தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 2 ம் ஆண்டு நினைவில்
Posted by எல்லாளன் 8:29 PMஈழத் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் - .பழ.நெடுமாறன்
Posted by எல்லாளன் 5:19 PM
இந்திய அரசாங்கம் வழங்கிய தைரியம் காரணமாகவே தன்னையும், வைகோவையும் அரசியல் கோமாளிகள் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றசுமத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் புலவர் புலமைப்பித்தன் எழுதிய, 'ஒரு பூகோளமே பலி பீடமாய்' என்ற நூலை நேற்று
(11) வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே பழ.நெடுமாறன் இதனை கூறியுள்ளார்.
தன்னையும், வைகோவையும் அரசியல் கோமாளிகள் என சுண்டைக்காய் நாட்டின் (இலங்கை) தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவருக்கு இந்த தைரியத்தை யார் கொடுத்தது? எங்கிருந்து அந்தப் பேச்சு வருகிறது. இந்திய அரசு கொடுத்த தைரியமே இதற்கு காரணம். எம்.ஜி.ஆர். தற்போது உயிருடன் இருந்திருந்தால் தனித் தமிழீழம் மலர்ந்திருக்கும்.
அவருக்கு ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற அக்கறை இருந்தது எனவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இங்கு உரையாற்றிய தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் எழுத்தாளர் சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி வருகின்றனர். எனினும் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என இந்திய மத்திய அரசே கூறியுள்ளதுடன் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை சென்னையில் நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாகிஸ்தானுடன் இந்தியா போர் என்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆனால் 406 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை மீது போர் தொடுக்காதது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே இங்கு உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசாங்கத்திடம் கூறி புரிய வைக்க வேண்டியதே தற்போது முன் நிற்கும் சவால் என குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தொடர்பான குற்ற உணர்ச்சி (ராஜீவ் கொலை) அனைவரிடமும் காணப்படுகிறது. அது உடைக்கப்பட வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளர்.
சரியான நேரத்தில் திருப்பியடிப்பார் தம்பி-வைகோ விகடனுக்கு சிறப்பு பேட்டி
Posted by எல்லாளன் 10:01 AM
தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகளாகச் சித்திரித்து, இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேசியது, ஒட்டுமொத்தத் தமிழகத் தையும் கொதிக்க வைத்திருக்கிறது!
பல அரசியல் கட்சிகளும் பொன்சேகாவின் பேச்சைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்திருக்க, நாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ விடம் இதுகுறித்த கேள்விகளை வைத்தோம். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார் வைகோ...
பொன்சேகா, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதில் இந்தியாவுக்கே விருப்பம் இல்லை எனச் சொல்லி இருக்கிறாரே! அப்படியென்றால், மத்திய அரசு இரட்டை நாடகம் போடுகிறதா?
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே நம் இந்திய அரசுதான் என நான் அடித்துச் சொன்னபோது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னது உண்மைதான் என இன்றைக்கு உறுதியாகி இருக்கிறது. அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் இலங்கையில் போர்நிறுத்தம் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் போர்நிறுத்தம் செய்ய முடியாது என நம்முடைய மண்ணுக்கே வந்து நம் கன்னத்தில் அறைவதைப் போல் சொல்லிவிட்டுப் போனார் இலங்கை அதிபர் ராஜபக்ஷ.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய பிரதமர் பேசவில்லை என்று ராஜபக்ஷ சொன்னபோதே மத்திய அரசின் குள்ளநரித்தனக் குட்டு வெளிப்பட்டு விட்டது! மத்திய அரசின் கபட நாடகம் பொன்சேகாவின் பேச்சால் மேலும் அம்பலப்பட்டுவிட்டது!
தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகள் என்றும், அவர்களின் பேச்சை மத்திய அரசு ஒருபோதும் கேட்காது என்றும் பொன்சேகாகூறியிருக்கிறாரே?
ஒட்டுமொத்தத் தமிழகத் தலைவர்களையும் அசிங்கப்படுத்தும் விதமாக பொன்சேகா பேசிய பேச்சை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது! தமிழர்களைத் தரக்குறைவாக பொன்சேகா பேசுவது புதிதில்லை! சிங்களவர்களிடம் அடிமைப்படுவதற்கென்றே பிறந்த பிறவிகளாக அவர் தமிழர்களை வர்ணித்த கதையெல்லாம் நடந்திருக்கிறது! அதிமுக்கியமான விவாதம் ஒன்றில், நான் சொல்வதைத்தான் இந்திய முப்படைத் தளபதிகளும் கேட்பார்கள் என்று வாய்க் கொழுப்பில் மிதமிஞ்சிப் பேசியவர்தான் இந்த பொன்சேகா.
