நான் செய்யக்கூடியது என்ன?

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் பல முனைகளுக்கூடான செயற்பாடுகளூடாகவே வெல்லப்பட முடியும் என்ற புரிதல் தற்போது ஏற்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் தமது வரலாற்றுக் கடைமைகளை உணர்ந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் தமது சக்திக்குட்பட்ட வகையில் பங்களிப்பை நல்கி வருகின்றனர். புலம்பெயர் வாழ்வில் ஒரு பெண் ஆற்றக்கூடிய பங்களிப்பு எத்தகையது என்பது பற்றிப் பேசுகிறார் அவுஸ்திரேலியாவில் வாழும்
ஜனனி பாரதி.

சர்வதேச மகளிர் தினச் சிறப்பிதழில் இந்த ஆக்கம் காலப் பொருத்தமானது என நாங்கள் கருதுகிறோம்.

'நிலவரம்" ஆசிரிய பீடம்

நான் (ஒரு குடும்பத் தலைவியாக, தாயாக) எனது செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான இலகுவான திட்டங்களை வகுத்து ஒருங்கிணைத்தேன். பின்னர் அதன்படி நடந்து கொண்டேன். இது எனக்கு மிகவும் ஆறுதலளிக்கும்; அநுபவமாக இருந்தது. சிறு, சிறு விடயங்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வல்லன. அதனால் இவ்விடயத்தில் ஈடுபாபாடில்லாமல் (நான் இதுவரை இருந்தது போல) இருக்கும் மக்களுடன் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

'பொது நலனுக்கான பிரார்த்தனை எப்போதும் பலனளிக்கும்" என்ற தமிழ் வாக்கைப்போல புதிய நிலைகளை ஸ்திரமாக அடைவதே எமது மக்களின் உறுதிப்பாடாக இருந்து வருகிறது. ஒரு பார்வையாளனாக (ஈடுபாடில்லாமல்) இதுவரை இருந்த நான் தற்போது எதையாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். சிறு சிறு வழிகளில் நான் செயற்படத் தொடங்கியுள்ளேன்.

இரு சிறுபிள்ளைகளின் தாயாக அவுஸ்திரேலியா- சிட்னியில் வாழும் எனக்கு பல கடப்பாடுகள் உள்ளன. இவற்றின் மத்தியில் எனது செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. ஆனால் அதை நான் செய்தேன். ஒரு பொதுவான இலக்கிற்காக நாமனைவரும் எம்மால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்தால் அந்த இலக்கு உருப்பெறும். அத்துடன் இவ்விடயங்களில் ஆத்மார்த்தமான மூலமும் இருப்பதாக நான் உணர்கிறேன். நிச்சயமாக இவ்வாறான விடயங்கள் வரும்போது சிலர் நம்பிக்கை அற்றவர்களாகவே உள்ளார்கள். இருந்தும் எவ்வாறான உதவிகளைத் தாம் செய்யலாம் என்று தெரியாத நிலையிலுள்ளவர்களிடம் இக்கட்டுரையின் இறுதியில் எனது எளிமையான யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பம் 1983 இல் இடம்பெற்ற இனப்படுகொலையின் (தமிழர்களிற்கெதிரான செயற்பாடுகளின்) மிகக் கொடூரமான அநுபவங்கள்தான். எனது குடும்பம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் குடியேறியது அப்போதுதான். மூன்று நாள் கப்பல் பயணத்தின் பின் மென்நீலக் கடலில், காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்தோம். பின்னர் அங்குள்ள கிராமப் பாடசாலையொன்றில் எமக்கு பாணும் உருளைக்கிழங்குக் கறியும் பரிமாறப்பட்டது. அங்கு நின்ற சிரேஷ்ட மாணவர்கள் எத்தனை அன்புடன் எமக்கு உணவு பரிமாறினார்கள். அந்த உணவு மட்டும் எத்தனை சுவை! குறிப்பாக மிக நெருக்கமான கப்பலில் மூன்றுநாள் கடற் பயணத்தால் ஏற்பட்ட சோர்வுடன் இருந்த எமக்கு அது மிகவும் சுகமளித்தது.

