தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகளாகச் சித்திரித்து, இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பேசியது, ஒட்டுமொத்தத் தமிழகத் தையும் கொதிக்க வைத்திருக்கிறது!
பல அரசியல் கட்சிகளும் பொன்சேகாவின் பேச்சைக் கண்டித்துப் போராட்டங்களை அறிவித்திருக்க, நாம் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ விடம் இதுகுறித்த கேள்விகளை வைத்தோம். ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தார் வைகோ...
பொன்சேகா, இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதில் இந்தியாவுக்கே விருப்பம் இல்லை எனச் சொல்லி இருக்கிறாரே! அப்படியென்றால், மத்திய அரசு இரட்டை நாடகம் போடுகிறதா?
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்துவதே நம் இந்திய அரசுதான் என நான் அடித்துச் சொன்னபோது, பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நான் சொன்னது உண்மைதான் என இன்றைக்கு உறுதியாகி இருக்கிறது. அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் இலங்கையில் போர்நிறுத்தம் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்துக்குள் போர்நிறுத்தம் செய்ய முடியாது என நம்முடைய மண்ணுக்கே வந்து நம் கன்னத்தில் அறைவதைப் போல் சொல்லிவிட்டுப் போனார் இலங்கை அதிபர் ராஜபக்ஷ.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய பிரதமர் பேசவில்லை என்று ராஜபக்ஷ சொன்னபோதே மத்திய அரசின் குள்ளநரித்தனக் குட்டு வெளிப்பட்டு விட்டது! மத்திய அரசின் கபட நாடகம் பொன்சேகாவின் பேச்சால் மேலும் அம்பலப்பட்டுவிட்டது!
தமிழக அரசியல் தலைவர்களைக் கோமாளிகள் என்றும், அவர்களின் பேச்சை மத்திய அரசு ஒருபோதும் கேட்காது என்றும் பொன்சேகாகூறியிருக்கிறாரே?
ஒட்டுமொத்தத் தமிழகத் தலைவர்களையும் அசிங்கப்படுத்தும் விதமாக பொன்சேகா பேசிய பேச்சை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது! தமிழர்களைத் தரக்குறைவாக பொன்சேகா பேசுவது புதிதில்லை! சிங்களவர்களிடம் அடிமைப்படுவதற்கென்றே பிறந்த பிறவிகளாக அவர் தமிழர்களை வர்ணித்த கதையெல்லாம் நடந்திருக்கிறது! அதிமுக்கியமான விவாதம் ஒன்றில், நான் சொல்வதைத்தான் இந்திய முப்படைத் தளபதிகளும் கேட்பார்கள் என்று வாய்க் கொழுப்பில் மிதமிஞ்சிப் பேசியவர்தான் இந்த பொன்சேகா.
இந்திய அரசு தன் பின்னால் இருக்கிறது என்கிற தைரியம்தான் பொன்சேகாவை இப்படி பேச வைத்திருக்கிறது! பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது, எந்த நாட்டு இராணுவத் தளபதிகளும் இந்தியத் தலைவர்களை இப்படி எல்லாம் வசைபாடி ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. ஆனால், தறுக்க குணத்தில் ஊறித் திளைக்கும் மிருகத்துக்கு ஒப்பான பொன்சேகா, தமிழினத்தை ஒழித்துக் கட்டுகிற வெறியோடு நிலைமறந்து, தமிழகத் தலைவர்களை அவமானப்படுத்தி இருக்கிறார்! அவர் கோமாளிகளாகச் சுட்டிக் காட்டியிருக்கும் தமிழகத் தலைவர்களில் தானும் அடக்கம் என்பது தமிழக முதல்வர் கலைஞருக்கும் புரிய வேண்டும். பொன்சேகாவும் ராஜபக்ஷவும் மன்னிப்பு கேட்காவிட்டால், இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!
புலிகளுக்குத் தனிநாடு கொடுத்தால் இந்தியாவுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என பொன்சேகா சொல்லி இருக்கிறாரே?
