தமிழர்களுக்குப் புதுவருடம் எப்போது?

புதுவருடம் என்றாலே மனதில் குதூகலமும் சந்தோசமும் நிலவும் நாளாக கணிக்கப்படுகின்றது அத்துடன் கடந்தவருட இன்னல்கள் அனைத்தும் நீங்கி பிறக்கின்ற வருடம் சிறப்பாக அமையவேண்டும். என்கின்ற திறனை எமக்கு வழங்குவது புதுவருடம்

தமிழர்கள் இவ்வளவு நாளும் சித்திரை மாதத்தின் தமிழ் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இது உண்மையில் தமிழர்களுக்குரிய நாள் அல்ல என்பதே பல அறிஞர்களது கருத்து.

ஆகவே தமிழர்களுக்கு தனியான புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். என்ற இவர்களது ஆதங்கம் வரவேற்கத்தக்கதாகும். இந்த நேரத்திலே பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது.

“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப் புத்தாண்டு
தரணி ஆண்ட தமிழர்க்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு”.

என்று தமிழர்களைத் தூக்கதிலிருந்து விழித்தெழ வேண்டினார். அந்தவகையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த மாதம் தமிழர்களின் தேசிய திருநாளான தைப்பொங்கல் அன்றே அதாவது தை மாதம் முதல் நாளே தமிழரின் புத்தாண்டு என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பல வாதப் பிரதி வாதங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவ்வாறு கருணாநிதி தை மாதத்தை புத்தாண்டாக அறிவிக்க என்ன காரணம் அப்படி என்ன விசேஷம் என நோக்கினால் அது திருவள்ளுவர் பிறந்த மாதம் என்கின்றார்கள் திருவள்ளுவர் கிறிஸ்து பிறப்புக்கு முன் 31ஆண்டுகள் முன்பு பிறந்தார் என்று கூறுகின்றனர். அதனால் தான் கருணாநிதி திருவள்ளுவர் பிறந்த தை மாதத்தை வருடத்தின் முதல்நாளாக கொண்டாட வேண்டும் என அறிவித்திருந்தார்.

இது குறித்து நோக்கும் போது 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழறிஞர் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழ் மாநாட்டில் சுவாமி ஞானப்பிரகாசர் உட்பட 500 மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழருக்கு தனியான புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுவது குறித்து விவாதித்தனர்.

அதில் எல்லா மதங்களும் தமது மதத்தை வளர்த்தவர்களின் நினைவையே புத்தாண்டு தினமாக கொண்டாட தமிழர்களுக்கு மதத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலை ஏனெனில் சைவத்தின் தோற்றம் இன்னதென்று கூறமுடியாது. ஆகவே நமது தாய்மொழியான தமிழின் வரலாற்றினை ஆராய்ந்தார்கள்.

அவ்வரலாற்றில் தொல்காப்பியமே எமக்குக் கிடைத்த ஆதி நூலாகும் அதற்கு முன்பும் பல நூல்கள் தோற்றம் பெற்றாலும் அவை கால வெள்ளத்தால் அழிந்து மண்ணாயின. ஆகவே தொல்காப்பியத்தையே ஆதிநூலாகக் கொள்கின்றனர்.

ஆனால் தொல்காப்பியத்தை ஆக்கியோர் பெயர் தெளிவாக தெரியாமையால் அதனை ஆக்கியோரை தொல்காப்பியர் என அழைத்தனர். எனவே இவரின் தினத்தையும் புத்தாண்டு தினமாகக் கொண்டாட முடியாது.
தமிழில் தெளிவாகத் தெரியக் கூடியதாக இருப்பது திருக்குறளை ஆக்கிய திருவள்ளுவரையே இவர் கி.மு 31இல் பிறந்தார் என்கின்றனர். இதில் கூட பல குழப்ப நிலைகள் இருக்கின்றன. அவர் புத்தரின் காலத்திற்கு முற்பட்டவர் என்றகருத்தும் நிலவுகின்றது ஏனெனில் அவர் காளி விஷ்ணு பற்றிக் தனது குறளில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் புத்தர் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவே அவர் புத்தரின் காலத்திற்கு முற்பட்டவர் என்கின்றனர். திருவள்ளுவர் புத்தரைக் குறிப்பிட்டுள்ளார். அவர் பகவான் என அழைப்பது புத்தரையே திருவள்ளுவர் காலத்தில் விஷ்ணுவைப் பகவான் என அழைக்கப்படவில்லை. அத்துடன் தாமரை மலரோன் என்பதும் புத்தரையேயாகும். அக்காலத்திற்குப்பின்தான் அது விஷ்ணுவுக்கும் இலட்சுமிக்கும் வழங்கப்பட்டன.

எனவே திருவள்ளுவர் பிறந்தது கி.மு.31இல் ஆகும் என உறுதிப்படுத்தினர். ஆகவே தை மாதம் முதன் நாளையே புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தனர். (உதாரணமாக திருவள்ளுவர் காலம் கி.மு.31 ஆங்கில ஆண்டுடன் கூட்டினால் 2008+31=2039 இதையே ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது). இருந்தும் பார்ப்பணியர்களால் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது இவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் 1945ஆம் ஆண்டு திருச்சி அகிலத்தமிழர் மாநாடு என்ற பெயரில் பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் ஒரு மாநாடு நடை பெற்றது. இதில் கா.சுப்ரமணியனார், மதுரைத் தமிழவேள், பி.டி. இராசன், தெ.பா.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப.சாமி, திரு வி.க.மறைமலை அடிகள தந்தை ஈ.வெ.ரா.பெரியார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் போது தைப்பொங்கல் விழா சமய விழாவா? சமயமற்ற விழாவா, என்பது தொடர்பாகவும். தமிழர்களின் புத்தாண்டை தைமாதத்தில் கொண்டாடுவது தொடர்பாகவும் பலத்த விவாதம் இடம்பெற்றது. இறுதியாக மறைமலை அடிகள். திட்டவட்டமாக கீழ்வருமாறு கூறினார்.