இந்திய அரசு தன் பின்னால் இருக்கிறது என்கிற தைரியம்தான் பொன்சேகாவை இப்படி பேச வைத்திருக்கிறது! பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது, எந்த நாட்டு இராணுவத் தளபதிகளும் இந்தியத் தலைவர்களை இப்படி எல்லாம் வசைபாடி ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. ஆனால், தறுக்க குணத்தில் ஊறித் திளைக்கும் மிருகத்துக்கு ஒப்பான பொன்சேகா, தமிழினத்தை ஒழித்துக் கட்டுகிற வெறியோடு நிலைமறந்து, தமிழகத் தலைவர்களை அவமானப்படுத்தி இருக்கிறார்! அவர் கோமாளிகளாகச் சுட்டிக் காட்டியிருக்கும் தமிழகத் தலைவர்களில் தானும் அடக்கம் என்பது தமிழக முதல்வர் கலைஞருக்கும் புரிய வேண்டும். பொன்சேகாவும் ராஜபக்ஷவும் மன்னிப்பு கேட்காவிட்டால், இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!
புலிகளுக்குத் தனிநாடு கொடுத்தால் இந்தியாவுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என பொன்சேகா சொல்லி இருக்கிறாரே?
மத்திய அரசை பின்னால் இருந்து இயக்கும் நச்சு அதிகாரிகள், சிங்கள அரசின் மூலம் பரப்பி விடுகிற கருத்து இது. பங்களாதேஷ் தனிநாடாக உருவெடுத்ததைப் பார்த்து, மேற்கு வங்காளமும் பிரிந்து விட்டதா என்ன? உரிமைப் பிரச்னைகள் தவிர்க்க முடியாதபோதுதான் தனிநாடு போராட்டம் மேலோங்குகிறது. தமிழினத்துக்கு எதிரான கற்பனைகளைக் கிளப்பி விடுபவர்களே இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்தான் என்பதை இந்த இடத்தில் அடித்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகக் கடலோரங்களில் புலிகளின் நடமாட்டம் தெரிகிறதா என்பதிலேயே குறியாக இருந்ததால்தான், இந்தியக் கப்பல் படை குஜராத் மாநிலக் கடலோரத்தைக் கோட்டைவிட்டது. அதன் விளைவுதான் மும்பையில் பயங்கரவாதிகள் நுழைந்து வெறியாட்டம் போட்டார்கள்.
இந்த மெத்தனத்துக்கு மொத்தக் காரணமே நம் பாதுகாப்புத்துறை செயலாளரான எம்.கே.நாராயணன் தான். ராஜபக்ஷவுக்கு உதவி செய்வதற்கே அவருக்கு நேரம் போதவில்லை. இதேநேரம், இன்னொரு தகவலும் உறுதிப்பட என் செவிகளுக்கு வந்திருக்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் 'ஜிகாத்' என்ற பெயரில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் கூடாரம் அமைக்கத் தொடங்கி விட்டன. சிங்களவர்களின் உதவியோடு தென்னிந்தியப் பகுதிகளில் சுலபமாக ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் இப்போதே திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிற பொன்சேகா, இந்தியப் பாதுகாப்பு குறித்துப் பேசுவது வெட்கக்கேடு!
வைகோ போன்ற தலைவர்கள் வருமானத்துக் காகத்தான் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று பொன்சேகா சொல்லியிருக்கிறார்..?
ஈழ விஷயத்தில் உங்களை எதிர்க்கும் வேறு சிலரும் பண விவகாரத்தை மையப்படுத்தி விமர்சனங் கள் கிளப்புவது ஏன்?
ஈழ மக்களின் விடியலை மட்டுமே இலக்காக எண்ணி உயிரையும் துச்சமென நினைத்துப் போராடிக் கொண்டிருக்கும் எங்களை நோக்கி எத்தகைய அவதூறு அம்புகளை வேண்டுமானாலும் வீசட்டும்! இனமானத்தைக் கொச்சைப்படுத்துவோர் பற்றி சட்டை செய்யும் நிலையில் நான் இல்லை. மண்ணோடு மண்ணாக மடிந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழினத்துக்காக இந்த வைகோ இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல.
