பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைத் தொடங்கியதை குலைத்து பிரேமதாசாவுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க திட்டமிட்டது இந்திய உளவுத் துறை! தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் 1989 ஜூலை 13 ஆம் தேதி கொழும்பில் அமிர்தலிங்கம் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களோ, யோகேஸ்வரனோ, ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல. காந்திய வழியைப் பின்பற்றியவர் அமிர்தலிங்கம். அவர் செய்த ஒரே தவறு, இந்திய உளவுத் துறையை முழுமையாக நம்பியதுதான். தமிழ் ஈழ விடுதலையை இந்தியா மீட்டெடுத்து, தன்னிடம் ஒப்படைக்கும் என்று அவர் மலை போன்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு.
அமிர்தலிங்கம் – யோகேஸ்வரன் ஆகிய இரு தலைவர்களையும், அவரது வீட்டில் சுட்டுவிட்டு தப்பி வெளியே ஓடி வந்த 3 பேரை அமிர்தலிங்கம் வீட்டில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைப் படைக்கு தலைமை தாங்கி காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் விசு, அலாய்சியஸ், விக்னம் ஆகிய மூன்று பேர். இதில் விசு – யார்? மாத்தையாவின் வலதுகரமாக செயல்பட்டவர்.
இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கியிருந்த மாத்தையா – பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தையைக் குழப்பிட இந்திய உளவுத் துறையின் திட்டத்தை ஏற்று நடத்திய கொலைதான் இது! இதைச் செய்தது யார் என்பது பற்றி பத்திரிகைகளிலே குழப்பமான செய்திகள் வந்தன. ‘வீரகேசரி’ நாளேடு விடுதலைப் புலிகள், அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது. அதே நாளில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளேடுகள், இந்தக் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டன. ஒரே நாளிலேயே இரண்டு செய்திகளும் வெளி வந்ததுதான் வேடிக்கை.
“விடுதலைப் புலிகள் தமிழர்களைக் கொல்லும் சக்தியுடனேயே இருக்கிறார்கள். இலங்கை அரசால் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்திய ராணுவம் வடக்கு – கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறுவது ஆபத்து” என்ற கருத்தை உருவாக்குவதே உளவு நிறுவனங்களின் திட்டம். இந்தத் திட்டத்தை அப்படியே ஜே.என். தீட்சத்தும் தனது நூலில் (Assignment in Colombo) வழிமொழிந்து அமிர்தலிங்கம் கொலையை நடத்தியது விடுதலைப் புலிகளே என்று எழுதினார்.
“இலங்கைத் தமிழர்களை ஜனநாயகப் பாதைக்கு அமிர்தலிங்கம், திருப்பி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்தார்கள்” என்று ஜே.என். தீட்சத் உண்மையை மறைத்து எழுதினார். கொன்றது விடுதலைப் புலிகள் அல்ல; இந்திய உளவு நிறுவனம் – மாத்தையாவைப் பயன்படுத்தி நடத்திய சதி என்பது தெரிந்திருந்தும் புலிகள் மீதே பழி போடும் நோக்கத்தையே பிரதிபலித்தார்.
அமிர்தலிங்கத்தைச் சுட்ட 3 பேரும் தப்பி வந்தபோது, அமிர்தலிங்கத்தின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதும், அவர்கள் மாத்தையாவின் ஆட்கள் என்பதும் உண்மை. இது பற்றி மற்றொரு ஆதாரத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ் ஈழத்திலே நடந்த அரசியல் படுகொலைகள் பலவற்றுக்கும் காரணமாக இருந்த இந்திய உளவுத் துறை, அத்தனை பழிகளையும் விடுதலைப் புலிகள் மீதே போட்டதும், இங்கே பார்ப்பன ஊடகங்கள் அதையே மீண்டும் மீண்டும் எழுதி, உண்மையாக உறுதி செய்ததும், பாமர மக்களை நம்பச் செய்ததும், எவ்வளவு மோசமான பார்ப்பன சூழ்ச்சி என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் சர்மாவும் கூசாமல் இந்த நூலில் அதே பழியைத்தான் போடுகிறார்!
ஒரு மகத்தான விடுதலை இயக்கத்தின் மீது, இப்படி புழுதிவாரி தூற்றி, களங்கப்படுத்திய இந்த கயமைப் பிரச்சாரங்களுக்கு பதில் கூறுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன். அவர்களோ விடுதலைப் புலிகள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். அதே வழியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஏதோ, உணர்வுகளின் அடிப்படையில் நாம் அவற்றை மறுக்கவில்லை. மாறாக, மறுப்புகளை உரிய ஆதாரங்கள் தரவுகளுடன் தான் மறுக்கிறோம். அமிர்தலிங்கத்தை விடுதலைப் புலிகள் ஏன் கொலை செய்ய வேண்டும்? தீட்சத் கூறுவதுபோல் ஈழத் தமிழர்களின் கருத்துகளை அப்படியே தன் பக்கம் திருப்பிவிடக் கூடிய செல்வாக்குள்ள தலைவராகத் தான் அமிர்தலிங்கம் இருந்தாரா?
அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் முழுமையாக விடுதலைப் புலிகளிடமே தங்கியிருந்தது என்ற உண்மை சிறு குழந்தைகளுக்குக்கூட தெரியுமே! அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் விடுதலைப் புலிகள் கொல்வதற்கு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டிய கட்டாயம் – உளவு நிறுவனத்துக்கும், ஜெ.என். தீட்சத்துக்கும் இருந்தது. எனவே சொத்தையான எவருமே ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தை ஜே.என். தீட்சத் முன் வைக்கிறார்; அவ்வளவுதான்.
அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய விவரங்களை அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதிய டி.சபாரத்தினம் விளக்கிக் கூறியுள்ளார். டி.சபா ரத்தினம், 1996 ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதி ‘The Murder of a Moderate’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அமிர்தலிங்கம் கொலை பற்றி எழுதப்பட்டுள்ளது. என்ன?
“அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள், எந்த அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது. இதில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அமிர்தலிங்கத்தை சுட்ட விசு, வவுனியாவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். அதுவரை அந்தப் பதவியில் இருந்த தினேஷ் என்பவர் காணாமல் போன பிறகு நியமிக்கப்பட்ட விசு, அதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார்கள். வேறு சிலர், “இல்லை, விசு, அப்போதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்தார்” என்றார்கள். லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் தலைமையகம் அமிர்தலிங்கம் கொலையில், விடுதலைப் புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கையே வெளியிட்டது. புலிகளின் அந்த அறிக்கை அமிர்தலிங்கம், கொலையைக் கண்டித்தது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையை விரும்பாத சக்திகளே, இந்தக் கொலையை செய்து, விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு, களங்கம் கற்பிக்கின்றன என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. அத்துடன், “தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த கவலையுடன் துயரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. சில ஈவிரக்கமற்ற கொடூர சக்திகள் விடுதலைப் புலிகளை களங்கப்படுத்தி, அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடக்கும் பேச்சு வார்த்தையை சீர்குலைக்க திட்டமிடுவதாகவே சந்தேகிக்கிறோம்.”
- “The LTTE learned with deep distress the tragic demise of the T.U.L.F. leaders, Amirthalingam and Yogeswaran. We suspect that diabolical forces are at work to discredit the organization and to disrupt the current peace talks between the LTTE and the government of Sri Lanka” – என்று அந்த அறிக்கை கூறியது.
ஆக, அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவறே புலிகள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யவில்லை. இத்தகைய ராணுவ ரீதியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டால் அவர்கள் அதை மறுக்கும் வழக்கமுமில்லை என்பது புலிகள் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
- இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகள் நியாயமான கோரிக்கைக்கு இலங்கை அரசே ஆதரவு தந்து போர் நிறுத்தம் செய்து புலிகள் சம்மதத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு நல்ல வாய்ப்புச் சூழலில் கிடைத்த நல்ல வாய்ப்பை விடுதலைப் புலிகளே குலைப்பார்களா என்பதை நடுநிலையில் சிந்திக்கும் எவருமே புரிந்து கொள்ள முடியும்.
இந்த உளவு நிறுவன சதியை அன்றைய பிரேமதாசா அரசும் நன்றாகவே புரிந்து கொண்டது. இலங்கை அரசாங்கமே நடத்தும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை இது பற்றி வெளியிட்ட செய்தியே (1989 ஜுலை 14) என்ன தெரியுமா?
“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” – இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகை வெளியிட்ட செய்தி.