“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பி குழப்பம் விளைவிக்க முயன்றாலும் தை மாதத்தை தமிழர் புத்தாண்டாக ஏற்க முடியாது என வாதிப்பவர்களும் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். என்றும் கூறிய அவர்.

தைப்பொங்கலானது சமய சார்பு அல்லாத விழா எந்தச் சமயக்காரன் எந்தச் சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான். எந்தச் சூத்திரம் எந்த இதிகாசம் இதற்குச் சான்றாக அமைகின்றது. ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலின் சான்று இருக்கின்றது.

அத்துடன் தமிழில் தமிழ் ஆண்டு என்ற பெயரில் இருக்கின்ற “பிரபவ முதல் அட்சய” வரையான 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் பெயர் அல்ல வடமொழிப் பெயர்கள் இது தமிழ்மண, மரபு, பண்பு ஆகியவற்றுக்குப் போருத்தமாக இல்லை. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் சரி தை மாதமே தரணியாண்ட தமிழர்களின் புத்தாண்டாக மாற வேண்டும் என்று மறைமலை அடிகள் முழங்கினார்”. இல்லை நான் ஏற்றுக் கொள்ளுகின்றேன். என்று தந்தை ஈ.வெ.ரா.பெரியார், தெளிவாகப் பதிலுரைத்தார். சபையிலிருந்த அனைவரும் கையொலி எழுப்பினர்.

இதனையடுத்து மறைமலை அடிகள் இதனைப் பாராட்டி தைப்பொங்கலானது தமிழர்களின் பண்பாட்டு விழா எனவும் சூரிய இளவேனில் காலத்தின் முதன்நாளான தைபொங்கல் தினத்தையே தமிழ்ப்புத்தாண்டாக வருங்காலத்தில் கொண்டாடப்பட வேண்டும். எனவும் இதற்கான முயற்சியை அறிஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இது பற்றி பாமர மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பின்னர் இது ஏனோ நடைமுறைப்படுத்தப் படாது கிடப்பில் போடப்பட்டது நமது துரதிஸ்டமே.
இதற்கு மற்றுமொரு காரணமும் இருப்பதாக நம்பப்படுகின்றது.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சித்திரையிலேயே புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். தந்தை ஈ.வெ.ரா.பெரியார், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவே தை மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடுவதை அவர் விரும்பவில்லை. ஆகவே இதை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் இடம்கொடுக்கவில்லை. என்றும். அவர் திருச்சி மாநாட்டிலே மறைமலை அடிகளிடமுள்ள மதிப்பின் காரணமாகவும் அந்த மாநாட்டைத் தான் இடையில் குழப்பி கெட்ட பெயரை தான் வாங்காமல் இருக்கவுமே அமைதி காத்தார் எனவும் கூறுபவர்களும் உள்ளனர். எதுவாக இருந்தாலும் தை மாதத்தையே நமது அறிஞர்கள் புத்தாண்டாக ஏற்றுக்கொண்டனர். என்பதே உண்மை.

தமிழ்நாட்டு முதலமைச்சர்களாக வந்தவர்களில் பெரும்பான்மையானோர் வேற்று இடத்தைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர். இதனால் இவர்கள் தமது இனம் சார்ந்த மக்களின் பண்பாட்டையே கடைப்பிடிக்க முயன்றனர். கேரளத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர், அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பங்காற்றியிருந்தாலும் தமிழ் நாட்டின் நலன்களை தூர நோக்கில் கவனிக்கத் தவறியிருந்தார். அவர் மக்களின் அடிப்படை உடனடித்தேவையை மட்டும் நிறைவுசெய்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். அதன் பின் தனது இனத்தின் விசுவாசத்தை காட்டும் முகமாக தமிழ்நாட்டிலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் பவனி ஆற்றின் கரையோரம். தேவிபுரம் பிரதேசம் ஆகியவற்றை கேரள அரசாங்கத்திற்கு அன்று வழங்கினார். ஆனால் இன்று தமிழ்நாடு வறண்ட பூமியாக விளங்க எம்.ஜி.ஆர் அன்று வழங்கிய அந்தப் பவனி ஆற்றுப்பிரதேசங்கள் செழிப்புடன் திகழ்கின்றன. ஆகவே இப்படி வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டதால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை.