கிளிநொச்சி யுத்த களத்தில் இருந்தபடி லண்டனில் என் உணர்ச்சிப் பேருரையைக் கேட்டறிந்த தம்பிமார்கள், உங்களின் ஊக்குவிப்பு எங்களை இன்னும் முன்னேறச் செய்யும் என உளப்பூர்வமாக போனில் பேசினார்கள். இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகளுக்கு முன்னால் பொன்சேகா போன்றவர்களின் கூச்சல்கள் என்னை என்ன செய்துவிட முடியும்?
இலங்கையில் குண்டடிபட்டுத் தப்பி வந்த நாற்பது பையன்களுக்கு சொந்தத் தாயாக நின்று எல்லா உதவிகளையும் செய்தவர் என் தாய். அவர் அன்று ஊட்டிய அன்னத்துக்கு எத்தனை கோடிகளை அள்ளிக் கொடுத்து ஈடுசெய்ய முடியும்?
விடுதலைக்காகவும் மீட்சிக்காகவும் போராடும் புலிகளிடம் பணம் பெறுவது, ஈனத் தொழில் செய்து பிழைப்பதற்குச் சமம்.
பொன்சேகாவும், தமிழர்களை அழித்தொழிக்க நினைக்கும் சிங்களக் கூட்டமும் செத்து மிதக்கிற நாள் விரைவிலேயே வரும்!
அந்த ஈழ மண்ணிலேயே பொன்சேகா போன்ற கொக்கரிப்பாளர்களின் கொட்டம் நிச்சயம் அடக்கப்படும்! என்றார் ஆவேசமாக வைகோ.
சிங்கள அரசைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
Posted by எல்லாளன் 8:16 AMகடைசி முன்னணிப் படையினரை வைத்து போரைத் தொடரும் அவலத்தில் இராணுவம் - இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி
Posted by எல்லாளன் 8:09 AM
எதிரியின் முன்னணிப்படைகள் அழிக்கப்பட்டநிலையிலே முன்னணிப் படையினர் கடைசிப் படைகளைக்கொண்டு போரை நடாத்துகின்ற கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான் என இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிறிலங்காப் படைகளுக்கு எதிராக உக்கிரமான தாக்குதலை நடாத்தி பேரிழப்பைக்கொடுத்த போராளிகளுக்கு கண்டாவள
விசுவமடுக்கோட்ட மக்களால் உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி களமுனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உண்மையில் நாம் விடுதலைப் போராட்டத்தில் நெருக்கடியானதொரு சூழ்நிலையில் நிற்கின்றோம். இப்படியிருந்தும் நீங்கள் கிளிநொச்சி கட்டளைப்பணியகப் போராளிகளுக்கு உலர்உணவுகளைக் கொண்டுவுந்து தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சிதரக்கூடிய விடயம். நாங்கள் உங்களைச் சந்தித்துக் கதைக்கவேண்டுமென்ற காரணம் நீங்கள் கஸ்ரத்தின் மத்தியில் வந்திருப்பது மட்டுமல்லாது போர்ரீதியாக நிலைமை, இராணுவரீதியான யாதார்த்தநிலை என்பவை தொடர்பாக உங்களுக்குச் சொல்லவேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது.
அந்த விடயங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். கட்டம் கட்டமானது பாதுகாப்பு நிலைச் சமர்களுக்குள் பிரதேசங்கள் விடுபட்டிருக்கின்றன. இந்தச் சமர்களால் தற்பொழுது நாங்கள் கடைசிப்போர் மறிப்புச்சருக்குள் நிற்கின்றறோம். அதேநேரம் இராணுவத்தின் நிலைமையும் ஒரு இறுதிக்கட்டமானநிலைமைக்குள் நிற்கின்றது.
இறுதிக்கட்டமான நிலைமை என்பது நேற்று நடந்த சண்டையாக இருக்கலாம். அல்லது குறிக்கப்பட்ட நாட்களுக்கு முன்நடந்த சண்டைகளாக இருக்கலாம். அந்தச் சண்டைகள் எதிர்வுகூறிநிற்கின்றன.
விடுதலைப்போராட்டம் என்பது பின்னடைவுகளைச் சந்திப்பது அல்லது முன்னோக்கிச்செல்வது என்பது வரலாறு, அது உலக நாடுகளில் நடந்த அனைத்து விடுதலைப்Nபுhராட்டங்களில் வரலாறும் அப்படித்தான் இருக்கின்றது. யதார்த்தரீதியாக நாம் ஒரு கட்டநிலையில் இருக்கும்போது எதிரி இன்னொரு கட்டத்தில் இருப்பான்.