சிறுவர்கள் விரைவிலேயே நடந்ததை மறந்து, சந்தர்ப்பம் கிடைக்கும்போது மீண்டும் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். நானும்; அவ்வாறே அக்கொடிய நினைவுகளை மறந்து அவற்றிலிருந்து மீண்டு கொண்டேன்.
எமது மக்களுக்கும், யாழ்ப்பாணத்திற்கும் எனது நன்றிகள். நான் அப்போது ஒரு சிறிய பெண். எனது சொந்த ஊரான சாவகச்சேரியின் எளிமையான அழகால் கவரப்பட்டேன். செழிப்பான நெல்வயல்கள், உயர்ந்த பனை மரங்கள், மாந்தோப்புக்கள், அத்துடன் நான் வெறும் காலோடு அருகிலுள்ள கோயிலுக்கு செல்ல முயன்ற போதெல்லாம் என்னை கெந்தவும் துள்ளவும் செய்த சூடான வெள்ளை மணல்.

இனப்படுகொலையின் கொடிய நினைவுகளிலிருந்து யாழ்ப்பாணம் என்னை மீட்டது. யாழ்ப்பாணம் பல வழிகளில் என்னைக் காப்பாற்றியது. யாழ்ப்பாணம் தமிழர் கலாச்சாரத்தை எனக்கு கற்றுத் தந்தது. இயற்கையுடன் நெருங்கி வாழும் அழகைச் சொல்லித் தந்தது. சூழலை அநுசரித்து வாழவேண்டியதன் அவசியத்தை எனக்குப் புகட்டியது. அத்துடன் ஆழமான ஆன்மீக நம்பிக்கையையும் என்னில் ஏற்படுத்தியது.

பின்னர் எவ்வாறு யுத்தம் ஆரம்பித்தது என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிறிது சிறிதாக ஆரம்பித்த யுத்தம் பின்னர் தீவிரமடைந்தது. பல அடாவடித்தனங்கள் இடம்பெற்றன. எனது அன்புக்குரிய ஒருவர் கொல்லப்பட்டார். எனது நண்பியொருத்தி கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனார். சிறு வயதில் நான் ஓரளவு அறிந்திருந்த பிள்ளை, சிறிலங்கா இராணுவத்தால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். அதுவே பின்னர் கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு என்று எல்லோராலும் அறியப்பட்டது. இந்திய இராணுவத்தைக் கையசைத்து வரவேற்றது ஞாபகத்திலுள்ளது. ஒரு சில மாதங்களில் அவர்களால் மிக மோசமாக துன்புறுத்தப்படுவதற்காகவே அவர்களுக்கு கையசைத்தோம்.
இந்தியாவால் எவ்வளவு மோசமாக ஏமாற்றப்பட்டோம்? தொடர்ந்து இன்னும் நிறையவே நிகழ இருந்தது. சந்திரிகாவிற்கு வாக்களித்தமை எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! மீண்டும் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து வந்தபோது அப்போதே பதினெட்டு வயதை அடைந்து வாக்குரிமை பெற்றுக்கொண்ட நான், தெற்கில் அவர்கள் வாக்குறுதியளித்தது போல சமாதானத்தைப் பெற்றுத் தருவார்கள் என நம்பி சந்திரிக்காவிற்கு வாக்களித்தமை எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது?

சமாதானத்திற்குப் பதிலாக சந்திரிக்காவின் அரசில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது சிறிலங்கா விமானப்படையால் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றிருந்த எனது அன்புக்குரிய உறவுக்காரர் ஒருவர் உடல் சிதறிப் பலியானார். சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தரும் என எதிர்;பார்த்தது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது?

அதன் பின்னர் புதிய ஆயிரமாம் ஆண்டில் வேறொரு நாட்டில் இருந்து கொண்டு தற்போதைய எமது நாட்டு நிலைமை பற்றிய செய்திகளை வாசிக்கும்போதும், அங்கிருந்து வருபவர்கள் மூலமாக அறியும் போதும் ஒருபுறம் வேதனையாகவும் மறுபுறம் ஆத்திரமாகவும் உள்ளது.
எமது மக்கள் தினசரி அநுபவித்து வரும் பயங்கரமான கொடுமைகளை என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இவை பெரும்பாலும் அறியப்பட்டவையே. நாம் எமது எதிரியை ஒரு துளியேனும் நம்பக்கூடாது. அவர்கள் எங்களிற்கு செய்வதை செய்துவிட்டு செல்ல நாம் அனுமதிப்பதா? எமது போராளிகள் தமது போராட்டத்தை தொடர அனுமதியளிக்கும் அதேவேளை நானும் என்னால் முடிந்த சிறிய வழிகளில் எனது பங்களிப்பை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன்.