இவ்வாறு இழுபறிப்பட்ட நிலையில் எழுபதுகளில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி 1971ஆம் ஆண்டு தமிழக அரசு நாட்குறிப்பிலும் 1972ஆம் ஆண்டு முதல் தமிழக அரசிதழிலும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டார். நாட்டு மக்களுக்கும் “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது அனைத்து தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. என்பதால் தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்தார்

இதற்கு அன்று எதிர்ப்புகளும் கிழம்பின இதனால் கருணாநிதியின் பின் தமிழக முதலமைச்சராக வந்தவர்கள் (எம்.ஜி.ஆர் உட்பட). பிரித்தானியர்கள் கூட மக்களின் கலாச்சாரத்தில் கை வைக்கவில்லை. அதை கருணாநிதி செய்தது தவறு என்று மீண்டும் சித்திரை மாதமே தமிழரின் புத்தாண்டு என கொண்டுவந்தனர்.
மீண்டும் கருணாநிதி தற்போது ஆட்சிக்கு வந்தபின் தான் ஒரு தமிழன் எனவே தமிழருக்கான புதுவருடம் தை முதல் நாளே அதை தான் 1971ஆம் ஆண்டே நடைமுறைப் படுத்தியிருந்தேன். ஆகவே மீண்டும் அந்த நடைமுறையை நான் அமுல்ப் படுத்துகிறேன் என சட்டமியற்றி அதற்கான சட்டப் போரவைக் கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா ஆரம்பித்து தை முதன்நாளே தமிழர் திருநாளாக கருணாநிதி அறிவித்ததையும் தெரிவித்து இது இன்றிலிருந்து நடைமுறைப் படுத்தப்படுகின்றது. எனவும் தெரிவித்தார்.

இது ஜெயலலிதாவுக்கு கடுப்பாகி விட்டது. நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவர். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தை தமிழ் என்ற போர்வையில் கழங்கம் செய்வது தவறு என்றும் இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந்நடை முறையைத் தடைசெய்வது.
என்று முழக்கமிட்டவண்ணமே உள்ளனர். தமிழர்களுக்காக தனியான ஆண்டு நிர்ணயம் செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. இது ஆட்சியாளர்களின் அரசியல் விளையாட்டின் பந்தாக இப்புதுவருடப் பிரச்சனை மாறாது விட்டால் நன்மையே.

தமிழர்களைப் பொறுத்தவரையில் சங்க காலத்தில் ஆவணியே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டாடப்பட்டது. இது சாத்திரங்களின் படி சூரியன் தனது சொந்தவீட்டில் புகும் நாளாகும். இதே போல் கார்த்திகை மாதத்து விளக்கீட்டையும் தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன. சித்திரை வருடப்பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனாலேயே நிலைநாட்டப்பட்டதாகும்.

இந்த அரசனுக்கு முன் வியக்கத்தக்க வகையில் தமிழன் புதுவருடத்தைக் கொண்டாடினான் எனபதற்கு பல சான்றுகள் உள்ளன. அத்துடன் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் தான் சித்திரை தமிழனின் புத்தாண்டாக மாற்றப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. ராஜராஜசோழன் காலத்தில் சித்திரை தமிழரின் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டமைக்கான ஆதாரம் எதுவும் இல்லை.

இப்போதைய சித்திரை வருடப்பிறப்பு தமிழருக்குரியதல்ல ஏனெனில் சுழற்சி முறையில் வரும் பிரபவ முதல் அட்சய வரையான அறுபது ஆண்டுகளில் ஒன்றின் பெயர்கள் கூட தமிழில் இல்லை. இது தொடர்ச்சியாக சுழற்சி முறையாக வந்தவண்ணமே உள்ளன. இப்பெயர்கள் ஆகமங்களின் பெயர்கள் என சோதிடர்கள் கூறுகின்றனர். அத்துடன் ஒருவர் பிறந்து அறுபதாம் ஆண்டு அவர்பிறந்த நட்சத்திரம் நாள் என்பன மீண்டும் வரும் இதை சாத்திரங்கள் சஷ்டி பூர்த்தி விழா என்கின்றன. பிரபவ முதல் அட்சய வரையான அனைத்தும் வடமொழிப்பெயர்களே.

இந்த அறுபது ஆண்டுகளின் தோற்றம் பற்றி புராணங்கள் கூறும் புனைகதையானது நகைப்புக்கிடமானது. ஆணும் ஆணும் உடலுறவு கொண்டதன் மூலம் அறுபது புத்திரர்களைப் பெற்றனர். இந்த 60 புத்திரர்களின் பெயர்களில்தான் பிரபவ தொடக்கம் அட்சய வரையான அறுபது ஆண்டுகளும் அழைக்கப்படுகின்றன. இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழர்களை இழிவுபடு;த்தவே முயல்வர். எனவேதான் தமிழர்களுக்கென்று ஒரு தமிழ் ஆண்டு தேவையாக உள்ளது.

சிங்காரவேல் முதலியார் என்பவரால் தொகுக்கப்பட்ட “அபிதான சிந்தாமணி” என்ற நூலிலே இந்த ஆணுக்கும் ஆணுக்கும் (சிவனுக்கும் விஷ்ணுவுக்கும்) பிறந்த 60 புத்திரர்களின் பெயர்களில் அறுபது ஆண்டின் பெயர்களும் அழைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தப்பிறப்பு எப்பொதிருந்து வந்தது என நோக்கில் இது நாயக்கர் காலப்பகுதியிலேயே இப் புராணக்கதை புனையப்பட்டது. அதற்குமுன் சேர, சோழ, பாண்டியர்களது காலத்தில் கூட இவை பற்றி எந்தக்கருத்துக்களும் இல்லை. மறைமலை அடிகள் கூட இதை ஆதாரப்டுத்தியுள்ளார் என்பது இங்கு சுட்டிக்கட்டத்தக்கது.