அதேநேரம் வெற்றி, தோல்வி என்பது மாறுபட்ட நிலையில் இருக்கும் ஆனால் இன்றைக்கு முழுமையாக எதிரியை வெல்லக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.
ஆனால் எதிரியைப் பொறுத்தவரையில் முன்னணிப்படைகள் அழிக்கப்பட்டநிலையில் முன்னணிப்படைகளின் கடைசிப்படைகளை வைத்து ஒருபோரைச்செய்கின்ற தீவிரமான கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான். அந்த ஒரு நெருக்கடியான கட்டத்தில் எதிரியின் நிலை இருக்கும்போது இனித்தான் விழிப்பாக முழுவீச்சாக நாங்கள் எல்லோரும் போராட்டத்திற்குள் முழுமையாக ஈடுபடவேண்டிய சூழலில் இருக்கின்றோம். இதில் நாங்கள் இரண்டு செய்திகளைச் சொல்லவேண்டும்.
ஒன்றுஎமது மக்களுக்கு எங்களுடைய விடுதலைப் Nபுhராட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு தமிழன் உள்ளவரை சண்டையென்பது நடக்கும் அதேநேரம் சிறிலங்கா இராணுவத்திற்கு ஒருசெய்தியைச் சொல்லவேண்டும் என்னவென்றால் மகிந்த அரசினதோ, அல்லது சரத்பொன்சேகாவினதோ இராணுவ ஆட்சிக்காலம் குறிக்கப்பட்ட காலத்தில் இல்லாமல் போகலாம்.
ஆனால் 35 வருடமாக சிறிலங்கா இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நேரடியான சண்டைகள் மூலம் தொடர்புகள் இருக்கின்றன. அது எப்பவும் நிற்கப்போவதில்லை. அது தமிழன் இருக்குவரை சிறிலங்கா இராணுவத்திற்கும் எங்களுக்கும் யுத்தம் என்பது இருக்கும்.
இந்தக் காலத்தில் இராணுவம் எவ்வளவு பிரதேசங்களை வல்வளைப்புக்குள் ஏற்படுத்தினாலும்சரி இப்ப ஆடிக்கொண்டிருக்கின்ற அரச இயந்திரம் அல்லது இராணுவத்தில் ஏதேனும் மாற்றங்கள் வந்தாலும் சரி சிறிலங்கா இராணுவத்தின் கீழ் மட்டதிலுள்ள போர் என்பது நீண்டகாலமாக இருக்கின்றது. இது விடுதலைப்போராட்டத்தில் சர்வசாதாரணமான நிகழ்வு.
அந்த நிகழ்வு மாறுபட்டு நடக்கும் இன்று எங்களுடைய காலமாக இருக்கும் அல்லது இராணுவத்தின் காலமாக இருக்கும். அதாவது ஏற்றத்தாழ்வாக மாறி, மாறி நடக்கின்ற ஒரு நிலைமைதான் இந்தப்போரியல் என்பது. இந்தப்போரையும் அப்படித்தான் பார்கிறோம். இன்றைக்கு எங்கள் குறிக்கப்பட்ட இடங்கள் விடுபட்டிருக்கின்றன. அது யதார்த்தமான உண்மை.
ஆனால் இன்றைக்கு முற்றுமுழுதாக நாங்கள் முன்னணிப்படைகளை அழித்துவருகின்றோம்.நேற்று நடந்த சண்டையில் சிறிலங்காப் படையினரின் 57வது டிவிசனில் முற்றுமுழுதாக இரண்டு பிரிகேட் பங்குபற்றியது. இவர்கள் இரண்டு பிரதான உடைப்புக்களை ஏற்படுத்தி கிளிநொச்சியின் குறிக்கப்பட்ட பிரதேசங்களைப் பிடிப்பதற்கு பெரியளவில் நகர்வைச் செய்தனர்.
ஆனால் இன்றைக்கு அப்பிரதேசங்களைப் பிடித்துவைத்திருக்கமுடியாத அளவிற்கு முறியடிப்புச் சமரை நாம் செய்துள்ளோம் இதில் படையினரின் சடலங்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் சண்டை மாற்றம் அடைந்துள்ளது. முற்றுமுழுதாக கிளிநொச்சியைப் பாதுகாப்பதற்கு அதியுச்சமான சண்டைநடந்துகொண்டிருக்கின்றது.