எமது புலம்பெயர் சமூகத்தை நோக்கும் போது எம்மில் சிலர் இன்னமும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகத்தை நம்பியுள்ளனர். அது ஒரு தவறான விடயம் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அது மட்டுமே ஒரேவழி என்று இருக்கக்கூடாது. வேறு சிலர் ஏதாவது அதிசயம் நிகழும் என்று பார்த்திருக்கிறார்கள். இன்னும் சிலர் முற்றாக நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள்.

ஆனால், ஒரு சிலர் தாய் நாட்டைப் பற்றிய செய்திகளை வாசித்து இதன்மூலம் மனச்சோர்வு அல்லது ஆத்திரம் ஏற்படுவதை ஒரு சித்திரவதையாகவே கருதுகிறார்கள். இதனால் அவர்களது அன்றாட வாழ்வின் (அவசியமற்ற) விடயங்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் உணர்கிறார்கள்.
மிகக் குறைந்தளவான தமிழர்களே இதனைத் தமது தோள்களில் சுமந்து தமது பங்கிற்கும் மேலாக தாய் மண்ணிற்காக உதவி வருகிறார்கள். இவர்கள்தான் தமது கடமையை மறவாது அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள். இவர்கள்தான் புலம்பெயர் சமூகத்தின் உண்மையான தலைவர்களும் நம்பிக்கை ஒளியுமாவார்கள்.

எவ்வாறாயினும் எம்மில் பலர் தாய் மண்ணிற்காக எதுவும் செய்யாதவார்களாகவே உள்ளோம். எனது நண்பர்களில் சிலர் தாயகம் தொடர்பான உரையாடல்களைத் தொடர விரும்பாது இடையே கதையை மாற்றிக்கொள்வார்கள். சிலர் ஒரு நொடி கூட தாயகம் பற்றிய நினைவுகளில்; ஈடுபட விரும்பபுவதில்லை. அவர்கள் அவுஸ்திரேலியாவில் தமக்கு போதிய உரிமைகள் இருப்பதாக எண்ணுகிறார்கள். அன்றாட வாழ்வின் அற்ப விடயங்களிலும், தமது பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதிலும் உவகை கொள்கிறார்கள். எமது எதிர்கால சந்ததியின் ஒரு பகுதியினர் இலங்கையில் மோசமாக நோகடிக்க்கட்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இன்னொரு பகுதியினர் (சரியாகச் சொல்வதானால் இப்பகுதியின் பெரும்பாலானோர்) தமது உடன் பிறப்புகளுக்கு என்ன நடக்கிறது என்பதை மறந்த நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.
அதனால் எவ்வாறு என்னால் (ஒரு குடும்பத் தலைவியாக, தாயாக) எனது செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன்படி இயங்க முடிந்தது என்பது தொடர்பான எளிய திட்டங்களை இங்கு ஒருங்கிணைத்துள்ளேன்.
அது எனக்கு மிகவும் ஆறுதலளித்த விடயம். சிறு சிறு விடயங்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவல்லன. தாயகம் தொடர்பான விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாது (நான் முன்பிருந்தது போல) வேறு விதமான அணுகுமுறைகளை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்காக, அவர்களுடன் எனது யோசனைகளைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

செயற்பாடு 1

வடக்கு கிழக்குப் பகுதிகளில் தொடர்பினை ஏற்படுத்தி அங்கிருக்கும் எமது உறவினர் நண்;பர்களிற்கு உதவுதல்.

