈழ விடுதலையை ,தற்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் முறுகல் மற்றும் பிணைவுகளின் ஊடாக நகர்த்தி செல்லவேண்டும்.விடுதலை போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகி போன இக்காலத்தில் ஆயுத போராட்டத்திற்கான தளமானது சுருங்கி போய்கிடக்கிறது.அமெரிக்க இந்தியா உட்பட ஏனைய பிற அரசுகளும் இன்னும் புலிகளை பயங்கரவாதியாகத்தான் பார்க்கிறது.
இதையேதான் தமிழீழதேசியத்தலைமையும் உள்வாங்கிக்கொண்டு தங்களை தாங்களே சுருக்கிகொன்டார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் என்பது ஒரு நேர்த்தியான தொலை நோக்குடன் நன்கு சிந்த்தித்து செயல் படுத்திய ஒரு நிகழ்ச்சியாகத்தான் தெரிகிறது. எந்த அளவிற்கு அவர்களின் விசுவரூபம் எதிரியை மிரட்டியதோ அந்த அளவிற்கு ஒரு படி மேல போய் இன்று அவர்களின் ஒடுங்களும் ,சுருங்கலும் எதிரியை மிரட்டிக்கொண்டே இருக்கிறது.
புலிகளே தமது ஆயுதத்தை மௌனித்து விட்டார்கள்.அவர்கள் தமது லட்சியத்தை அடைய போராட்டத்தையும் போராட்டதலைமையையும் மக்களிடமே கொடுத்துவிட்டார்கள். இன்றைய உலக ஒழுங்குக்கேற்ப எந்த நாட்டோடும் தொடர்பேற்படுத்தி பணியாற்ற கூடிய ஒரு உலகந்தழுவிய அமைப்பாக .ஒன்றை உருவாக்கி அதனூடாக நமது பெருவிருப்பையும், விருப்பின் நியாயத்தையும் . உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நினைத்தார் போல தெரிகிறது. அதுவும் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. உலகும் போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தளவில் இது புலிகளுக்கு மிக பெரிய வெற்றியே.
புலிகளும் எதிரியின் கண்களுக்கு தெரியாமல் நின்று களமாடுகிறார்கள். போரின் வீச்சானது எதிரியை கடுமையாக தாக்குவது வெளிப்படையாகவே தெரிகிறது. எதிரியும் வாயில் நுரை தள்ள மூச்சிரைக்க திக்குதெரியாமல் அலைகிறான் . மேலும் மேலும் தவறு செய்கிறான்.. குற்றவாளியாக நிற்கிறான். எந்த சமுகம் நம்மை தூற்றியதோ அது இன்றைக்கு போற்றுகிறது. உலகம் இப்போது நம்மை திரும்பி பார்க்கிறது. இந்த நிலைபாடுதான் இப்போதைக்கு நமது இலக்கைஅடைய சரியானதாக தெரிகிறது.

"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."
மற்றபடி தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். ஒரு புலி உயிரோட இருப்பது தெரிந்தாலும் சிங்கள வேதாளம் பயங்கரவாத கூச்சலோடு மறுபடியும் முருங்கை மரம் ஏறும். மற்ற வல்லாதிக்க வேதாளமும் அதனை பின்தொடர்ந்து ஓடும்.
நமக்கு உலக பார்வை வரவேண்டும். நமது கிணற்று தவளை வாழ்க்கையே நமது இந்த நிலைக்கு காரணம்.நாம் தமிழனின் கண்கொண்டுதான் உலக நடப்புகளை பார்க்கவேண்டும். நமக்கான தெரிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா எக்காலத்திலும் ஈழவிடுதலையை ஆதரிக்காது.
Prabhakaran's hunger strike in Tamil Nadu in 1980s
இந்திய தமிழக ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக உள்வாங்கிக்கொண்டோமானால் நமது பாதையமைப்பு தெளிவாகவும் விரைவாகவும் இலக்கை அடையும்.
Ulakattamilarai Uyaravaittavan Prabhakarane...
உலகத்தமிழரை உயரவைத்தவன் பிரபாகரனே...

தமிழர் மனதில் வட்டுக்கோட்டை என்ற சிறு நகரம் சரித்திரத்தில் அதன் பெயர் நிலைநாட்டப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்கு அடுத்து வரும் தலைமுறையினர் சுதந்திரமாக ஒரு தேசிய இனமாக தமது பாரம்பரிய தாய்நிலத்தில் தன்னாட்சியுடன் சுபீட்சமாக வாழ இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதை ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் அதிகார பூர்வமாக அங்கீகரித்தார்கள்.
இன்று மீண்டும் ஏன் வட்டுக்கோட்டை தீர்மானம்
1977ம் ஆண்டு நடைபெற்ற ஐனநாயக வாக்கெடுப்பு தான் இலங்கையில் தமிழ் இன மக்கள் பேச்சுச்சுதந்திரமும் தமது எதிர்காலத்தை தீர்மனிக்க கூடியதான சுதந்திரத்துடன் வாக்களித்த வாக்கெடுப்பாகும். அதன் பிறகு பயங்கரவாத தடைச்சட்டம், 6ம் இலக்கச்சட்டம் என்று எமது பேச்சுரிமைகளை சுதந்திரங்களை அடக்கும் சட்டங்களாகவே அமைந்தன
2001 2004 வாக்கெடுப்புகளில் எமது மக்கள் தாம் 1977ம் ஆண்டு தீர்மானததற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்ததாலும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழர் விடுதலைக்கூட்டணியோ அதன் பிறகு உருவான தமிழ் தேசிய கூட்டமைப்போ வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிருத்தி தமிழர் அபிலாசைகளை பாராளுமன்றத்தில் பேச முடியாதவர்களாக ஆக்கப்பட்டனர்.
ஆனால் மக்களோ அந்த தேசிய அபிலாசைகளை மனதில் வைத்துத்தான் வாக்களித்தார்கள்.
வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நாம் போராடிய போராட்டம் உலக அரசியல் வலையோட்டத்தில் பின்னப்பட்டு, மீண்டும் உலக சரித்திரத்தில் ஒரு இனப்படுகொலைக்கு பிறகு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று இந்த உலகிற்கு எமது மக்களின் சுதந்திர அபிலாசைகளை எடுத்து கூறவும் ஆதங்களுடன் சமர்பிக்கும் உரிமையும் எமக்கு இருக்கின்றது. உலக நாடுகள் தமது அரசியல் இலாபங்களுக்காக ஒரு இனமக்களின் ஐனநாயக அபிலாசைகளை பயங்கரவாதமாக்கி தமிழர்களை அடிமைகளாக்கியிருக்கின்றது.
இவ்வுலகம் அரசியலை இறந்தவர்களின் உடல்களில் இருந்துதான் நடாத்தியிருக்கின்றார்கள். இது சரித்திர உண்மைகள்
கிட்லர் ஜேர்மனில் யூத இனமக்களை கொலை செய்ய ஆரம்பிக்கும் போது பார்த்துக்கொண்டிருந்த League de Nation ( UNO ஆரம்பிக்கும் முன் இருந்த அமைப்பு, UNO 2ம் உலக மகா யுத்தத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்டது) ஒரு கொடூரமான இனப்படுகொலைக்கு பின் தான் யூத மக்களுக்கு ஒரு நாடு அவசியம் என்ற தீர்மானித்து 2ம் உலக மகாயுத்ததத்திற்கு பின் தான் உருவாக்கப்பட்ட ஐநா வால் அங்கீகரிக்கப்பட்டது.
அதே போல யூக்கோசிலாவாக்கியாவில், பொசினியாவில், மக்களின் இனப்படுகொலைக்கு பின் பொசினியாவும், கொசோவாவில் 10000 மக்களின் படுகொலைகளுக்கு பிறகு இதர பல்கன் (Balkan) நாடுகளும் உருவாக்கப்பட்டது. இதில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியது ஆர்மேனிய நாடும் மிகப்பயங்கரமான இனப்படுகொலைக்கு பின்தான் 1918ம் ஆண்டு உருவானது.
ஆர்மேனிய மக்களும் யூத மக்களும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தான் தமது தாயகத்தை உருவாக்கினார்கள்.
இன்று எம்மைப்போல் இன்னொரு இனமும் இதே இனப்படுகொலைக்கு ஆளாகி 60 வருடங்களுக்கு மேலாக தமது தாயகமாக இருந்த பாலஸ்தீனத்தில் மீண்டும் ஒரு நாட்டை உருவாக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். லட்சக்கணக்கான பாலஸ்தீனமக்களும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் எம்மைப்போலவே அண்டை நாடுகளில் அகதிகளாக இருக்கின்றார்கள். பாலஸ்தீன நாடு ஒன்று உருவாவது அவசியம் என்று இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கின்றது.
இவ் நாடுகள் உருவாவதற்கு அங்கீகாரம் பெறுவதற்கும் காரணம் அந்த நாட்டு மக்கள் புலம்பெயர் நாடுகள் புலம் பெயர்க்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் தமது மனவுறுதியை இழக்காமல் தமது நியாயத்தை எடுத்துக் கூறிய படியால்தான் இன்று உலகநாடுகள் எமது மக்களுக்கு 13ம் சட்டத்தின் கீழ் தீர்வுகாணுங்கள், மாகாணசபை, Regional council அமையுங்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து எம்மை தொடர்ந்து படுகொலை செய்யும் ஆதிக்கவாதிகளின் கீழ் வாழுங்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் வேளையில் தம்மை புத்திஐவிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் சிலரும் பணத்திற்காகவும், பதவிக்காகவும், விலைபோனவர்களும், இனி தமிழும் வேண்டாம் ஈழமும் வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்கையில் தியாகங்களையும், உயிர் உடமைகளையும் அர்பணித்த எம் மக்கள் மீண்டும் அடிமை சாசனம் எழுத தயாரா?
1977ம் ஆண்டு சுதந்திரமாக எமது அபிலாசைகளை நாம் எடுத்துக்கூறியது போல மீண்டும் சுதந்திரமாக இலங்கையில் ஈழத்து தமிழர்களாய் வாக்களித்து தமது அபிலாசைகளை எடுத்துக்கூறும் உரிமை கிடைக்கும் வரை, அங்கே அவர்கள் சுதந்திரம் உள்ளவர்களாய் 1977ம் ஆண்டுக்கு பின் தமிழ் அடக்கு முறை கொண்டு வரப்பட்ட சட்டங்கள் மீளப் பெறப்படும் வரை, அங்கே எமது மக்கள் சுதந்திரமாக பேசவோ, உரிமைகளுக்கு குரல் கொடுக்கவே முடியாது.
உலக நாடுகள் அந்த நிலையை உருவாகும் வரை, அந்த நாட்டில் எமது மக்களுக்கு குரல் நாம் தான். அவர்கள் உரிமைகளுக்கு வாக்களிக்க வேண்டியவர்கள் நாங்கள். அதே நேரத்தில் எமது போராட்டம் புலம் பெயர்ந்த மக்களின் கைகளில் கையளிக்கப்பட்ட அதே நேரத்தில் அடுத்த தலைமுறையினர் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமது முன்னோர்கள் காட்டிய வழியில் இவ் உலகத்திடம் வலியுறுத்த முற்பட்டிருக்கின்றார்கள். இன்று மக்களாகிய நாங்களே எம் தாய் மண்ணின் மக்களின் உரிமைகளை நியாயப்படுத்தவும் எடுத்துக்கூறவும் வேண்டிய நிலையில் எமது மக்களின் குரலாய் நாம் மாறுவோம்.
இதே வட்டுக்கோட்டை தீர்மானத்தை உலகத்தமிழர்கள் அனைவரும் வலியுறுத்த நாம் முன்னுதாரனமாக இருப்போம். இது காலத்தின் தேவை.
பிரான்ஸ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை.


விடுதலைப்புலிகளை ஒடுக்கி, அழித்து விட்டால் தமிழர்களின் ஒட்டு மொத்த விடுதலை உணர்வையும், தமிழர்களின் தனி அடையாளத்தையும் அழித்து ஒழித்து விடலாம் என்கிற ராஜபக்சே சகோதரர்களின் கனவில் இடி விழுந்தாற்போல உலகெங்கும் தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து இலங்கை அரசிற்கு எதிராக அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள். “தமிழீழம்” என்கிற ஒரு கோட்பாட்டின் அடிப்படை எதிரியான சிங்களம், தன் மேல் குத்தப்பட்ட மனித உரிமை மீறல் அடையாளங்களை அழிக்க இயலாமல் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கும் சூழல் உருவாகி வருவதை நம்மால் காண முடிகிறது. முதல் எதிரியான சிங்களம் தலை குனியும் நேரத்தில், இரண்டாவது எதிரி அதனைச் சரி செய்யும் வேளையில் ஈடுபடுவதையும் நாம் உணர்கிறோம். ஆம், இந்திய தேசியம் வரிந்து கட்டிக் கொண்டு இலங்கைக்குத் தொடர்ந்து சரிவுகள் நிகழாமல் காக்கும் அளப்பரிய பணியைச் செய்து வருகிறது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில நாட்களுக்கு முன்னர் உலக வங்கிக்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுத்தார். உலக வங்கி இலங்கைக்குக் கடன் வழங்க மறுக்கும் சூழலில், இந்திய தேசியம் 2.6 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்கும் என்பது தான் அந்த மறைமுக மிரட்டல். உலக வங்கியின் மிகப்பெரிய பயனாளரான இந்திய தேசியம் விடுக்கும் மிரட்டலுக்கு, செவி சாய்க்க வேண்டிய நிலையில் தான் உலக வங்கி இருக்கிறது. ஏனென்றால் உலக வங்கி நடைபெறுவதற்கு ஒரு மிக முக்கியக் காரணி இந்திய தேசியம் தான். அதிக அளவில் வட்டியும் முதலும் செலுத்தும் நாடாகவும், உலக வங்கியின் மிகப் பெரிய பயனாளியாகவும் இந்திய தேசியம் இருப்பது தான் இதற்குக் காரணம் (The most valuable Customer).