அவற்றோடு உங்களில் இருந்து வருகின்ற எல்லைப்படை மக்கள் படையினர் போராளிகளோடு முழுமையாக ஈடுபட்டு வருகின்றார்கள் அதாவது போராளிகள் நேரடியாக நின்று சண்டைபிடிக்கின்ற இராணுவத்தின் துப்பாக்கிரவைகள், எறிகணைகள் மத்தியில் நின்று நேரடியாக மக்கள் படையினர் வேலைகளைச் செய்கின்றனர் நாங்கள் நின்று சண்டைகள்பிடிக்கின்ற காப்பரண்கள் மக்கள் படையால செய்து தரப்பட்டவைதான் அதனால்தான் நல்ல சண்டையைச் செய்யக்கூடியமாதிரி இருக்கின்றது.
இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் இதை நீங்கள் தோல்வியான கட்டம் என்று நினைக்கக்கூடாது. கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் நேற்று எடுத்த முன்னகர்வும் குஞ்சுப்பரந்தன் ஊடாக எடுத்தநகர்வும்தான் பெரிய முன்னகரிவுகள். இதனை முற்றுமுழுதாக முறியடித்துவிட்டோம்.
இன்றைக்கு சண்டைபிடிக்கின்ற படையினர் தாங்கள் கேட்கின்ற எறிகணைகளை அடித்துக்கொடுக்கக் கூடிய அளவில் படையினரின் பீரங்கிப்படைகள் இல்லை. அவர்களும் கடைசிக் கட்டத்தில்தான் இருக்கின்றார்கள். மக்களைப்பொறுத்தவரையில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். இனி எப்படி மாற்றங்களை உருவாக்கலாம் என்பதைப்புரிந்திருக்கவேண்டும்.
இந்த விடுதலைப்போராட்டம் என்ன இலட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது கட்டாயம் நிறைவேறும். அது நிறைவேறும் என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கின்றோம் அதில் நீங்களும் பக்கபலமாக உறுதியாக இருந்து களச்செயற்பாட்டில் ஈடுபட்டு எங்களுடைய வெற்றிக்காக இன்னும் உழைக்கவேண்டும். இவ்வாறு சிறப்புத் தளபதி வேலவன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
படை உயிரிழப்பு 120ஆக உயர்வு, ஒரு பற்றாலியன் களமுனையில் இருந்து அற்றப்பட்டனர்
Posted by எல்லாளன் 8:04 AM
கிளிநொச்சி புதுமுறிப்பு, மற்றும் அறிவியல்நகர் நோக்கி சிறீலங்கா படையினர் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட முன்னகர்வு முறியடிப்பில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கை 120ஆக உயர்வடைந்துள்ளதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அறிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 120 படையினர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 280 படையினர் படுகாயம், மற்றும் காயமடைந்துள்ளனர்.
இதன்மூலம் சிறீலங்கா படைகளின் ஒரு பற்றாலியன் வரையிலான படையினர் ஒரு நாளில் களமுனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் வன்னிச் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
கொல்லப்பட்ட படையினரில் பலர் அண்மையில் படையில் இணைக்கப்பட்ட இள அகவையுடைய புதியவர்கள் என களமுனையில் உள்ள போராளிகள் தெரிவித்துள்ளனர்.
புதுமுறிப்பு நோக்கி முன்னேற முற்பட்ட படையினரும், மலையாளபுரத்தில் இருந்து அறிவியல்நகர் நோக்கி முன்னேற முற்பட்ட படையினரும் விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலுக்கு முகம்கொடுக்க முடியாது பின்வாங்கிச் சென்றனர்.
25இற்கும் மேற்பட்ட படையினது உடலங்கள் இரு தரப்பினாலும் மீட்க முயடியாத நிலையில், முன்னரங்க நிலைகளுக்கு இடையில் சிதறிக் கிடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




நேற்றைய மோதலில் தமது தரப்பில் 20 படையினர் மட்டுமே கொல்லப்பட்டனர் எனவும், விடுதலைப் புலிகள் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.
களமுனையில் அதிக படையினர் கொல்லப்படும்போது மோதல் பற்றிய தகவலை வெளியிடாது தவிர்க்கும் சிறீலங்கா அரசு, அதற்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட உடலங்களின் எண்ணிக்கை அறிந்த பின்னர் தமது தரப்பு இழப்பினை வெளியிட்டு வருகின்றது.
