திருப்பத்தை ஏற்படுத்தும் குறிசூட்டுப் படையணி


இந்திய இராணுவம் பல போர்களை சந்தித்திருக்கிறது। பாகிஸ்தானுடன் இந்தியா நடத்திய போர்களில் பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்திருக்கிறது। குறிப்பாக 1971ஆம் ஆண்டில் பங்களாதேஸ் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நடந்த யுத்தத்தில் உத்தியோகபூர்வ தகவல்களின்படி ஏறக்குறைய நான்காயிரம் இந்தியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய ஈழப் போரில் ஏறக்குறைய 1400 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். ஆனால் எங்குமே சந்தித்திருக்காத ஒரு இழப்பை இந்திய இராணுவம் ஈழத்தில் சந்தித்தது. இந்திய இராணுவம் அனைத்துப் போர்களிலும் இழந்த அதிகாரிகளை விட ஈழத்தில் அதிகமான அதிகாரிகளை இழந்தது. இந்திய இராணுவத்திற்கே தளபதியாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் கூட ஈழப் போரில் கொல்லப்பட்டார்கள். ஈழ இந்தியப் போரில் இந்திய இராணுவம் சந்தித்த பல அதிர்ச்சிகளில் இது முக்கியமானது.

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் அதிகமாக கொல்லப்பட்டதன் முதன்மையான காரணமாக விடுதலைப் புலிகள் நடத்திய குறிசூட்டுத் தாக்குதல்களே அமைந்தது. பனை மரங்களிலும், வீடுகளின் கூரைகளிலும் மறைவாக நிலையெடுத்து விடுதலைப் புலிப் போராளிகள் நடத்திய குறி சூட்டுத் தாக்குதல்கள் பல இந்திய இராணுவ அதிகாரிகளை பலி கொண்டன. அதிகாரியை இழந்த படையணிகள் நிலைகுலைந்து போய் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிக்குப்பட்டன.

இந்திய ஈழப் போர் ஆரம்பமானவுடன் கொக்குவில் பிரம்படியில் தங்கியிருந்த தேசியத் தலைவரையும் மற்றைய தளபதிகளையும் அழித்துவிடும் நோக்கில் 12.10.1987 அன்று இந்திய இராணுவத்தின் விசேட சீக்கிய படையணி உலங்குவானூர்த்தி மூலம் தரையிறங்கியது. தரையிறங்கிய இந்தியப் படையினரை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்து தாக்கி அழித்தனர். 29 இந்தியப் படையினர் அந்தச் சண்டையில் கொல்லப்பட்டனர். ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

இந்த மிக முக்கிய சண்டையில் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் போராளிகள் சிறப்பான பங்கினை ஆற்றினார்கள். இந்தியப் படையணியின் தகவல்தொடர்பாளி குறிசூட்டுத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டார். வேறு பலரும் குறிசூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஒரு படையணி தரையிறங்கி நிலை கொள்ள இன்னொரு படையணியும் வந்து இணைந்து கொள்வதாக இந்திய இராணுவம் திட்டம் தீட்டியிருந்தது. ஆனால் அனைத்து திட்டங்களும் பிழைத்துப் போய் இந்திய படையணி பலத்த அழிவுக்கு உள்ளானது.

பின்பு யாழ் குடாவில் தொடர்ந்து ஒரு மாதம் நடந்த சண்டைகளிலும் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் போராளிகள் தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்திய இராணுவத்திற்கு பலத்த இழப்பை ஏற்படுத்தினர். விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் இருந்த தப்புவதற்காக இந்திய இராணுவ அதிகாரிகள் சாதரண படையினரின் சீருடைகளை அணிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. தமக்கு "சல்யுட்" அடிப்படை தவிர்க்கும்படியும் மற்றைய படையினருக்கு அதிகாரிகள் கட்டளையிட்டிருந்தனர். இவைகளையும் ஈழத்தில் வந்தே தாம் கற்றதாக இந்திய இராணுவ தளபதிகள் தமது எழுத்துக்களின் மூலம் ஒப்புக்கொண்டும் உள்ளனர்.