வல்லரசு, புல்லரசு என்றெல்லாம் கதைகள் சொல்லிக் கொண்டு, உழைக்கும் மக்களின் பணத்தில் உண்டு கொழுக்கும் இந்திய தேசியம் உலக வங்கியின் படியளப்பில் தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகள் உலக வங்கியின் பிடியில் இருந்து விடுபட்டுத் தங்கள் பொருளாதாரத்தைச் சீரமைக்க ஆர்வம் காட்டும் நேரத்திலும், உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான அலுவாலியாவுடன் இணைந்து இந்திய தேசியத்தை ஒட்டு மொத்தமாக உலக வங்கியிடம் அடகு வைக்கும் ஆர்வம் இந்தியப் பிரதமரிடம் அளவற்றுக் கிடப்பது விந்தையான ஒன்றாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகைகளை இலங்கைக்குக் கொடுப்பதை நிறுத்தப் போவதாகச் சொல்லும் சூழலில், ஏனைய நாடுகள் இலங்கையுடனான தங்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவிப்புகள் வெளியாகும் வேளையில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது கட்டமைக்கப் போகிற பிராந்திய வல்லரசு வெறியை இந்தியப் பார்ப்பனீய தேசியம் வெளிப்படுத்தத் துடிக்கிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுத் தான் இந்த உலக வங்கிக்கான மிரட்டல்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகாம்களைப் பார்வையிடும் நாடகம் முடிந்து இலங்கைக்கு நற்சான்று கொடுக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்து, தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான வர்த்தக உறவுகள் மலர்ந்து செழிக்கப் போவதாகச் சொன்னதும், புதிய திட்டங்களில் இலங்கையுடன் இணைந்து செயல்படப் போவதாகச் சொன்னதும் தான் மிகக் கொடுமையானது மட்டுமன்றி மன்னிக்க முடியாததும் ஆகும். உலகம் முழுதும் வர்த்தகத் தடையை எதிர் நோக்கும் இலங்கையுடன், தொப்புள் கொடி உறவுகளாகிய நாம் வர்த்தகம் செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பு எத்தனை சூழ்ச்சிகள் நிறைந்தது, எத்தனை வலியைத் தரக் கூடியது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மாநில முதல்வருக்குத் தெரியாமல் போனதும், கொஞ்சமும் நெருடாமல் இருந்ததும் வெட்கக் கேடானது. கண்டனத்திற்குரியது.
தமிழக முதல்வரும் அவரது பரிவாரங்களும் தமிழீழச் சிக்கலில் என்ன செய்கிறார்கள் என்றால், கூடவே இருந்து குழி பறிக்கிறார்கள் என்பது தான் விடையாகிறது. இலங்கைக்கு உலக அரங்கில் உருவாகி இருக்கிற அவப்பெயரைத் துடைக்கும் சீரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரும், அவரது பரிவாரங்களும் ராஜபக்சே சகோதரர்களின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர்களாகி இருக்கிறார்கள். உலகம் இலங்கையைப் புறக்கணிக்கத் தயாராகி வரும் சூழலில், இலங்கையின் ஆட்சியாளர்களைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகெங்கும் வலுப்பெறும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையையே தனது கொடுங்கோன்மையின் எல்லைகளுக்குள் அனுமதிக்காத ராஜபக்சே, எப்படி தமிழக நாடாளுமன்றக் குழுவை அனுமதித்தார்???
இது முற்றிலும் இந்திய தேசியத்தின் உளவுத் துறையினர் ஆலோசனைப்படி நடத்தப்பட்ட நாடகமாக இருக்குமோ என்ற மிகப் பெரிய ஐயம் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளின் அழுத்தத்தில் இருந்தும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்புகளிடமும் கொடுப்பதற்கு ஒரு நற்சான்றிதழ் தேவைப்பட்ட நேரத்தில், மிகச் சரியாகத் தனது காய்களை நகர்த்தி தமிழக நாடாளுமன்றக் குழுவை ராஜபக்சே வரவழைத்திருக்கிறார். குழுவினரும் மிகச் சிறப்பாகக் கொலைகாரர்களின் தோளுக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்தி, கட்டித் தழுவித் தங்கள் தேசிய அடையாளத்தைக் காட்டி வந்திருக்கிறார்கள்.
இப்படி ஒருபுறம் நமது எதிரிகள் தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு சாதகமான விளைவுகளும் "தமிழீழம்" என்கிற கோட்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நகர்வது ஒன்று தான் சற்று ஆறுதல் தரக்கூடியது,
அவற்றில் சில இன்றியமையாதவை:
மேற்கண்ட யாவும் தானாக நிகழவில்லை என்பதையும், உலகெங்கும் வாழுகின்ற தமிழ்ச் சமூகம் தனது குரலை விடாமல் ஒலித்துக் கொண்டே, பல்வேறு போராட்டங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதன் விளைவுதான் இத்தகைய மாற்றங்கள் என்ற உண்மையை நாம் உணரும் போதும், நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கான விடை தானாகத் கிடைக்கும்.
எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியுடன் கூடிய வாழ்க்கை நெறிகளை நாங்கள் மேற்கொள்வதைத் தடை செய்து, இன மற்றும் மொழி ஒடுக்குமுறைகளில் நம்மைச் சிறுமைப்படுத்திய சிங்களச் சிறு நரிகளுக்கும், தமிழினத்தின் தனி அடையாளம் கண்டு எப்போதும் குலை நடுங்கித் தங்கள் "புதிய தலைமுறைகளில்" ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய இந்திய தேசத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையைக் காலம் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மொழிக்காகவும், இனத்தின் விடுதலைக்காகவும் இறந்து போன அந்த உயிர்களின் மதிப்பை தமிழ் இளைஞர்களாகிய நாம் மீட்டு எடுப்போமா? இந்தக் கேள்விக்கான காலத்தின் பதிலில் ஒளிந்து கிடக்கிறது நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும்.
வெட்ட வெட்டத் தழைப்போம்! பிடுங்கப் பிடுங்க நடுவோம்!! அடிக்க அடிக்க அடிப்போம்!!! அடைக்க அடைக்க உடைப்போம்!!!! அழிக்க அழிக்க எழுதுவோம்!!!! விழ விழ எழுவோம்!!!!
அறம் எங்கள் தலைவனாய் உயிர் கொண்டது
அன்னைமண் விடுதலைப்பயிர்கண்டது
கை.அறிவழகன்


மரபியல் அடிப்படையில், தென்னிந்தியர்கள் அனைவருமே தமிழர்களே! ஆனால், தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாத ஆரியர்களால் தான் தற்போதைய "திராவிடம்" என்ற சொல் படிப்படியாக உருப்பெற்றது. ஆனால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் ஆரியரால் திட்டமிட்டு, இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட மொழிகள். தங்களின் அடையாளங்களை இழந்த இம்மக்களை இனி தமிழர்கள் என்று அழைக்க இயலாததால், திராவிடம் என்ற தமிழர் மரபினத்தை அன்று ஆரியரால் பிழையாக அழைக்கப்பட்ட, பொதுப் பெயராலேயே அழைக்கின்றனர்.
பெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறியாமையைக் காண்பிக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் தங்களைத் தமிழர்களாக உணர்வார்களா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அதை ஆரியம் அனுமதிக்காது!
ஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, "தனித் தழிழ்நாடு" கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார். அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்!
எனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் பச்சோந்திகள் தங்களை "தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்" என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே! எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்! கர்நாடக, ஆந்திர, கேரள மக்கள் மட்டுமே தங்களை திராவிட இனம் என்று, விரும்பினால், இன்று அழைத்துக் கொள்ளட்டும். ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே! இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது. அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர்.
அனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம்! உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது! அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது! அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன!
இதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம்! அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள்! அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.
வெல்க தமிழ்த் தேசம்!
முனைவர் வே.பாண்டியன்
(இத்தொடரின் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது பகுதிகள் ) 1920 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்களவர் – தமிழர் அரசியலில் இரு துருவங்களாகப் பிரிந்து சண்டை பிடிக்கத் தொடங்கினர். சிங்களவரை இலங்கை தேசிய காங்கிரஸ் சார்ப்பு படுத்தியது. தமிழர் சார்பாக சேர்.பொன். இராமநாதன் இருந்தார்.
இலங்கைக்கு என்றோ ஒரு நாள் தன்னாட்சி (self-rule) அல்லது சுதந்திரம் கிடைக்கும் என சிங்களத் தலைவர்கள் நினைக்கவில்லை. தன்னாட்சி பற்றியோ சுதந்திரத்தைப் பற்றியோ அவர்கள் சிந்திக்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் இலங்கைக்கு ஒரு நாள் தன்னாட்சி அல்லது சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை சேர்.பொன். அருணாசலம், சேர்.பொன். இராமநாதன் உடன்பிறப்புக்களே முதலில் உண்டாக்கினார்கள்.
1917 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 2 ஆம் நாள் கொழும்பு விக்டோரியா மண்டபத்தில் இலங்கை தேசிய சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தில் சமரவிக்கிரம தலைமையில் பொன். அருணாசலம் ஆற்றிய சொற்பொழிவு மிகவும் புகழ்வாய்ந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பினை விடுத்தவர் ஏரிக்கரை செய்தித்தாள் நிறுவனத்தின் தொடக்குனரும் இலங்கைத் தேசிய சங்கத்தின் செயலாளருமான டி.ஆர்.விஜயவர்த்தனா ஆவார்.
இலங்கைத் தேசிய சங்கம் 1888 இல் சிங்கள கரவா சமூகத்தினால் உருவாக்கப்பட்ட சங்கமாகும்.
குடியேற்ற நாட்டு ஆட்சிக் காலத்தின்போது சாதி தொழில் என்பவற்றுக்கு இடையில் இருந்த தொடர்பு மறையத்தொடங்கிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிங்களவரிடையே காணப்பட்ட படிமுறை சமூக அமைப்பில் கொய்கம (goyigama) என்ற சாதியே உயர்சாதியாகக் கருதப்பட்டது. அந்தச் சாதியினரே பெரும்பான்மையாகவும் (51விழுக்காடு) இருந்தார்கள். இந்த சாதியினர் இடையிலும் நிலக்கிழார்கள் "முதல்தர சாதி" ஆகக் கருதப்பட்டனர். இவர்கள் ஏனைய சாதாரண கொய்கம சாதியாரோடு தம்மைப் பிரித்து "றடல" (Radala) எனத் தங்களை அழைத்துக் கொண்டார்கள்.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் படிமுறை சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டது. சிங்கள கரவா சாதியினரும் பணமும் செல்வாக்கும் படைத்தவர்களாகக் காணப்பட்டார்கள். றொபேட்ஸ் (Roberts) என்ற ஆங்கிலேயர் இருபதாம் நூற்றாண்டில் இலங்கை பற்றிய பார்வைகள் (Twentieth Century Impressions of Ceylon) என்ற நூலில் கரவா, துராவ மற்றும் சலாகம சாதியினர் மக்கள் தொகையில் 31 விழுக்காடாக இருந்தனர் என எழுதியுள்ளார்.
இந்த மூன்று சாதிகளிலும் தமிழ்க் கலப்பு இருக்கிறது பலருக்குத் தெரியாத சங்கதியாகும். குறிப்பாக சலாகம சாதியினர் ஒல்லாந்தர் காலத்தில் கருவாப்பட்டை உரிக்கத் தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழர்கள் ஆவர். இன்று சிங்கள – பௌத்த பேரினவாதத்துக்கு தலைமை தாங்குபவர்களில் இவர்களே முதல் இடம் வகிக்கிறார்கள்.
தென்னிலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாகத் நிலக்கிழார் பின்னணியையும் பெரும்பாலும் தரகுமுதலாளித்துவ சக்திகளாக தங்களை நிறுவியிருக்கிற கொய்கம மற்றும் கராவ சாதியினர் தான் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார்கள்.
