ராஜீவ் கொலை – காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)

ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்….’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.

சவுக்குப் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூலை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கிய சவுக்கு பதிப்பகத்துக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 1998 ஆம் ஆண்டு ராஜிவ் சர்மா எழுதிய ‘Beyond the Tigers’ என்ற நூலை ஆனந்தராஜ், மிகச் சிறந்த நடையில் விறுவிறுப்பாக தமிழாக்கம் செய்துள்ளார். நூலின் பதிப்புரையில் குறிப்பிட் டுள்ளவாறு, “முடிவடையாத ஒரு விசாரணையின் அடிப்படையில் 7 பேர் 21 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் இருப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?………. சிறைக் கொட்டடியில் இருப்பவர்களின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பினால், அதுவே இப்புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி” என்று எழுதியிருப்பதுபோல் நல்ல தமிழின உணர்வோடு, நல்ல நோக்கத்தோடு தான் இந்த நூல் வெளி யிடப்பட்டிருக்கிறது. சவுக்கு இணையதளத்தின் முகப்பிலேயே தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படம்தான் கம்பீரமாக காட்சி தரும். இந்நூலை வெளியிட்ட சவுக்கு பதிப்பகத்தின் உணர்வு – நோக்கம் மிகவும் மதிக்கத்தக்கது என்பதில் இரண்டுவித கருத்துகளுக்கு இடமில்லை.

ஆனால், என்னுடைய வருத்தமெல்லாம் – இந்த நோக்கத்துக்கு இந்த நூலின் உள்ளடக்கம் பயன்படுமா என்பது பற்றித்தான். இந்த நூலின் மய்யமான கருத்தை இப்படிக் கூறலாம். அதாவது ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று உறுதி செய்கிறது இந்த நூல். அந்தக் கொலைக்குப் பின்னால், சில சர்வதேச சக்திகள் இருந்தன. அந்த சர்வதேச சக்திகளுக்காக விடுதலைப் புலிகள் இந்தக் கொலையை செய்து முடித்துவிட்டு, அதற்கு பிரதிபலன்களாக சக்தி வாய்ந்த கப்பல்களையும் ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டார்கள். ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகுதான் புலிகளுக்கு கப்பல்களில் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வரத் தொடங்கின. ‘கூலிப் படைகள்’ என்பதுபோல் விடுதலைப் புலிகள் இதில் செயல்பட் டிருக்கிறார்கள். எனவே வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்தி, இந்த சதியில் ஈடுபட்டவர்களையும் விசாரணை நடத்த வேண்டும் என்பதே இந்நூலின் மய்யக் கருத்து. எனவேதான் “விடுதலைப்புலிக.ளுக்கு அப்பால்…”; என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந் நூலுக்கு ராஜீவ் கொலை நடந்தபோது மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குனராக இருந்த விஜய்கரன் என்ற அதிகாரியே முன்னுரை எழுதியிருப்பதை சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இந்த நூல் ஒரு போலீஸ் டைரியைப் போல் இருப்பதாக குறிப்பிடுகிறார். போலீஸ் டைரியைப்போல் என்பதைவிட, காவல்துறை டைரியிலிருந்தே அப்படியே பிரதி எடுக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். ஆக, புலனாய்வுத் துறையில் ஈடுபட்டிருந்த ஒரு அதிகாரியே இந்த நூலை உருவாக்குவதில் பெரும்பங்கு கொண்டிருப்பார் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. நூலின் பின் இணைப்புகளாக தரப்பட்டுள்ள ஆவணங்கள் புலனாய்வுத் துறை தொடர்பானவைகளாகவே உள்ளன. நூலின் முதல் 8 அத்தியாயங்கள் விடுதலைப் புலிகள் ராஜிவ் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதையும், அதை நடத்தி முடித்ததையும் மிக மிக விரிவாக எழுதுகிறது.

