Posted by எல்லாளன்
7:01 PM

தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனிக் கிளையில் பணியாற்றிய அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ தேசத்தை அமைப்பதற்காக தமிழீழத் தேசியத் தலைவரின் கீழ் தமிழீழ விடுதலைக்காய் உழைத்த நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களை நாம் இழந்துவிட்டோம்.
சிறுநீரகங்கள் பழுதடைந்த போதும், குருதி மாற்றுச் சுற்றின் மூலம் உயிர்வாழ்ந்துகொண்டிருந்த போதும் தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாது தமிழீழ விடுதலைக்காக இறுதி நேரம் வரையிலும் தன்னை அர்பணித்து பணியாற்றியவர் அன்ரனி சுரேஸ்குமார்.
சமாதானம் எனும் மாயைான இருண்ட காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை மிகவும் இறுக்கமான காலகட்டங்களில் தமிழீழ தேசத்தின் தேவையறிந்து கொடிய நோயுடனும் விடுதலைக்காக பலம் சேர்ந்த செயற்பாட்டாளர்களில் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களும் ஒருவர்.
இவரின் விடுதலைப் பணியை மதிப்பளித்து தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளித்துள்ளனர். நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள் நேற்று புதன்கிழமை யேர்மனி லிவகூசன் நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்றது.

Posted by எல்லாளன்
6:52 PM

1983ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 25வது ஆண்டையும், 1958 படுகொலையின் 50வது ஆண்டு நினைவையும் முன்னிட்டு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நினைவு நிகழ்வுகள், மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் நேற்றிரவு இடம்பெற்ற நினைவு நிகழ்வு, மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் 3,000இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழ் நகரசபை உறுப்பினர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, பிரித்தானிய நேரம் இரவு 8:00 மணிமுதல் 10:00 மணிவரை இடம்பெற்றது.

1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் அரசினால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட 3,000 முதல் 4,000 வரையிலான தமிழர்களை நினைவுகூரும் வகையில், மெழுகுவர்த்தி ஏந்தி இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கறுப்பு யூலை நிகழ்வுகளின் படத்தொகுப்பு
Posted by எல்லாளன்
11:16 AM
1983 ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு எல்லைக்கோடு. எதுவுமே மீண்டும் முன்னரைப்போன்று இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்தி நாட்டின் தலைவிதியை மாற்றியமைத்த அனர்த்தங்கள் மிகுந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை (Black July) என்று வர்ணித்திருந்தார். அந்தக் கறுப்பு ஜூலைக்கு பிறகு சரியாக 25 வருடங்கள் கடந்துவிட்டன.
1983 ஜூலை 23 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தின் திருநெல்வேலியில் தமிழ் இளைஞர்கள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்குள் இருந்த இனவெறிச் சக்திகள் நாடுபூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த இனவாத வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதியான வாய்ப்பாக அமைந்தது.
அக்கால கட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைகளின் கொடூரம், அதனால் விளைந்த உயிரிழப்புகள் மற்றும் சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் வேரூன்றிய வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமுமே உண்மையில் கணிப்பிட முடியாதவையாகும். அதையடுத்து, மூண்ட உள்நாட்டுப் போர் கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இலங்கையின் சகல சமூகங்களுமே அவலத்துக்குள்ளாகியிருக்கின்றன.
அரச இயந்திரத்தின் முற்றுமுழுதான அனுசரணையுடன் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜூலையில் நாட்டின் ஜனாதிபதி அரசாங்கத் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றுவதற்கு நான்கு நாட்கள் சென்றது.
அப்போதுகூட ஜெயவர்தனா வன்முறைகளைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. தமிழ் மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து ஒரு சொல்லைக் கூட அவர் உச்சரிக்கவில்லை.