1833 – 1912 வரையிலான காலப்பகுதியில் சட்டவாக்க சபை பெரும்பாலும் எத்தகைய சீர்திருத்தத்துக்கும் உட்படவில்லை. இதில் பெரும்பான்மை 9 மூத்த அரச அதிகாரிகளும் 6 சிறுபான்மை அரசபற்றற்ற (Unofficial) உறுப்பினர்கள் இருந்தார்கள். இந்த அரசபற்றற்ற உறுப்பினர்கள் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இருந்து நியமனம் செய்யப்பட்டார்கள். சிங்களவர்களை சார்புபடுத்திய உறுப்பினர்கள் எப்போதுமே கொய்கம சாதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். இதனை விரும்பாத கராவ முதலாளிகள் 1882 இல் இலங்கை வேளாண்மைச் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இந்த அமைப்பே 1888 இல் இலங்கை தேசிய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1888 இல் இந்தச் சங்கம் சட்டவாக்க சபைக்குள் நுழைய முற்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.
இந்த இலங்கை தேசிய சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில்தான் பொன். அருணாசலம் "எங்களது அரசியல் தேவைகள்" (Our Political needs) என்ற தலைப்பில் உரை ஆற்றினனார். அந்த உரை அரசியலில் இலங்கை அடைய வேண்டிய முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டியது. இந்த உரை நூல் வடிவில் வெளியிடப்பட்ட போது மத்திய தர சிங்களவர் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டு மே மாதத்தில்தான் இலங்கைச் சீர்திருத்த சங்கமும் அவரது தலைமையில் தோற்றுவிக்கப்பட்டது.
பொன். அருணாசலம் அவர்களது உரையால் மிகவும் கவரப்பட்ட இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் சேர் ஜேம்ஸ் பீரிஸ் இளைஞர்கள் ஒவ்வொருவரையும் அந்த உரையைப் படிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த உரையை மட்டுமல்ல பொன். அருணாசலம் அவர்களது ஏனைய வெளியீடுகளையும் படிக்குமாறு வற்புறுத்தினார்.
பொன். அருணாசலத்தின் உரையைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த ஜேம்ஸ் பீரிஸ் "அரசியல் சீர்திருத்தம் பற்றி பலர் கூறினாலும் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களே இடைவிடாத கட்டுப்பாடான கிளர்ச்சியை நடத்த வேண்டும் என்ற அவசியத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னார்." என எடுத்துரைத்தார்.
1921 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ், 1920 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சபைக் கட்டளைக்குத் தீர்மானம் மூலம் திருத்தம் ஒன்றை முன்வைத்தது. அதன் அடிப்படையில் சட்டவாக்குச் சபை 45 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். அதில் 6 அரசசார்பு உறுப்பினர்கள், 28 உறுப்பினர்கள் ஆட்புல, வகுப்புவாரி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவகளாக இருப்பர். மூன்று அமைச்சர்கள் சட்டவாக்க சiபியில் இருந்து நிறைவேற்றுக் குழுவுக்கு (Executiv Council) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இலங்கை தேசிய காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக சேர்.பொன். இராமநாதன் சிறுபான்மைத் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டு விண்ணப்பத்தை குடியேற்ற நாட்டுச் செயலருக்கு அனுப்பி வைத்தார். அதில் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஓரளவு மாற்று யோசனைகளை முன்வைத்தார். நிறைவேற்றுச் செயற்குழுவில் சிறுபான்மையினரது குரல் கேட்கப்பட வேண்டும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரது நலங்கள் பேணப்பட வேண்டும் என்பதே அந்த யோசனைகளாகும்.
ஆனால் இலங்கை தேசிய காங்கிரசின் பேச்சாளர் இ.டபுள்யூ பெரேரா கூட்டு விண்ணப்பத்தை "புகழற்றது" (Infamous) என இழிவு படுத்தினார்.
பொன். இராமநாதன் அனுப்பிய கூட்டு விண்ணப்பத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
"ஆட்புல பிரதிநித்துவம் பற்றி விரிவாக ஆராய்ந்த போது தமிழ்ப் பேராளர்கள் தங்களது சிங்கள கூட்டாளிகள் (சில விதிவிலக்கு உட்பட), சிங்கள மாவட்டங்களில் அதிகளவு தொகுதிகளை உருவாக்கி ஏனையோரது சார்பாக எழும் எதிர்ப்புக்களை மழுங்கடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது. இதன் காரணமாக இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து தமிழ்ப் பேராளர்களும் தமிழ் அமைப்புக்களும் விலகியதோடு தங்களது ஒத்துழைப்பையும் கொடுக்க மறுத்தன. இதன் பிற்பாடு காங்கிரஸ் தமிழர்களை சார்புபடுத்தும் தகைமையை இழந்துவிட்டது. 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசை தோற்றுவித்தவரும் அதன் முதல் தலைவருமான எனது உடன் பிறப்பு அருணாசலம் 1920 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அதில் இருந்து விலகிவிட்டார்.
டிசெம்பர் 14 ஆம் நாள் இலங்கை ரைம்ஸ் (Times of Ceylon) செய்தித்தாளுக்கு அருணாசலம் கொடுத்த செவ்வியில் "இலங்கை தேசிய காங்கிரஸ் சிங்களவர்களில் ஒரு பகுதியினரை மட்டும் சார்பு படுத்தும் அமைப்பாக மாறிவிட்டது. சிங்களவர்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையில் ஆளுக்கு ஆள் இருந்த நம்பிக்கையும் ஒத்துழைப்பும் சுக்கு நூறாகிவிட்டது. காங்கிரசின் அதிகார தன்மானமும் உடைந்துவிட்டது" எனக் குறிப்பிட்டார்.
தமிழில் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழி உண்டு. சிங்களத் தலைவர்களிடம் இருந்து எழுந்த தமிழின எதிர்ப்பு சமிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் முழுதாகப் புரிந்து கொள்ளத் தவறினார்கள். சுயநலமும் பதவி ஆசையுமே அதற்குக் காரணமாகும். தமிழர்களது ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்திராது. குறைந்தபட்சம் அது தள்ளிப் போடப்பட்டிருக்கும். சூழ்ச்சியும் தந்திரமும் வாய்ந்த சிங்களத் தலைவர்கள் காலத்துக்குக் காலம் அமைச்சர் பதவி, பட்டம், வாக்குறுதி போன்றவற்றை வழங்கித் தமிழ்த் தலைவர்களை ஏமாற்றினார்கள். இது பற்றி பின்னர் எழுதுவேன்.
தலைக்கு ஒரு வாக்கு என்றால் (Universal Suffrage) அரசியல் அதிகாரம் பெரும்பான்மைச் சிங்களவர் கைக்குப் போய்ச் சேரும் என்பதை இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கிய பொன்னம்பலம் உடன்பிறப்புக்கள் காலம் கடந்து உணர்ந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் சிங்கள இனத் தலைவர்களின் உட்கிடக்கையை அறிந்து கொண்டு தமிழர்களுக்கு நேரவிருந்த கேடுகளையிட்டு எச்சரிக்கை செய்த பொன்னம்பலம் உடன்பிறப்புக்கள் இனவாதிகள், பிற்போக்குவாதிகள் என பெரும்பான்மைச் சிங்களத் தலைவர்களால் அர்ச்சிக்கப்பட்டார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், மொழிகள், மதங்கள் இருக்கும் நாட்டில் எல்லோர்க்கும் வாக்குரிமை என்பது பெரும்பான்மை இனத்தின் அடக்குமுறைக்கு (Tyranny of the majority) வழிவகுக்கும் என்ற உண்மையைத் தமிழர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர்தான் பட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
பொன். இராமநாதன் 1879 இல் தனது 28 ஆவது அகவையில் சட்டவாக்க சபையில் அவரது மாமனார்; சேர். முத்துக்குமாரசுவாமியின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அந்தத் தெரிவோடு அவரது அரசியல் வாழ்க்கை தொடங்குகின்றது. இந்தப் பதவியில் 1892 வரை நீடித்தார். 1879 தொடங்கி 1930 வரை ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இலங்கை அரசியலில் முக்கிய பங்கு வகித்தார்.
பொன். இராமநாதன் பொன்னம்பலம் முதலியாருக்கும் செல்லாச்சி அம்மையாருக்கும் மகனாக 1815 ஆம் ஆண்டு சித்திரைமாதம் 16 ஆம் நாள் பிறந்தார். இவர் தமது இளமைக் கல்வியைச் கொழும்பு றோயல் கல்லூரியிலும் உயர் கல்வியைச் சென்னை இராணிக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து 1874 ஆண்டு சட்டத்தரணியானார். அதன் பின்னர் பத்து ஆண்டு காலம் சட்ட அறிக்கைகளின் ஆசிரியராக பணிபுரிந்தார். 1892 தொடக்கம் 1908 வரை சட்ட நாயகமாகவும் (Solicitor General) தற்காலிக சட்டமா அதிபராகவும் கடமையாற்றினார். 1989 இல் பிரித்தானிய அரசு அவருக்கு சேர் (Knight) பட்டத்தைப் பெற்றார். 1903 ஆம் ஆண்டு இராணி வழக்கறிஞர் (Queen's Counsel) பட்டம் வழங்கி மேன்மைப்படுத்தப்பட்டார். இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இலங்கையர் இவர் ஆவார்.
பொன்.இராமநாதன் முதலியார் இ. நன்னித்தம்பி அவர்களின் மகள் செல்லாச்சியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 ஆண்களும் 3 பெண்களும் பிறந்தார்கள். அவரது முதல் மனைவியின் மறைவுக்குப் பின்னர் 1906 ஆம் ஆண்டு ஆர்.எல். ஹரிசன் என்ற அவுஸ்திரேலிய நாட்டுப் பெண்ணை மணந்து கொண்டார். இந்து சமயத்துக்கு மாறிய ஹரிசன் தனது பெயரை லீலாவதி என மாற்றிக்கொண்டார். இராமநாதன் 1930 இல் மறைந்த பின்னரும் லீலாவதி நீண்டகாலம் இராமநாதன் மகளிர் கல்லூரி அதிபராகக் கடமையாற்றினார். இவர்களுக்குப் பிறந்த ஒரே பெண் சிவகாமசுந்தரி தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சுப்பையா நடேசபிள்ளையை மணந்து கொண்டார்.
பொன். இராமநாதன் இளமைக் காலத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்களது தொடர்பாலும் ஆறுமுக நாவலர் அவர்களது நட்பினாலும் சைவத் தமிழ்ப் பணிகளில் பெரும் நாட்டம் கொண்டிருந்தார். பெண்களின் கல்வி வளர்ச்சியானது தமிழ் மக்களின் மேம்பாட்டிற்கு அடிப்படையாய் அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு 1913 இல் யாழ்ப்பாணம் மருதனா மடத்தில் பெருந்தோகையான பொருட் செலவில் இராமநாதன் மகளிர் கல்லூரியை கட்டி முடித்தார். 1921 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பரமேஸ்வரா ஆண்கள் கல்லூரியை நிறுவினார். தமிழர்களது வரலாற்றில் இரண்டு கல்லூரிகளை நிறுவிய ஒரே தமிழ் அரசியல்வாதி என்ற பெருமை இவருக்கு உண்டு.
பெரும் சட்ட வல்லுனராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய இவர் சமயம், தத்துவம், யோகநெறி என்பவற்றிலும் புலமை பெற்றிருந்தார். (வளரும்)
- நக்கீரன்
ஓநாய் நெருங்குகிறது...ஆடுகள் ஒடுங்குகின்றன. ஓநாய் வருகிறது...மான்கள் நடுங்குகின்றன. ஓநாய் வந்துவிட்டது... முயல்கள் பதுங்குகின்றன. துப்பாக்கியை எடுத்து தோட்டக்காரன் குறிபார்க்கிறான்...ஓநாய் பதுங்குகிறது! இப்போது வழக்கறிஞராய் இருக்கும் என் மகள் செந்தூரி சிறுமியாய் இருந்தபோது அவளுக்காக நியூ செஞ்சுரியில் வாங்கிய சோவியத் யூனியனின் பெருமைக்குரிய ராதுகா பதிப்பக நூல் ஒன்றில் (அனிமல் புக் - என்று நினைவு) கவிதை மாதிரி எழுதப்பட்டிருந்த இந்த வரிகளை இப்போதும் மறக்கமுடியவில்லை. அந்த வரிகள் ஓநாய்களுக்கு மட்டுமே அல்ல.... கொலைகார ராஜபட்சேக்களுக்கும் அவர்களது இந்தியத் தோழர்களுக்கும் கூட அச்சு அசலாக அப்படியே பொருந்துகின்றன. 10 மாதங்களுக்கு முன் ராஜபட்சேக்களிடமிருந்து நமது சொந்தங்களைக் காப்பாற்றமுடியாத நிலை. இன்று, திருப்பதி வெங்கடேசப் பெருமாளால் கூட ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாத நிலை. 2008 அக்டோபரிலிருந்து தமிழினத்தை அழித்தொழிக்கும் பணியில் இறங்கியது இலங்கை.
