தேசியத் தலைவருக்கு வைக்கப்படும் குறி - பின்னணியும் உண்மை நிலையும்

80களின் தொடக்கத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு முறை பொதுமக்கள் பிரயாணம் செய்யும் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். போராட்டம் ஆரம்பமாகிய கால கட்டம் அது. "பிரபாகரன்" என்ற பெயர் அப்பொழுதுதான் மெது மெதுவாக பிரபல்யமாகிக் கொண்டிருந்தது.

பிரபாகரன் என்பவர் எப்படி இருப்பார் என்பதைக் கூட சரியாக அறிந்திராத சிறிலங்காவின் காவல்துறை தேசியத் தலைவரை தேடி அலைந்து கொண்டிருந்தது.தேசியத் தலைவர் பேருந்து ஒன்றில் பயணிக்கும் விடயம் சிறிலங்கா காவல்துறைக்கு தெரிந்து விட்டது. எந்தப் பேருந்தில் பயணிக்கிறார், என்ன உடை அணிந்திருக்கிறார் என்பதை எல்லாம் சரியாகத் தெரிந்து கொண்ட காவல்துறை பேருந்தில் ஏறி தேசியத் தலைவரை தேடியது. தேசியத் தலைவரின் இருக்கைக்கு முன்னால் அவரைப் போன்ற உடையணிந்திருந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்தான் பிரபாகரன் என்று தவறுதலாக எண்ணிய சிறிலங்காவின் காவல்துறை அவரைக் கைது செய்து கொண்டு சென்றது.இது அன்றைய காலத்தில் போராளிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்தி.

இந்திய இராணுவத்தினரோடு நடந்த சண்டைகளிலும் தேசியத் தலைவரை இந்தியப் படையினர் பலமுறை நெருங்கியிருக்கிறார்கள். எத்தனையோ முறை தேசியத் தலைவர் அருகில் நிற்பது தெரியாமல் இந்திய இராணுவம் கடந்து சென்றிருக்கிறது.சிறிலங்காப் படையின் வான்தாக்குதலில் வீரச் சாவடைந்த பிரிகேடியர் தமிழ் செல்வன் சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அதிலே அவர் கேட்பவர் மனம் பதைபதைக்கக் கூடிய ஒரு விடயத்தை சாதரணமாக வெளிப்படுத்தினார்.இந்திய இராணுவம் தேசியத் தலைவரை இலக்கு வைத்து பெரும் தாக்குதல்களை முடுக்கி விட்டிருந்தது. இந்த நிலையில் தேசியத் தலைவர் பிரிகேடியர் தமிழ்செல்வனுக்கு ஒரு உத்தரவை வழங்கினார். எதிரியிடம் உயிரோடு அகப்படக் கூடாது என்ற உறுதியான முடிவில் இருந்த தேசியத் தலைவர், இன்னும் ஒரு முடிவையும் எடுத்திருந்தார். தன்னுடைய உடலையும் எதிரி கைப்பற்றக் கூடாது என்பதுதான் அது. அதன்படி எதரியிடம் கிடைக்காதவாறு தன்னுடைய உடலை முற்று முழுதாக எரித்து விட வேண்டும் என்பதுதான் தேசியத் தலைவர் தமிழ்செல்வனுக்கு வழங்கிய உத்தரவு.

அதன் பிறகு அந்த உத்தரவின் படி தேசியத்தலைவர் செல்கின்ற இடத்திற்கு எல்லாம் தமிழ்செல்வனும் ஒரு பெற்றோல் கலனுடன் சென்று வந்தார்.இதை நினைத்துப் பாhர்க்கின் போதே மனம் சிலிர்க்கின்றது. தேசியத் தலைவரின் இந்த உத்தரவிற்கு காரணம் போராட்டத்தை தக்க வைப்பதுதான். தனக்குப் பின்பும் விடுதலை பெறும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்பதில் தேசியத் தலைவர் உறுதியாக இருந்தார்.எதிரியிடம் அகப்படும் நிலையில் பலமுறை இருந்த தேசியத் தலைவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தால் எதிரியிடம் சிக்காது தப்பினார். எதிரியின் கவனக்குறைவைப் பயன்படுத்தி சில முறையும், தன்னுடைய மதியூகத்தால் சில முறையும், சண்டைகள் செய்து சில முறையும் தேசியத் தலைவர் எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொண்டார். இன்றைக்கு தேசியத் தலைவர் நிற்கும் பக்கமே எதிரிகளால் நெருங்க முடியாத அளவிற்கு விடுதலைப் புலிகள் பெரும் பலத்தோடு நிற்கிறார்கள். வேறு வழியில்லாத எதிரிகளும் கற்பனைகளில் தேசியத் தலைவரை சாகடித்து இன்பம் காண்கின்றனர். இப்படி தேசியத் தலைவரை கற்பனையில் சாகடிக்கும் பழக்கம் எதிரிகளுக்கு எப்பொழுது ஏற்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை.

