பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)

(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு, பகுதி -7)


இந்திய ராணுவம் ஈழப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கை அதிபர் பிரேமதாசா கெடு விதித்ததால் ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்ற ராஜீவ் காந்தி - பிரேமதாசாவுக்கு எதிராக உளவுத் துறை வழியாக மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமே பிரேமதாசாவை எதிர்க்க சமரசத் தூது அனுப்பியதை முரசொலி மாறன் தந்த பேட்டியிலிருந்தே எடுத்துக் காட்டினோம். பிரேமதாசாவுக்கு எதிரான அரசியல் நெருக்கடிகளையும் உளவு நிறுவனம் உருவாக்கியது.

பிரேமதாசாவின் எதிர்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தி பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளை இந்திய உளவு நிறுவனம் மேற்கொண்டது. இதை விடுதலைப் புலிகள் இயக்கமே மக்களிடம் கூறி எச்சரித்தது. மக்களுக்காக ‘புலிகளின் குரல்’ என்ற வானொலி சேவையை விடுதலைப் புலிகள் நடத்தி வந்தனர். இதைக்கூட புலிகளின் ‘ரகசிய வானொலி’ என்கிறார் ராஜீவ் சர்மா. அது தமிழீழ மக்களுக்காக நடத்திய வெளிப்படையான வானொலி சேவை. அந்த வானொலியில் விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் யோகரத்தினம் என்ற யோகி, இயக்க சார்பாக நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

“பிரேமதாசா அரசாங்கத்தை தூக்கி எறிவதற்காக, இந்திய அரசாங்கம் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது. காமினி திசநாயகே மற்றும் அவரது குழுவினரைப் பயன்படுத்தி, பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டினர். ஆனால், அதில் தோல்வி அடைந்து விட்டனர். இப்போது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை குலைக்கும் சதியில் இறங்கியுள்ளனர். இதற்கு, இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது கொண்டு வந்துள்ள தடையைக் காட்டி, பேச்சுவார்த்தையை குலைக்க முயற்சிக்கிறார்கள்” - என்று 1992 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி புலிகளின் வானொலி, நாட்டு மக்களுக்கு அறிவித்தது. இந்தத் தகவலை ராஜீவ் சர்மாவும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

அதே வேளையில், பிரேமதாசா கட்சியிலிருந்தே அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இந்திய உளவுத் துறை ஆட்களை தயாரித்தது! பிரேமதாசா ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்தவர் ரஞ்சன் விஜயரத்னே. பிரேமதாசாவின் அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தவர். ஆனால் பிரேமதாசாவுக்கு அரசியல் எதிரி. அதிபர் பதவிக்கு அவர் குறி வைத்துக் கொண்டிருந்தார். பிரேமதாசா அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்தார். எனவே, ராணுவம் விஜயரத்னே கட்டுப்பாட்டில் இருந்தது. அதைப் பயன்படுத்தி பிரேமதாசாவுக்கு எதிராக ராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி, பிரேமதாசாவை வீழ்த்த உளவுத் துறை திட்டங்களை தயாரித்தது. விஜயரத்னேவுக்கு அதிபர் பதவிக்கு முடிசூட்ட வலைவிரித்தார்கள். அந்த திட்டத்தின் அடிப்படையில் அதிபர் பிரேமதாசாவுக்கு தெரியாமலேயே ரகசியமாக தரைப்படை, கப்பல் படை மற்றும் விமானப் படை என்ற முப்படை தளபதிகளின் கூட்டத்தை 1991 மார்ச் 1 இல் விஜயரத்னே கூட்டினார்.

இந்த ரகசிய சதித் திட்டம் - பிரேமதாசாவுக்கு தெரிந்து விட்டது. ரகசிய கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே முன்னறிவிப்பின்றி பிரேமதாசா, கூட்டத்துக்குள் திடீர் என்று நுழைந்தார். உள்ளே இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. பிரேமதாசா எதுவும் பேசாமல் அமைதியாக, சிறிது நேரம் இருந்துவிட்டு, மவுனத்தையே எச்சரிக்கையாக தந்துவிட்டு வெளியேறினார். கூட்டம் கலைக்கப்பட்டது. அடுத்தநாள் காலையே விஜயரத்னே காரில் அலுவலகம் சென்றபோது அவரது காரில் குண்டு வெடித்தது. அது குண்டு துளைக்காத அரசாங்க கார். ஆனாலும் குண்டு வெடித்தது. விஜயரத்னா கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் விடுதலைப் புலிகள் மீதே பழி போடுகிறார், ராஜிவ் சர்மா! நியாயமாக பிரேமதாசா தனக்கு எதிராக திட்டமிட்டிருந்த ராணுவப் புரட்சியை ஒடுக்க, அதற்கு சதி செய்தவரை தீர்த்துக் கட்டினார் என்பது கொழும்பு ஊடகங்களே வெளியிட்ட செய்தி. அதை ஏற்றுக் கொள்வதற்கான நியாயமான காரணங்களும் இருக்கின்றன. ஆனால் பழி, ஆதாரம் இல்லாமல் புலிகள் மீதே போடுவதில் என்ன நியாயம்? விடுதலைப் புலிகள் லண்டன் தலைமை அலுவலகத்திலிருந்து தலைமையக பொறுப்பாளர் கிட்டு, புலிகளுக்கு இதில் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கையும் விட்டார்.

