வடக்கின் சண்டைக் களமும் கிழக்கின் தேர்தல் களமும்

மடுவை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை சிறிலங்காப் படைகள் ஆரம்பித்து கடந்த வாரத்தோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. எந்த ஒரு பலனும் இன்றி சிறிலங்காப் படைகள் தேங்கிப் போய் நிற்கிறன.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் நாள் சிறிலங்காப் படைகள் வவுனியாவிற்கு வடமேற்கே உள்ள பாலமோட்டை நோக்கி தமது நகர்வினை பகல் 12 மணியளவில் ஆரம்பித்தன. 3 மணி வரை கடும் சண்டை நடந்தது. சிறிலங்காப் படைகள் இழப்புக்களுடன் பின்வாங்கின. இச் சண்டையில் 4 படையினர் கொல்லப்பட்டும், 20 படையினர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

இந்தச் சண்டை நடந்து சரியாக ஒரு வருடம் கழித்து, 2008ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் பகல் 11 மணியளவில் சிறிலங்காப் படையினர் பாலமோட்டை நோக்கி முன்னேறினர். சண்டை இரண்டரை மணித்தியாலங்கள் நடந்தது. கடைசியில் சிறிலங்காப் படையினர் இழப்புக்களோடு தமது நிலைகளுக்கு பின்வாங்கினர்.

இந்த இரண்டு செய்திகளும் மன்னார் களமுனையின் நிலையை தெளிவாகச் சொல்கின்றன. பாலமோட்டையைக் கைப்பற்றி பின்பு மடுவை கைப்பற்றும் திட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை ஒரு வருடம் கழிந்த பின்பும், இன்று வரை பாலமோட்டையையே தாண்ட முடியாத நிலையில் நிற்கிறது.

உண்மையில் சிறிலங்காப் படையினர் நிலைகொண்டுள்ள இடத்தில் இருந்து ஒரு சில கிலோமீற்றர் தொலைவில்தான் மடு இருக்கின்றது. ஆயினும் சிறிலங்காப் படையினரால் மடுவை கைப்பற்ற முடியவில்லை. மன்னாரில் மட்டும் மூன்று களமுனைகளை திறந்த மடுவை கைப்பற்ற சிறிலங்காப் படையினர் முயன்று வருகின்றனர்.

மடுவை கைப்பற்ற முடியாத நிலையில் அடம்பனைக் கைப்பற்ற சிறிலங்காப் படையினர் முயன்றனர். சிறிய கிராமமான அடம்பனை ஒரு நகரம் என்ற அளவிற்கு பரப்புரை செய்தபடி சிறிலங்காப் படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர். அடம்பன் "நகரத்தை" கைப்பற்றி விட்டதாக ஒரு வெற்றி விழா கொண்டாடி விடலாம் என்ற திட்டத்தோடு இருந்த சிறிலங்கா அரசினால் இன்று வரை அடம்பனை முற்று முழுதாக கைப்பற்ற முடியவில்லை.

இந்த ஒரு வருடத்தில் சிறிலங்காப் படையினரால் ஓரிரு சிறிய கிராமங்களை கைப்பற்ற முடிந்தது. விடுதலைப் புலிகளின் சில காப்பரண்கள் சிறிலங்காப் படைகளிடம் வீழ்ந்தன. காப்பரண்களை விட்டு பின்வாங்காது கடைசி வரை சண்டையிட்ட சில விடுதலைப் புலிகளின் உடல்கள் சிறிலங்காப் படைகளிடம் சிக்கிக் கொண்டன. சில திடீர் முன்னேற்றங்களின் போதும் விடுதலைப் புலிகளின் ஓரிரு உடல்களை சிறிலங்காப் படையினர் கைப்பற்றினர்.இவைகளை விட சிறிலங்காப் படையினரிடம் சொல்லிக் கொள்வதற்கு எதுவும் இல்லை.

தமது இலக்குகளுக்கு மிக அருகில் நின்கின்ற போதும், ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி சிறிலங்காப் படைகளால் நகர முடியவில்லை. கிழக்கின் வெற்றியினை தொடர்ந்து மிக நம்பிக்கையோடு இருந்த சிறிலங்கா அரசு இன்றைக்கு செய்வதறியாது நிற்கின்றது.சிங்கள மக்களிடம் யுத்த வெற்றி பற்றிய மாயை மெது மெதுவாக குறையை தொடங்கியிருக்கிறது. சிறிலங்காப் படையினரின் வெற்றி குறித்து உறுதியாக எழுதிய சிங்கள ஊடகங்கள் இன்றைக்கு, மாறி எழுத ஆரம்பித்திருக்கின்றன. காலக் கெடு விதித்தவர்களும் இன்றைக்கு புதிய தத்துவங்களை பேசுகின்றனர்.மன்னார் களமுனையோடு, மணலாறு, முகமாலை போன்ற இடங்களிலும் சிறிலங்காப் படையினர் புதிய களமுனைகளை திறந்து பார்த்தனர்.

