புலிகளின் புலனாய்வுத்துறை வலைக்குள் இருந்து இராணுவ உயர்மட்டக் குழுவினர் இலகுவாக தப்பிவிட முடியாது


இராணுவ உயர்மட்டத்தின் நகர்வுகள் குறித்த துல்லியமான தரவுகளை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தொடர்ந்தும் சேகரித்து வருவது கடந்த 28 ஆம் திகதி பலாலி விமானப்படைத்தளம் மீது நடத்தப்பட்ட ஆட்டிலறித் தாக்குதலின் மூலம் வெளிப்படையாகி இருக்கிறது.


அன்றையதினம் பலாலி விமானத் தளத்திலிருக்கும் இடைக்காடு என்ற மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட இயந்திர காலாற் படைப்பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இயந்திர காலாற் படைப்பிரிவின் பயிற்சியை நிறைவு செய்த 8 அதிகாரிகளுக்கும், 125 படையினருக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இயந்திர காலாற்படைப் பிரிவில் 3 ஆவது இலகு காலாற்படை, 10 ஆவது சிங்க றெஜிமென்ட், 4ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகிய மூன்று பற்றாலியன்களும் 2 ஆவது மற்றும் 3 ஆவது கவசப்படைப் பிரிவுகளைச் சேர்ந்த அனுபவம்மிக்க படையினரும் மேலதிக பயிற்சிகளின் பின்னர் இணைக்கப் பட்டிருக்கின்றனர்.

இந்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக லெப்.கேணல் ஜி.டி.என். ஜெயசுந்தர விளங்குகிறார். இவரது தலைமையில் அன்றையதினம் பயிற்சியை முடித்த படையினரின் அணிவகுப்பும் இடம்பெறவிருந்தது. இந்த நிகழ்விற்காக இயந்திர காலாற் படைப்பிரிவின் படையினர் அப்பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் பிரசன்னமாகியிருந்தனர். அணிவகுப்பின் நிமித்தம் எட்டு டாங்கிகளும் அங்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வு வழக்கத்திற்கு மாறாக வெகுவிமரிசையாக இடம்பெறுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. இலங்கையின் 60 ஆவது சுதந்திரதின விழாவில் இதே அணியினரிடமே அணிவகுப்பு மரியாதையை நிகழ்த்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது. எனவே, பலாலியில் இடம்பெறவிருந்த இந்த அணியினரின் அணிவகுப்பு என்பது முக்கியத்துவம் மிக்கதொன்றாகவே படைத்தரப்பால் கருதப்பட்டது.

அடுத்து, இந்த இயந்திர காலாற் படைப்பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வுக்காக ஏனைய மாவட்டங்களில் இருந்தும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் வரவழைக்கப்பட்டதுடன், பிரதம விருந்தினர்களாக கொழும்பிலிருந்து உயர்மட்டக்குழு ஒன்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கிணங்க வன்னி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, இயந்திர காலாற் பிரிகேட்டின் தளபதி கேணல் ரால்ப் நுகேரா, 53 ஆவது டிவிசன் தளபதி மேஜர் ஜெனரல் சிறிநாத் ராஜபக்ஸ, 55 ஆவது டிவிசன் தளபதி பிரிகேடியர் கமால் குணரத்ன, 52 ஆவது டிவிசன் தளபதி கேணல் கபில உடலுப்பொல ஆகியோர் உட்பட மேலும் பல பிராந்தியத் தளபதிகளும் இந்த அங்குரார்ப்பண நிகழ்விற்கு அழைக்கப்பட்டனர்.

இதைவிட 1500 இற்கும் மேற்பட்ட படையினரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வைக் கண்டுகளிப்பதற்காக அப்பகுதிக்கு வருகை தரவிருந்தனர்.
இவர்களைத்தவிர இந்த அங்குரார்ப்பண நிகழ்விற்காக கொழும்பில் இருந்து செல்லும் இராணுவ உயர்மட்டக் குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா, கூட்டுப்படைத் தளபதி எயர் மார்ஷல் டொனால்ட் பெரேரா மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் சிலர் இருந்தனர்.