இலங்கையில் காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் அதிகாரம் கொண்ட குழு ஒன்று செயல்பட்டது. இதன் தலைவராக இருந்தவரின் பெயர் பிரேமதாசா உருகம்பொல என்பதாகும். 34 ஆண்டு அனுபவம் பெற்ற காவல்துறையின் உயர் அதிகாரி. இவர், இந்திய உளவு நிறுவனத்துக்கு ஆதரவாக பிரேமதாசாவுக்கு எதிராக களமிறக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டை இந்திய உளவுத் துறைப் பயன்படுத்தி, பிரேமதாசாவுக்கு எதிரான பேட்டி ஒன்றை அவரிடமிருந்து பெற்று பிரேமதாசாவுக்கு நெருக்கடியை உருவாக்கினார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ சார்பில் பேட்டி கண்டவர் - ஏதோ அப்பத்திரிகையின் செய்தியாளரோ, உதவி ஆசிரியரோ அல்ல. அந்த ஏட்டின் நிர்வாக இயக்குனராக இருந்த நலபம் என்பவரே பேட்டி எடுத்தார். விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், ராணுவ அமைச்சர் விஜயரத்னே கொலைக்கு விசாரணை ஆணையம் நியமிக்க வேண்டும் என்றும் பிரேமதாசாவுக்கு எதிராக இந்தியாவிலிருந்து வெளிவரும் அந்த ஏட்டுக்கு அவர் பேட்டி அளித்தார்.

இந்த அதிகாரி, இந்திய உளவு நிறுவனத்தின் சதி வலையில் வீழ்ந்ததைத் தெரிந்து கொண்ட பிரேமதாசா, அவரை உடனே பதவியிலிருந்து நீக்கினார். தலைமறைவாகிவிட்ட அவர் ரகசிய இடத்திலிருந்து இந்தப் பேட்டியை தந்தார். அவர் ரகசியமாக தங்கியிருந்த இடம் இந்தியாவின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? இந்திய உளவு நிறுவனத்தின் தொடர்பின்றி அவர், ரகசிய இடத்திற்குப் போய் பேட்டி எடுத்திருக்க முடியுமா?

பிரேமதாசா விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு பிரேமதாவிடம் நிர்ப்பந்தம் தந்தது. பிரேமதாசாவோ அதை ஏற்கவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையான கவலை ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், பேச்சுவார்த்தை முயற்சிகளை நியாயமாக ஆதரித்திருக்க வேண்டாமா? இப்படி சீர்குலைப்பது நியாயம் தானா? இந்திய பார்ப்பன ஆட்சியின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா ஆட்சிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. முதல் கட்டமாக இந்திய ராணுவம் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உருவானது. அதனடிப்படையில் இந்திய ராணுவம் படிப்படியாக வெளியேற இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதே நேரத்தில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் இந்தியா, ‘மாகாண சபை’ என்ற ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி, வரதராசப் பெருமாள் என்ற தனது ‘எடுபிடி’யை முதல்வராக நியமித்திருந்தது. அந்த ஆட்சிக்கு ஆதரவாக ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற ஒரு அமைப்பையும் இந்தியா உருவாக்கி வைத்திருந்தது. இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்த பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் ‘குடிமக்கள் தொண்டர் படைகள்’ என்ற தனக்கு ஆதரவான அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்புக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கியிருந்தது. இந்திய ராணுவம் வெளியேறினாலும் இந்தியா உருவாக்கிய ‘விபிஷணப் படை’ ஈழத்தில் நிலை கொண்டிருந்த நிலையில் அந்தப் படைகளையும் கலைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி, பிரேமதாசா விடுதலைப் புலிகளின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முன்னேறியது. பிரேமதாசாவுக்கும் விடுலைப்புலிகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றிப் பாதையில் விரைந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய உளவுத் துறை அது பற்றி ரகசிய அறிக்கை ஒன்றை விரிவாகத் தயாரித்தது. (ectt (R&AW)UO No.1/17-A/89-SLM-346-6959)