ஒட்டுமொத்தத் தமிழினமும் அஞ்சி நடுங்கியது. அச்சத்தில் ஒடுங்கியது. பதுங்குகுழியில் பதுங்கியது. 26 மைலில் நடந்த இந்த அநீதி கண்டு தாய்த் தமிழகம் துடித்தது, ஆர்ப்பரித்தது. எங்கள் சகோதரர்களைக் கொல்லாதே என்று குரல் கொடுத்தது. உயிர்ப்பிச்சை கேட்டது. இப்போது, ராஜபட்சேக்களின் முறை. தோட்டக்காரன் துப்பாக்கியை எடுப்பதைப்போல், சர்வதேசமும் போர்க் குற்றம் என்று ஒரே குரலில் பேசுகிறது. தடை போடுவோம் என்கிறது ஐரோப்பா. விசாரிப்பேன் என்கிறது அமெரிக்கா. அஞ்சி நடுங்கி பதுங்கப் பார்க்கிறார்கள், ராஜபட்சேக்கள். இனப்படுகொலைக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் விரிக்கப்படும் வலையிலிருந்து ராஜபட்சே தப்பிக்கவே முடியாது. ஆயிரம் ஆயிரமாய் நமது சகோதரர்கள் கொல்லப்பட்டபோது, நாம் துடித்தோம்.
இன்று தன்னுடைய கொடிய சகோதரன் கோதபாய ராஜபட்சே கழுத்துக்கு நேராக கத்தி இறங்குவதைப் பார்த்து, கழுத்தறுபட்ட கோழி மாதிரி அலறித் துடிப்பது, மகிந்த ராஜபட்சே. இன்னும் சொல்லப்போனால், கோதபாயவுக்குப் பிறகு அந்தக் கத்தி யார் கழுத்தில் இறங்கும் என்பது தெரியும் மகிந்தவுக்கு. அதனால்தான் கோழி கொஞ்சம் கூடுதலாய்த் துடிக்கிறது. தானாடாவிட்டாலும் தன் சதையாடுகிறது. இங்கோ, மானாடா விட்டாலும் மயிலாடியது. அதைத் தவிர வேறெதுவும் ஆடவில்லை. போர்க்குற்றம் என்ற புகார் எழுந்தபோது, 'இது எங்கள் உள்நாட்டு விவகாரம், நாங்களே எங்களை விசாரித்துக் கொள்வோம்' என்றெல்லாம் இலங்கை தமாஷ் செய்தபோது கண்டித்து ஒரு அறிக்கையாவது வெளிவந்ததா கோபாலபுரத்திலிருந்து! ஆனால், கோபாலபுரம் மாதிரி மௌனம் சாதிக்கவில்லை சர்வதேசம்.
ஆதாரத்துடன் பக்கம்பக்கமாக அறிக்கை தயாரித்து, வரிக்கு வரி விசாரிக்கத் தயாராகியிருக்கிறது அமெரிக்கா. இந்த நேரம்பார்த்து எலிப்பொறியில் போய்ச் சிக்கியிருக்கிறார், ராஜபட்சேவின் கொலைக் கூட்டாளி சரத் பொன்சேகா. தமிழக அரசைப்போல, அமெரிக்க அரசும் ஒரு 'சீன்' போட்டுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்த இலங்கை, நிலைமை விபரீதமாகப் போவதைப் பார்த்து நொந்து போயிருக்கிறது. பொன்சேகாவையெல்லாம் விசாரிக்கக்கூடாது என்று அமெரிக்கத் தூதரைக் கூப்பிட்டு ஒப்பாரி வைக்கிறது. விசாரணையில் எதுவும் சொல்லக்கூடாது என்று அமெரிக்காவில் இருக்கும் பொன்சேகாவுக்கு அவசரச் செய்தி அனுப்புகிறது. விசாரணைக்கே போகாதே என்கிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா, அவசர அவசரமாக ஹிலாரி கிளிண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்.
பத்து மாதங்களுக்கு முன், கொன்றுகுவிக்கப்பட்ட நமது சொந்தங்களைக் காக்க தமிழகம் எந்த அளவுக்குத் துடித்ததோ, அதைப்போல பலமடங்கு கோதபாய ராஜபட்சேவுக்காகத் துடிக்கிறது இலங்கை. அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமாய்ப் பறந்து பறந்து துடிக்கிறது. இப்படியெல்லாம் அது துடிப்பதைப் பார்த்து, அதன்மீது கோபம் வரவில்லை நமக்கு. ஒரே ஒரு சகோதரனுக்காக ராஜபட்சேயின் ரத்தம் கொதிக்கும் அளவுக்குக் கூட, கொல்லப்பட்ட ஒரு லட்சம் சகோதரர்களுக்காக தமிழக முதல்வரின் ரத்தம் கொதிக்கவில்லையே என்கிற தன்னிரக்கம் தான் நம் நெஞ்சைப் பொசுக்குகிறது. சிவாஜி ரஜினிகாந்த்துக்கு ஒயிட்வாஷ் செய்தமாதிரி, நடந்தது இனப்படுகொலைதான் என்பது சர்வதேசத்துக்கும் வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது. கோபாலபுரத்துக்கு மட்டும்தான் இந்தச் செய்திபோய்ச் சேரவில்லை. தி.மு.க. மக்களவை உறுப்பினரான டி.கே.எஸ். இளங்கோவனுக்குத் தெரிந்ததுகூட, அவரது தலைவருக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை.
'செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும்' என்று எச்சரித்தான் வள்ளுவன். செம்மொழி சந்நிதானம் இரண்டையுமே செய்தது. கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தேவையேயில்லாமல் நமக்கு அறிவுரை சொன்னது. ஈவிரக்கமற்ற ஒரு கொலைகாரனைப் பிடித்து விசாரிக்கவேண்டுமென்று சொல்பவர்களிடம், இப்படியெல்லாம் பேசினால் அவர் ஆத்திரப்பட்டு மேலும் பல கொலைகளைச் செய்யக்கூடும் என்று எச்சரிக்கும் ஒரு மேதாவிக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? பிணந்தின்னிக் கழுகு ராஜபட்சேவை எச்சரிக்கப் பயன்படுத்தவேண்டிய அதிகாரத்தையும் சக்தியையும், நம்மை மாதிரி சிட்டுக்குருவிகளைச் சுட்டெரிக்கப் பயன்படுத்திக் கொண்டிருந்தாரே, ஏன்? ராஜபட்சேவுக்குக் கருணை மனு எழுதி முள்வேலி முகாமிலிருக்கும் 3 லட்சம் தமிழர்களைக் காப்பாற்றுவதுதான் சாதுர்யம், அதைவிட்டுவிட்டு ராஜபட்சேவின் போர்க்குற்றம் பற்றிப் பேசுவது அறிவீனம் என்கிற தொனியில்கூட ஒரு குரல் கேட்டது.
அதையெல்லாம் நம்பினாரோ என்னவோ, கருணாநிதியின் ராஜதந்திரம் குப்புறப் படுத்துக் கொண்டது. முள்வேலி முகாம் பிரச்சினையும் போர்க்குற்றம் தொடர்பான புகார்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவ்வளவு போர்க்குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட வேண்டியவன் நீ! அப்பாவித் தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்துவைக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கருணாநிதி கேட்டிருக்கலாம். முள்வேலிக்குள்ளிருந்து மக்களை விடுவிப்போம், போர்க் குற்றவாளிகளைச் சிறையிலடைப்போம் என்று 8கோடி தமிழர்களின் சார்பில் முழங்கியிருக்கலாம். போர்க்குற்றங்களுக்கு எதிராகத் தொலைதூர நாடுகளிலிருந்து கேட்கும் குரல்களுக்கே நடுங்கும் இலங்கை, தமிழ்நாட்டிலிருந்து அந்தக் குரல் கேட்டிருந்தால் அடங்கி ஒடுங்கியிருக்கும்.
அதற்கு மாறாக, கருணாநிதி அரசுதான் அடங்கிஒடுங்கியிருந்தது. தமிழகம் தான் செய்திருக்கவேண்டும் இதை. போர்க்குற்றவாளியைக் கூண்டிலேற்ற முயன்றிருக்கவேண்டும். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என்று ஆதாரத்துடன் பேசும் அமெரிக்கச் சகோதரி எலைன் சான்டர், 'ஈழத்தில் கொன்றுகுவிக்கப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்காக நியாயம் கேட்கும் பொறுப்பு மற்ற எவரையும் காட்டிலும் தமிழகத் தமிழர்களுக்கே அதிகம்' என்கிறார். ஆனால், இன்று அந்தப் பொறுப்பை நிறைவேற்றியிருப்பது நாம் அல்ல. சர்வதேசம். தொப்புள்கொடி உறவு என்ன கிழித்தது என்ற கேள்விக்கு, என்ன பதில் சொல்லப் போகிறோம்? 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்று மீண்டும் வசனம் பேசப் போகிறோமா? 50 ஆண்டுக்கால வசனகர்த்தா தான் பதில் சொல்லவேண்டும்.
தன்னுடைய சாதுர்யத்தையும் பதவி விலகல் ஆயுதத்தையும் பயன்படுத்தி, 2008 நவம்பரிலேயே போரை நிறுத்தியிருக்க முடியாதா, கருணாநிதியால்? இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபட்சேவைக் கழுவிலேற்றுவோம் என்று உலகத் தமிழர்களின் குரலாக ஒலித்திருக்க முடியாதா? போர்க்குற்றவாளி ராஜபட்சேவின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, முள்வேலித் தமிழர்கள் 3 லட்சம் பேரை விடுவித்திருக்கமுடியாதா? அண்ணன் சுப.வீரபாண்டியனும், அருட்தந்தை ஜெகத்கஸ்பாரும், அன்புத் தோழர் திருமாவளவனும் தான் பதில்சொல்லவேண்டும். நேரில் முடியாவிட்டாலும் தொலைபேசியிலாவது சொல்லட்டும். இன்னும் அதே பழைய எண்ணைத் தான் வைத்திருக்கிறேன். மேலே சொன்ன எந்தப் பிரச்சினையிலும், இந்திய ஒருமைப்பாடு கருணாநிதிக்குக் குறுக்கே நிற்க வாய்ப்பேயில்லை.
ஒரு லட்சம் தமிழர்களை நரபலி கொடுத்துத் தான் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற முடியுமென்றால், அதைவிட மிகப்பெரிய தேசிய அவமானம் வேறெதுவும் இருக்கமுடியாது. இந்திய காந்தியால் ஒன்றுபட்ட தேசம் இத்தாலி காந்தியால் சிதறிவிடக் கூடாது. கருணாநிதியிடம் கேட்கவேண்டிய நேரடிக் கேள்வி ஒன்றே ஒன்று தான். எங்கள் சகோதரர்கள் கொன்று குவிக்கப்பட்டதைத் தடுக்கமுடியாத அளவுக்குக் குறுக்கே நின்றது, இந்திய ஒருமைப்பாட்டைக் காக்கவேண்டும் என்கிற எண்ணமா? அல்லது, எப்படியாவது பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணமா?இந்தக் கேள்விக்கு சுற்றிவளைத்துப் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. ஆம், இல்லை என்று ஒரே வார்த்தையில் பதில்சொல்லிவிடலாம். உங்களைப் பாதுகாக்க, இந்தியாவைக் கேடயமாக்காதீர்கள்.
இந்தியா பற்றி உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். 1983ல் தொடங்கிய இனப்படுகொலைகள் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு எதிராக அர்ஜென்டைனா கொண்டுவந்த கண்டனத் தீர்மானத்தை வழிமொழியக் கூட மறுத்துவிட்ட அயோக்கிய இந்தியா... தன்னுடைய பிரஜைகளான தமிழக மீனவரைச் சுட்டுக் கொல்பவர்களைத் திருப்பிச் சுடத் தயங்குகிற கோழை இந்தியா... அப்பாவித் தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுத்துவிட்டு கொலைகார சிங்கள ராணுவத்துக்கு மருந்துகளை அனுப்பிவைத்த ஜீவகாருண்ய இந்தியா... போரையே நிறுத்திவிட்டதாக ஒரு 86 வயது மூத்த முதலமைச்சரிடமே கூசாமல் பொய்யுரைத்த சிதம்பர இந்தியா.... காந்திய வழியில் உண்ணாநோன்பிருந்த எங்கள் திலீபன் கொஞ்சம்கொஞ்சமாக உயிர் நீத்ததை ஆறஅமர வேடிக்கை பார்த்த ராஜீவ் இந்தியா...
ஒருபுறம் புலிகள் ஒப்படைத்த ஆயுதங்களை வாங்கியபடியே, இன்னொருபுறம் புலிகளின் எதிரிகளுக்கு ஆயுதம் வழங்கிய நம்பிக்கைத் துரோக இந்தியா...அப்பாவித் தமிழ்மக்கள் மீது குண்டுவீசப் புறப்பட்ட போர்விமானங்களுக்காக விமானத்தளத்தைப் பழுதுபார்த்துக் கொடுத்த மன்மோகன் இந்தியா...கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக ஒட்டுமொத்த உலகமும் எழுந்துநின்று குரல்கொடுத்தபிறகும் கள்ள மௌனம் சாதித்த சோனியாவின் இந்தியா...தமிழின அழிப்புக்குத் திட்டமிட்ட சரத் பொன்சேகாவைக் கட்டித்தழுவிப் பாராட்டிய நயவஞ்சக இந்தியா....இனவெறி இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நாற்காலியில் அமரவைத்துப் பார்க்க ஆசைப்பட்ட கூறுகெட்ட இந்தியா.... இந்த இந்தியா போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கத் துணை நிற்குமா, தட்டிக்கொடுக்குமா? அது என்ன செய்யும் என்பது கருணாநிதிக்குத் தெரியும்.