தமிழர்களைப் பொறுத்தமட்டிலே ஈழத்தில் மட்டுமல்ல தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், மற்றும் புலம்பெயர் நாடுகளிலெல்லாம் பரந்து வாழ்கின்றனர். இவர்கள் இந்த ஆண்டுப்பிறப்பின் உண்மைகளைத் தெரிந்திருக்கவேண்டும். ஏதோ வழக்கத்திலிருக்கும் வருடம் என்றே சித்திரையில் புதுவருடத்தை கொண்டாடி வருகின்றார்கள். சித்திரை மாதத்த்pல் புத்தாண்டைக் கொண்டாடுவது வானசாஸ்திர நூலையும், பருவங்களின் சுழற்சி முறையையும் அடிப்படையாகக் கொண்டு அது இயற்கையை ஒட்டியது எனவே சித்திரை மாதமே ஆண்டின் தொடக்கம் என்று தொடர்ந்து செயல்ப்படுத்தி வந்தனர். அப்போதுதான் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டு மக்கள் கைகளில் பணம் கையிருப்பில் உள்ள நேரம் எனவெ அவர்கள் புத்தாண்டைச் சித்திரையில் கொண்டாடினார்.

வானசாஸ்திரங்களின் அடிப்படையில் நட்சத்திரங்களினதும் கோள்களினதும் அசைவுகளை வைத்து புதுவருடத்தை தமிழன் நிர்மானித்தானாக இருந்தால் தற்போது சித்திரைப் புத்தாண்டானது வைகாசியிலேயே கொண்டாடவேண்டும். ஏனெனில் விஞ்ஞான ரீதியில் கிரகங்கள் அனைத்தும் 72ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சுற்றுப்பாதையிலிருந்து ஒரு பாகை விலகுகின்றது. அப்படியானால் அது ஒரு நாளிற்குச் சமமாக உள்ளது. இதையே வராகமிகிரர் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய “பிரிஹத் சம்ஹிதா” என்ற நூலில் 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரகங்கள் அனைத்தும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு பாகை (டிகிரி) மாற்றமடைகின்றது. எனக்குறிப்பிட்டுள்ளார். இது தற்கால ஆய்வின்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதை வைத்துப் பார்க்கும்போது நாயக்கர் காலத்திலே சித்திரையில் இருந்த புதுவருடம் தற்போது வானசாஸ்திரங்களின் படி வைகாசிக்கு(மே) வரவேண்டும். அவ்வாறு மாறாது விட்டால் கிரகங்களை வைத்துக் கணிக்கின்ற சாஸ்திரங்களும் பொய்யாகவே அமைந்து விடுமல்லவா?
எனவே சித்திரையில் புதுவருடத்தைக் கொண்டாடுவதும் தையில் புதுவருடத்தைக் கொண்டாடுவதும் ஒன்றாகவே அமையும் எனினும் சிலர் சோதிடக்கணிப்பில் மேட லக்கணம் தமிழர்களுடைய லக்கணம் அந்த லக்கணத்தில் சூரியன் உச்சம் பெறுவது சிறப்பானது மேட இராசி மாதமான சித்திரைமாதத்தில் காலடிஎடுத்து வைக்கும்போது அந்த வருடம் மிகவும் உயர்வைத் தரக்கூடியது.

சூரியன் மகர இராசியில் பிரவேசிக்கும் நாளை வருடப்பிறப்பாக கொண்டாடுவது தமிழர்களுக்கு ஏற்றதல்ல. தைப்பொங்கல் திருநாளை உத்தராயண காலத்தின் ஆரம்ப நாளாக சூரியன் மகர இராசியில் பிரவேசிக்கும் நாளாக கொண்டாடலாமே தவிர புதுவருட நாளாக கொண்டாட முடியாது என வாதிபவர்களுமுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கூட தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழனுக்கு புதுவருடம் தைமாதம் முதல் நாளிலேயே தொடங்குகின்றது. என்று தெரிவித்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் மீண்டும் அவர்கள் இவ்வருட ஆரம்பத்திலும் கருணாநிதியின் அறிவிப்புக்கு முன்னமே தமிழர்களின் புதுவருடம் தைப்பொங்கல் நாளே என தெரிவித்திருந்தனர்.
எனவே தமிழ்நாட்டிலே அரசியல் காரணத்திற்காக கருணாநிதி புதுவருடத்தை தை மாதத்திற்கு மாற்றினார் என்று கொண்டாலும் விடுதலைப் புலிகளுக்கு அவ்வாறு எந்த அழுத்தங்களும் இல்லை.

எனவே ஈழத்தமிழனின் புதுவருடமும் தைமாதத்தில் தான் மலர வேண்டும் என்ற அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழனுக்கான தனித்தமிழ் நாட்காட்டி ஒன்றையும் அவர்கள் உருவாக்கியிருந்தனர். துரதிஸ்ட வசமாக அது வெளிவரவில்லை. அதற்குள் மலேசிய தமிழ் அறிஞர்கள் இத்தனித்தமிழ் நாட்காட்டியை வெளியிட்டனர். எதுவாக இருந்தாலும் தமிழனுக்கான நாட்காட்டி வெளிவந்ததில் மகிழ்ச்சி

பண்டைத் தமிழனின் அறிவியல் …. பண்டைத்தமிழன் இயற்கையை வணங்கி இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன். தன்னுடைய வாழ்நாளில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதை அவதானித்தான். அதில் மழை, பனி, வெயில், காற்று என்பன மாறி மாறித்தோன்றி அவனை வானியலாளனாக்கியது. இந்தக்காலச்சேர்க்கை ஒருதரம் முடிந்து மறுபடியும் தோன்றும்போது அதனை ஆண்டு என்றான் (இயற்கை தன்னை ஆண்டமையால் ஆண்டு என்றழைத்தான்). ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்தே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறியிருந்தனர். என்பது மேல்நாட்டறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