இந்திய ஈழப் போரில் முக்கிய பங்காற்றிய குறிசூட்டுப் போராளிகள் பின்பு வந்த போர்களிலும் தமது பங்களிப்பை வழங்கினர். இன்றைக்கு குறிசூட்டுப் போராளிகளைக் கொண்டு தனித்த படையணிகள் உருவாக்கப்பட்டு, அந்தப் படையணிகள் போரின் போக்கையே மாற்றுகின்ற அளவிற்கு வளர்ச்சி பெற்று நிற்கின்றனர்.குறிசூட்டுத் தாக்குதல்கள் ஒரு சண்டையின் போக்கை மாற்றி அமைத்து விடக் கூடியவை. எதிரியை மனரீதியாக மிகவும் பாதிக்கக் கூடியவை.

குறிசூட்டுத் தாக்குதலில் மரணம் 90 வீதம் நிச்சயமானது. மிகத் தொலைவில் இருந்து திடீரென்று வருகின்ற தோட்டா சக படையினனை சாகடிக்கின்ற போது மற்றைய படையினர் அடையக்கூடிய பீதி எல்லாவற்றையும் ஆட்டம் காண வைத்துவிடும். தாக்குதல் நடத்துபவர்களை பதிலுக்கு இலக்கு வைக்க முடியாது இருப்பதும் இதில் ஒரு முக்கியமான விடயம்.

குறிசூட்டுத் தாக்குதல்கள் ஐரோப்பிய நாடுகள் நெப்போலியனுடன் நடத்திய போர்களில் கூட (1792 - 1815) இடம்பெற்றிருக்கின்றன. 1802ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 95வது ரெஜிமென்ற் என்ற பெயரில் ஒரு குறிசூட்டுப் படையணி உருவாக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு வேட்டைத் துப்பாக்கிகள்தான் குறிசூட்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க உள்நாட்டுப் போரிலும் (1861 - 1865) குறிசூட்டுப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிசூட்டுப் படையனரின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்டது முதலாம் இரண்டாம் உலகப் போர்களின் போதுதான். அதுவும் இரண்டாம் உலகப் போரில் குறிசூட்டுப் படையினர் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. சோவியத் யூனியனின் படையினர் நடத்திய குறிசூட்டுத் தாக்குதல்களில் ஏறக்குறைய இருபதினாயிரம் படையினரை ஜேர்மனி இழந்தது.

பெரும்பாலான குறிசூட்டுப் படையினரின் "கடவுளாக" இன்றைக்கும் விளங்குகின்ற சிமோ கெய்ஹே (Simo Keyhe) என்பவர் இரண்டாம் உலகப் போரில் நிகழ்த்திய சாதனைகள் சிலிர்க்கச் செய்பவை. இரண்டாம் உலகப் போரின் ஒரு தனித்த பகுதியாக பின்லாந்திற்கும் சோவியத் யூனியனுக்கும் ஒரு ஐந்து மாத காலம் யுத்தம் நடந்தது. சோவியத் யூனியன் பின்லாந்தை ஆக்கிரமிக்க முற்பட்டதை தொடர்ந்து யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தின் போது பின்லாந்தை சேர்ந்த சிமோ கெய்ஹே சோவியத் படையினருக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

பனிபடந்த குளிர் காலத்தில் வெள்ளை நிற ஆடையை அணிந்து பனியோடு பனியாக ஊர்ந்து வரும் சிமோ கெய்ஹே தினமும் பல சோவியத் படையினரை சுட்டு வீழ்த்தினார். அவரை "வெள்ளை மரணம்" என்று சோவியத் படையினர் பீதியோடு அழைத்தனர். சுட்டு வீழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை சிமோ கெய்ஹே குறித்து வைத்திருந்தார். ஐந்து மாதம் நடந்த போரில் அவர் சுட்டு வீழ்த்திய சோவியத் படையினரின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சம் அல்ல. 542 சோவியத் படையினரை சிமோ கெய்ஹே மொத்தமாக சுட்டு வீழ்த்தியிருந்தார். ஒரு தனியாள் 542 எதிராளிகளை அழிப்பது என்பது சாதரண விடயம் அல்ல. ஒரு குறிசூட்டுப் படையினன் எதிரிக்கு எத்தகைய அழிவினை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சிமோ கெய்ஹே ஒரு சிறந்த உதாரணம்.

குறிசூட்டுப் படையணியில் பெண்களும் இடம் பெற்று பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். லுட்மிலா என்று ரஸ்யப் பெண்மணி இரண்டாம் உலகப் போரில் 309 ஜேர்மனியப் படையினரை வீழ்த்தியிருக்கிறார்.