எனது நெருங்கிய உறவினர்கள் - கிட்டத்தட்ட எல்லோருமே - வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். இதனால், இலங்கையில் உள்ள எனது தூரத்து உறவினர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சில சிரமங்களை எதிர்;நோக்கினேன். எனது அம்மாவின் இரண்டாவது தலைமுறையுடன் - ஒன்றுவிட்ட சகோதர உறவு முறையானவர்களுடன் - தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டேன். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஒரு தடவை மட்டுமே அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அவர்களை ஞாபகத்தில் வைத்து தொடர்பினை ஏற்படுத்தியதில் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்பொழுது அவர்களுடன் கடிதத் தொடர்பாவது உள்ளது. அத்துடன் மட்டக்களப்பில் இருக்கும் நீண்ட காலம் தொடர்பில்லாமல் இருந்த உறவினர்களுடனும் தொடர்பு கொண்டேன்.

கிட்டத்தட்ட இரு தசாப்த காலமாக கிழக்கு மக்கள் சிங்களவரின் மிக மோசமான காட்டு மிராண்டித்தனத்தை படுகொலை வடிவில் அநுபவித்து வருகிறார்கள். இதற்கு பூகோள ரீதியான காரணங்களும் வேறு காரணங்களும் உண்டு.

இந்நலையில், நான் மட்டக்களப்பில் உள்ள உறவினர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியது அவர்களிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்த வரையில் பரஸ்பர தொடர்பு இரு பகுதிக்குமே உதவும். நான் அவர்களுடன் தொடர்பில் இருப்பதை விரும்புகிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய தொகைப் பணமும் அனுப்பப்படுகிறது. மிக மோசமான இக்காலகட்டத்தில் அவர்கள், கிடைக்கும் உதவியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இவர்களுடன் இவ்வளவு காலமும் தொடர்பு கொள்ளாமல் இருந்ததையிட்டு மிகவும் வெட்கமடைந்தேன். பின்னர் தொடர்பு கொள்ளாமலேயே இருப்பதை விடவும் தாமதமாகவேனும் தொடர்பு கொள்வது சிறந்தது எனக்கருதி தொடர்பினை ஏற்படுத்தினேன்.

செயற்பாடு 2

வடக்கு கிழக்கில் பணிபுரியும் தொண்டர் நிறுவனங்களுக்கு உதவுதல்

ஐந்து வருடங்களிற்கு முன்னர் நான் ஒரு விடயத்தை உணர்ந்து கொண்டேன். மாதமொன்றுக்கு மக் டொனால்ட்ஸில் 20 டொலர்கள் செலவு செய்ய முடியுமானால், ஒரு வசதி குறைந்த பிள்ளைக்காக அந்தப் பணத்தை ஒதுக்க ஏன் முடியாது என்று சிந்தித்தேன். பிள்ளைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு எனது உதவி போய்ச் சேர்ந்தது. அச்சிறுமியிடமிருந்து கடிதமோ, புகைப்படமோ வரும்போது நான் எடுத்த முடிவு தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

தற்போது மிகவும் தாமதமாக வன்னியிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களிற்கு உதவ ஆரம்பித்துள்ளேன். இவ்வில்லங்களுடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புடைய ஒரு நண்பர் மூலம் இவ்வுதவிகளை வழங்கி வருகின்றேன். எனது ஊதியத்தின் ஒரு பகுதியை இத்தேவைகளிற்காக ஒதுக்கியுள்ளேன். அத்துடன் பகுத்தறிவை உபயோகித்து நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழ் ஸ்தாபனங்களூடாக தமிழர் திட்டங்களுக்கு உதவி வருகின்றேன். இவ்வாறு செய்வதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலையை துடைத்தெறிந்துள்ளேன். எனது பணம், எங்கு எவ்வாறு செல்கிறது என்பதை அறிய வேண்டிய தேவை எனக்குண்டு. எனது அபிமான எழுத்தாளர் கலீல் ஜிப்ரன் அவர்களின் கூற்றை இவ்விடத்தில் மேற்கோள் காட்ட விரும்புகின்றேன்.

'நான் கொடுப்பேன் ஆனால் தேவையானவர்களிற்கு மட்டுமே, என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள், ஆனால் உங்கள் பழத்தோட்டத்தில் உள்ள மரங்களோ அல்லது மேய்ச்சல் நிலங்களில் நிற்கும் விலங்குகளோ அவ்வாறு சொல்வதில்லை. அவைகள் முடியாது என்று சொல்லாமல் எங்களுக்கு வழங்குகின்றன, தம் வாழ்விற்காக. அவ்வாறு வழங்க மறுத்தால் அவை அழிக்கப்பட்டுவிடும்."

