இந்திய உளவு நிறுவனம் விரித்த வலையில் மாத்தையா வீழ்ந்தார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியான முடிவுக்கு வந்தது. அதற்கு அழுத்தமான காரணங்கள், சூழ்நிலை சந்தர்ப்பங் களின் அடிப்படையிலான சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. ராஜீவ் சர்மாவின் இந்த நூல் மாத்தையா மீது எந்தக் குற்றமும் இல்லாதது போலவும், பிரபாகரன், அவரை சித்திரவதை செய்து கொன்றார் என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறது. நூலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:
“பிரகாகரன் ஆயுதமேந்திய சகப் போராளி களுடன் கூட இரக்கமற்ற முறையில் நடந்து கொள் வார். 1980-க்கும் 1990-க்கும் இடைபட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி..ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களைக் கொன்றார். இது சம்பந்தமாக நடந்த மிக அதிர்ச்சி கரமான சம்பவம் மாத்தையாவின் கொலையாகும். பிரபாகரன் மாத்தையாவை இரட்டை வேடம் ஆடுகிறார் என நினைத்தார். மாத்தையா கொடுத்த தகவலின் பேரிலேயே எச்.வி. அகத் கப்பல் (கிட்டு வந்த கப்பல்) அழிக்கப்பட்டது என்ற தகவல் பரவியது. ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றி வந்த அக்கப்பல் அழிக்கப்பட்டதால் எல்.டி. டி.ஈ.க்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. மாத்தையா துரோகி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்; தனிச் சிறையில் அடைக்கப்பட் டார்” (பக்.174) என்றெல்லாம் எழுதுகிறார் நூலாசிரியர்.
மாத்தையா மீது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வீண் பழியை சுமத்தியது போலவும், கிட்டு வந்த கப்பலை மாத்தையா காட்டிக் கொடுத்தார் என்று, ஆதாரம் ஏதுமின்றி தகவல்களைப் பரப்பினார் என்றும் இந்த நூல் பதிவு செய்கிறது. மாத்தையா ஒரு வருட காலம் விசாரணைக் கைதியாக இருந்த போதும் சரி, பிறகு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும் சரி, மாத்தையாவை பிரபாகரன் சந்திக்கவே இல்லை என்றும் நூல் குற்றம் சாட்டுகிறது. இதையெல்லாம்விட மாத்தையாவுக்கு மரண தண்டனை வழங்கியதற்கு பிரபாகரனுக்கு ‘உள்நோக்கம்’ உண்டு என்ற முடிவுக்கும் நூலாசிரியர் வருகிறார். இவ்வாறு எழுதுகிறார்:
“மாத்தையாவின் கதை முடிந்து விட்டது. ஆனால், மாத்தையா உண்மையிலேயே இரட்டை வேடம் ஆடினாரா அல்லது அவர் மிகப் பலம் பொருந்திய வராக உருவானதால் பிரபாகரன் அவரை அழித்தாரா என்பது யாருக்கும் தெரியாது” என்று ‘யாருக்கும் தெரியாத’ ஒரு உண்மையை தனக்கும் தெரியாத ஒன்றை, பிரபாகரனை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நஞ்சை கக்குகிறார், இந்நூலாசிரியர். பிரபாகரனை இழிவுபடுத்தி, அவரது மாண்பையும் கவுரவத்தையும் நேர்மையையும் களங்கப்படுத்தும் உளவுத் துறையின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் நூலாசிரியர்.
மாத்தையாவுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து ‘இந்தியா டுடே’ வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இத்தனைக்கும் ‘இந்தியா டுடே’ புலிகளின் ஆதரவு பத்திரிகை அல்ல; மாத்தையா இந்தியாவின் வலையில் வீழ்ந்தார் என்பதை, இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது. 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 16) அதன் செய்தியாளர்கள் எழுதிய விரிவான கட்டுரையிலிருந்து ஒரு முக்கிய பகுதி இது.
“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி – சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை – இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 – 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு, மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளி லிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவி யாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப் பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதர வாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம் – 1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (சுயறு) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல் வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும், ‘ரா’வின் முகவராக மாத்தையா செயல் பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
1992 ஆம் ஆண்டில் மாத்தையா புலிகள் இயக்கப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுகிறார். 1989 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் இயக்கத்தில் மாத்தை யாவின் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் குழு ஒன்று இந்தியாவின் உளவு நிறுவனத்துடன் ரகசிய தொடர்பில் செயல்படத் தொடங்கிவிட்டது.
1991 ஆம் ஆண்டு ஆனையிரவில் நடந்த முதல் தாக்குதலில் புலிகள் கடும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. 123 பெண் புலிகள் உட்பட 573 புலிகள் இந்தப் போரில்தான் உயிர் பலியானார்கள். இயக்கத் துக்குள்ளே மாத்தையா நடத்திய சதிதான் இதற்குக் காரணம் என்ற தகவல் புலிகளின் உளவுப் பிரிவு கண்டறிந்து பிரபாகரனுக்கு தெரிவித்தது. பொறுப்பு களிலிருந்து மாத்தையா விடுவிக்கப்பட்டவுடன், யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த ரகசியமான மறைவிடம் குண்டுவீச்சுக்கு உள்ளானதோடு பொட்டு அம்மான் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது உதவியாளர் பலியாகி யுள்ளார். மாத்தையாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. 1993 ஜனவரியில் கிட்டுவின் உயிர்த் தியாகத்தை தொடர்ந்து மாத்தையா தலைமையிலான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற புலிகளின் அரசியல் பிரிவு கலைக்கப்படுவதோடு துணைத் தலைவர் என்ற 2 ஆம் நிலையிலிருந்து மாத்தையா நீக்கப்பட்டவுடன் பிரபாகரனுக்கு எதிராக வெளிப்படையாகவே போர்க்கொடி உயர்த்தினார் மாத்தையா. அப்போது கொக்குவில் என்ற பகுதியில் விடுதலைப் புலி ஆலோசகர் பாலசிங்கம் தங்கியிருந்தார். அவரது வீட்டுக்குப் போன மாத்தையா, அங்கே தாம் பிரபாகரனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்தார். இதை அடேல் பாலசிங்கம் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்hர்.
பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த ஒரு விடுதலைப்புலி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் வேலூர் சிறையிலிருந்து உளவுத் துறை உதவியுடன் ரகசியமாக விடுவிக்கப்பட்டார். பிரபாகரனை கொல் வதற்கு வேலூர் சிறையிலே திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அதனடிப்படையிலேதான் விடுதலை செய்யப் பட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் மாத்தையா விடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்களும் இந்திய உளவுத் துறை அதிகாரிகளுடன் அவருக்கிருந்த தொடர்புகளும் விசாரணையில் வெளி வந்தது.
இங்கே நான் எடுத்துக்காட்டிய ‘இந்தியா டுடே’ கட்டுரையில் கடைசியாக கூறப்பட்ட, இரண்டு வாக்கியங்கள் மிகவும் முக்கியமானதாகும். “பிரபாகரன் இனிமேல் தான் மிகக் கடுமையான சோதனைகளை எதிர்க்கொள்ளப் போகிறார் என்ற கருத்தில் உளவு நிறுவனம் மிகவும் திருப்தியடைந் திருந்தது” (Indian intelligent agencies are convinced, he (Prabhakaran) is facing his toughest test yet); அதாவது மாத்தையாவின் துரோக நடவடிக்கைகள் தொடங்கியதற்குப் பிறகு, அவரது கீழறுப்பு நட வடிக்கைகள் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை யில் உளவுத் துறை திளைத்திருந்தது என்று எழுதி யிருப்பதிலிருந்தே உளவுத் துறையுடன் மாத்தை யாவுக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. கடைசியாக, ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு “மாத்தையா சிறந்த சொத்துதான் என்றால், மாத்தையாவின் மர்மமான நடவடிக்கைகள் மேலும் அதிகமாகலாம்! – (But if Mahathya was indeed a ‘RAW’ asset, there might be more to Mahathya mystery” – India Today) – இந்தியா டுடே கட்டுரையின் இந்த இறுதி வாசகம் மாத்தையா ‘ரா’ உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியதை உறுதிப்படுத்துகிறது.
இவை எல்லாவற்றையும்விட மற்றொரு முக்கிய செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் கொலை நடக்கிறது. அப்போது பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாம் நிலை தலைவர் மாத்தையா; 1992 ஆம் ஆண்டு, இந்திய உளவுத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது. அதில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாம் நிலை தலைவராக இருந்த மாத்தையாவின் பெயர் குற்றப் பத்திரிகையில் இடம் பெறவில்லை. இந்திய உளவுத் துறை அவர் பெயரை மட்டும் விட்டு விடுகிறது; ஏன்? 1989 ஆம் ஆண்டில் மாத்தையா பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டார் என்ற செய்தியை உளவுத் துறை வெளியிட்டு, அதை ஊடகங்கள் பரப்பியதையும், 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியா டுடே’ கட்டுரையையும் ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாததையும் இணைத்துப் பார்த்தால் மாத்தையா இந்திய உளவுத் துறையின் சதியில் வீழ்ந்து விட்டார் என்ற முடிவுக்கே வர முடியும். இவ்வளவு பின்னணிகளையும் மறைத்து ராஜீவ் சர்மாவின் இந்த நூல், மாத்தையா தன்னைவிட செல்வாக்குள்ள தலைவராக வளருகிறார் என்ற காரணத்தால், பிரபாகரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்புவது, என்ன நியாயம்? என்ன நேர்மை? பிரபாகரனை தீர்த்துக் கட்டுவதற்கு இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்டவரே மாத்தையா என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீதே குற்றம் சாட்டும் இந்த நூலாசிரியர், கண்மூடித்தனமாக ஈழத்தில் நடந்த கொலைகள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகள் தான் செய்தனர் என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றக் கூண்டில் ஏற்றி விடுகிறார்.
இலங்கை அதிபர் பிரேமதாசா, தமிழ் அய்க்கிய விடுதலை கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், புளோட் இயக்கத் தலைவர் முகுந்தன், இலங்கையின் ராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே என்று இவர்கள் அனைவரையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்று இந்த நூல் திரும்ப திரும்ப குற்றம்சாட்டுகிறது. விடுதலைப் புலிகள்தான் இந்தக் கொலைகளை செய்தார்கள் என்பதற்கு எந்த ஒரு சான்றையும் முன் வைக்கவில்லை. உளவுத் துறை கட்டவிழ்த்துவிட்ட பொய்யுரைகளை அப்படியே திரும்பவும் ‘கிளிப்பிள்ளை’ போல மீண்டும் மீண்டும் கூறுகிறார், நூலாசிரியர். இந்த வீண்பழிகளை நம்மால் ஆதாரங்களுடன் மறுக்க முடியும்.
முதலில் பிரேமதாசா பிரச்சினைக்கு வருவோம்; பிரேமதாசா பதவிக்கு வந்த காலம் – சூழ்நிலை எத்தகையது? இதை நாம் பார்க்க வேண்டும்.
- தொடரும்
விடுதலை இராசேந்திரன்
- ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)
- மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)
- ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)
- பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)
- அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)
- உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)
- பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)
- பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?
- ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு
- இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்
- இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே
- இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்
- போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
- வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை
- அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்
- போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு
- கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்
- அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?
http://www.keetru.com
Comments