மணலாற்றில் சிறிலங்காப் படைகளால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஏறக்குறைய மன்னார் களமுனை போன்ற ஒரு நிலைதான் அங்கு உருவாகியது. ஆனால் மன்னாரிலாவது ஓரிரு கிலோமீற்றர்கள் சிறிலங்காப் படைகளினால் முன்னேற முடிந்தது. மணலாற்றில் அதுவும் முடியவில்லை. முன்னேறுவதும் அடி வாங்கிக் கொண்டு பின்வாங்குவதுமாக மணலாற்றில் சிறிலங்காப் படையின் நிலைமை இருக்கிறது.

முகமாலையிலோ சிறிலங்காப் படைகளின் நிலைமை சற்று வேறானதாகவும் வேடிக்கையானதாகவும் இருக்கிறது. முன்னேறி வருகின்ற சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் இருந்தாலும் கூட மீண்டும் பழைய நிலைகளுக்கு ஓடி விடுகின்றனர். அக்னிச் சுவாலை நடவடிக்கையின் போதும், 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதும் படையினரை குறிப்பிட்டளவு தூரம் முன்னேற அனுமதித்த விடுதலைப் புலிகள் தமது பொறிக்குள் படையினரை அகப்படச் செய்து பேரழிவை படையினருக்கு கொடுத்தனர்.

இந்தப் பேரழிவுகளின் பின்னர் படையினர் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தாது விட்டாலும் முகமாலையில் முன்னேறுவதற்கு அஞ்சுகின்றனர்.வடக்கில் களநிலைமைகள் இப்படித்தான் இருக்கின்றன. ஆயினும் தன்னுடைய முழுப் பலத்தையும் ஒருங்கிணைத்து மிகப் பாரிய ஒரு படை நடவடிக்கை மூலம் மடுவை கைப்பற்றக் கூடிய பலம் சிறிலங்காப் படையினருக்கு இருக்கக் கூடும். ஆனால் அவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஏற்படக் கூடிய பேரிழப்பும், அவைகள் உருவாக்கக் கூடிய பாதிப்புகளையும் எண்ணி சிறிலங்கா அரசு தயங்கியபடி நிற்கிறது.சிறிலங்காப் படையினரின் இலக்கு மடு மட்டும் அல்ல.

மடுவைக் கைப்பற்றுவதோடு மன்னாரில் இருந்து முன்னேறும் படைகளோடு இணைந்து பூநகரி வரை நகர்ந்து யாழ் குடாவிற்கு ஒரு தரை வழிப் பாதையை திறப்பதுதான் சிறிலங்காப் படைகளின் நோக்கம். ஆனால் இதே வேகத்தில் போனால் ஒரு ஐம்பது வருடங்கள் சென்றாலும் சிறிலங்காப் படைகளால் இலக்கை அடைய முடியாது.இந்த நிலையில் புலிகளின் தலைவர்கள் குறித்த வதந்திகளை பரப்புவதன் மூலம் ஒரு உளவியல் போரை முன்னெடுக்க சிறிலங்கா முனைந்தது. தேசியத் தலைவர் குறித்தும் பலவித வதந்திகளை பரப்பியது.

தமிழ் மக்கள் மத்தியில் சோர்வையும், சிங்களவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் சிறிலங்கா அரசின் பரப்புரைகள் உருவாக்கின. ஆனால் அதற்கு ஒரு முடிவு வந்தது. மாமனிதர் சிவநேசன் அவர்களுடைய இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட தேசியத் தலைவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களையும் சந்தித்தார். அப்பொழுது சிறிலங்காப் படையினர் வன்னி மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கையை முறியடிப்பதில் தான் உறுதியாக இருப்பதை தெரிவித்த அவர் கூட்டமைப்பினரை மக்கள் படும் துன்பங்களை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

தேசியத் தலைவர் தெரிவித்துள்ள இந்தச் செய்தி சிறிலங்காப் படையினருக்கு மேலும் சோர்வினையும் தமிழ் மக்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. நீடித்த யுத்தம் சிறிலங்காப் படையினரின் மனோதிடத்தை பாதிக்கும் என்று முன்னாள் படைத் தளபதியான ஜானகபெரேரா எச்சரித்துள்ளார். மிக நீண்ட யுத்த அனுபவமும் திறமையும் படைத்த ஜானகபெரேராவின் எச்சரிக்கை உண்மை நிலையை மேலும் தெளிவுபடுத்துகிறது.வடக்கில் எதையும் சாதிக்க முடியாத சிறிலங்கா அரசு கிழக்கில் பெற்ற வெற்றியை சிங்கள மக்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்துவதன் மூலமாவது தன்னை தக்க வைத்துக் கொள்ள முனைகிறது.