நாங்கள் எமது நேரம், பணம், சக்தி என்பவற்றை எமது மண்ணிற்கும், மக்களுக்குமாகச் செலவிடத் தவறுவோமோயானால் எமது கலாச்சாரம், எமது தேசியம் என்பவை இறுதியாக இல்லாதொழிந்து விடும். இவ்வாறு எனது நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் இந்த நோக்கத்திற்காக செலவழிக்கத் தொடங்கிய பின்னர் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை என்னில் உண்டாவதை உணரமுடிகின்றது.

செயற்பாடு 3

சிறிலங்காவின் உற்பத்திகளைப் பகிஷ்கரித்தல்.

பொருட்கள் வாங்கும்போது அவற்றின் பெயர் அடையாளங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக தற்போது (முன்னர் நான் அதிகமாக உபயோகித்து வந்த) சிறிலங்காவின் ஆனு உற்பத்திகளை வாங்குவதை நிறுத்தியுள்ளேன்.

செயற்பாடு 4

உள்ளுர் பாராளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர் நிறுவனங்கள், மற்றும் ஊடகங்களுக்கு எழுதுதல்

உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களைப் பெற்று, அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, அதனைத் தொடர்ந்து பேணிக் கொள்ளுங்கள். அவர்களுக்குக் கிரமமாக எழுதுங்கள், அல்லது நேரடியான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்போது அவர்கள் உங்களை அறிந்து கொண்டு தொடர்பு வலுப்பெற சந்தர்ப்பம் உண்டாகும். நான் சில தொண்டர் நிறுவனங்களுக்கும், ஊடகங்களுக்கும் எழுத ஆரம்பித்தேன் அவர்களிடமிருந்து கிடைத்த பதில்கள் வியப்பளிப்;பவையாக இருந்தன.
சாதாரண மக்களின் கருத்துக்களை அறிவதற்கு அவர்கள் உண்மையில் விரும்புகிறார்கள்.

மக்களுக்கு அறிவு புகட்டுவதை நான் எனது பகுதிநேரச் செயற்பாடாக கொண்டுள்ளேன். ஒரு கிழமையில் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களே இதற்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு பலர் செயற்பட்டால் அது மிகவும் சக்திவாய்ந்த ஒரு செயற்பாடாக அமையும் என்பது எனது அசையாத நம்பிக்கை.

செயற்பாடு 5

எமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது தாயகம் பற்றிய பண்டைய மற்றும் அண்மைய வரலாற்றையும் கற்பித்தல்.

இரண்டு காரணங்களுக்காக இது மிகவும் முக்கிய விடயமாக அமைகின்றது. அடுத்த சந்ததி இது பற்றி அறிந்திருக்க வேண்டும். நாங்கள் இல்லாதவிடத்து எங்களுக்குப் பின்னர் எமது தேசத்தைக் கட்டியெழுப்பும் சிரமமான பணியை அவர்கள் தொடர வேண்டும். எமது மொழியையும், வரலாற்றையும் பிள்ளைகளுக்குக் கற்பிப்பது எமது தேசத்தின் நன்மைக்காக மட்டுமல்ல. அது எமது பிள்ளைகளின் சுய எண்ணங்களுக்கும், சுய அடையாளம் மற்றும் சுய உருவகம் என்பவற்றை அறியவும் பேணவும் உதவும்.

செயற்பாடு 6

தீயவை பற்றி கற்பனை செய்யாதீர்கள்.

சில விடயங்களை, அவை எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்பதற்காக முயற்சித்துப் பார்க்காதீர்கள்.

'தமிழீழம் உருவானாலும் அது மிகவும் மோசமான ஆட்சியுடையதாகவே இருக்கும். நாம் எம்மையே அழித்துக் கொள்வோம்" என்று கூறும் நண்பியொருவர் எனக்குள்ளார். ஒரு பிள்ளை எவ்வாறெனினும் பதினெட்டு வயதில் கோக் குடிப்பதற்கு பழகிக் கொள்வான் என்பதற்காக பத்து மாதத்திலேயே அக்குழந்தைக்கு கோக் புட்டியை வழங்குவோமா?
(இதனை ஒரு தந்தை செய்ததாக நானறிந்தேன். அத் தந்தைக்காகவும், குழந்தைக்காகவும் வருந்துகின்றேன்)

இவ்வகையான தர்க்கம் தவறானது. எதிர்காலம் பற்றிய தவறான கற்பனைகளால் நாம் சில விடயங்களை கைவிட்டுவிட முடியாது. நீPங்கள் ஒரு பயிருக்கு போதிய ஊட்டத்தையளித்து அதனைப் பேணி வளர்த்தால் அது சிறந்த கனிகளைத் தரும். நாங்கள் அன்பினாலும் நம்பிக்கையினாலும் ஆட்கொள்ளப்பட வேண்டும்.