நேற்றைய மோதலில் விடு்தலைப் புலிகளால் படையினரது 12 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தமது தரப்பில் 20 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக படைத் தரப்பு அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
புலிகளையும் தமிழர்களையும் பிரிக்கும் கற்பனை பலருக்கு உண்டு; ஆனால் புலிகளே தமிழர்களின் தலைமைச் சக்தி: பா.நடேசன்
Posted by எல்லாளன் 7:59 AM
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடைய சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுவிசிலிருந்து மாதம் இருமுறை வெளிவரும் 'நிலவரம்' (12.12.08) வார இதழுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதெனச் சிங்களம் சூளுரைத்துள்ள நிலையில், என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது?
சிங்களப் படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பலமுனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. சிங்களப் படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச்சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். இதுவரை இரண்டு காலக்கெடுக்களைச் சிங்களத் தளபதிகள் கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு என்று விதித்தும், அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. கிளிநொச்சிக்கான சண்டைகளில் சிங்களப் படைகள் கடுமையான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. புதிய வியூகங்கள்- தந்திரோபாயங்களுடன் கிளிநொச்சியைப் பாதுகாக்கும் எதிர்ச்சமரில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
வன்னியில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏதிலிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரம் மிக மோசமாக ஆகியிருக்கின்றது. மக்களை வவுனியாவிற்கு வருமாறு அரசு கோரி வருவதுடன், அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும் பிரசாரம் செய்து வருகின்றது. ஏதிலிகளாக உள்ள மக்கள் வவுனியாவிற்கு வருகை தராமைக்குக் காரணம் என்ன?
சிங்களப் படைகள் நிலங்களை ஆக்கிரமிக்கும் போது அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புத் தேடுவதுதான் வழமை. இதுதான் இப்போதும் நடைபெறுகின்றது. தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு காட்டும் அக்கறை 'ஆடு நனையுதென்று ஓநாய் அழுத' கதைதான். இன அழிப்பிற்கும், சமூகச் சீரழிப்பிற்கும் எமது மக்களை உட்படுத்திப் போராட்டத்தை அழிக்கும் நாசகார நோக்குடனேயே சிங்கள அரசு தனது பகுதிக்குள் வருமாறு மக்களை அழைக்கின்றது. எத்தனை தடவைகள் இடம்பெயர்ந்தாலும், புலிகளின் கட்டுப்பாட்டு நிலத்தில் வாழவே மக்கள் விரும்புகின்றனர். சிங்கள அரசின் அழைப்பை மக்கள் தாமாகவே நிராகரிக்கின்றனர்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. அதேவேளை, விடுதலைப் புலிகளைப் புறந்தள்ளி அரசியல் முனைப்புக்களில் ஈடுபட மேற்குலக நாடுகள் ஒரு சிலவற்றின் ஆசீர்வாதத்துடன் ஒருசில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
புலிகளையும் - தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடையச் சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம்தான். இதனை தமிழ் மக்களும் பல தடவைகள் தேர்தல் நடைமுறைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான சில தனிநபர்கள் தம்மைத் தலைவர்களாகக் கற்பனை செய்துகொண்டு திரிவது கேலிக்கூத்தானது. இதுபற்றி புலிகள் இயக்கம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
சிறிலங்கா அரசு தொடர்ந்தும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றது. அண்மையிலும் கூட இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களின் மீது வானூர்தி குண்டுவீச்சுக்களை நடாத்தியிருக்கின்றது. இத்தனை அநியாயங்களைச் சிங்களம் மேற்கொண்டு வரும் நிலையிலும் அனைத்துலகம் இன்னமும் சிங்களத்தின் பக்கமே நிற்பதற்குக் காரணம் என்ன?
சிங்கள அரசு செய்து வரும் தமிழின அழிப்பிற்குச் சில நாடுகள் உதவி வருகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. நீதி, நியாயம், தர்மம் என்பவற்றிற்கு முரணாக ஒரு இன அழிப்பு அரசுக்கு இந்த நாடுகள் முண்டு கொடுப்பது தமிழ் மக்களுக்கு வேதனையையும், கோபத்தையும் கொடுக்கின்றது. எமது விடுதலைப் போராட்டம் பற்றியும், புலிகள் இயக்கம் பற்றியும் சிங்கள அரசு கூறும் பொய்ப் பிரச்சாரத்தை ஒருதலைபட்சமாக நம்புவதன் விளைவே மேற்குறித்த செயற்பாடுகளாகும். இதுபற்றி மீண்டும் மீண்டும் உலக நாடுகளுக்கென பல விளக்கங்களை, வேண்டுகோள்களை விடுத்து வருகின்றோம். பல நாடுகள் எமது குரலுக்குச் செவிசாய்த்துச் சிங்கள அரசுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியுள்ளன. ஆயினும் சில நாடுகள் சிங்கள அரசின் வலையில் சிக்குண்டு தமிழின அழிப்பிற்கு உதவுகின்றன.