மாறாக, காடையர் கும்பல்களின் கொடூரச் செயல்களை தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயற்கையான பிரதிபலிப்பு என்று அவர் நியாயப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கையின் 7 பிரதமர்களுக்குச் செயலாளராகவும் இரு ஜனாதிபதிகளுக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய பிரட்மன் வீரக்கோன் நான்கு வருடங்களுக்கு முன்னர் எழுதிய "Rendering unto caesar' என்ற நூலில் கறுப்பு ஜூலையில் ஜெயவர்தனா தன்னை அழைத்துப் பேசிய சந்தர்ப்பமொன்று பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
"காற்று கொடும்புயலாக கடும் வேகத்துடன் வீசும் போது அதைத் தடுத்து நிறுத்த முடியாது. அப்போது நாம் செய்யக்கூடியதெல்லாம் வளைந்து கொடுப்பதேயாகும். அப்புயல் தொடர்ந்து எப்போதுமே வீசப்போவதில்லை. புயல் ஓய்ந்தவுடன் வளைந்த மரங்கள் மீண்டும் வழமை நிலைக்கு வரும்' என்று ஜனாதிபதி தனக்கு கூறியதாகவும் அவர் அவ்வாறு கூறியது தனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்ததாகவும் பிரட்மன் எழுதியிருந்தார்.
தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்துநிறுத்த ஜெயவர்தனா எதையுமே செய்யத் தயாராயிருக்கவில்லை. புயல் ஓயும் வரை காத்திருந்தார். புயல் ஓயவில்லை. பின்னரான 25 வருட காலத்தில் உள்நாட்டுப் போரின் விளைவாக பிரளயமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தனது ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஜெயவர்தனா ஒரு போதுமே பச்சாதாபப்பட்டதில்லை. தேசிய இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிப்பதாகக் கூறிக் கொண்டு இராணுவ ரீதியாக முடிவைக் காண்பதிலேயே அக்கறை செலுத்தினார்.
அவருக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வுகள் குறித்துப் பேசினார்களேதவிர, அவர்களும் இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியே சென்றார்கள்.
இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் அக்கறையோ இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவைக்கட்டுவதற்கு உதவவில்லை. மாறாக, நிலைவரங்கள் முன்னரைவிட சிக்கலானவையாக மாறுவதற்கே அவை உதவியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமாதான முயற்சிகள் என்று கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் எல்லாம் வேறு மார்க்கங்களிலான போராகவே அமைந்திருந்தன.
கறுப்பு ஜூலைக்குப் பிறகு 25 வருடங்கள் கழித்து இன்றும் இலங்கை அரசாங்கம் இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இராணுவத் தீர்வு சாத்தியம் என்று முன்னென்றுமில்லாத அளவுக்கு சிங்கள மக்கள் நம்பவைக்கப்பட்டிருக்கும் துரதிர்ஷ்டவசமான அரசியல் சூழ்நிலையையே இன்று காண்கின்றோம்.
தென்னிலங்கையில் இன்று காணப்படுவதைப் போன்று சமாதான ஆதரவுச் சக்திகளின் குரல் முன்னொருபோதும் அமிழ்த்தப்பட்டிருக்கவில்லை. இன நெருக்கடியை வெறுமனே பயங்கரவாதப் பிரச்சினை என்று கொச்சப்படுத்தும் பேரினவாதச் சக்திகளினால் சமாதான ஆதரவுச் சக்திகளை மிரட்டிப் பணியவைக்கக் கூடிய இடரார்ந்த அரசியல் சூழ்நிலையை இன்று காண்கின்றோம்.
கறுப்பு ஜூலையில் இருந்தோ அல்லது அதற்குப் பின்னரான உள்நாட்டுப் போரில் இருந்தோ எந்தப் பாடத்தையும் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் கற்றுக்கொள்ளவில்லை.
வரலாற்றிலிருந்து அரசியல்வாதிகள் பாடங்களைப் படிப்பதில்லை என்பதே நாம் எல்லோரும் வரலாற்றிலிருந்து படித்துக்கொண்ட பாடமாக இருக்கிறது.
தொடர்ந்தும் அழிவுகளைச் சந்திக்வேண்டிய அவல நிலையில் நாட்டு மக்கள்!
தினக்குரல்
Posted by எல்லாளன்
8:47 AM
சிங்கள தேசத்தின் அடக்குமுறை சக்திகளின் அசைவிற்கு ஆப்பு வைத்த அந்த வெடியோசையை இந்த மண் இலகுவில் மறந்துவிட முடியாது.
துப்பாக்கி முனையில் பிறந்திருந்த ஈழ விடுதலைப் போராட்டக் குழந்தையை அப்போதுதான் சிங்கள தேசம் அதிர்ச்சியோடு பார்த்தது எனலாம்.