அந்த அத்தியாயங்களில் விடுதலைப் புலிகள் மீது மிக மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதையே நோக்க மாகக் கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் நோக்கத்துக்கு இந்த நூல் வலிமையான சான்றாகிவிடும் என்ற கவலையால் நான் இதை மறுக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன். தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக மாவீரர்களை களப்பலி யாக்கி, கரும்புலிகளை உருவாக்கி, உலக விடுதலை இயக்கங்களாலே மிகவும் மதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் ஈழ விடுதலையையும் ஆதரித்து நீண்டகாலமாகவே களத்தில் நின்று கடமையாற்றியவர்கள் என்ற முறையில் இதை மறுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எங்களுக்கு உண்டு.

ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகளின் பங்களிப்பை நாம் மறுக்கவில்லை. அவர்களின் பங்களிப்பு மூடி மறைக்கப்பட்டுவிட்டதை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி எழுதியுள்ளோம். 1998 ஆம் ஆண்டு நான் எழுதிய ‘ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற நூல் ‘26 தமிழர் உயிர்க் காப்பு வழக்கு நிதிக் குழு’வால் வெளியிடப் பட்டு தமிழகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பரப்பப்பட்டது. ‘தொடர்ந்து ராஜீவ் கொலையில் பதுங்கி நிற்கும் சாமிகள்’ என்ற தலைப்பில் நான் எழுதி, பெரியார் திராவிடர் கழக சார்பில் வெளி யிடப்பட்ட நூலில் சுப்ரமணியசாமி, சந்திரா சாமி களுக்கு இதிலுள்ள தொடர்புகள் அம்பலப்படுத்தப் பட்டது. அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதைத் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறோம்.

ராஜீவ் கொலை தொடர்பாக மூன்று விசாரணைகள் நடந்தன. ஒன்று – கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை. இந்த விசாரணையின் அடிப்படையில் தான் 7 தமிழர்கள் 21 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள். அதில் 3 பேர் தூக்குத் தண்டனையை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மற்றொன்று – ராஜீவ் மரணமடைந்த 7 நாட்களில் ராஜீவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பதைக் கண்டறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில், 1991 ஆம் ஆண்டு மே 27 ம் தேதி அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், ஓராண்டு காலத்தில் இந்த விசாரணை ஆணையம் தனது பணியை முடித்து 1992 ஜூன் மாதம் அரசிடம் பரிந்துரையை தாக்கல் செய்தது.

இந்த ஆணையம் நியமிக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் சந்திரசேகர். சுப்ரமணியசாமி சட்ட அமைச்சர். அறிக்கையை தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நரசிம்மராவ் பிரதமர். மத்திய மாநில அரசின் புலனாய்வுப் பிரிவுகளையும், தமிழகப் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்த ஆணையம் கடுமையாகக் .குறை கூறியது. அது மட்டுமல்ல, ராஜீவ் மரண மடைந்த திருப்பெரும்புதூர் கூட்டத்துக்கு வந்திருந்த காங்கிரசாரையும் கடுமையான வார்த்தைகளால், விமர்சனம் செய்திருந்தது. அங்கே காங்கிரசார், பொறுப்புணர்வோ, ஒழுங்கோ இல்லாதவர்களாக செயல்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை. மூன்றாவதாக நியமிக்கப்பட்டதுதான் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் ஆணையம். நீதிபதி சர்மா பாது காப்பு குறைபாடுகள் பற்றித் தான் தம்மால் விசாரிக்க முடியுமே தவிர, சதித் திட்டம் பற்றி தம்மால் விசாரிக்க முடியாது என்று மறுத்து விட்டார். இந்த நிலையில் ராஜீவ் கொலைக்குப் பின்னால் நடந்த சதி, பின்னணி காரணங்கள் தொடர்புள்ள தனி நபர்கள், நிறுவனங்கள் பற்றி நீதிபதி ஜெயின் ஆணையம் விசாரணை நடத்தியது. 12 முறை கால நீட்டிப்புப் பெற்று 6 ஆண்டுகாலம் விசாரணை நடத்திய இந்த ஆணையம், கடைசியில் அவசர அவசரமாக இடைக்கால அறிக்கை ஒன்றை மட்டும் சமர்ப்பித்து விட்டு ஒதுங்கிக் கொண்டது. ராஜீவ் கொலைக்கு விடுதலைப்புலிகள் மற்றும் தி.மு.க. ஆட்சியைக் குற்றம் சாட்டியதோடு, தமிழ் நாட்டு மக்களையும் குற்றவாளிகளாக அதன் அறிக்கை கூறியது – இது கடும்புயலைக் கிளப்பியது.

ராஜீவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படவில்லை என்று வர்மா ஆணையம் கூறிய பிறகு, அப்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததற்கு யார் காரணம்? அவர்கள் மீது, ராஜீவுக்காக கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் கட்சி, நடவடிக்கை எடுத்ததா என்றால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்ல, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் கொலை விசாரணை தொடர்பான மிக முக்கியமான கோப்புகள் காணாமல் போய்விட்டன. அப்படி காணாமல் போன கோப்புகளை ஆதாரங்களுடன் அப்போது ‘அவுட் லுக்’ ஏடு (24.11.1999 இதழ்) பட்டியலிட்டுக் காட்டியது.

1) 1989 நவம்பரிலிருந்து ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போய் விட்டது. (8-1-WR/JSS/90/volIII) ஜெயின் ஆணையம் இந்தக் கோப்பை கேட்டபோது கோப்பைக் காண வில்லை. பிறகு பொய்யாக, ஒட்டு வேலைகள் செய்து ஒரு கோப்பை தயாரித்து, ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்கள். இந்தக் கோப்புகளை எழுதிய அதிகாரிகளில் ஒருவர் வினோத் பாண்டே இவர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவை செயலாளராக இருந்தவர். ஜெயின் ஆணையத்தின் முன் சாட்சியமளித்த அந்த அதிகாரி, கோப்புகளைப் பார்த்து அதிர்ச்சி யடைந்து, இந்தக் கோப்புகளில் தான் எழுதிய குறிப்புகள் இடம் பெறவில்லை; இவை திருத்தப் பட்டவை என்றார். அப்போது உள்துறையில் துணை அமைச்சராக இருந்தவர், இப்போது ‘இளம் தலைவர் ராஜீவு’க்காக கண்ணீர் வடிக்கும் ப. சிதம்பரம்தான். கோப்புகள் திருத்தி, ஒட்டி, போலியாக தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட் டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஜெயின் ஆணை யம் உள்துறை அமைச்சகததை அழைத்துக் கேட்டது. ப. சிதம்பரம் கூண்டில் ஏற்றி, ‘ஆம் கோப்புகளை புதிதாக தயாரித்தது உண்மைதான்’ என்று ஒப்புக் கொண்டார். இவர்கள் தான் ராஜீவ் மரணத்துக்கு குடம் குடமாக கண்ணீர் வடிக் கிறார்கள்.

2) நீதிபதி வர்மா மற்றும் நீதிபதி ஜெயின் விசாரணை ஆணையத்துக்கான வரம்புகளை நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் அடங்கிய மற்றொரு கோப்பு 1995 ஆம் ஆண்டு முதல் காணாமல் போய் விட்டது. (கோப்பு எண்.1/120/14/5/911/A.S./DIII).

3) சந்திரசாமி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ர மணியசாமி ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது, இடைமறித்துக் கேட்கப்பட்ட உரையாடல் களைப் பதிவு செய்த கோப்பை பிரதமர் அலு வலக மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர்.

4) 1987 ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்திக்கும், அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்குக்கும் இடையே மோதல் உருவானது. இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டவுடன், அப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாத ராஜீவுக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்து, நாட்டின் பிரதமராக்கியதே அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில் சிங் தான். பதவி அதிகாரத்துக்கு வந்த ராஜீவ் – அதிகார மமதை யில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தையே அவ மதிக்கத் தொடங்கிய நிலையில் ஒரு கட்டத்தில், குடியரசுத் தலைவரே ராஜீவ் ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளில் இறங்கினார். அப்போது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கும், சர்வதேச ஆயுதத் தரகரும், சாமியாரும், சுப்ர மணியசாமி நண்பருமான சந்திரசாமியும், மேற் கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் பற்றி இந்திய உளவு நிறுவனம் (i.b.) கண்டறிந்த உண்மைகளும், பரிந்துரைகளும் கொண்ட கோப்புகளும் காணாமல் போய் விட்டன.