அதற்கு கிழக்கில் நடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களும் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் அறிவிப்பும் நன்கு உதவுகின்றன. இந்தத் தேர்தல் அறிவிப்புக்கள் மூலம் சிறிலங்கா அரசு மக்களின் கவனத்தை வடக்கி;ல் இருந்து கிழக்கு நோக்கி திருப்பியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டுமா என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுவது சிறிலங்கா அரசு வடக்கு கிழக்கை பிரித்ததை ஏற்றுக் கொள்வது போலாகி விடும் என்று ஒரு சாரரும், கிழக்கு மாகாணத்தில் போட்டியிடாது விட்டால் பிள்ளையான் குழுவிடம் ஆட்சி அதிகாரம் போய்விடும் என்று ஒரு சாரரும் கருதுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு சங்கடமான நிலையில்தான் தற்பொழுது நிற்கிறது. கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடாது இருப்பதற்கு வடக்கு கிழக்கு பிரிவினையை காரணம் காட்டுவது அவ்வளவு சரியாகப்படவில்லை. தமிழீழத்தை ஆதரிக்கும் கூட்டமைப்பு சிறிலங்கா அரசின் யாப்பினை ஏற்றுத்தான் சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுக்கும் போது சிறிலங்கா ஒரு தேசம் என்றும், சிறிலங்காவை பிரிப்பதற்கு துணை போக மாட்டோம் என்றும் உறுதி கூறித்தான் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். அதன் பிறகு அதே நாடாளுமன்றத்தில் தமிழீழத்திற்கு குரல் கொடுக்கின்றனர்.அந்த வகையில் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவதிலும் எந்தத் தவறும் இல்லை.

வடக்கும் கிழக்கும் ஓரே தாயகம் என்பதற்கான கிழக்கு மக்களின் ஆணையை கூட்டமைப்பு கோரியபடியே தேர்தலில் நிற்கலாம். வெற்றி பெறுவதன் மூலம் கிழக்கு மக்களின் தீர்ப்பை சர்வதேசத்தின் முன்பு உறுதியாக வைக்கலாம்ஆனால் இவைகள் எல்லாம் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் போது மட்டும்தான் சாத்தியமானவை.

பிள்ளையான் குழுவும் மற்றைய துணைக் குழுக்களும் ஆயுதத்தோடு நின்று போட்டியிடுகின்ற போது, இவைகள் சாத்தியமற்றவை. கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டால் இன்றைய நிலையில் இரண்டு விடயங்கள்தான் நடைபெறும்.

ஒன்று கூட்டமைப்பு தோற்கடிக்கப்படும்
மற்றது போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்கள் கொல்லப்படுவார்கள்.

கூட்டமைப்பின் சார்பில் முன்பு தெரிவாகியிருந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரை பிள்ளையான் குழு சுட்டுக் கொன்றிருக்கிறது. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கூட்டமைப்பு உறுப்பினர்களின் உறவினர்களை கடத்தி வைத்துக் கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்கு போடும்படி பிள்ளையான் குழு மிரட்டியது. தற்பொழுது சிறிலங்கா அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்களின் உயிருக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.

அத்துடன் எப்படியும் கள்ள வாக்குகளின் மூலம் பிள்ளையான் குழுவே வெற்றி பெறும்.

ஆகவே கூட்டமைப்பு போட்டியிடுவதில் எந்த ஒரு பலனும் இருக்கப்போவது இல்லை.

அதை விட கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெறுவதில் உள்ள நலன்களை விட, கூட்டமைப்பு தோல்வியுறுவதில் உள்ள பாதகங்கள் மிக அதிகமாகும்.

அந்த வகையில் தமிழ் மக்களுக்கு சில மாதங்கள் பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றாலும், தற்போதைய நிலையில் தேர்தலை புறக்கணிப்பதே கூட்டமைப்பிற்கு உள்ள சிறந்த வழியாக இருக்கும்.ஆயினும் இது குறித்து தமிழ் மக்கள் பெரிதும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.

கிழக்கில் மீண்டும் மெது மெதுவாக ஆனால் உறுதியாக காலூன்றி வரும் விடுதலைப் புலிகள் அனைத்திற்கும் முடிவு கட்டுவார்கள்.

வன்னியில் வைத்து கூட்டமைப்பினரிடம்

"நாம் இன்னும் சண்டையை ஆரம்பிக்கவில்லை, தற்காப்பு யுத்தத்தை மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறோம்"

என்று விடுதலைப் புலிகள் கூறியதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டலாம்.

"யுத்தத்தை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் சிறிலங்கா அரசினால் மக்கள் படும் துன்பங்களை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லுங்கள்"

என்று தேசியத் தலைவர் சொன்னது

கூட்டமைப்பினருக்கு மட்டும் அல்ல.

எமக்கும்தான்.ஆகவே நம்பிக்கையோடும் உறுதியோடும் புலம்பெயர்ந்த நாடுகளில் பெரும் பரப்புரைப் பணியில் நாம் ஈடுபடுவோம்.

- வி.சபேசன் (20.03.08)

Comments