மேல்நாட்டறிஞரான சிலேட்டர் என்பவர் “தமிழர்களுடைய வான நூற்கணிதமுறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதமுறைகளிலும் நிகரானது. என்று குறிப்பிட்டுள்ளார். The world first என்ற நூலும் இதற்குக் கட்டியம் கூறவனவாய் அமைகின்றன. தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக்கொண்டு காலத்தைக் கணித்தனர். உழவர்கள் சூரியன் சந்திரன் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவ மாற்றங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர். என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. (a social history of the tamils –parts 1)

ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக தமிழர்கள் அன்றே பிரித்தழைத்தனர். “வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்,” என்று அவற்றைப் பகுத்ததோடு மட்டுமல்ல அவ் ஆறு பொழுதுகளையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டான். அதாவது ஒரு நாளில் ஆறு சிறு பொழுதுகள் உள்ளன. அந்த ஆறு பொழுதுகளும் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன. என பண்டைத்தமிழன் அன்றே கணக்கிட்டுவிட்டான். ஒரு நாளிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் குறிக்கும். அதாவது பண்டைத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பது தற்போதைய கணக்கீடான 24 மணித்தியாலங்களுடன் பொருந்துகின்றன. பண்டைத் தமிழனின் கணக்குப்படி ஒரு நாளிகை என்பது 24 நிமிடம் எனவே ஒருநாளில் 60 நாளிகைகள் உள்ளன. ஆகவே 24*60=1440 நிமிடம் இதை தற்போதைய ஒரு மணித்தியாலத்தால் பிரித்தால் அது 24 என்று பதில்வரும் எனவே பண்டைத்தமிழனின் கணக்கும் தற்போதைய கணக்கும் ஒன்றிப் போவதைக் காணலாம்.

இதற்கு மத்திய தரைக்கோட்டுப்பகுதி மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தான் வானம் தெளிவாகத் தெரிவதால் பண்டைத்தமிழனால் தினமும் வானை அவதானித்து துல்லியமாகக் காலங்களைக் கணிக்க முடிந்தது எனக்கொள்ளலாம்.
தமிழர்கள் தமக்குரிய வாழ்வை ஆறு பருவங்களாகப் பிரித்திருந்தான்.

1) இளவேனில் (தை – மாசி மாதங்களுக்குரியவை)
2) முதுவேனில் (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியவை)
3) கார்காலம் (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியவை)
4) கூதிர் (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியவை)
5) முன்பனி (புரட்டாதி – ஐப்பசி மாதங்களுக்குரியவை)
6) பின்பனி (கார்த்திகை – மார்களி மாதங்களுக்குரியவை)

இவ்வாறு பண்டைத்தமிழன் காலத்தை ஆறு நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் வகுத்து அதில் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவெனில் காலத்திலேயே ஆரம்பித்திருக்கின்றான். தொன்மையான பண்பாட்டுப் பெருமை கொண்ட அனைவரும் (சீனர், மொங்கோலியர்கள். உரோமர்கள்.) தங்களுடைய புத்தாண்டு தினத்தை இளவேனில் காலத்திலேயே தொடங்குகின்றான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வருகையின்பின் அவர்கள் ஒரு ஆண்டை நான்கு பருவங்களாக வகுத்தனர். ஆகவே

“பத்தன்று நூறன்று பன்நூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வின் புத்தாண்டு தை மாதம் முதல் நாள் பொங்கல் நன்னாள்”
என்று பாவேந்தர் பாரதிதாசன் அன்று சொன்னது இன்று உண்மையாக அமைகின்றது. என்றெ தோன்றுகின்றது.
சாஸ்திரங்கள் கூறும் கருத்துக்கள்….

சூரியனே கிரகங்களின் தலைவனாகக் கொள்ளப்படுகின்றான். அவனைச் சுற்றி ஒன்பது கிரகங்களும் வலம் வருகின்றன. சூரியனுக்குச் சொந்தவீடு சிம்மம், மேடம் அதன் உச்சவீடு. இராசிகள் மேட இராசியில் தொடங்கி மீன இராசியில் முடிகின்றன. அதேபோல் முதல் நட்சத்திரம் அச்சுவிணி இறுதி நட்சத்திரம் ரேவதி. சூரியன் அச்சுவிணியில் கால்பதித்து மேட இராசியில் புகும் நாளையே புதுவருடதினம் எனச் சாத்திரங்கள் கூறுகின்றன.

இச்சாத்திரங்கள் தமிழ்க் காலங்களை உத்தராயணம், தெட்சினாயணம் என இரண்டு வகையாக வகுத்திருக்கின்றன. இதில் உத்தராயண காலம் தை மாதத்தில் தொடங்கி ஆனி மாதம் வரையான காலப்பகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றது. இதை வசந்த காலம் எனவும் அழைப்பர். இந்த உத்தராயண காலத்தின் தொடக்க நாளே தைப்பொங்கல் தினமான தை முதல் நாளாகும். மகர ராசியில் உத்தராட நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கும் நாளே இந்நாளாகும்.