குறிசூட்டுத் தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் பொதுவாக 2000 மீற்றர்கள் வரை தாக்கு திறன் கொண்டவை. ஒரு எதிரியை இலக்கு வைப்பதற்கு 300 மீற்றர் தூரம் வரை நெருங்கிச் செல்வதும் உண்டு. ஆப்கானிஸ்தானில் தற்பொழுது இடம் பெற்று வரும் யுத்தத்தில் நேட்டோப் படையணியில் உள்ள கனடியப் படைவீரர் ஒருவர் 2430 மீற்றர் தொலைவில் இருந்து ஒரு தலிபான் போராளியை வீழ்த்தியதுதான் மிக அதிக தூரமாக பதியப்பட்டுள்ளது.

மிகத் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்துவதும், ஒருவரே பல நூறு படையினரை இல்லாது ஒழிப்பதும் குறிசூட்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்தும் முக்கிய தாக்கங்கள்.

தரைச் சண்டைகளில் ஈடுபடுகின்ற படையணிகளில் பொதுவாக ஒருவர் அல்லது இருவர் குறிசூட்டுப் படையினராக விளங்குவார்கள். ஒருவராகவோ இருவராகவோ ஆழ ஊடுருவிச் சென்று எதிரியை இலக்கு வைக்கின்ற குறிசூட்டுப் படையினரும் உண்டு. இருவராக செல்கின்ற போது ஒருவர் தாக்குதல் நடத்த மற்றவர் கண்காணிப்பை செய்வார். அதன் பிறகு கண்காணித்தவர் தாக்குதல் நடத்த முதலாமவர் கண்காணிப்பார். எதிரியை குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக இந்த முறை கையாளப்படும். ஐந்து பேர் கொண்ட குறிசூட்டுப் படையணிகளும் சில நாடுகளில் உண்டு.

ஒரு குறிசூட்டுப் படையினனை உருவாக்குவது சாதரண விடயம் இல்லை. மற்றைய படையணிகளை விட கடும் பயிற்சி இதற்கு தேவைப்படும். குறி தவறாது தாக்குதல் நடத்தவும், எப்பகுதியிலும் தன்னை உரு மறைத்துக் கொள்ளவும், எந்த நிலையிலும் மன அழுத்தங்களுக்கு உட்படாது இருக்கவும் ஒரு குறிசூட்டுப் படையினன் பயிற்சி பெற வேண்டும்.

இவ்வாறு நீண்ட பயிற்சிகளோடு களம் இறங்கும் குறிசூட்டுப் படையினனின் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்கு எதிரிக்கு ஓரிரு வழிகள்தான் உள்ளன. தானும் குறிசூட்டுப் படையணியை ஈடுபடுத்துவது, அதை விட குறிசூட்டுத் தாக்குதலுக்கு இலக்காகின்ற போது சுற்றி வரை புகையை எழுப்பி தம்மை பாதுகாப்பது. இவைகள்தான் படை வல்லுனர்கள் முன்வைக்கின்ற யோசனைகள். இவைகளை விட வேறு வழிகள் இல்லை.

ஆனால் மன்னாரிலும், மணலாற்றிலும் காடுகளுக்கால் முன்னேற முனையும் சிறிலங்காப் படையினருக்கு இந்த வழிகள் பெரும்பாலும் உதவப் போவது இல்லை. விடுதலைப் புலிகள் குறிசூட்டுத் தாக்குதலுக்கு என்றே தனித்த படையணிகளை உருவாக்கி களம் இறக்கியுள்ள இன்றைய நிலையில் சிறிலங்காப் படைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மன்னார் களமுனையில் 50இற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை அடம்பன் நோக்கி முன்னகர்ந்த சிறிலங்காப் படையினரை ஒரு குறிப்பிட்ட தூரம் முன்னேற அனுமதித்த விடுதலைப் புலிகள், பின்பு தாக்குதல் நடத்தி அவர்களை பாதுகாப்பற்ற இடத்திற்கு விரட்டி, அங்கு வைத்து குறிசூட்டுத் தாக்குதலில் 28 சிறிலங்காப் படையினரை வீழ்த்தினர்.

கண்ணிவெடிகளால் பல படையினர் கால்களை இழந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படையணியனர் நடத்தி வரும் தாக்குதல்கள் சிறிலங்கா அரசை மிரளச் செய்துள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகள் புதியரக எறிகணைகளை உருவாக்கியுள்ளனர் என்ற செய்தியும் சிறிலங்கா அரசை பீதியடையச் செய்துள்ளது. இன்றைய நிலையில் களமுனைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படப் போகின்றது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

- வி.சபேசன் (15.02.08)

Comments