இந்திய அரசாங்கம் வழங்கிய தைரியம் காரணமாகவே தன்னையும், வைகோவையும் அரசியல் கோமாளிகள் என இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் குற்றசுமத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் புலவர் புலமைப்பித்தன் எழுதிய, 'ஒரு பூகோளமே பலி பீடமாய்' என்ற நூலை நேற்று
(11) வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே பழ.நெடுமாறன் இதனை கூறியுள்ளார்.
தன்னையும், வைகோவையும் அரசியல் கோமாளிகள் என சுண்டைக்காய் நாட்டின் (இலங்கை) தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவருக்கு இந்த தைரியத்தை யார் கொடுத்தது? எங்கிருந்து அந்தப் பேச்சு வருகிறது. இந்திய அரசு கொடுத்த தைரியமே இதற்கு காரணம். எம்.ஜி.ஆர். தற்போது உயிருடன் இருந்திருந்தால் தனித் தமிழீழம் மலர்ந்திருக்கும்.
அவருக்கு ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற அக்கறை இருந்தது எனவும் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இங்கு உரையாற்றிய தமிழ் திரைப்பட இயக்குநர் சீமான் எழுத்தாளர் சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி வருகின்றனர். எனினும் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என இந்திய மத்திய அரசே கூறியுள்ளதுடன் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை சென்னையில் நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாகிஸ்தானுடன் இந்தியா போர் என்ற கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆனால் 406 தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இலங்கை மீது போர் தொடுக்காதது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே இங்கு உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தாம் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என விடுதலைப்புலிகள் கூறியுள்ளனர். இதனை இந்திய மத்திய அரசாங்கத்திடம் கூறி புரிய வைக்க வேண்டியதே தற்போது முன் நிற்கும் சவால் என குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தொடர்பான குற்ற உணர்ச்சி (ராஜீவ் கொலை) அனைவரிடமும் காணப்படுகிறது. அது உடைக்கப்பட வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளர்.
Comments