நரசிம்மராவின் குருவாக செயல்பட்டவர் சந்திர சாமி. பிரதமராக இருந்த சந்திரசேகரின் குருவும் சந்திரசாமிதான். அன்னியச் செலவாணி மோசடி, தொடர்பாக பல வழக்குகளில் சிக்கியவர். சர்வதேசப் புள்ளிகளுடன் நெருக்கமான உறவு கொண்டவர். இவர் ஒரு பார்ப்பனர். நேர்மையான பொது வாழ் வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு, வி.பி.சிங் மகனுக்கு செயின்ட் கிட்ஸ் எனும் தீவில் ரகசிய வங்கிக் கணக்கு இருப்பதாக, ஒரு போலி ஆவணத்தைத் தயாரித்து, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடம் வழங்கி, வி.பி.சிங் மகனை கைது செய்ய இவர் முயற்சித்தார். இதற்கு பார்ப்பனர் நரசிம்ம ராவும் உடந்தை. பிறகு, அது போலி ஆவணம் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், கிரிமினல் வழக்குக்கு உள்ளாகி நீண்டகாலம் டெல்லி திகார் சிறையில் அடைபட்டிருந்தார் இந்த சந்திரசாமி. ராஜீவ் கொலை தொடர்பாக – ஜெயின் ஆணையம், இந்த சந்திரசாமி, சுப்ரமணிய சாமிகளை விசாரணை நடத்தியது. ஆனால் இவர்களின் சதிச் செயல்களுக்கு ஆதாரமான பல அரசுக் கோப்புகள், நரசிம்மராவ் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டன. இந்த செய்தி களையெல்லாம் ‘அவுட்லுக்’ பத்திரிகை ஆதாரங் களை முன் வைத்து எழுதியதை நான் எழுதிய “ராஜீவ் படுகொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள்” நூலில் 1998 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளேன்.

ராஜீவ் சர்மாவின் இந்த நூல் பிரபாகரனை ஈழத்துக்குள் சென்று ஏன் பிடித்து வந்து விசாரிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி, “இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் மிரட்டல்விடுக்கும் தீவிரவாத இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க, ஏன் புதுடில்லி தைரியமான வெளிப்படையான தாக்குதலைத் தொடங்கக் கூடாது?” (பக்.319) என்று கடும் கோபத்துடன் கேள்வி எழுப்புகிறது. ராஜீவ் கொலையில் நடந்த அன்னிய சதியை பிரபாகரனே மறைப்ப தாகவும், எனவே செயற்கைக் கோள் வசதியைப் பயன்படுத்தி பிரபாகரனைப் பிடித்து வர வேண்டும் என்றும் இந்த நூல் வலியுறுத்துகிறது.

‘எனது இந்தியா உயர்வானது’ என்று முழக்கத்தைத் தந்து நாட்டுக்கே கவுரவத்தைத் தந்த தலைவர் ராஜீவ் மரணத்தால் இந்தியாவின் கவுரவமே அந்தரத்தில் ஊசலாடுவதை (பக்.318) எப்படி பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று ஆவேசமாக ‘தேச பக்தி’ பேசுகிறது.

ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகளின் தலையீடு இருந்தது என்பது வேறு; அன்னிய சக்திகளின் கூலிப் படையாக விடுதலைப் புலிகள் செயல்பட்டார்கள் என்பது வேறு. இந்த நூல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது, அப்படி ஒரு இழிவான பழியை வெளிப்படையாகவே சுமத்துகிறது. இந்திய உளவுத் துறையும், ஊடகங்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக பரப்பிவரும் ஆதாரமற்ற அவதூறுகள் அத்தனையும் இந்த நூலில் இடம் பிடித்துள்ளன. இந்த அவதூறு களையும் குற்றச்சாட்டுகளையும் உரிய ஆதாரங்களோடு நம்மால் மறுக்க முடியும்.

- (தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

நன்றி கீற்று இணையம்

-------------------------------------------------------------------------------------------

http://www.keetru.com

Comments