"சிங்களத்தின் இராணுவ வெற்றிகள் பற்றிய கனவுகள் நிச்சயம் கலையும்" எனத் தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் தெரிவித்திருந்தார். அதன் அர்த்தமென்ன?
இராணுவ வெற்றி பற்றிய சிங்களத்தின் கனவு அதன் கூடப்பிறந்த குணமாகவே உள்ளது. ஒரு இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டு கனவு காண்பதும் பின்னர் அந்தக் கனவு கலைந்து இராணுவத் தோல்விக்குள் சிக்குவதும் கடந்தகால உண்மைகளாகும். இப்போதும் அத்தகையதொரு இராணுவ வெற்றி பற்றிய கனவில் சிங்கள தேசம் ஆழ்ந்துள்ளது. தக்க நேரத்தில் சிங்களத்தின் இராணுவத் திமிருக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.
அண்மைக்காலமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் எழுச்சி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. இந்த எழுச்சி தமிழ் மக்களின் விடுதலையை எவ்வகையில் விரைவுபடுத்துமென நினைக்கின்றீர்கள்?
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தமிழ் மக்களின் ஆதரவு ஒரு முக்கியமான விடயமாகும். நாம் தனித்து விடப்படவில்லை உலகத் தமிழர்கள் எம்முடன் உள்ளனர் என்ற உணர்வே எமக்குச் செயல் வேகத்தையும், உற்சாகத்தையும் தரவல்லன. தமிழ் நாட்டின் இனவெழுச்சி சிங்களத்திற்கு அச்சமூட்டக்கூடிய வகையிலேயே உள்ளது. அத்துடன், அரசியல் ரீதியாக உலக அபிப்பிராயத்தை எம்பக்கம் திருப்பத் தமிழ்நாட்டின் இனவெழுச்சி உதவும். தமிழ்நாடு சட்டசபையில் எமது மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட அனைத்துக் கட்சித் தீர்மானம் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரமாகவும் உள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவது தொடர்பில் விடுதலைப் புலிகள் தற்போது அதிக அக்கறை கொண்டுள்ளதைப் போன்று தென்படுகின்றது. அதேவேளை, இது சிலரால் பலவீனத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றதே?
ஈழத் தமிழருக்கும் இந்தியாவிற்குமான உறவு ஒரு வரலாற்று உறவாகும். இடையில் சிங்களத்தின் சதியால் அந்த உறவு அறுந்திருந்தது. மீண்டும் அந்த உறவைக் கட்டியெழுப்பும் புறச்சூழல் இருதரப்பிலும் ஏற்பட்டு வருகின்றது. இந்த இருதரப்பு உறவைச் சிங்கள இனவாதிகள் விரும்பவில்லை. எனவே, இந்த முயற்சியை கொச்சைப்படுத்தி திருப்தி காண முயல்கின்றனர்.
அண்மையில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலால் இந்தியாவின் அரசியல் சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் இதன் பாதிப்பு மேலும் உணரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப் புதிய சூழ்நிலை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?
மும்பாய் மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது. குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்தியப் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராகச் சில நாடுகள் திரைமறைவில் செயற்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அந்தப் பகைமை நாடுகளுடன் சிங்கள அரசு உறவு பேணி வருகின்றது என்பது வெளிப்படை. இது இந்திய இராஜதந்திரிகளுக்கும் நன்கு தெரியும்.
ஒரு இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழம் போராடுகின்றது. இதுவொரு விடுதலைப் போராட்டம் காலங்காலமாக அடக்கப்பட்ட இனங்கள் விடுதலை கோரிப் போராடுவது வரலாற்று வழமை. தமிழீழ மண்ணில் தமிழரின் நலன்களை முன்வைத்து எமது போராட்டம் நடக்கின்றது.
அண்மையில் வன்னியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக எத்தகைய பாதிப்புக்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தற்போது எவ்வாறு உள்ளது?