செயற்பாடு 7

ஆக்கபூர்வமாகவும், யதார்த்தமாவும் சிந்தியுங்கள் வடக்கு கிழக்கை தமிழீழம் என அடையாளப் படுத்துங்கள்.

நாம் ஆக்கபூர்வமாகவும், யதார்த்தமாகவும் சிந்திக்க வேண்டும். வடக்கு, கிழக்குப் பகுதிகளை தமிழீழமாக இனங்கண்டு கொள்ள வேண்டும். இந்த அடையாளத்தின் அடிப்படையில் எமது எண்ணங்களும் செயற்பாடுகளும் அமையும்போதே அது தூரநோக்குடைய பலாபலன்களைத் தரும். சுதந்திரம் என்பது நாங்களாகப் பெற்றுக் கொள்ள வேண்டியதே அன்றி யாரிடமிருந்தும் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டியது அல்ல. தமிழீழத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் நிச்சயமாக அது நிறைவேறும்.

அதேவேளை, இலங்கையின் வட-கிழக்கைச் சேர்ந்த இப்போது எம்மால் தழிழீழம் எனக்குறிப்பிடப்படும் பகுதியைச் சேர்ந்த தமிழிச்சி என்று என்னை இனங்காட்டுவதை சிறப்பானதாக நான் கருதுகின்றேன். உங்களது சொந்த இடம் எது என்ற மிக எளிமையான கேள்விக்கு இது மிகவும் நீளமான பதிலே. இருந்தாலும் அவ்வாறு சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
சில குறிப்பிட்ட விடயங்களில் இரண்டகத் தன்மை காணப்பட்டமை.

உதாரணமாக மற்றவர்களால் இனங்காணக்கூடிய தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் என்பவற்றை கொண்டிருக்கவில்லை. அண்மையில் எனது மகளின் பாடசாலை அதிபர் ஒரு சிறந்த எண்ணத்தை தெரிவித்திருந்தார். அதாவது பிள்ளைகளின் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக வௌ;வேறு நாடுகளைச் சேர்தவர்கள் அவரவர் நாட்டு தேசியக் கொடியின் மூலம் தம்மை இனங்காட்ட வேண்டும் என்பதே அது. அது மிகச்சிறந்த ஒரு எண்ணக்கரு.

ஆனால் நான் சிறிலங்காவின் கொடியை பிள்ளைகளிடம் கொடுத்துவிட விரும்பவில்லை. அதேநேரம் புலிச்சின்னம் பதித்த கொடியையும் வழங்க முடியாது ஏனெனில் ஒரு தேசியக் கொடியாக அது இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது எனக்கு மிகவும் சிக்கலானதாக இருந்தது இறுதியில் எம்மை எந்தக் கொடி மூலமும் அடையாளப்படுத்த விரும்பவில்லை என அதிபரிடம் தெரிவிக்க நேரிட்டது. இவ்வாறான விடயங்களில் எமக்குத் தடைகள் உள்ளன இவற்றைத் தீர்ப்பதற்கான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் என்னை ஒரு சிறிலங்காப் பிரஜையாக இனங்காட்டுவதை விடவும் இன்னமும் பெற்றுக் கொள்ளப்படாத எமது நாட்டின் பிரஜை என்று சொல்வதையே நான் விரும்புகின்றேன். சம்பிரதாயத்திற்கு கூட சிறிலங்காப் பிரஜை என்று கூற நான் விரும்பவில்லை. இது ஒரு முக்கியமான மனோநிலை மாற்றமாகும்.