பலாலிக்கான இத்தகைய பயணங்களை பெரும்பாலும் இரத்மலானை விமான நிலையத்தில் இருந்தே மேற்கொள்ளும் இராணுவ உயர்மட்டக் குழுவினர் இந்த தடவை தமது பயணத்தின் இரகசியத்தின் முக்கியத்துவம் கருதி, இரத்மலானை விமான நிலையத்திற்குச் செல்லாது, கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிட்டனர்.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் அன்றையதினம் காலை எட்டு மணியளவில் பாதுகாப்பு அமைச்சரின் அலுவலக மைதானத்தில் விமானப்படையின் பெல் ரக உலங்குவானூர்தி ஒன்று வந்திறங்கியது. அதில் கொழும்பில் இருந்து பலாலிக்குச் செல்வதற்காக பாதுகாப்பு அமைச்சில் தயாராக நின்ற இந்த உயர்மட்டக் குழுவினர் ஏறி கட்டுநாயக்க நோக்கிப் பயணித்தனர்.

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இவர்களை பலாலிக்கு ஏற்றிச் செல்வதற்காக அங்கே ஏ.என். 32 ரக அன்ரனோவ் விமானம் தயார் நிலையில் இருந்தது. இந்த விமானம் காலை 9.15 மணிக்கு பலாலியில் தரையிறங்கும் என்று ஏற்கனவே பலாலி விமானப்படை கட்டுப்பாட்டுக் கோபுர நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதும், கட்டுநாயக்கவில் இருந்து இந்த விமானம் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் தாமதமானதால், பலாலியில் தரையிறங்கும் நேரமும் 15 நிமிடங்களால் பின் தள்ளப்பட்டது.
இதுகுறித்து பலாலி விமானப்படை கட்டுப்பாட்டுக் கோபுர நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் காலை 9.30 இற்கு இந்த விமானம் பலாலியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதனடிப்படையில் அன்றுகாலை 9.45 மணிக்கு இயந்திர காலாற் படைப்பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வை ஆரம்பிக்கவும் நேரம் குறிக்கப்பட்டது. சரியாக 9.15 மணியளவில் யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட மற்றும் சிலர் கொழும்பில் இருந்து பலாலிக்கு வரும் இராணுவ உயர்மட்டக் குழுவை வரவேற்பதற்குத் தயாராகினர்.

அந்தச் சந்தர்பப்பத்தில்தான் எவருமே எதிர்பாராத வகையில் பலாலி விமானத் தளத்தின் சூழலிலும் அதனைத் தாண்டி மயிலிட்டி மற்றும் அதனையண்டிய பகுதிகளிலும் புலிகளின் ஆட்டிலறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. இராணுவ உயர்மட்டக் குழுவை வரவேற்பதற்கு தயாரானவர்களும், அங்குள்ள விமானப்படை கட்டடங்களில் குழுமியிருந்தவர்களும், அணிவகுப்பிற்காக தயாராகிக் கொண்டிருந்த இயந்திர காலாற்படைப் பிரிவின் படையினரும் திக்கித்திணறி பாதுகாப்புத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அந்தநேரத்தில், கட்டுநாயக்கவில் இருந்து இராணுவ உயர்மட்டக்குழுவை ஏற்றியவாறு பலாலி நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக மாதகல் - கீரிமலைக் கடற்கரையோகமாக தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தது. பலாலி விமானக் கட்டுப்பாட்டு கோபுர நிலையத்தில் இருந்து இந்த விமானத்தின் விமானிக்கு புலிகள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கும் தகவல் வருவதற்கு சற்று தாததமானதால், இந்த விமானம் பலாலி வான்பரப்பு வரை சென்று தரையிறங்குவதற்கு தயாரானபோதுதான் பலாலியில் இருந்து அவசர அறிவிப்பு ஒன்று விமானிக்குக் கிடைத்தது.

தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு விமானத்தை மீண்டும் உயரப் பறக்க மேலெழுப்பிய விமானி, விமானத்தின் உள்ளே அளவளாவிக் கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கும் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் பலாலியில் இருந்து கிடைத்த அறிவிப்பு குறித்த விபரங்களை வழங்கினார்.

உடனடியாக விமானத்தை கட்டுநாயக்க நோக்கித் திருப்பும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ விமானிக்கு அறிவுறுத்தவே, பலாலியில் இடம்பெறவிருந்த இயந்திர காலாற்படைப் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்குபற்றும் இராணுவ உயர்மட்டக்குழுவின் திட்டம் தோல்வியடைந்தது.
எத்தனையோ இரகசியம் பேணி, தமது நகர்வுகள் குறித்து ஒரு சிலருக்கு மட்டும் அறிவித்துவிட்டு இந்தப் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று எண்ணிய இராணுவ உயர்மட்டக் குழுவினருக்கு இது ஒரு அவமானமாகவே அமைந்தது.

தமது பயணம் குறித்தோ அல்லது இயந்திர காலாற்படைப் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வு குறித்தோ புலிகளுக்கு தகவல் கசிந்தது எப்படி என்ற ஆதங்கம், தம்முடன் உள்ளவர்களையே சந்தேகப்படும் நிலையை இராணுவ உயர்மட்டக் குழுவிற்குத் தோற்றுவித்திருக்கிறது.

இயந்திர காலாற்படைப் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வைத் திட்டமிட்டபடி மேற்கொள்ளாதுவிடின் புலிகளுக்குப் பயந்து தமது நிகழ்ச்சி நிரலை ஒத்திவைத்தாக விடும். ஏற்கனவே, கடந்தவருடம் பெப்ரவரி 14 ஆம் திகதி கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது டிவிசன் தலைமையகத்தில் இயந்திர காலாற்படைப் பிரிவின் தலைமையகத் திறப்புவிழா நடை பெற்றபோது, புலிகள் ஆட்டிலறிகள் மூலம் தாக்குதலை நடத்தினர்.
புலிகள் ஏவிய 17 ஆட்லறிகள் விழா அரங்கைச் சுற்றியே விழுந்திருந்தன.
இந்தத் தாக்குதலில் இயந்திர காலாற்படை பிரிகேட் தளபதி கேணல் ரால்ப் நுகேராவும், பற்றாலியன் கட்டளை அதிகாரி லெப்.கேணல் சுமித் அத்த பத்து, பிரதிக் கட்டளை அதிகாரி மேஜர் ஹரேந்திர பீரிஸ் உட்பட பலர் காயமடைந்;தனர்.
இத்தகையதொரு நிலை இயந்திர காலாற்படைப் பிரிவிற்கு மீண்டும் ஏற்பட்டு விட்டது என்று கூறுவது பெருத்த அவமானமாகும்.

எனவே அத்தகையதொரு நிலமை ஏற்பட விரும்பாத படைத்தரப்பு சில மணிநேரங்கள் கழித்தேனும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வை நடாத்தி முடித்துவிட வேண்டும் என்ற பிடிவாதத்தில் கடுமையான ஆட்லறி மற்றும் விமானத் தாக்குதல்களை புலிகளின் பகுதிகள் மீது நடத்திக்கொண்டு யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தலைமையில் இந்த நிகழ்வை நடத்தி முடித்திருக்கிறது.

யாழ். மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, இயந்திர காலாற்படை பிரிகேட்டின் தளபதி கேணல் ரால்ப் நுகேரா ஆகியோரே இயந்திர காலாற்படையின் அணிவகுப்பை ஏற்கும் நிலை தோன்றியது.

அதேநேரம், இந்த தாக்குதல் இராணுவ உயர்மட்டத்திற்கு பல்வேறு நெருக்குவாரங்களைக் கொடுத்திருக்கிறது. நினைத்த நேரத்தில் பலாலிக்கு விஜயங்களை மேற்கொள்வதென்பது பாதுகாப்பற்றது என்பதை இந்த தாக்குதலுடன் இராணுவ உயர்மட்டக் குழுவினர் உணர்ந்திருக்கின்றனர்.
மகிழினி

Comments