இந்த நாளில் சூரியன் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வருகின்றது. எனவே விஞ்ஞான ரீதியில் பார்த்தால் சூரியன் சந்திரன் ஆகியன ஒரே நேர்கோட்டில் வரும் நாளை தமிழன் தன் புது வருடமாகக் கொண்டாடினால் எதவித தவறும் இல்லை இந்த மகரஇராசி சனீஸ்வரனுக்குரியது என்றும் கும்பம் மகரம் ஆகியவை அவனது சொந்த வீடுகள் என்றும் கூறுகின்றன.
இந்தச் சனியின் தந்தையே சூரியன் என்றும் சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவரே சனீஸ்வரன் என்றும் தன் தாயான சாயாதேவியை சூரியன் கைவிட்டுவிட்டதனால் தனது தந்தையின் மேல் தீராத கோபம் கொண்டு அவரைப் பழிதீர்க்கும் முகமாக எப்போதும் முரண்பட்டுக் கொண்டேயிருப்பார் அதனால் கும்பமும் மகரமும் சூரியனின் பகைவீடுகள் என்றும் அந்தப் பகைவீடுகளில் ஒன்றான மகரஇராசி சூரியனுக்கு ஏற்ற இராசியாக அமையாது.

எனவே அந்த இராசியில் வருடத்தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டால் மக்கள் மனதில் சஞ்சலம் உருவாகும். என்ற காரணத்தினால் சூரியனின் உச்சவீடான மேடஇராசியே புத்தாண்டுக்கு ஏற்ற இராசியாகும் இது சித்திரை மாதத்தில் வருகின்றது. ஆகவே சித்திரையிலேயே தமிழர்கள் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். என்கின்றனர் சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள்.
சூரியன் சித்திரை மாதத்தில் மத்திய தரைக்கோட்டில் அதாவது பூமத்திய ரேகையில் உச்சங்கொடுப்பது உண்மையே. தற்போது தமிழர்களி;ன் புதுவருடம் முற்றுமுழுதாக சாத்திரங்களின் மடியில் சரணடைந்து விட்டது வருத்தத்திற்குரியது. உண்மையில் புதுவருடமானது ஒரு இனத்தவர்களின் பண்பாடு, கலாச்சாரம், மற்றும் சமயம் சார்ந்ததே அதைவிடுத்து முற்றுமுழுதாக மதம் சார்ந்ததல்ல என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே தைமாததில் தமிழர்கள் புதுவருடத்தைக் கொண்டாட முனைவது தவறு அல்ல இது குறித்து நான் சோதிட வல்லுணர்கள் சிலருடன் தொடர்பு கொண்டடேன் அதில் புகழ்பெற்ற சோதிட நிபுணர் ஒருவர் கருத்துக் கூறும்போது சாத்திரங்களின் படி தற்போது மேடஇராசியிலிருந்து கணிக்கப்படும் காலங்கள் தமிழர்கள் புதுவருடத்தை தை மாதத்த்pற்கு மாற்றும் போது மகரஇராசியிலிருந்தே கணிக்க வேண்டும் இது தவறு என்று கூறமுடியாது. ஆனால் நன்மையானதாகப் படவில்லை. அத்துடன் தைமாத இராசியான மகரஇராசியிலிருந்து கணிக்கப்படும் போது எல்லாவற்றையுமே மாற்றியமைக்க வேண்டிய தேவைஉண்டு. தற்போதுள்ளவர்களால் அப்படிக்கணிப்பதால் சில தவறுகள் நிச்சயம் உண்டாக வாய்ப்பிருக்கின்றது. அதனால் தான் இதை ஆதரிக்கவில்லையே தவிர வேறொன்றுமில்லை தமிழர்கள் தமது பண்பாட்டியல் ரீதியாக புதுவருடத்தை மாற்றும்போது நான் அதை ஆதரிக்கின்றேன் என்றார்.

லண்டனிலே உள்ள பிரபலமான ஆலய பூசகர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டபோது தம்பி இவங்கள் இப்படி மாத்துறதால ஆலயங்களின் பிழைப்புக்கே ஆப்பு வைக்க நினைக்கிறாங்க

தைப்பொங்கல் தினத்தில புதுவருடத்தை வைச்சா கலெக்சன் கம்மியாத்தான் வரும் மாறாக சித்திரையில வைச்சா அதில வேற தேறும் இதை சாத்திரங்களின் படி பிழை எனக்கூறினாலும் தமிழர்களின் பழக்கத்தை மாத்த முனையாதிங்க அப்புறம் நாங்கதான் அவஸ்தைப்படணும் என்றார்.

பாருங்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்கள் எல்லாம் கலெக்சனிலேயே குறியாக இருக்கின்றது.

நமது புதுவருடமும் சிங்களப் புதுவருடமும் ஒரே நாளிலேயே வருவதனைக் காணலாம். சிங்களவர்களினுடைய புத்தாண்டு தமிழர்களின் திருக்கணித முறைப்படியே மேற்கொள்ளப்படுகின்றது. காரணம் இலங்கையிலே உள்ள சிங்களவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருந்து சிங்களவர்களாக மாறினர். இவர்கள் திருமணக்கலப்பு, வேலைவாய்ப்புக் காரணமாக சிங்களப் பகுதிகளுக்கு வந்து குடியேறியதனால் நாளைவில் இவர்கள் சிங்களவர்களாக மாறினார்கள். உதாரணமாக தற்போது முன்னேஸ்வரம் பகுதி, உடப்புப்பகுதி ஆகியன சிங்களக் குடியேற்றங்களாகவும் சிங்களவர்களாகவும் மாறிவருவதனைக் காணலாம்.