இவர் என்னசெய்யப் போகிறார் என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி. ஏற்கெனவே, தமிழினத்தின் இருவேறு அடையாளங்களாக மாறியிருக்கின்றன, முள்ளிவாய்க்காலும் கோபாலபுரமும். முதலாவது, உரிமைக்காக உயிரை விடுவது. இரண்டாவது, பதவி என்றால் உயிரையே விடுவது. முதல்வர் கருணாநிதி அவர்களே,உங்களது சமூக - அரசியல் வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கக்கூடியதா இது?ஜெயலலிதா பற்றி மட்டுமே பக்கம்பக்கமாக அறிக்கை விடவேண்டும், ராஜபட்சே விவகாரம் எழும்போது முகவரியே இல்லாமல் முடங்கிவிடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வரலாறு உங்கள் பெயருக்கு முன்னுள்ள அடைமொழிகளைத் திருத்தி எழுதத் தொடங்கும். அதற்குள் நீங்கள் விழித்து எழுவது நல்லது. எங்கள் தோட்டத்துக்குள் நுழைகிற ஓநாயைக் குறிவைக்க நீங்கள் துப்பாக்கியை எடுத்திருந்தால் ஓநாய் எப்போதோ ஓடிஒளிந்திருக்கும்.
ஓநாய் வந்ததைக் கவனிக்காமல் நீங்கள் கதைவசனம் எழுதிக் கொண்டிருந்தீர்கள். பக்கத்துத் தோட்டக்காரர்கள் துப்பாக்கியை எடுத்தபிறகுதான் ஓநாயின் ஆட்டம் அடங்க ஆரம்பித்திருக்கிறது. ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகள் உங்கள் ஒத்துழைப்பு இல்லாமலேயே தொடங்கிவிட்டன. இனியாவது டெல்லி எஜமானர்களைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த சர்வதேசப் போருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். கொலைகார ராஜபட்சேக்கள் தண்டிக்கப்படும் வரை, அலங்கார செம்மொழி மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவியுங்கள். நாடே உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.
தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கை மட்டும் தான் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த என்கிற நேர்மையும் துணிவும் மிக்க சிங்களப் பத்திரிகையாளன். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை, சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதால்தான், ராஜபட்சேவின் மென்னியைப் பிடித்து இறுக்கமுடிகிறது. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. தமிழினப் படுகொலைக்கான தண்டனையைப் பெற சகல 'தகுதி'யும் இருக்கிறது, ராஜபட்சேக்களுக்கு. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது.
அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".சனிப் பிணம் துணை தேடும் என்பார்கள். குற்றவாளிக் கூண்டுக்கு ராஜபட்சேக்கள் மட்டுமே போவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு, இனவெறி இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து அழகுபார்த்த இந்திய வெறியர்களுக்கும் கிடைக்காமல் போகப்போவதில்லை. சர்வதேச அரங்கில், போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், ஆண்டாண்டு காலமாகத் தொடரும் இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும்.
ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம், முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும். எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும். இது, ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும், அவரது இந்திய நண்பர்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற கருணாநிதி போன்றோர் வழிவிட்டாலே போதும். ஓநாய்களின் ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும்.
06.11.2009 'தமிழக அரசியல்' வார இதழில் வெளியான அரசியல் விமர்சனக் கட்டுரை
-புகழேந்திதங்கராஜ்

இந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாம் அவதானமாகவே உள்நுழைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவை நோக்கி 260 பேரைக் கொண்ட மூன்று படகுகளும், கனடாவை நோக்கி 76 பேரைக் கொண்ட ஒரு கப்பலும் கடந்த சில வாரங்களில் பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் இருந்தவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் மக்கள்.அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி அங்கு சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற படகுகளில் இரண்டு படகுகள் இந்தோனேசிய படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு படகு 39 பேருடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த போதும் அது கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மூவரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.
27 பேர் உயிர்தப்பியுள்ளனர். கனடாவை நோக்கி சென்ற "ஓஷன் லேடி' என்ற கப்பலில் இருந்த 76 பேரையும் உள்வாங்கிக் கொள் வது தொடர்பில் கனேடிய அரசு பல வாதப் பிரதி வாதங்களை முன்வைத்து வருகின்றது. கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல் கடந்த மாதம் 17 ஆம் திகதி கனடாவின் கடற்பரப்பை சென்றடைந்திருந் தது.
அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று தற்போது அவுஸ்திரேலிய அரசின் கப்பலான "ஓஷானிக் விக்கிங்' கப்பலில் வைக்கப்பட் டுள்ள 78 பேரும் தம்மை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரி க்கையை முன்வைத்து போராடி வருகின் றனர்.
இந்த மக்களின் அரசியல் தஞ்சங்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண் டும் எனவும் இந்த மக்கள் இலங்கையில் நடைபெற்ற போரில் தப்பியவர்கள் எனவும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப் புகள் தெரிவித்துள்ளன.போர் நிறைவுபெற்று விட்டது என இல ங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களில் பெருமளவான ஈழத் தமிழ் மக்கள் அரசியல் அடைக்கலம் கோரி உயிரைப் பணயம் வைத்து பல ஆயிரம் மைல் கடந்து பயணம் செய்தமை உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட் பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற் போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லா தளவிற்கு சில வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளது.
இந்த மக்களின் பயணம் உலகிற்கு ஒரு செய்தியை வலுவாக உணர்த்தி நிற்கின்றது. அதாவது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரி மைகளும், அடிப்படை உரிமைகளும் பாது காக்கப்படும் வரையிலும், அவர்கள் இலங் கையில் பாதுகாப்பாக வாழலாம் என தாம் எண்ணும் வரையிலும் உரிமைக்கான போர் என்ற நிகழ்வுகள் அங்கு அடங்கி விட்டதாக யாரும் கருத முடியாது.
அது ஏதோ ஒரு வகையில் தொட ரவே செய்கின்றது. மேலும் போர் அங்கு எவ்வாறு முடிவடைந்தது என்ப தையும், அதன் பின்னர் தமிழ் மக்க ளின் எதிர்காலம் என்பது என்ன? என் பது தொடர்பான தகவல்களையும் இந்த மக்களின் பயணம் தெளிவாக புரியவைத்திருக்கும்.
இது தொடர்பில் புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் இணை யத்தளம் ஒன்றிற்கு நேர்காணலை வழங்கிய ஊடகவியலாளரும், ஆய் வாளருமான பரணி கிருஷ்ணரஜனி தெரிவித்த கருத்தையும் இங்கு கூறு வது பொருத்தமானது.
"யார் என்ன வியாக்கியானம் கூறி னாலும் புகலிடத்தஞ்சம் கோரியிருப்ப வர்களுக்கு இருக்கிற ஒரே அடை யாளம் "இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்' என்பதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது.
போரில் குரூரமாகத் தோற்கடிக்கப்பட்டவர் களாக தமது அடையாள நிலத்தை இழந்த வர்களாக வாழ்வதற்கான நிலமற்றவர் களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக் கிறது' என தெரிவித்துள்ளார்.
அதாவது, இலங்கையில் போர் நிறைவு பெற்றாலும் அங்கு எல்லா இனமும் சமத் துவமான அரசியல் உரிமைகளையும், அதி காரங்களையும் கொண்டிருந்தால் மட் டுமே அமைதி ஏற்படும் என்ற வாதமும் இதன் மூலம் வலுப்பட்டுள்ளது.
போரின் நிறைவுடன் உலகம் மறந்து போக முற்பட்ட ஒரு உண்மையை இந்த அப்பாவி மக்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட பயணம் மீண்டும் தூசுதட்டி உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இலங்கையில் போரின் பின்னான நிகழ்வுகளில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் இழந்து போன மனித உரிமைகள் தொடர்பாகவும் மேற்குலகம் சில நகர்வு களை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால், ஆசியாவின் மிகப்பெரும் ஜன நாயக நாடாகத் தன்னைத்தானே பிரகட னப்படுத்தியுள்ள இந்தியா மௌனமா கவே இருந்து வருகின்றது.
இந்த வருடத்தின் முற்பகுதியான மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலு மான மூன்று மாத காலப்பகுதியில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியிருந்த மக்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளனர் என உலகிற்கு அறிவித்து வந்த இந்திய மத்திய அரசும், சில மேற்குலக நாடுகளும் கடந்த ஆறு மாதங்களாக 300,000 மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செயல்திறன் இன்றி உள்ளன.
அழுத்தங்களின் ஊடாக இந்த மக்களின் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர கிடைத்த சந்தர்ப்பங்களைக் கூட அவர்கள் தவறவிட்டிருந்தனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அழுத்த மிரட் டல்களும், அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்ற விசாரணை கள் தொடர்பான மிரட்டல்களும் ஓரளவு பலனைக் கொடுத்துள்ளன.
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரிச்சலுகை நிறுத்தப்படும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையும், அமெரிக்கா வின் வெளியுறவு திணைக்களம் அதன் காங் கிரஸ் சபையில் சமர்ப்பித்த இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பான அறிக்கை யும் இலங்கைக்கு ஓரளவு அழுத்தத்தைத் தோற்றுவித்துள்ளது.
இந்த அழுத்தங்களில் இருந்து தப்புவதற் காக இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கை களை அவசர அவசரமாக மேற்கொண்டு வருகின்றது.
எனினும் முகாம்களில் தங்கியுள்ள மக் களை முற்றாக மீளக்குடியமர்த்துவதுடன், 20 வருடகாலம் சிறைத்தண்டனை விதி க்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் விடு தலை செய்ய வேண்டும் என்பதே ஐரோப் பிய ஒன்றியத்தின் முன்நிபந்தனைகளில் முக்கியமானவை என ஐரோப்பிய ஒன்றியத் தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார்.
ஆனால், இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதுடன் மட்டும் ஈழத்தமிழ் மக் களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவ தில்லை. அவர்களின் அரசியல் பிரச்சினை கள் தீர்க்கப்படும் வரையிலும் உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் அரசியல் தஞ் சம் கோரும் ஈழத்தமிழ் மக்களின் பயணங் கள் ஓய்ந்துவிடப்போவதில்லை.
- வேல்ஸிலிருந்து அருஷ்
போர் முடிவடைந்ததும் நடைபெறப் போகும் தேர்தல்கள், புதிய களமுனைகளைத் திறந்துள்ளன.இதில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் அரசியல் காய்நகர்த்தல்கள் புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன. ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சிகள், ரணிலை முன்னிலைப்படுத்தும் எதிர்க்கட்சியினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரோடு இணையும் சிறுபான்மையின தேசியக் கட்சிகள் என்பவற்றோடு நான்காவதொரு அணியாக அரசியல் களத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் சேர்ந்து கொள்வாரென எதிர்வு கூறப்படுகிறது.
அவர் தேர்தலில் இறங்கி தற்போதைய ஆட்சியாளர்களுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென இரண்டு தரப்பினர் விரும்புகின்றனர்.
உள்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் ரணில் தலைமையிலான எதிர்க்கட்சியினரும் வெளியுலக வல்லரசாளர்களைப் பொறுத்தவரை அமெரிக்க தலைமையிலான மேற்குலகினருமே இந்த இரு தரப்புகளுமாகும்.
ஜெனரல் சரத் பொன்சேகா, அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக அவரை உசுப்பேற்றி கொம்பு சீவி விடும் பிரசாரங்களில் எதிர்க்கட்சியினர் மறைமுகமாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்பு எழுந்தன.
படைத் தரப்பினர் அரசியலில் ஈடுபடக் கூடாதெனவும் அது குறித்த சர்ச்சைகளைக் கிளறி விடுவது குற்றமாகுமென்றும் அரசு சில எதிர்நகர்வுகளை மேற்கொண்டது.
ஆனாலும் குடும்ப ஆட்சிமுறை நோக்கி, நாட்டை நகர்த்துவதாக குறை சொல்லும் சில சிங்கள கடும் போக்குக் கட்சிகள், அரசின் அச்சுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளாது ஜெனரலுடன் பல சந்திப்புகளை நிகழ்த்தின.
தமது அரசியல் இருப்பிற்காகவும் எதிர்கால நலனுக்காகவும் சரத்தின் அரசியல் பிரவேசத்தை ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் மனதார வரவேற்பார்களென்பதே உண்மையாகும்.அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியின் தந்திரோபாயம், இதிலிருந்து முற்றாக வேறுபடுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் ஏகோபித்த வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மனோ கணேசனின் ஆதரவு தமக்குக் கிடைக்காதென்பதை ரணில் அறிவார்.