இம்முறை வெள்ள அனர்த்தம் ஏறக்குறைய ஆழிப்பேரலையை நினைவூட்டும் அளவிற்கு அழிவுகளை, சேதங்களைக் கொடுத்துள்ளது. அதுவும் இடம்பெயர்ந்த மக்கள் அதிகளவில் வாழும் வன்னியில் விளைவுகள் கடுமையாகவே இருக்கின்றன. வன்னியில் வாழும் மக்களில் ஏறக்குறைய எண்பது வீதம் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இடர் நிவாரண உதவிகளைச் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. இப்போது வெள்ளம் வடிந்து விட்டது, ஆயினும் அம்மக்களிற்கான நிவாரண உதவிகள் சரியாகக் கிடைக்கவில்லை. போருக்கும் முகங்கொடுத்தபடி இந்த இடர் நிவாரணப் பணிகளில் எமது இயக்கத்தின் கட்டமைப்புகளே பெரிதும் ஈடுபட்டுள்ளன.
வன்னிக்குத் தொடர்ந்து உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பதாக அரசு கூறி வருகின்றது. ஆனால், எமக்குக் கிடைக்கும் செய்திகளோ அங்கு மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. உண்மையில் அங்கு போதுமான உணவு இருக்கிறதா? தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டனவா?
வன்னி மீது சிங்கள அரசு ஒரு பொருண்மியத் தடையை இறுக்கமாகக் கடைப்பிடிக்கின்றது. உணவு, மருந்து மற்றும் விவசாய, மீன்பிடி உள்ளீடுகளை அனுமதிக்கவில்லை. இதனால் உணவிற்கும் தட்டுப்பாடு, மருந்திற்கும் தட்டுப்பாடு, எரிபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. உலகத் தொண்டு நிறுவனங்களையும் சிங்கள அரசு வெளியேற்றியதால் நெருக்கடி அதிகரித்துள்ளது. சிங்கள அரசும் உதவிப் பொருட்களை அனுப்பவில்லை. உலகத் தொண்டு நிறுவனங்களையும் அனுப்ப அனுமதிக்கவில்லை. ஒப்புக்காகச் சிறிதளவு பொருட்களையே அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டின் உதவிப் பொருட்களில் ஒரு பகுதி எமது மக்களை வந்தடைந்துள்ளது. இப்போது வன்னியில் மோசமான உணவுத் தட்டுப்பாடு நிலவுகின்றது. இது மேலும் அதிகரித்துச் செல்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.
தாயகத்தில் நிலவும் சூழ்நிலைகள் காரணமாக புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவிதச் சோர்வு ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அந்த மக்களுக்குக் கூறவிரும்பும் செய்தி என்ன?
சோர்வு என்பது அவநம்பிக்கையால் வருவது. அவநம்பிக்கை என்பது நிலைமைகளைப் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளாமையால் வருவது. ஒரு இராணுவ நெருக்கடி தாயகத்தில் நிலவுகின்றது என்பது உண்மைதான். ஆனால், மீளமுடியாத நெருக்கடி என்று அதைக் கருதுவது தவறு. இதைவிடப் பாரிய நெருக்கடிகளை முன்னர் நாம் சந்தித்து மீண்டிருக்கின்றோம். தற்போதைய நெருக்கடியையும் தகர்த்தெறிந்து வெற்றி கொள்வோம். புலம்பெயர் மக்கள் தமது வழமையான போராட்டப் பணிகளில் உற்சாகத்துடனும், வேகத்துடனும் செயற்பட வேண்டும். உங்களது நிதிப் பங்களிப்பு எங்கள் போராட்டத்தின் முதுகெலும்பாகவே உள்ளது. உலக அரங்கில் நீங்கள் செய்யும் பரப்புரைப் பணியை மேலும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்யுங்கள் வெற்றி தரும் மகிழ்ச்சியை விரைவில் நாங்கள் அனுபவிப்போம்.
வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்குப் புலம்பெயர் தமிழ் மக்கள் எத்தகைய உதவிகளை நல்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?
இடம்பெயர்ந்த மக்களுக்கான இருப்பிடங்களை அமைப்பதும், உணவு, மருந்து ஏற்பாடுகளைச் செய்வதும், கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் எமது தலையாய பணிகளாக உள்ளன. இப்பணிகளை ஆற்றப் பெருந்தொகை நிதி தேவை. இதை எமது புலம்பெயர் உறவுகளே வழங்கி உதவ வேண்டும். ஏற்கெனவே நீங்கள் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றீர்கள் தொடர்ந்தும் இந்த உதவிகளை உங்களது தாயகத்து உறவுகள் எதிர்பார்த்திருக்கின்றனர் என்றார் அவர்.