செயற்பாடு 8

சாதகமான கற்பனை


இது வெறுமனே பகற்கனவோ அல்லது எதிர்பார்ப்போ அல்ல. ஒரு இறுதி இலக்கை எமது மனதில் கொண்டு அதனை நோக்கிச் செயற்படுவதே சாதகமான கற்பனையாகும். இதனை எனது சொந்த வாழ்வில் செயல்படுத்தி சிறந்த பலனை அடைந்திருக்கிறேன். நான் அடைய வேண்டிய இலக்கு (அந்த நேரத்தில் முடியாத காரியமாகத் தென்பட்ட) தொடர்பான படம் ஒன்றை வரைந்து எனது படிக்கும் அறையில் அதனை வைத்துக்கொண்டேன்.

ஓவ்வொரு நாளும் இரு நிமிடங்களுக்கு எனது பார்வை அப்படத்தில் பட்டுத்தெறிக்கும். அது மனதிலுள்ள விடயங்களை அலசி ஆராய்ந்து, எனது இலக்கு எது என்பதை எனக்கு தெளிவாக்கியதுடன் அதனை அடைவதற்கு எனக்கு உதவியாகவுமிருந்தது. மிகப்பெரிய இலட்சியத்தை அடைவதற்கு தினசரி எடுத்து வைக்கவேண்டிய சிறிய அடிகள் எவை என்பதை அது எனக்கு அறியத்தந்தது.

இப்பொழுதெல்லாம் எனது சொந்த ஊருக்கு (தற்போது இராணுவத்தினரின் முகாம்கள் நிறைந்து காணப்படும்) செல்வது போன்று கற்பனை பண்ணுவேன். இந்த இலக்கை அடைவதற்கான எனது பங்களிப்பு என்ன என்பது பற்றி எண்ணிப் பார்க்கிறேன். இந்த விடயம் அதாவது சாதகமான கற்பனை, மற்றைய எல்லாவற்றையும் விடவும் இலக்கை அடைவதற்கான சரியான திசையைக் காட்டுவதாக அமைகிறது.

எண்ணத்தை ஏற்படுத்தல் - செயல்வடிவம் கொடுத்தல் - செயற்படல்
யாழ்ப்பாணத்திலுள்ள எனது தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரர் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் பகலுணவு அருந்துவது போலவும், எனது பிள்ளைகள் அவர்களது பிள்ளைகளுடன் விளையாடுவது போலவும் எண்ணிப் பார்ப்பேன். இதை நிறைவேற்றுவது சிரமமாக இருக்கலாம். ஆனால் எனது எண்ணங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் இப்பிரபஞ்சம் ஒரு நாள் பதிலளிக்கும் என்றே நம்புகின்றேன்.

மனப்பூர்வமாக விரும்பினோமேயானால் எமது எதிர்காலத்தை நாமே அமைத்துக் கொள்ளமுடியும்; என நான் நம்புகின்றேன். இந்தச் செயற்பாட்டை நாம் சாதகமான எண்ணத்துடன் ஆரம்பித்தால் மிகுதி தானாகவே நிகழும்.
இதில் நம்பிக்கை அற்றவர்கள் என்னை ஒரு கற்பனாவாதியென அழைக்கலாம். ஆனால், அவநம்பிக்கை கொள்வதிலும் பார்க்க கனவுகாண்பது சிறந்தது என நான் கருதுகின்றேன்.

குற்றம் காண்பதை விடவும் நம்பிக்கை கொள்வது சிறந்தது எனக் கருதுகின்றேன். இந்த பிரபஞ்சத்திற்காக நான் பிரார்த்திக்கின்றேன், இறைஞ்சுகின்றேன். எல்லாமே சிறப்பாக உள்ளது என்று கூறி நடிப்பதைவிட இந்த பிரபஞ்சத்திற்காக பிரார்த்திக்கிறேன் இறைஞ்சுகின்றேன். - பொது நன்மைக்கான பிரார்த்தனை எப்பொழுதும் பலன் தரும். என்ற தமிழ் வாக்கிற்கேற்ப.

எனது மக்களிற்கு உதவுவதற்காக சிறிய, இருந்தும் சக்திவாய்ந்த விடயங்களில் செயற்பட்டு அதன்விளைவாக ஒருவகை ஆறுதலை உணர்கின்றேன். இறுதியில் இவை எல்லாமே பயனுள்ளதாகவே அமையும்.

Comments