இருப்பினும் சரத் பொன்சேகாவை அரசியல் ஆடுகளத்தில் மிதக்க விட்டு இறுதியில் வேறொருவரை ஜனாதிபதி முதன்மை வேட்பாளராக நிறுத்துவது என்கிற உத்தியை எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவும் கூடும்.
அண்மையில் மேற்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் இத்தகைய கருத்தொன்றை புலம்பெயர் தமிழ் மக்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ""பச்சை அட்டை'' (எணூஞுஞுண இச்ணூஞீ) வதிவிட அனுமதி கிடைக்கப் பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் அமெரிக்க விஜயமும் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொள்ள உத்தேசித்திருந்த விசாரணைகளும் கொழும்பு அரசியலில் பல அதிர்வுகளை உருவாக்கியிருந்தன.
போரின் இறுதி நாட்களில் நிகழ்ந்தேறிய குற்றங்கள் குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை சரத்பொன்சேகாவிடம் ஏன் அமெரிக்கா முன்வைக்க முயல்கிறது என்கிற பிரச்சினையும் எழுந்தது. ஆனாலும் அமெரிக்க அரசோ, இத்தகைய சந்தேகக் கணைகளுக்கும் உத்தியோகபூர்வ அரசின் கேள்விகளுக்கும் எதுவித பதில்களையும் வழங்காமல் கண்ணை மூடிய பூனை போல் இருந்தது.
அமெரிக்க அரசின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம், சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்ததும், தேசப்பற்று, தேசிய இறைமைக்கு ஆபத்துவந்துவிட்டது போல் அனைத்து சக்திகளும் ஒருமித்த குரலில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின.
தேசிய அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப்படும் கையறு நிலைக்குள் தள்ளப்பட்டவர்களே அதிகம் பேசினார்கள்.
மௌனமாகவிருந்து செயற்பட்டு அமெரிக்கா சீவிய கொம்பு, தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினரைப் பதம் பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மேற்குலகின் பாரம்பரிய நட்புச் சக்தியான ஐ.தே. கட்சியினர் மறுபடியும் ஆட்சி பீடமேறுவதற்கு ஜனாதிபதியைப் பலவீனப்படுத்தும் சக்திகளை இயக்க வேண்டிய பிராந்திய நலன் சார்ந்த தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறது.
அந்த வகையில் ஆளும்கட்சியினரின் வாக்கு வங்கியைச் சிதைத்து தமக்குச் சார்பானவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டுமாயின் சிலரின் சுய முனைப்பையும் சுய கௌரவத்தையும் சீண்டி விடக் கூடிய தந்திரோபாய உளவியல் செயற்பாட்டினை அதிகரிக்க வேண்டும்.
இந்த உளவியல் சார்ந்த உத்தியினையே எதிர்க்கட்சியினரும் கையாள முற்படுகிறார்கள்.அமெரிக்காவின் விசாரணைகளை உதாசீனம் செய்து தாய்நாட்டுக்குத் திரும்பிய சரத் பொன்சேகா குறித்து பிரமாண்டமான கதாநாயகத்துவ பிம்பம், சிங்கள மக்களிடையே முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பரந்து விரிந்து உயர்ந்து நிற்கிறது.
இந்த விசாரணை விவகாரம், ஒரு தனித்துவமான ஒப்பற்ற சிங்கள தேசிய ஆளுமையை ஜெனரலுக்கு வழங்கியுள்ளமையை ஆட்சியாளர்களும் உணர்வார்கள்.சம்பள அதிகரிப்பு மற்றும் போரில் பாதிப்புற்றோர் மீதான கரிசனை போன்ற விடயங்கள், அமெரிக்க விசாரணைக் காலத்தில் நடந்ததை குறித்துக் கொள்ள வேண்டும்.அத்தோடு வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள படையினரின் ஆட்சியாளர் குறித்த பார்வை, தென்னிலங்கை மக்களிடையே குறிப்பிடத்தக்க அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.
இவை தவிர, எதிர்க்கட்சிகளுக்கிடையே உருவாகும் புதிய கூட்டுகள் குறித்தும் அண்மிக்கும் தேர்தல்களில் அவை உருவாக்கப் போகும் வலிமைமிக்க தாக்கங்கள் பற்றியும் நோக்க வேண்டும்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஸ்ரீல.சு.க. (மக்கள் பிரிவு) வும் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி (மனோ கணேசன்) என்பவற்றோடு பல சிறு கட்சிகளும் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்கிற புதிய கூட்டு உருவாகியுள்ளது.
அதேவேளை இப் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டில் அங்கம் வகிக்கும் அதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் புதிய கூட்டணியிலும் இணைந்து கொள்கின்றன.
இனப்பிரச்சினைத் தீர்விற்கான பொதுக் கருத்தொன்றை நிர்மாணிக்கவும் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்களுக்கான புதிய தளமொன்றை உருவாக்கவும் இக்கூட்டணி நிறுவப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
எந்த வேளையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முழுமையான வரைவு வெளியிடப்படலாம் என்கிற நிலையில் அவை குறித்து சிறுபான்மை தேசிய இனக் கட்சிகளுக்கிடையே ஒரு தெளிவான புரிதல் உருவாகி, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதியான தீர்வுத் திட்டம் வெளிவர முன்னர், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம்.அதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம்
காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ரணில் வகுத்திருக்கும் தேர்தல் வியூகத்தில் முஸ்லிம் காங்கிரசையும் ஜனநாயக முன்னணியைப் பயன்படுத்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான புதிய கூட்டை தேர்தல் காலத்தில் தமது அணியில் இணைத்துக் கொள்ளலாமென்கிற தந்திரோபாயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சியும் இணைந்து கொள்ளும் சாத்தியப்பாடுகள் இருப்பதாகத் தெரிய
வில்லை.
பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கே வருகிற ஜனாதிபதித் தேர்தலில் தனது முழுமையான ஆதரவு கிட்டுமென முதலமைச்சர் பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.இதில் இந்தியா என்கிற பிராந்திய மேலாதிக்க மனோ நிலையாளர்கள், இத்தேர்தலில் எந்தக் கூட்டிற்குத் தமது மறைமுகமான ஆதரவை வழங்குவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.
போர் வெற்றியின் பிராந்தியப் பங்காளர்கள், தமது ஆதரவைத் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கே வழங்குவார்களென்று தெரிகிறது. அதாவது சீனா, அமெரிக்கா மேலாதிக்க ஊடுருவலை தடுக்க வேண்டுமாயின், போர்க்கள உறவினை நீடிக்க வேண்டும்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் நிஜமானால் தற்போதைய ஜனாதிபதியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்படும்.
அந்த அக்கினிப் பிரவேசத்தை இந்தியாவால் தடுக்க இயலாது போனாலும் சில வேளைகளில் எதிர்க்கட்சிக் கூட்டோடு இணைய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடுத்திட அதனால் முடியும்.
ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை மோதல் ஏற்படுமாயின் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கவர்ந்து கொள்பவருக்கே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுண்டு.
அரைப் பங்கு இல்லாவிட்டால் அதிகாரமில்லை என்பதே ஜே.ஆர். எழுதிய ஜனாதிபதிக்கான அரசியல் சாசனம்.
இந்நிலையில் புலிகளுக்கு எதிரான போரில் ஒன்று திரண்ட பிராந்திய சர்வதேச வல்லரசாளர்கள், இனி அதிகாரத்தில் யாரை இருத்துவது என்கிற விவகாரத்தில் முட்டி மோதப் போகிறார்கள்.
தேர்தல் சூறாவளி மையங் கொள்ளும் இந்நிலையில் மே 19 போர் ஓய்விற்குப் பின்னரான முதல் நகர்வில் எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது காலடியை எடுத்து வைக்கப் போகிறதென்பதை தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் மிக உன்னிப்பாக அவதõனிக்கிறார்கள்.
பேõரின் கொடூரங்களும் ஆழ்மனத்தின் ஆறாத இரணமாகி இன்னமும் வலிகளை உயிர்ப்பிய்த்துக் கொண்டிருக்கும் கோர நினைவுகளும் தொலைந்த இருப்புக்களும் தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள்ளும் வதைத்தபடியே இருக்கிறது.
83 இனப்படுகொலை துரத்திய பல மலையகத் தமிழர்கள், வன்னியில் குடியேறி, இன்று வவுனியா முகாம்களில் வாழ்வதையும், இதே நவம்பர் மாதத்தில் இழப்பதற்கு ஏதுமற்ற பெருந்தோட்ட பாட்டாளி மக்கள் நாடற்றவராகியதையும் மறக்க முடியாது.
- இதயச்சந்திரன்-
நன்றி - வீரகேசரிவாரவெளியீடு
இந்தியாவின் இடம்பெயர்ந்த அரசுகளின் தோற்றத்திற்கு முதலாளித்துவ வல்லரசின் குடியேற்ற வாதம் காரணமாக அமைந்தது. ஆனால் திபெத்தின் புலம்பெயர் அரசின் தோற்றத்திற்கு சோசலிசவாத மேலாண்மையும், நில ஆக்கிரமிப்பும் காரணமாக அமைந்தது. கடந்த நூற்றாணடின் நடுப்பகுதியில் மாவோவின் தலைமையில் திரண்ட சீன விவசாயிகளின் செஞ்சேனைப்படை விஸ்வரூபம் எடுத்து சீனா முழுவதிலும் செங்கொடியை நாட்டி சோசலிச அரசான மக்கள் சீனக் குடியரசை நிறுவியதோடு நின்றுவிடாமல் அதன் பசிக்கு அமைதியாகக் கிடந்த திபெத்தையும் இரையாக்கிவிட்டது. சீனா தனது நிலவிஸ்தரிப்புக் கொள்கையினால் 1959 இல் திபெத்தை ஆக்கிரமித்ததோடு அதனை சீனாவின் ஒரு மாநிலமாகவும் பிரகடனப்படுத்தியதோடல்லாமல் அண்டை நாடான இந்தியாவின் இமாசலப்பிரதேசத்தின் பல பகுதிகளையும் 1961 இல் ஆக்கிரமித்துக் கொண்டது. திபெத்தில் மிக அமைதியான ஆன்மீகம் மிளிர வாழ்வை நடத்திக் கொண்டிருந்த திபெத்தியர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து அண்டை நாடுகளான நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர வேண்டி ஏற்பட்டது.
இப்புலம் பெயர்வு இன்று வரை 50 வருடங்கள் தொடர் கதையாவே நீண்டு செல்கிறது. இவ்வாறு தொடர் புலம்பெயர்வு இடம்பெற்றாலும் சீன ஆக்கிரமிப்போடு திபெத்திலிருந்து வெளியேறிய திபெத்தின் ஆன்மீகத் தலைவர் ,தலாய் லாமாவும் (கிறிஸ்தவ மதத்தின் அதி உயர்பீடம் போப்பாண்டவர் என அழைக்கப்படுவது போல் திபெத்தின் ஆன்மீகத் தலைவர்களை தலாய் லாமா என்றழைப்பது திபெத்தியர்களின் வழக்கம்) அவருடைய சீடர்களும் இந்தியாவில் அடைக்கலம் கோரியதோடல்லாமல் காலம் தாழ்த்தாது திபெத்திய மக்களின் சமூக, பொருளாதார, தேசிய ஒருமைப்பாட்டை நலிவடைந்து போகாமல் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்பை உணர்ந்து திபெத்திய மக்களை ஒரு குடையின் கீழ் நிலை நிறுத்துவதற்காக இந்தியாவில் புலம்பெயர் அரசொன்றை 1959 இல் நிறுவினர். இவ்வரசு திபெத்திய மத்திய நிர்வாகம் என்றழைக்கப்படுகின்றது.
சீன ஆக்கிரமிப்பால் தாயகத்தில் திபெத்திய மக்களிடம் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை நிரப்புவதற்கு திபெத்திய மத்திய நிர்வாகம் பதிலீடாக அமைந்தது. இடம் பெயர்வு, இராணுவ ஒடுக்கு முறை, சீன மக்கள் குடியேற்றம், ஒடுக்கு முறை என்பவற்றுக்கு மத்தியிலும் திபெத்திய மக்களின் விடுதலை உணர்வையும், தேசியப் பற்றையும் சீன அரசால் மழுங்கடிக் முடியவில்லை. அதற்கு இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் திபெத்திய மத்திய நிர்வாகமே காரணம். அத்தோடு மிகப்பெரிய சீனப் பேரரசுக்கு மிகப்பெரும் சவாலாக இது இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. சீன ஆக்கிரமிப்போடு திபெத்தை விட்டு வெளியேறிய ஆன்மீகத் தலைவரும், சீடர்களும் இந்தியாவில் அடைக்கலம் புகுந்து தமக்கான அரசை நிறுவுவதற்கு சீன எல்லையிலுள்ள இந்தியாவின் வட மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் காங்கரா மாவட்டத்தில் தர்மசாலா என்ற நகரில் தமது புலம்பெயர்ந்த அரசாகிய திபெத்திய மத்திய நிர்வாகத்தின் தலைமைக் காரியாலத்தை அமைத்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இந்நிர்வாகத்தின் முழுப்பொறுப்பையும் பௌத்த தலைவராகிய தலாய் லாமாவே பொறுப்பேற்று வழிநடத்தியிருந்தார். ஆனால் நீண்ட கால ஓட்டத்தில் புதிய அரசியற் சிந்தனைகளின் வளர்ச்சி புலம்பெயர் அரசொன்று பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி அரசாங்கத்தை அமைக்க முடியுமென்பதை திபெத்தியர்கள் நிரூபித்துக் காட்டினர். 50 வருட கால நீண்ட புலம்பெயர் வாழ்வு. திபெத்திய சமூகத்தை பெரிதும் பாதித்தாலும் கூட தர்மசாலாவில் தனது மடாலயத்தை அமைத்து வாழ்ந்து வரும் தலாய் லாமா அந்நகரில் ஏராளமான திபெத்தியக் குடியிருப்புக்களையும், கல்விக் கூடங்களையும் அமைத்து தமது தேசிய ஒருமைப்பாட்டை, சமூகப் பண்பாட்டு விழுமியங்களை, பாதுகாத்ததோடல்லாமல் தொடர் புலம்பெயர்வினால் இந்தியாவில் மட்டும் வாழ்கின்ற திபெத்தியர்கள் ஒரு இலட்சத்தைத் தாண்டிவிட ஜனநாயகத் தேர்தல் என்ற சிந்தனை அவர்களிடம் உதயமாகியது.