1983 யூலை 23 நள்ளிரவை அண்டிய நேரம் நிகழ்ந்த அச்சம்பவம் எமது விடுதலைப் போருக்கு ஒரு மைல்கல்லாய் அமைந்தது.
அடக்குமுறை வழிமுறையை பிரயோகித்து தமிழினத்தின் சுதந்திர உணர்வை மழுங்கடித்துவிட முயன்ற சிங்களத்தின் போக்கிற்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்த எமது விடுதலைப்படை தன் அதிர்ச்சியூட்டும் அசாத்தியமான தாக்குதல்களால் சிங்களப் படைகளுக்கு அதிர்ச்சிகளைக் கொடுக்கத் தொடங்கிய போது.
அந்த வகையில் 1983 யூலை 23 ஆம் திகதி இரவு திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற சிங்களப் படையின் வாகனத் தொடரணி மீதான கண்ணிவெடித் தாக்குதல் எமது வரலாற்றில் பல முக்கிய பதிவுகளை தந்தது எனலாம்.
முதலாவதாக அந்தத் தாக்குதலில் முக்கியத்துவம், அடுத்ததாக அந்தத் தாக்குதல் வெளிக்காட்டிய விடுதலைப் புலிகளின் பலம் பற்றிய செய்தி, அடுத்து சிங்கள இனத்தின் ஆழப்பதிந்திருந்த இனவாத மனநிலையை வெளிப்படுத்திய சம்பவத்தை தூண்டிய விடயமாகவும் அது அமைந்திருந்தது.
அடுத்து அத்தாக்குதல் எமது மூத்த போராளி ஒருவரை விதையாகக் கொடுத்த சம்பவமும் பதிவாகியது. முதலாவதாக அத்தாக்குதலின் முக்கியத்துவம் பற்றி இங்கு பார்ப்போமேயானால் அது ஒரு கரந்தடி தாக்குதல் என்பதற்கப்பால் ஒரு கணிசமான படையினரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முதலாவது பெரிய தாக்குதலாக அமைந்திருந்தது.
இத்தாக்குதல் குறித்து இத்தாக்குதலில் பங்குகொண்ட மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் எழுதிய சில விபரங்களை இவ்விடத்தில் பதிவாக்கிக் கொள்ளல் பொருத்தமாக இருக்கும்.
'1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒரு டெலிக்கா வான் வந்து கொண்டிருந்தது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் எல்.எம்.ஜி.யுடன் கம்பீரமாக உட்காந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான், வானின் பிற்பகுதியில் தம்பி (தமிழீழ தேசியத்தலைவர்) மற்றும் ஏனைய தோழர்கள்....."
கேணல் கிட்டு அவர்களின் மேற்சொன்ன கூற்றுக்கள் அத்தாக்குதலில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் குறித்த முக்கியத்துவத்தை எமக்கு உணர்த்தி நிற்கிறது.
யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி வீதியைச் சந்திக்கும் இடமாகிய தபால்பெட்டி சந்தியிலேயே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் இராணுவ வாகனங்களே அன்றைய தாக்குதல் திட்டத்தின் இலக்கு.
வழமையாக அந்த வாகனங்கள் வரும் நேரத்திற்கு முன்பாகவே அவை வந்துவிட அவசரமாக தாக்குதல் திட்டம் தயாராகி இடம்பெற சடுதியாக நின்ற இராணுவ வாகனங்களிற்கு அதிரடித் தாக்குதலை நடாத்தி அதில் 13 சிங்கள இராணுவத்தைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றிய சம்பவம் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் திருப்புமுனையைத் தந்தது.
இச்சம்பவம் பற்றி விபரித்த கேணல் கிட்டு அவர்கள் '......செல்லக்கிளி அம்மான் றக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க, முன்னால் வரும் ஜீப்பிற்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன.