ஈழப் போராட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்து உன்னிப்பாக ஆராய்ந்து ஜெயரத்தினம் வில்சன் என்ற ஆய்வாளர் ‘Break-up of Srilanka’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் 1983-86 ஆம் ஆண்டுகளின் நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“எனக்கு தெரிந்தவரை இலங்கையில் தங்களின் தலையீட்டுக்காகவே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டங்களை உருவாக்கி வெவ்வேறு கட்டங்களில் அமுல்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவின் இத் திட்டத்தால் தமிழர் அய்க்கிய முன்னணி தலைவர்களும், போராளி இயக்கங்களும் நம்பிக்கை பெற்றன. தமிழர் தலைவர்களை ஏமாற்றி திசை திருப்புவதுதான் இந்தியாவின் நோக்கம் என்ற கருத்து ஊகமாகக்கூட இருக்கலாம். ஆனால் – ஒன்று மட்டும் உண்மை. தமிழ் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் இந்தியா இந்த உதவிகளை செய்ததன் மூலம் அவர்கள் அனைவரும், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டார்கள்” என்று எழுதும் ஜெயரத்தனம் வில்சன், மேலும் எழுதுகிறார்:
“இந்தியாவின் ‘ரா’ (RAW) உளவு நிறுவனம், இந்தக் கருத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டது. ‘ரா’வின் ஏஜெண்டுகள் தமிழ் போராளி குழுக்களிடையே ஊடுருவினார்கள். அவர்களிடமிருந்து பல முக்கிய ரகசிய தகவல்களை சேகரித்ததோடு, போராளிகள் குழுக்களிடையே பிளவுகளை உருவாக்கி, ஒரு குழு, மற்ற குழுவை அடக்கிடும் வலிமை பெற்று விடாமல், சமநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இந்த முயற்சியில் முதல் கூட்டத்தில் ‘ரா’ உளவு நிறுவனம் வெற்றிப் பெற்றது என்பது உண்மைதான். ஆனால், கடைசியாக விடுதலைப் புலிகள், வலிமை பெற்று உயர்ந்து நின்றதைத் தடுக்க முடியாமல் ‘ரா’ அவர்களிடம் தோற்றுப் போய் விட்டது” – என்று எழுதுகிறார். ஆக -
• அமிர்தலிங்கத்தை சுட்டவர்கள் – மாத்தையாவின் ஆட்கள்.
• அமிர்தலிங்கம் மரணத்தைக் கண்டித்த – புலிகள் இயக்கம். அவரைக் கொன்றவர்கள் பேச்சுவார்த்தையை குலைக்க விரும்பும் சக்திகள் என்று பகிரங்க அறிக்கை விடுத்தது.
• அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவரே கொலையில் உறுதியான முடிவுக்கு வரவில்லை.
• இலங்கை அரசே, அமிர்தலிங்கம் கொலையில் புலிகள் தொடர்பை மறுத்தது.
• அமிர்தலிங்கத்தை கொலை செய்யக் கூடிய தேவையோ, அரசியல் சூழலோ புலிகளுக்கு இல்லை – இவ்வளவுக்குப் பிறகு ராஜீவ் சர்மா, அமிர்தலிங்கத்தைக் கொன்றது புலிகள் தான் என்று பழிபோட்டு விடுகிறார்.
ஒரு காலத்தில் ஈழத்தில் தமிழர்களின் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நின்ற அமிர்தலிங்கம், 1981க்குப் பிறகு இந்தியாவை நம்பினார். இந்திரா காந்தி தமிழ் ஈழத்தை வென்று, தம்மிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், 1984 இல் இந்திரா, சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அவரது கனவு தகர்ந்தது.
அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த 5 ஆண்டுகாலமும் தற்காலிகமாக தமிழ்நாட்டில் அரசு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந்திய உளவு நிறுவனத்தோடு அமிர்தலிங்கம் மேற்கொண்ட ரகசிய உடன்பாடுகள் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வந்த அமிர்தலிங்கம் வழியாக அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம், ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு வந்திருக்கக் கூடும். தாங்கள் வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் ரகசிய திட்டங்கள் அம்பலமாவதற்கு உளவுத் துறை எப்போதுமே வாய்ப்புகளைத் தருவதில்லை, இது உளவுத் துறையின் செயல்பாடுகளை அவதானிப்போருக்கு நன்றாகவே தெரியும். அந்த சதிக்கே அமிர்தலிங்கம் பலியானார்.
இதேபோல், 1985 ஆம்ஆண்டில் யாழ்ப்பாணத்தில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.தர்மலிங்கம், எம். ஆலால சுந்தரம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தப் பழியும் விடுதலைப் புலிகள் மீது தான் போடப்பட்டது. அது உண்மை தானா? அதையும் தான் பார்த்து விடுவோமே!
(தொடரும்)
விடுதலை இராசேந்திரன்
- ராஜீவ் கொலை - காங்கிரஸ் ஆட்சி அழித்த கோப்புகள் (1)
- மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்? (2)
- ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)
- பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம் (4)
- அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன? (5)
- உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை! (6)
- பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்! (7)
- பிரபாகரனை 'தீர்த்துக்கட்ட' சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?
- ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு
- இந்திய அரசில் மலையாளிகள் ஆதிக்கம்
- இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசே
- இனப்படுகொலையில் இந்தியாவின் ரகசிய உதவிகள்
- போர்க் குற்றம் புரிந்த ராஜபக்சே: பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்
- வன்னியில் ஒரு லட்சம் தமிழர்களை ராணுவம் படுகொலை
- அய்.நா.வில் படுகொலைகளை மறைத்தவர் விஜய் நம்பியார்
- போர்க்குற்றம் - “எங்களை இந்தியா காப்பாற்றும்” - இலங்கை அரசு
- கி. வீரமணியின் ‘2010 ஆம் ஆண்டு’ கொள்கை துரோகங்கள்
- அருந்ததிராய் பேசியதில் குற்றம் என்ன?
http://www.keetru.com
Comments