அதே காலகட்டத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசநாயகே இருவரும் விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும் என்று சிங்களர்களிடையே தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். கடும் நெருக்கடிக்குள்ளான பிரேமதாசா, ஒரு கட்டத்தில் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். இந்தியாவை வெளிநாட்டு சக்திகள் என்று குறிப்பிட்ட அவர், “வெளிநாட்டு சக்திகள், நாட்டின் நிலையான தன்மையைக் குலைக்க (Stability) திட்டமிடுகின்றன. அவர்கள் அரசியல் கொலைகளை நடத்த முயற்சிக்கிறார்கள்” என்று பிரேமதாசா பேசத் தொடங்கினார். 1991 அக்டோபர் 19 ஆம் தேதி இலங்கையின் கோவில் நகரமான கண்டியில் தன்னை பதவியிலிருந்து அகற்றிட மேற்கொண்ட சதித் திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்ததற்காக மாபெரும் பேரணி ஒன்றை பிரேமதாசா நடத்தினார். ‘ஜனநாயகத்தின் வெற்றி’ என்று அந்தப் பேரணிக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அதில் பேசிய பிரேமதாசா, “எனக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள், சதித் திட்டத்தில் இறங்கியுள்ளன. என்னுடைய அரசியல் எதிரிகளுக்கு இந்த சக்திகள் ஏராளமானப் பணம் தந்து எனக்கு எதிராக அணி வகுப்புகளை நடத்தச் சொல்கின்றன. அதற்கு பெரும் பணம் வாரி இறைக்கப்படுகிறது. அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பெரிய தொகை வருகிறது? என்னை பதவியிலிருந்து நீக்க அவர்கள் போட்ட சதித் திட்டம் தோற்றுவிட்டதால், நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதுவும் தோற்கடிக்கப்பட்டது. இந்த அயல்நாட்டு சக்திகள் மூலம் எனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். நான் அரசியல் ரீதியாகப் படுகொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” - என்று பிரேமதாசா பேசினார். இந்திய தேசபக்தி பெருமை பேசுவோரையும், ராஜீவ் காந்தி உண்மையிலேயே ஈழத் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்தார்; அவரை கொன்று விட்டார்களே என்று பழித் தூற்றுவோரையும் கேட்கிறோம். இதுதான் இந்தியாவின் உண்மையான முயற்சியா? இதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் காந்தி காட்டிய கவலையா?

ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்களை உருவாக்கிய பார்ப்பன இந்தியாவின் இந்த படுபாதகங்களை மன்னிக்க முடியுமா?

பிரேமதாசா கொன்னதுதான் நடந்தது! 1993 ஆம் ஆண்டு பிரேமதாசா மே நாள் பேரணியில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டுக்கு பலியானார். பிரேமதாசா மே தின அணி வகுப்பில் வந்தபோது அவரது உதவியாளர் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். அவர் பிரேமதாசாவின் வீட்டில் வேலை செய்யும் பணியாள். எனவே பாதுகாவலர்கள் பேரணிக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். பிரேமதாசாவின் சமையல்காரர் பரிந்துரையில் இந்த பணியாள் வேலைக்கு சேர்க்கப்பட்டவர். பிரேமதாசாவை நெருங்கியவுடன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அவர் வெடிக்கச் செய்தார். இந்தத் தகவல்களை எல்லாம் ராஜீவ் சர்மாவே தனது நூலில் எழுதியிருக்கிறார். இவ்வளவையும் எழுதிவிட்டு, பிரேமதாசாவைக் கொன்றது விடுதலைப் புலிகள் என்று பழிபோட்டு விடுகிறார். “குண்டு வெடிக்கச் செய்த நபர் தான் ஒரு எல்.டி.டி.ஈ. உளவாளி என்பதை நிரூபித்தார்” என்கிறார் ராஜீவ் சர்மா. இறந்து போனவர் எப்படி தன்னை எல்.டி.டி.ஈ. உளவாளி என்று நிரூபிக்க முடியும்? ‘பிரேமதாசாவை புலிகள் கச்சிதமாக கொலை செய்தார்கள்’ என்று மீண்டும் மீண்டும் இந்த நூல் பல இடங்களில் புலிகளைக் குற்றம் சாட்டுகிறது.

விடுதலைப் புலிகள் மீது கொலைக் குற்றம் சாட்டுகிறவர்கள் எப்படி, எங்கே, எந்த முறையில் கொலை செய்தார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால் ஒரு கேள்வியை மட்டும் அவர்கள் தந்திரமாக விட்டுவிடுகிறார்கள். ஏன் கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி!

பிரேமதாசாவிடம் நெருங்கிச் சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தவன் பெயர் பாபு. பிரேமதாசாவிடம் எப்போதும் நெருக்கமாக இருந்து, அவரது உணவு உள்ளிட்ட அன்றாட பணிகளைக் கவனித்துக் கொண்டு, பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் ஈ.எம்.பி. மொய்தீன். இவர் மது, மங்கை போன்ற பலவீனங்களுக்கு உள்ளானவர். இந்தத் தேவைகளை நிறைவேற்றித் தந்தவன் பாபு. மொய்தீனைப் பயன்படுத்தி பாபு, பிரேமதாசாவை நெருங்கி குண்டை வெடிக்க வைத்தான். இந்த உண்மைகளை ஊடகங்களும் வெளியிட்டன. (‘afp’ - செய்தி நிறுவனம். ‘ஜப்பான் டைம்ஸ்’, ஜூன். 5, 1993)

பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்பது எவருடைய கரங்கள்?

- அடுத்த வாரம்

விடுதலை இராசேந்திரன்
-------------------------------------------------------------------------------------------

http://www.keetru.com

Comments