ஆகவே சிங்களப் புத்தாண்டு தமிழர்கள் இன்றுவரைக்கும் கொண்டாடி வருகின்ற சித்திரைப் புத்தாண்டையே அவர்களும் கொண்டாடுகின்றனர் இவர்களும் எண்ணெய் வைத்து புத்தாடை அணிந்து சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இதைச்சிலர் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரேநாளிpல் புத்தாண்டைக் கொண்டாடி வருவதனால் தமிழன் மட்டும் இடையில் தை மாதத்தில் தனது புத்தாண்டைக்கொண்டாட முனைவது தமிழ் சிங்கள உறவில் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனர் என்று முழக்கமிட்டனர். தமிழன் தனது பண்பாட்டியலுடன் ஒன்றி தனது புதுவருடத்தை தனக்குரிய ஆண்டுடன் மாற்றுவதில் எந்தத்தவறும் இல்லை.

உலகளாவிய ரீதியில் புது வருடங்கள்….
இன்று உலகம் முழுவதும் பல்வேறு வகையான புதுவருடங்கள் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு பல்வேறு வகையான புதுவருடங்கள் நடைமுறையில் இருந்தாலும் ஆங்கிலப் புதுவருடமே பொதுவானதாக் கொண்டாடப்படுகின்றது.

பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள் நைல் நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கையே புதுவருடமாகக் கொண்டாடினர். இது பெரும்பாலும் செப்டெம்பர் மாத இறுதியில் நிகழும். பாபிலோனியர்கள் வித்தியாசமாக வசந்த காலத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடி வந்தனர். ரோமானியர்களின் புத்தாண்டு நீண்ட காலமாக மார்ச் மாதத்திலேயே தொடக்கத்திலேயே கொண்டாடப்பட்டது. இவர்களே கலண்டரை வடிவமைப்புச் செய்தவர்கள். அப்போது வருடத்திற்குப் பத்து மாதங்களே வரையறை செய்தனர். மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவை அமைந்திருந்தன.

பின் கி.மு. 713 இல்தான் (கி.மு.8ஆம் நூற்றாண்டு) ஜனவரியும் பெப்ரவரியும் லீஃப் வருடமும் சேர்க்கப்பட்டன. அப்போதும் மார்ச்சிலேயே துவங்கிவந்த வருடம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் (கி.மு.153) தான் ஜனவரி 1 முதல் துவங்கும் படி மாற்றப்பட்டது. இது உரோமானியர்களின் கடவுளான ஜோன்ஸ் நினைவாக ஆண்டின் முதல் மாதத்திற்கு ஜனவரி என்று பெயர் சூட்டினர். அதற்குப் பின்னரே ஜூலியஸ் சீஸர் கொண்டு வந்த ஜூலியன் கலண்டர் (கி.மு.45, 1ஆம் நூற்றாண்டு) தான் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்தன. அங்கும் கூட பல நாடுகள் கிறிஸ்மஸ்ஸிலிருந்தும் ஈஸ்டர் தினத்திலிருந்தும் புத்தாண்டைத் துவக்கும் வழக்கமிருந்தது. ஐரோப்பியர்களும் கி.பி,1582 ஆம் ஆண்டுகளுக்கு முன்புவரை மார்ச் மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடினார்கள்.

சீனா மற்றும் வியட்நாம், நாடுகள் தங்கள் புத்தாண்டை ஜனவரி 21ஆம் திகதியில் கொண்டாடி வருகின்றனர். பெப்ரவரியில் திபெத்தினதும் மார்ச்சில் ஈரான் புத்தாண்டும் மலர்கின்றது. ஏப்ரல் மாததில் தமிழ, தெலுங்கு, பஞ்சாபி, விசு (கேரளா), பெங்காலி, மற்றும் சிங்கள புத்தாண்டுகள் மலர்கின்றன. அதேபோல் நேபாளம் தாய்லாந்து முதலியனவும் ஏப்ரல் மாதத்திலேயே புதுவருடத்தைக் கொண்டாடுகின்றன. அக்டோபர்- நவம்பரில் (தீபாவளி தினத்தில்) குஜராத்தி ஆண்டு மலர்கின்றன.

இது தவிர ஹிஜிரி எனப்படும் இஸ்லாமிய ஆண்டு மொகரம் எனப்படும் அரபி மாதத்தில் துவங்கும் ஹிஜிரி ஆண்டு கிறிஸ்தவ கலண்டரை விட குறைவான நாட்களைக் கொண்டது. இது 12 மாதங்களைக் கொண்டிருந்தாலும் ஆண்டின் மொத்த நாட்கள் 354 ஆக உள்ளது. காரணம் இது பிறையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றது. எனவே இஸ்லாமிய ஆண்டு கொஞ்சம் வேகமாகவே நடைபோடுகின்றது. ஆகவே தான் இந்த 2008 இல் முஸ்லிம் ஆண்டு இருமுறை மலரும் வாய்பைக் கொண்டுள்ளது. 2008 ஜனவரியிலும் 2008 டிசம்பரிலும் இருமுறை மொகரம் துவங்குகின்றது. ஆகவே இந்த வருடம் அவர்களுக்கு இரு புத்தாண்டு மலர்கின்றன.