1986ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்" பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது. விடுதலைப் புலிகள் சென்று கொண்டிருந்த ஒரு படகை சிறிலங்கா கடற்படை தாக்கி மூழ்கடித்ததாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்து விட்டார்கள் என்றும் அப் பத்திரிகையின் செய்தி கூறியது. செய்தி அத்துடன் முடிந்துவிடவில்லை. உடல்கள் அனைத்தும் கடலில் மூழ்கிவிட்டதாகவும், ஆனால் கடலில் மிதந்த ஒரு அடையாள அட்டையை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும், அந்த அடையாள அட்டையில் "வேலுப்பிள்ளை பிரபாகரன்" என்ற பெயர் இருந்ததாகவும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்திருந்தது. அநேகமாக இதுதான் ஆரம்பமாக இருக்க வேண்டும். அதன் பிறகும் பல முறை எதிரிகள் தேசியத் தலைவரை தமது கற்பனையில் சாகடித்து விட்டார்கள்.

இந்தியப் படையினரின் காலத்தில் தேசியத் தலைவரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தை எல்லாம் சொன்னார்கள். சுனாமி வந்த பொழுது உடல் வைக்கப்படும் பேழையின் நிறத்தையும் பெறுமதியையும் சொன்னார்கள். கடந்த நவம்பரின் போது தேசியத் தலைவர் காயம் என்று கதை கதையாக சொன்னார்கள். அதன் பிறகு தேசியத் தலைவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இடையில் அவருடைய மனைவியையும் இந்தியா அனுப்பி வைத்தார்கள். சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் தேசியத் தலைவரை தென்னாபிரிக்காவிற்கும் அனுப்பி வைத்திருந்தார்கள்.இப்படி எதிரிகள் காணும் கனவிற்கு எந்த ஒரு வரைமுறையும்; இருப்பது இல்லை. கனவுகள் என்றவுடனேயே அவைகள் விதிகளுக்குள் உட்பட வேண்டிய அவசியம் இல்லாமலும் போய்விடுகிறது.

கடந்த வாரம் புதன் கிழமை தேசியத் தலைவர் தங்கியிருந்த முகாமை தாக்கி அழித்து விட்டதாக சிறிலங்கா அரசு செய்தி ஒன்றைப் பரப்பியது. இம் முறை இலக்குத் தவறவில்லை என்ற செய்தி படையினர் மத்தியில் உலாவந்து அது சிங்கள மக்கள் மத்தியிலும் பரவியது. பல சிங்களவர்கள் வெடி கொளுத்தியும், பால்சோறு பொங்கியும், மது அருந்தியும் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். கடைசியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று தெரிந்து ஏமாற்றம் அடைந்தார்கள்.தேசியத் தலைவரை இலக்கு வைக்கும் முயற்சியில் சிங்கள அரசு தற்பொழுது தீவிரம் காட்டுவது போல் தெரிந்தாலும், இம் முயற்சி பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்ற ஒன்று.

இன்னும் சொல்லப் போனால் பேச்சுவார்த்தைக் காலங்களிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதுதான் உண்மை. அப்பொழுது மிக ரகசியமான முறையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்பொழுது வெளிப்படையாக அறிவித்து விட்டு முயற்சி செய்கிறார்கள். அஅவ்வளவுதான் வித்தியாசம்.இம் முயற்சிக்கு சில வல்லரசு நாடுகளின் ஆதரவும் உள்ளது என்பது இதில் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு செய்தி. இந்த வல்லரசு நாடுகள் தேசியத் தலைவரை அகற்றுவதன் மூலம் தமிழர் போராட்டத்தை இல்லாமல் செய்து விடலாம் என்று நம்புகின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தேசியத் தலைவரை சுற்றி பின்னப்பட்டுள்ளதாக கருதுகின்ற இந்த நாடுகள் தேசியத் தலைவரை அகற்றும் நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருகின்றன. இன்றைக்கு சிறிலங்காவிற்கு வழங்கப்படுகின்ற தொழில்நுட்ப உதவிகள் மிகப் நவீனமானவை. மிக இரகசியமான முறையில் வழங்கப்படுகின்ற இந்த உதவிகள் சிறிலங்காவிற்கு தன்னுடைய இலக்கை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.ஆனால் இந்த வல்லரசு நாடுகள் சில விடயங்களை வெகு இலகுவாக மறந்து விடுகின்றன. தலைமைகளை அழிப்பதால் மக்கள் போராட்டம் அழிந்து போய்விடுவது இல்லை. மத்திய கிழக்கில் இஸ்ரேலும் வான் மற்றும் ஏவகணைத் தாக்குதல்கள் மூலம் ஹமாஸ் இயக்கத்தின் தலைமையை அழித்தது. ஆனால் ஹமாஸ் இயக்கம் மேலும் வீறு கொண்டு எழுந்தது. மக்கள் ஆதரவோடு பாலஸ்தீன நிர்வாகத்தையும் கைப்பற்றியது.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்நாமிய மக்கள் போராடிய போது, விடுதலைப் போராட்டத்தை வழி நடத்திய ஹோசிமிங் போராட்டம் முடிவு பெறும் முன்பே இயற்கை மரணம் அடைந்தார். அதன் பிறகும் ஆறு வருடங்கள் வியட்நாம் மக்கள் போராடி அமெரிக்கப் படையினரை விரட்டி அடித்தார்கள். இந்த வல்லரசு நாடுகள் தங்களுடைய சொந்த அனுபவங்களை ஒரு முறை மீட்டிப் பார்த்தாலே சில விடயங்களை புரிந்து கொள்ள முடியும்.