ஜீப்பை எம்மிடம் வரவிட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டியைத் தாக்கி அதில் தப்புபவர்களை சுடுவதாக எமது திட்டம்..... நாம் ஜீப்பை தாக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்படுகிறது. எமக்கு அதிர்ச்சி ஏன் அப்படி நடந்தது..... சிந்திக்க நேரமில்லை. நானும் என் னோடு நின்றவர்களும் சுடத் தொடங்கினோம்." என விபரித்து வரும் கேணல் கிட்டு அவர்கள் அத்தாக்குதலில் தேசியத் தலைவரின் தாக்குதல் திறன் குறித்து விபரிக்கையில்,
'ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் ஜி 3 வெடிக்கத் தொடங்கியது. ஜி 3 இல் இருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்கு தயாராக எழுந்த இராணுவத்தை வரிசையாக விழுத்தத் தொடங்கியது. சற்றும் எதிர்பாராமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்சநிலைக்குள் சிக்க வைத்து விட்டது.
ஆனால் இந்த எதிர்பாராத திருப்பமே இந்த தாக்குதலின் முழு வெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்மையாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த ஒன்பது இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது" என்கிறார்.
முதலாவது பெரிய தாக்குதல், என்ற ரீதியில் முக்கியமாக பதிந்துவிட அந்தச் சம்பவம் விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை வெளிப்பாட்டை உலகிற்கு பறைசாற்றி நின்றதெனலாம். தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியை குறைத்து மதிப்பிட்ட சிங்களத்திற்கு தூக்கிவாரிப் போட்ட சம்பவமாக அது பதிவானது.
அடுத்ததாக இத்தாக்குதலின் எதிரொலியாய் இனவாதத்தை தூண்டி விட்டு தமிழர்களை எழுந்த வேகத்தில் விழுத்திவிட சிங்களத் தலைமை முயன்ற சம்பவமும் யூலை இனப் படுகொலையாய் பதிந்தது. இச்சம்பவங்கள் பிற்காலத்தில் சிங்களத்தின் உண்மைத் தோற்றத்தை மிக வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன் தமிழரின் விடுதலைப் போராட்டப் பாதையை அவசியமாக்கியது எனலாம்.
அடுத்ததாக அத்தாக்குதலில் எமது மூத்த விடுதலைப் போராளிகளில் ஒருவரான லெப். செல்லக்கிளி அம்மானை இழந்த அச்சம்பவம் முக்கிய பதிவாகியது. ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் மக்களால் பெரிதும் அறியப்பட்ட வீரனாக இருந்த செல்லக்கிளி அம்மான் பல துணிகர அதிரடித் தாக்குதல்களால் பகைவனை திணறடித்திருக்கிறார். எதிரிப்படைகள் தமது புலனாய்வுப் பிரிவை முடுக்கிவிட்டு வலை விரித்துத் தேடும் அளவிற்கு இவர் எதிரிக்கு பெரும் சவாலாக இருந்துள்ளார். இவர் குறித்த நினைவுப் பதிவுகளை இவருடன் கூடநின்ற மூத்த போராளி ஒருவர் நினைவு கொள்கையில்,
'விடுதலைப் போராட்டத்திற்கான அடித்தளங்களை பலமாக இடுவதில் இவர் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். விடுதலைப் போருக்கான முதலாவது துப்பாக்கியை பெறுவதற்கு தனது மாட்டினை விற்று பணத்தை முதலீடு செய்யும் அளவிற்கு அவரின் பங்களிப்பு இருந்தது. மற்றும் விடுதலைப் போராளிக்கு இருக்க வேண்டிய அத்தனை சாமர்த்தியங்களும் கைவரப் பெற்ற மதிநுட்பமான போராளியாகவே நாம் அவரைக் கண்டோம்.
பஸ்தியாம்பிள்ளை எனும் சிறிலங்காக் காவல்துறை அதிகாரி ஒருவர் செல்லக்கிளி அம்மானை கைது செய்யத் தனது சகாக்களுடன் சென்ற போது அவர்களை தனது சாதுரியத்தால் மடக்கி பஸ்தியாம்பிள்ளையின் ஆயுதத்தாலேயே அவரையும் அவரது சகாக்கள் மூவரையும் சுட்டுக்கொன்று விடுதலைப் போராட்டத்தின் தடைக்கல் ஒன்றை தகர்த்த பெருமை அவரைச் சாரும்" என்றார். இதுதவிர அவரது பல துணிகர செயல்களையும் அப்போராளி நினைவுபடுத்தினார்.
- க.ப.துசியந்தன் -
ஈழநாதம் (23.07.08)