ஆங்கிலக் கலண்டர் யேசுகிறிஸ்துவின் பிறப்பை வைத்துக் கணிக்கப்பட்டது. போல் முஸ்லிம் கலண்டர் நபிகள் நாயகம் மக்காவை விட்டு மதீனாவுக்கு போன நாளிலிருந்தே கணிக்கப்பட்டு வருகின்றது. ஆங்கில ஆண்டை A.D.(anno domini) என்று குறிப்பிடுவதைப் போல் இஸ்லாமிய ஆண்டை A.H.(anno hegiriae) என்று குறிப்பிடுகின்றனர்.

தற்போது உலகம் முழுவதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் ஆங்கிலக்கலண்டரினுடைய உண்மையான பெயர் க்ரகேரியன் கலண்டர் என்பதாகும். கி.பி 16ஆம் நூற்றாண்டில் கத்தோலியர்களின் போப்பாக இருந்த 13ஆம் போப் க்ரகேரி எனபவரின் தலமையில் கி.பி.1582 இல் வடிவமைக்கப்பட்டதே இந்தக்கலண்டராகும்.
இதுவே இன்று பொதுக்கலண்டராக உள்ளது. அவ்வளவு காலமும் கிறிஸ்துவின் பிறப்புடன் ஆரம்பமான வருடம் போப் க்ரகேரியன் என்பவரால் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி யேசு பிறந்த டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினம் என்றும். அவ்வாறு யேசுபிறந்து எட்டாவது நாள் அவர் தனது பெற்றோர்களால் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு அவர் ஞானஸ்தானம் பெற்ற நாளையே வருடத்தின் முதன்நாளாக ஆரம்பிக்க வேண்டும். ஜனவரி 1 என்று அமுல் செய்தார்.

போப் அவர்கள் ஆரம்பித்து வைத்த கலண்டர் என்பதால் ஐரோப்பாவில் அரசர்கள் வாதம் பண்ணாமல் ஏனெனில் ஐரோப்பியர்கள் அனைவரும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். ஆகவே அவர்களும் போப் வடிவமைத்த கலண்டரையே உபயோகித்தனர். 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய ஆதிக்கம் ஆசியநாடுகளில் பரவியபோது இக் க்ரகேரியன் கலண்டரும் திணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்று அதுவே உலகப் பொதுக்கலண்டராக்கப்பட்டது.

இந்த க்ரகேரியன் கலண்டரை உலகளாவிய ரீதியில் பரப்பிய பெருமை பிரித்தானியர்களைச் சாரும் இவ்வாறு ஐரோப்பியர்கள் மட்டுமல்ல சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள், மொங்கோலியர்கள், என பலகோடி மக்களும் தங்களுடைய புதுவருடத்தை இளவேனில் காலமான ஜனவரியிலேயே ஆரம்பிக்கின்றனர். உதாரணமாக ஜப்பானியர் எமது பொங்கல் தினத்தன்று தமது புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். இது தமிழர்கள் - ஜப்பானியர்கள் இடையேயான பண்பாட்டு ஒற்றுமை நிலையையே காட்டுகின்றது. ஜப்பானியர்கள் தை மாதம் 14ஆம் நாள் பழைய பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்தனர்.

தை 15 நாள் தமிழர்களைப் போலவே புதுப்பானை வைத்து பொங்குகின்றனர். அதன்போது அவர்கள் Fonkara – Fonkara என்றழைத்து மகிழ்வார்கள். தமிழர்கள் இதை பொங்கலோ பொங்கல் என்று பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். தமிழில் பொங்க பொங்க என்ற சொற்களுக்கு ஜப்பானிய மொழியில் ர்ழபெய – ர்ழபெய என்று பாடுகின்றார்கள். அதேபோல் புத்தாடை அணிதல் முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்சிகளை நிகழ்த்துதல், மாடுகளுக்கு உணவளித்தல் போனற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே செய்கின்றனர். இது தமிழர்களினதும் ஜப்பானியர்களினதும் தொன்மையான பண்பாட்டியலையே காட்டுகின்றது.

இவ்வாறு அன்று தை மாதத்திலே தனது புத்தாண்டை ஜப்பானியர்களுடன் ஒன்றிணைந்து ஆரம்பித்திருந்தாலும் இடையில் தமிழன் மட்டும் மாறிவிட்டான். எமது பண்பாட்டுப் பாரம்பரியம் ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரைப் புத்தாண்டு, தீபாவளிப் பண்டிகை, போன்ற பண்டிகைகளை தன் இனப்பண்டிகைகளாக எண்ணி கொண்டாடி மகிழ்ந்து மயக்கத்தில் இருக்கின்றான்.

தமிழ்மொழி, தமிழ்மறை, தமிழர் ஆண்டு, தமிழர் திருநாள், இவை நான்கும் உலகத்தமிழர்களை இணைக்கும் உயிர்ப்பாற்றல். இவற்றைப் போற்றுவதே தமிழர் தம் கடமையாகும். எனவே இவ்வளவு காலமும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடிய தமிழர்கள் தடீரென கருணாநிதியினதும், தமிழீழ விடுதலைப்புலிகளினதும். அறிவிப்பால் மாற்றமடைய மாட்டாது. என்றாலும் தமிழனுக்கு ஒர் தனி ஆண்டாக தை மாதம் முதன் நாள் திகழ்வதால் இனிவரும் காலங்களில் மக்கள் தை மாதம் முதன்நாளான தைப்பொங்கல் அன்றே புதுவருடத்தைக் கொண்டாட முயல வேண்டும்.

அ.மயூரன். லண்டன்

Comments