மத்திய அரசை பின்னால் இருந்து இயக்கும் நச்சு அதிகாரிகள், சிங்கள அரசின் மூலம் பரப்பி விடுகிற கருத்து இது. பங்களாதேஷ் தனிநாடாக உருவெடுத்ததைப் பார்த்து, மேற்கு வங்காளமும் பிரிந்து விட்டதா என்ன? உரிமைப் பிரச்னைகள் தவிர்க்க முடியாதபோதுதான் தனிநாடு போராட்டம் மேலோங்குகிறது. தமிழினத்துக்கு எதிரான கற்பனைகளைக் கிளப்பி விடுபவர்களே இந்தியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்தான் என்பதை இந்த இடத்தில் அடித்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகக் கடலோரங்களில் புலிகளின் நடமாட்டம் தெரிகிறதா என்பதிலேயே குறியாக இருந்ததால்தான், இந்தியக் கப்பல் படை குஜராத் மாநிலக் கடலோரத்தைக் கோட்டைவிட்டது. அதன் விளைவுதான் மும்பையில் பயங்கரவாதிகள் நுழைந்து வெறியாட்டம் போட்டார்கள்.
இந்த மெத்தனத்துக்கு மொத்தக் காரணமே நம் பாதுகாப்புத்துறை செயலாளரான எம்.கே.நாராயணன் தான். ராஜபக்ஷவுக்கு உதவி செய்வதற்கே அவருக்கு நேரம் போதவில்லை. இதேநேரம், இன்னொரு தகவலும் உறுதிப்பட என் செவிகளுக்கு வந்திருக்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணங்களில் 'ஜிகாத்' என்ற பெயரில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் கூடாரம் அமைக்கத் தொடங்கி விட்டன. சிங்களவர்களின் உதவியோடு தென்னிந்தியப் பகுதிகளில் சுலபமாக ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் இப்போதே திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிற பொன்சேகா, இந்தியப் பாதுகாப்பு குறித்துப் பேசுவது வெட்கக்கேடு!
வைகோ போன்ற தலைவர்கள் வருமானத்துக் காகத்தான் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று பொன்சேகா சொல்லியிருக்கிறார்..?
ஈழ விஷயத்தில் உங்களை எதிர்க்கும் வேறு சிலரும் பண விவகாரத்தை மையப்படுத்தி விமர்சனங் கள் கிளப்புவது ஏன்?
ஈழ மக்களின் விடியலை மட்டுமே இலக்காக எண்ணி உயிரையும் துச்சமென நினைத்துப் போராடிக் கொண்டிருக்கும் எங்களை நோக்கி எத்தகைய அவதூறு அம்புகளை வேண்டுமானாலும் வீசட்டும்! இனமானத்தைக் கொச்சைப்படுத்துவோர் பற்றி சட்டை செய்யும் நிலையில் நான் இல்லை. மண்ணோடு மண்ணாக மடிந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழினத்துக்காக இந்த வைகோ இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல.
கிளிநொச்சி யுத்த களத்தில் இருந்தபடி லண்டனில் என் உணர்ச்சிப் பேருரையைக் கேட்டறிந்த தம்பிமார்கள், உங்களின் ஊக்குவிப்பு எங்களை இன்னும் முன்னேறச் செய்யும் என உளப்பூர்வமாக போனில் பேசினார்கள். இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகளுக்கு முன்னால் பொன்சேகா போன்றவர்களின் கூச்சல்கள் என்னை என்ன செய்துவிட முடியும்?
இலங்கையில் குண்டடிபட்டுத் தப்பி வந்த நாற்பது பையன்களுக்கு சொந்தத் தாயாக நின்று எல்லா உதவிகளையும் செய்தவர் என் தாய். அவர் அன்று ஊட்டிய அன்னத்துக்கு எத்தனை கோடிகளை அள்ளிக் கொடுத்து ஈடுசெய்ய முடியும்?
விடுதலைக்காகவும் மீட்சிக்காகவும் போராடும் புலிகளிடம் பணம் பெறுவது, ஈனத் தொழில் செய்து பிழைப்பதற்குச் சமம்.
பொன்சேகாவும், தமிழர்களை அழித்தொழிக்க நினைக்கும் சிங்களக் கூட்டமும் செத்து மிதக்கிற நாள் விரைவிலேயே வரும்!
அந்த ஈழ மண்ணிலேயே பொன்சேகா போன்ற கொக்கரிப்பாளர்களின் கொட்டம் நிச்சயம் அடக்கப்படும்! என்றார் ஆவேசமாக வைகோ.
Comments