இதன் விளைவுதான் 2002 ஆம் ஆண்டு உலகளாவிய திபெத்தியர்களுக்கான ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்து லாப்சங் டென்சின் என்பவரைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை நிறுவியிருக்கின்றனர். உலகளாவிய திபெத்தியர்களின் ஜனநாயகத் தேர்தல் என்று இதைச் சொல்லப்பட்டாலும் கூட. இந்தியாவிலும், நோபாளத்திலுமே இத்தேர்தல் நிகழ்ந்திருக்கிறது. மாறிவரும் உலகிற்கு ஆக்கிரமிப்புக்குள்ளான ஒரு தேசத்தின் மக்கள் பிறிதொரு நாட்டில் அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஜனநாயக விழுமியங்களைத் தழுவியதான தேர்தலை நடத்த முடியும் என்பதை முதன்முதலில் உலகுக்கு எடுத்துக் காட்டியிருக்கின்றனர். திபெத்திலிருந்து இடம் பெயர்ந்த திபெத்திய அரசு நிலத்தையும், இறைமையையும் இழந்ததே தவிர மக்களையும், அரசாங்கத்தையும் அது இழக்கவில்லை என்று சொல்வதே பொருத்தமானது. ஏனெனில் திபெத்திய நிலம் சீனாவின் ஆக்கிரமிப்பினால் விழுங்கப்பட்டு விட்டது.
ஆகவே நிலம் இழக்கப்பட்டது. நிலம் இழக்கப்பட்டமையினால் தாயகத்து இறைமையும் இழக்கப்பட்டு விட்டது. இறைமை என்கின்ற போது ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழ்கின்ற மக்கள் மீது அந்நாட்டின் அரசாங்கம் செலுத்துகின்ற அதிகாரம் அல்லது பலப்பிரயோகமே இறைமையாகும். அரசாங்கத்தின் பலப்பிரயோகம் என்கின்றபோது அவ்வரசாங்கத்தின் சட்டமன்றம் இயற்றுகின்ற சட்டதிட்டங்களுக்கு அமைய குடிகளை கீழ்ப்படிந்து நடக்க நிர்வாகத்துறை ஆணையிடுவதும், அவ் ஆணையை மீறுவோரை நீதித்துறை மூலம் தண்டிப்பதற்கு அரசுக்கே உரித்தான மேலான அதிகாரமே இறைமை என அரசியலாளர்கள் வரையறுக்கின்றனர். எனவே அரசுக்குரித்தான நிலம், மக்கள், இறைமை, அரசாங்கம் என்னும் கூறுகளில் நிலத்தையும், இறைமையையும், மக்களையும் இழந்து புலம்பெயர்ந்து உருவாக்கப்பட்ட இடம்பெயர்ந்த அரசுகளில் திபெத்திய மத்திய நிர்வாகம் குறிப்பிட்டளவு மக்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு அரசாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வரசு புலம்பெயர்ந்து வாழும் திபெத்தியர்கள் மீது ஒருவகையான இறைமையை கொண்டிருக்கின்றது. அது எவ்வாறெனில் மத்திய நிர்வாகம் எடுக்கின்ற சட்ட திட்டங்களை கடைப்பிடிக்க கட்டளையிடுகின்றது. ஆனால் கட்டளையை மீறுவோரை அதனால் கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ முடிவதில்லை. அவ்வாறு தண்டிப்பதாயின் அது இயங்கும் நாட்டின் இறைமையை மீறுவதாகிவிடும். ஆகவே இடம்பெயர்ந்த திபெத்திய அரசுக்கு சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒருவகையிலான சமூக உள்ளக இறைமையைக் கொண்டிருக்கின்றது என்றே கொள்ளலாம். இவ்வாறு பல்வகைப் பரிமாணங்களைக் கொண்ட திபெத்திய மத்திய நிர்வாகம் உலகின் முக்கிய நாடுகள் யாவற்றுடனும் இராஜரீக உறவுகளை வைத்திருப்பதோடு அந்நாடுகளில் இவ்வரசின் பிரதிநிதிகள் தங்கியுமிருக்கின்றனர். ஆனால் இவ்வரசை எந்தவொரு நாடும் இன்றுவரை அங்கீகரிக்கவில்லை.
ஏன் இவ்வரசு இயங்கும் இந்தியாவில் கூட இவ்வரசு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது திபெத்தியர்களின் துரதிர்ஸ்டமே. ஏனெனில் வல்லரசுகளினதும், குட்டி வல்லரசுகளினதும் ஆட்டத்தில் இந்நாடு பகடைக் காயாக உருட்டப்படுகிறது என்பதே உண்மை. எனினும் இவ்திபெத்திய இடம்பெயர் அரசின் செயற்பாட்டினால் தாயக திபெத்தில் வாழும் மக்கள் விடுதலை தாகம் தணியாதவர்களாக என்றோ ஒருநாள் திபெத் விடுவிக்கப்படும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையோடு தமது தேசிய எழுச்சியை சீனாவின் கொடிய இராணுவ அடக்கு முறைக்கு மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாசிப் படையெடுப்பால் போலந்து ஆக்கிரமிக்கப்பட்டபோது போலந்து அரசுத் தலைவர்கள் பிரித்தானியாவிற்குத் தப்பிவந்து 1939 இல் ஒரு இடம்பெயர்ந்த அரசினை உருவாக்கினர். இந்தப் பேரளவிலான அரசாங்கம் சில உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததே தவிர மக்களோ, இறைமையோ இருக்கவில்லை.
ஏனெனில் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தை ரஷ்யாவின் செஞ்சேனைப்படை 1945 இல் மீட்டாலும் கூட அந்நாட்டின் மீது சோசலிசக் கோட்பாட்டை அமுல்ப்படுத்தியதனால் இடம்பெயர்ந்து பிரித்தானியாவில் இயங்கிய போலந்தின் முதலாளித்துவ அரசால் சோசலிச சோவியத் ரஷ்யா 1991 இல் வீழ்ச்சியடையும் வரை நாடுதிரும்ப முடியவில்லை. பனிப்போர் காலத்தில் வல்லரசுகளால் போலந்து பந்தாடப்பட்டதனால் அதனுடைய இடம்பெயர்ந்த அரசு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு சாதனையையும் அடைய முடியவில்லை. இவ்வாறுதான் வல்லரசுகளின் பந்தாட்டத்தில் கொசோவோவும், ஒசெற்றியாவும், அப்காசியாவும் சிக்கித் தவிக்கின்றன. இங்கு கொசோவோ சேர்பியாவிலிருந்து பிரிந்து போக எத்தனித்த வேளை சேர்பியாவுக்குச் சார்பான ரஷ்யா கொசோவோவின் பிரிவினை வாதத்தை எதிர்க்க முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கொசோவோவை அங்கீகரிகரித்தன.
அதேவேளை ஜோர்ஜியாவிலிருந்து தெற்கு ஒசெற்றியா, அப்காசியா பிரிந்து போக உருவாக்கிய இடம்பெயர்ந்த அரசுகளை ரஷ்யா அங்கீகரிக்க முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தன. ஆகவே இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் வல்லரசுகளினதும், குட்டி வல்லரசுகளினதும் பிராந்திய நலன், புவிசார் அரசியல் மையநிலைப்பாட்டு சாதக பாதகத் தன்மையே இனங்களுடைய சுய நிர்ணய உரிமையையும், நாடுகளின் அல்லது பிராந்தியங்களின் விடுதலையையும் தீர்மானிக்கின்ற சக்திகளாக விளங்கிவருவதைக் காணமுடிகின்றது. பிராந்தியங்களின் விடுதலை அல்லது இறைமையை மீட்டல் என்பதற்கும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையைப் பெறுதல் என்பதற்குமிடையில்லான வேறுபாடுகளைப் பிரித்து விளக்குவது கடினமாயினும் கோட்பாட்டு ரீதியில் வேறுபட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும்.
பிராந்தியங்களின் விடுதலை என்கின்ற போது குறித்த ஒரு பிராந்தியம் அல்லது பிரதேசத்தின் இறைமையை இன்னுமொரு நாடோ, அல்லது மத்திய அரசோ கையகப்படுத்தியோ, அல்லது கட்டுப் படுத்தியோ வைத்திருத்தலாகும். ஆனால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்கின்றபோது ஒரு தேசிய இனத்திற்கு தன்னைத் தானே ஆளுகின்ற உரிமை அதாவது தனது அரசியல்த் தலைவிதியை தானே நிர்ணயிக்கின்ற உரிமை அதற்குண்டு. பல்தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அடக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம். தனது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு தன்னைத்தானே ஆளுகின்ற உரிமையைப் பெறுதல். இவ்வாறு சுயநிர்ணய உரிமையைப் பெற்றதன் பிற்பாடுதான் இறைமை என்கின்ற கோட்பாடு பற்றிப் பேச முடியும். ஆகவே சுயநிர்ணய உரிமையை பெறாமல் அல்லது அடையாமல் ஒரு தேசிய இனம் இறைமை பற்றி பேச முடியாது.
ஆகவே சுயநிர்ணய உரிமையைப் பெறல், இறைமையைப் பெறல் என்பவற்றிற்காக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கும் சமூகங்கள் தமது இலக்கினை அடைவதற்கு தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம், இடம்பெயர்ந்த அரசு உருவாக்கம் போன்ற அரசியல் சித்தாந்தங்களை அறிமுகப்படுத்தி அவற்றினூடே தமது போராட்ட இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இடம்பெயர்ந்த அரசுகளிலிருந்து மாறுபட்டு தாயகத்திற்கு வெளியே புலம்பெயர்ந்து உலகெங்கும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டம் நாடுகள் கடந்து அமைக்கவிருக்கும் மக்களவைகளும், அவற்றினூடாக உருவாக்கமுனையும் நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் வரலாற்றுத் தேவை, வரலாற்றுப் பரிமாண வளர்ச்சி அதன் சாகத பாதகத் தன்மைகள் பற்றி தொடர்ந்தும் வரும்...
-தி-வன்னியன்
நன்றி:ஈழமுரசு
‘பயங்கரவாதம்' என்ற முள்வேலியை சுற்றிப்போட்டுவிட்டு, இத்தனை காலமும் சர்வதேசத்தை ஏமாற்றி தமிழ் மக்களை அழித்து வந்தது சிறீலங்கா அரசாங்கம். அவர்களது வார்த்தைகளில் மயங்கி தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகப் பார்த்த சர்வதேசத்திற்கு, சிறீலங்கா அரசாங்கத்தினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பது காலம் கடந்து இப்போதுதான் புரியத்தொடங்கியுள்ளது. அமெரிக்கா கடந்த 22ம் திகதி, இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்த மிக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் விடுதலைப் புலிகளையும் சிறீலங்கா அரசையும் அது கடுமையாகச் சாடியிருந்தது. விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையணில் இணைத்ததாக அதிகம் குற்றம்சாட்டப்பட்டிருந்த அந்த அறிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் சர்வதேச விதிமுறைகளுக்கு முரணாக சிறீலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து கடுமையாகவே சாடப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் இந்தப் போர்க் குற்ற அறிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முதல் ஐ.நா சபை வரை விவாதங்கள் வலுவடையத் தொடங்கியுள்ளன.
இந்தப் போர் குற்றம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கு சிறீலங்கா உடன்பட வேண்டும் எனவும் அல்லாது போனால் அதற்கான எதிர்வினைகளை (ஜீஎஸ்பி-பிளஸ் இடைநிறுத்தம் போன்ற) சிறீலங்கா சந்திக்க வேண்டும் எனவும் அவை எச்சரிக்கத் தொடங்கியுள்ளன. சிறீலங்காவின் போருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு துணையாக நின்ற சில நாடுகளைக் கூட அமெரிக்காவின் அறிக்கை சிறீலங்காவிற்கு உதவி வழங்குவதில் இருந்து பின்வாங்க வைத்துள்ளது. சர்வதேச நாடுகளின் இந்த சடுதியான மனமாற்றத்தால் அதிர்ச்சியடைந்த சிறீலங்கா, அமெரிக்காவின் இந்த போர்க் குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாகவும், சுயாதீனமான புத்திஜீவிகளை கொண்டு இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாக அறிவித்திருந்தது.