வரலாறுகள் சொல்கின்ற செய்திகளை கவனத்தில் எடுக்காது தேசியத் தலைவரை குறி வைப்பதற்கு பல ஆயிரம் கோடிகளை சிறிலங்கா அரசு விரயம் செய்து வருகின்றது. "நான் பிரபாகரனின் தலையைக் கோரியிருக்கிறேன்", "பிரபாகரனின் தலை என்னுடைய காலில் விழ்ந்து பின்புதான் போர் நிற்கும்" என்று சொன்னவர்களும் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாதபடி நினைவில் வருகின்றார்கள். இப்படிச் சொன்னவர்களின் கதையை வரலாறு பின்பு எப்படி எழுதியது என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.இங்கே சுட்டிக்காட்டப்படக் கூடிய விடயம் இன்னும் ஒன்று இருக்கிறது. "வன்னியில் இருந்து எமக்கு உறுதியான தகவல்கள் கிடைக்கின்றன, எம்மால் தேசியத் தலைவரை இலக்கு வைக்க முடியும்" என்று அறிக்கை விடுகின்ற சிங்களத் தளபதிகளையும், பசில் ராஜபக்சவையும் ஏற்றிக் கொண்டு சென்ற உலங்குவானூர்த்தியை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

உலங்கு வானூர்த்தி ஐந்து நிமிடங்கள் தாமாதமானதாலேயே சிறிலங்கா அரச, இராணுவ உயர்மட்டக் குழுவினர் தப்பிப் பிழைத்தனர். இந்தத் தாக்குதல் யாரைப் பற்றி யாருக்கு உறுதியானதும் சரியானதுமான தகவல்கள் கிடைக்கின்றன என்ற செய்தியை சொல்கிறது.அதே வேளை தேசியத் தலைவரை இலக்கு வைத்துள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு வெளியிடும் அறிக்கைகள் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் ஒருவித கலவரத்தை ஏற்படுத்தி உள்ளதை இங்கே மறுக்க முடியாது.

இதற்கு முக்கிய காரணம் எம்முடைய பரப்புரையின் பலவீனம்தான்.

தன்னுடைய அறிக்கைகளின் மூலம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை கலவரப்படுத்தி சோர்வடையச் செய்யும் விடயத்தில் சிறிலங்கா அரசு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.சிறிலங்கா அரசின் இந்தப் பரப்புரையை எதிர்கொள்வதற்கு இன்னமும் சரியான சொற்களை தேட வேண்டிய நிலையில்தான் நாம் நிற்கின்றோம். பரப்புரையின் வடிவத்தை நாம் முற்று முழுதாகவே மாற்ற வேண்டுமோ என்ற கேள்வியை இன்றைய நிலை எழுப்புகிறது.புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் ஒன்றை சிந்திக்க வேண்டும்.

தேசியத் தலைவரை தாம் இலக்கு வைத்துள்ளதாக சிறிலங்கா அரசு வெளியிடும் அறிக்கைகள் புலம்பெயர்ந்து தமிழ் மக்களை கலவரப்படுத்துவதை புரிந்து கொள்ள முடிகிறது.

தேசியத் தலைவர் மீது பற்றும் தேசியத் தலைவரின் காலத்தில் தமிழீழம் பெற வேண்டும் என்ற உறுதியும் நியாயமானவை. ஆனால் அதற்காக போதுமானவைகளை நாம் இதுவரை செய்தோமா என்ற கேள்வியை எமக்குள்ளும் ஒரு முறை எழுப்புவோம்.

Comments