ஆனால், அமெரிக்காவின் யுத்தக்குற்ற அறிக்கை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவிப்பதை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறைப்பதற்கான, சர்வதேச சமூகம் மறக்கச் செய்வதற்கான அவகாசத்தைப் பெறும் முயற்சியே சிறீலங்காவின் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப் போவதான அறிவிப்பு என்று அது தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் ஏமாற்றுத் தனத்தைப் புரிந்துகொண்டதனாலேயே இவ்வாறான ஒரு அறிக்கையை அதனால் வெளியிட முடிந்துள்ளது. காலம் காலமாக இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவற்றை விசாரிப்பதற்கு விசாரணைக் குழுக்களை அமைக்கும்.
நீண்ட நெடுங்காலம் இழுபடும் இந்த விசாரணைக் குழுக்கள், இறுதியில் எந்த ஒரு முடிவும் இல்லாமல், யாருக்கும் தண்டனையைப் பெற்றுக்கொடுக்காமல் பின்னர் காணாமல் போய்விடும். உதாரணமாக, மூதூரில் பிரான்சின் ‘அக்சன் கொந்ர லா பாம்' பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட விடயத்தில் கூட இவ்வாறு அமைக்கப்பட்ட குழு, இரண்டு ஆண்டுகள் விசாரணைகளை இழுத்தடித்து, உண்மைகளை மூடிமறைத்தது. அண்மையில் அந்தப் படுகொலையின் தீர்ப்பு வெளியாகியபோது, பிரான்சின் அக்சன் கொந்ர லா பம் உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர். எனவே, சிறீலங்காவின் விசாரணைக் குழுக்கள் அமைக்கும் பணி என்பது காலத்தை இழுத்தடிக்கவும், சர்வதேசத்தை ஏமாற்றவுமே என்பதை சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளன என்பதன் வெளிப்பாடுதான் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை எனக் கொள்ளலாம். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம். பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது என்பதை சிறீலங்கா இப்போது உணர்ந்துகொண்டிருக்கும்.
ஆசிரியர் தலையங்கம்-ஈழமுரசு
நன்றி்:ஈழமுரசு
வாள் பிடிக்க தெரியாத வழிப் போக்கர்களுக்கு இடம்கொடாமல், என்றும் தலைநிமிர்ந்து ஆட்சியை நடத்தியவர்கள் வன்னி மன்னர்கள். இதில் வன்னிராச்சியம் பண்டாரவன்னியனாலும், யாழ்பாணராச்சியம் சங்கிலியனாலும் மற்றும் எல்லாள மன்னன் என்றும் அன்று தமக்கென்று ஓர் இராச்சியத்தை அமைத்து வாழ்ந்துவந்த மன்னர்கள் இவர்கள். அன்று வாழ்ந்த மன்னர்கள் தமக்கென்று ஓர் இடத்தினை தேர்வுசெய்து தமக்கென கட்டுப்பாடுகள் வைத்து தமக்கென படைகள் அமைத்து தமக்கான நிலங்களில் விவசாயம் செய்து மாற்றான் காலில் மண்டியிடாது அரசுரிமை நடத்திய மன்னர்கள். அவர்கள் வழிவந்த தமிழ் மக்கள் இன்று சோற்றுக்கும் கஞ்சிக்கும் கெஞ்சும் நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழ்ந்த மன்னர்கள் கோட்டைகட்டி இராச்சியம் அமைத்து வாழ்ந்து வந்தவர்கள் என்பது நாம் அறிந்த உண்மை. அவர்களின் இராச்சியங்கள் கூட தமிழ் மக்களின் வாழ் இடங்களில் காணப்படுகின்றன என்பதும் உண்மை. இந்தவகையில்தான் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கற்சிலைமடு என்னும் இடத்தில் பண்டாரவன்னியனை வெள்ளையர்கள் தோற்கடித்ததற்கான கற்சிலை ஒன்றினை கட்டிவிட்டு போனார்கள்.
இதனை தமிழ் மக்கள் பேணிப் பாதுகாத்துவந்தார்கள். இவ்வாறுதான் யாழ்பாணத்திலும் சங்கிலியன் சிலை தொடக்கம் தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கான ஆதாரங்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் காணப்படுகின்றன. இதனை அழிந்துவிடாது பாதுகாப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும். ஏன் என்றால் இவைகள் அழிந்தால் தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் எனகூறிக்கொண்டிருக்கும், ஒரிசாவில் இருந்து கப்பலேறி வந்த சிங்களவர்களுக்கு இன்னும் இன்னும் வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடும். இந்த வரலாற்றுச் சின்னங்கள்தான் தமிழரது வாழ்வினை அவர்களின் பூர்வீக நிலங்களை ஆதாரம் செய்கின்றன. இவற்றைஎல்லாம் மாற்றி அமைக்கும் முகமாக இன்று தமிழ் மக்களை அவர்களது இடங்களில் இருந்து விரட்டி அடித்துவிட்டு அவர்களை சுதந்திர நடமாட்டமற்ற பகுதியில் வெளியில் நடக்கும் எதுவும் தெரியாத ஊமைகளாக அடைத்துவைத்துவிட்டு, தமிழ் மக்களின் நிலங்களில் சிறீலங்கா அரசு நாடகமாடுகிறது.
உண்மையில் முகாம்களில் இருக்கும் மக்களுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்று தெரியாது. ஏன் என்றால் அங்கு வானொலி கேட்கக் கூடதடை. மின்கலம் வைத்திருக்க கூடதடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கேட்டாலும் சிறீலங்கா அரசின் ஊதுகுழல் ஊடகங்களைத்தான் கேட்கமுடியும். அவ்வாறு அங்கு அலைவரிசை செல்கின்றது சுதந்திரமான அரசியல்சார்ந்த பத்திரிகைகளைக்கூட மக்கள் படிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். குறிப்பிட்டு கூறவேண்டிய விடயம் என்னவெனில் முகாமில் மக்களுக்கு வழங்கப்படும் பத்திரிகை தினமுரசு. சிறீலங்கா அரசின் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈபிடிபி நடத்தும் பத்திரிகைதான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் சினிமாப்பட நடிகைகளின் அரைகுறைப் படங்கள்தான் மக்களை கவர்ச்சிப்படுத்துவதற்காக போடப்பட்டுள்ளது. இதுதான் அங்கு மக்கள் விரும்பி பார்க்கும் பத்திரிகை என்று கூறி சிறீலங்காப்படை ஒட்டுக்குழுவினர் இதனை வழங்குகின்றார்கள்.
இவ்வாறு தமிழ் மக்களின் எண்ணங்களை மாற்றும் செயற்பாடுகள் ஒரு பக்கத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கையில், மறுமுனையில் தமிழர்களின் நிலங்களில் என்ன நடக்குதென்று தமிழர்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் ஒன்றும் தெரியாத இடத்தில் அடைபட்டுகிடக்கிறார்கள். இங்குதான் நிலமைமாறுகின்றது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த இடங்களில்எல்லாம் பௌத்தமதம் தலைதூக்குகின்றது. சிங்கள பேரினவாத அரசால் அதன்படைகளால் பரப்படும் ஒரு மதம்தான் பௌத்தமதம். புத்தரை முதன்மை கடவுளாக கொண்ட இம்மதம் அரசமரங்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் இவர்களின் வழிபாட்டுதலங்களாக மாறிவிடும். இங்கு அரசமரத்தினை சிங்களவர்கள் போதிமரம் என்றுதான் கூறுவார்கள். தமிழ் மக்களின் வாழ்விடங்களில் எல்லாம் அரசமரங்கள் உண்டு. ஏனென்றால் தமிழ் அரசர்களால் வணங்கப்பட்ட தெய்வங்களைத்தான் தமிழ் மக்கள் பரம்பரைத் தெய்வங்களாக வணங்குகினறார்கள்.
அன்று அரசமரங்களில் எல்லாம் பிள்ளையார் எனப்படும் சிவன் உமாதேவியர் மண இணையரின் மூத்தமகன் ஆனைமுகன் தெய்வத்தினை வைத்து அரச குலமக்கள் வாழிபட்டுவந்தார்கள். பின்பு தமிழ் மக்களாலும் வழிபடப்பட்டன. இவ்வாறுதான் தமிழ் மக்களின் நிலங்களில் எல்லாம் புத்தமதம் பரப்பும் திட்ட தந்திரங்கள் எல்லாம் சிங்களப்படைகளுக்கு பௌத்த துறவிகளால் ஊட்டப்படுகிறது. 1990 காலப்பகுதிகளின் பின்பு ஆனையிறவு படைத்தளம் விரிவாக்கப்பட்டு பளை கிளிநொச்சி என அப்பிரதேசம் விரிந்து முழுமையான கட்டுப்பாட்டில் சிறீலங்காப் படையகளால் கொண்டுவரப்பட்டது. அங்கு பல புத்தவிகாரைகள் கட்டப்பட்டன. பளைப் பகுதியில் பாரிய புத்தர்சிலை கட்டப்பட்டு சிங்களப் படைகளின் வழிபாட்டுதலமாக மாற்றப்பட்டிருந்தது. இதெல்லாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் முளைத்த புத்தர் சிலைகள்.இங்கு இன்னும் ஒன்று எடுத்துகூறவேண்டும். ஊரும் எறும்பினை கொல்லாத பௌத்த மதத்துறவிகள் துப்பாக்கி ஏந்தி தமிழரைக் கொல்ல சிங்களப் படையில் இணைந்து களமுனைக்கு செல்கிறார்கள்.
இவ்வாறான சிங்களப் படைகள்தான் களமுனைகளில் புத்தர்சிலைகளை நிறுவுவதற்கும் புத்த வழிபாட்டுதலங்களை அமைப்பதற்கும் மூலகாரணமாக விளங்குகிறார்கள். அன்று பளைப்பகுதியில் சிங்களபடைகளால் அமைக்கப்பட்ட புத்த தலங்கள் 2000ம் ஆண்டு 4ம் மாதம் 22ம் திகதி ஆனையிறவின் மீட்பின் பின்தான் இந்த புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு தெரியவந்தது.இவ்வாறுதான் 13.05.1997 அன்று தமிழர் நிலங்களை வல்வளைக்கவென ஜெயசிக்குறு எனும் படை நடவடிக்கை மூலம் வவுனியாவில் இருந்து புறப்பட்டு தமிழ் மக்களின் நிலங்களை விழுங்கியபடி சிங்களப் படைகள் வவுனியாவில் இருந்து மாங்குளம் வரையும், மாங்குளம் தொடக்கம் ஒட்டிசுட்டான் வரையான வீதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நின்றுகொண்டிருந்தன. புலிகளின் கடுமையான தாக்குதலால் தொடர்ந்து முன்னேற முடியாமல் இப்பிரதேசங்களில் ஒரு ஆண்டுக்குமேலாக நிலைகொண்ட சிங்களப்படைகள் அங்கும் புத்தர்சிலைகளை வைத்து வழிபடுகின்றார்கள்.
இதில் அழிக்க முடியாதளவிற்கும் சில சிலைகளை அங்கு நிறுவுகிறார்கள். குறிப்பாக அம்பகாமம் எனப்படும் காட்டுப்பகுதியில் நிலைகொண்ட சிங்களப்படைகள் ஆறு அடி உயரம்கொண்ட புத்தர்சிலையினை வைத்து வழிபடுகின்றார்கள். இவ்வாறு சிலவழிபாட்டுதலங்கள் காடுகளுக்குள்ளும் தமிழர் வாழ் இடங்களுக்குள்ளும் பரவுகின்றன. இவை 1999ம்ஆண்டு விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள்-3 நடவடிக்கையின் பின்பு இனம்காணப்பட்டன.இவ்வாறு திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் சிங்களம் திட்டமிட்டு மதப்பரப்பலையும் மேற்கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்பின்புதான் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியினரால் தமிழ் மக்கள் வாழ்விடங்களில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது. இவற்றுக்கான இடங்கள் இனம்காணப்பட்டு முன்னர் மக்கள் வாழ்ந்துவந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றது.
(மக்கள் சமைக்க பாவித்த மட்பாண்டங்கள் கட்டடங்களின் சிதைவுகள்) இவை அக்கராயன், மல்லாவி, குமுழமுனை போன்ற இடங்களில் கிணறுதோண்டும்போதும், மண்வெட்டும் போதும் மக்களால் இனம்காணப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. இவைபின்பு ஆய்வுக்கு உட்படுத்தவென வைக்கப்படுகிறது. தமிழர் வாழ்ந்த தடயங்கள் வரலாறுகள் உள்ளதென்பதை நிரூபிக்க