விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு தளபதி கேணல் சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது. முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற விபத்தில் சூசை காயமடைந்ததை தொடர்ந்தே இந்த வதந்தி பரவியது.
எனினும் பின்னர் அது வழமை போலவே விரைவில் மழுங்கிப்போய்விட்டது. ஆனால் அன்று பரீட்சித்து பார்க்கப்பட்ட உத்திகள் தற்போது கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அதாவது கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற அந்த விபத்தின் போது கடற்புலிகள் நவீன கலங்களைத் தகர்ப்பதற்கான நவீன ஆயுதங்களையும், அதற்கான உத்திகளையுமே பரீட்சித்து பார்த்துக்கொண்டிருந்ததாக வன்னித்தகவல்கள் தெரிவித்திருந்தன.
கடற்புலிகள் பரீட்சித்து பார்த்த நவீன ஆயுதங்களுடன் கூடிய இந்த புதிய உத்திகள் கடந்த சனிக்கிழமை (22) நாயாறு கடற்பகுதியில் எதிரெலித்துள்ளதா? என்ற பலமான சந் தேகங்கள் தற்போது எழுந்துள்ளன.
அதாவது நடைபெற்றுவரும் நாலாம் கட்ட ஈழப்போரில் வான்புலிகளின் தாக்குதல் வான் தாக்குதலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருந் ததைப்போல முல்லைத்தீவை அண்டிய நாயாறு கடற்பகுதியில் கடற்படையினர் சந்தித்த இழப்பு கடற்போர் வேறு ஒரு பரிமாணத்தை சந்தித்துள்ளதா என்ற கேள்வி யையும் எழுப்பியுள்ளது.
கடலுக்கு அடியில் நிகழ்ந்த குண்டுவெடிப் பால் கொழும்பு டொக்கியாட் நிறுவனத்தில் கட்டப்பட்ட பி438 இலக்க அதிவேகத் தாக்கு தல் படகு(Ultra Fast Attack Craft - UFAC) நேரத்தில் மூழ்கிப்போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கரும் புலித்தாக்குதல் மூலமே படகு அழிக்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ள போதும், கடற்படையினர் அதனை மறுத்துள்ளனர்.
அதிவேகத் தாக்குதல் படகு அழிந்து போவதற்கு முன்னர் அப்பகுதியில் கடற்சமர் கள் எவையும் நடைபெறவில்லை எனவும், அந்த பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இரு அதிவேகத் தாக்குதல் படகுகளின் ராடர் திரைகளிலும் கடற்புலிகளின் படகுகள் எதனையும் தாம் அவதானிக்கவில்லை எனவும் கடற் படையினர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு கடற் கண்ணிவெடி தாக்குதலாக இருக்கலாம் என வும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அதிகாலை இரண்டு மணியளவில் நடை பெற்ற இந்த தாக்குதலில் படகின் கட்டளை அதிகாரி உட்பட 6 கடற்படையினர் காப்பற்றப்பட்ட போதும் 10 கடற்படையினர் காணமால் போயுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் கரையோரத் தாக்குதல் படகுகளில் வலிமைமிக்க அதிவேகத் தாக்குதல் படகுகளின் இழப்புக்கள் கடற்படையினரின் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்கமுடியாது.
கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட அதிவேகத் தாக்குதல் படகுடன் நடைபெற்றுவரும் நாலாம் கட்ட ஈழப்போரில் கடற்படையினர் 9 டோறாக்களை இழந்துள்ளனர். இஸ்ரேலின் ஆயுதங்களுடன் ஓவ்வொன்றும் 5 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த படகுகளின் இழப்புக்களை கடற்படையினர் உடனடியாக ஈடுசெய்வது என்பது சாத்தியமற்றது.
ஜப்பானின் முதலீட்டில் இயங்கிவரும் கொழும்பு டொக்கியாட் நிறுவனம் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை பிரதி பண்ணி இந்த அதிவேக தாக்குதல் படகுகளை கட்டிவரும் போதும் உடனடியாக அவற்றை சேவையில் இணைத்துக் கொள்வது கடினமானது. ஒரு அதிவேக தாக்குதல் படகை கட்டிமுடிப்பதற்கு 6 தொடக்கம் 12 மாதங்கள் செல்லலாம்.
மேலும் கடற்படையினரின் இழப்புக்களுக்கு அப்பால் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உத்தி தென்னிலங்கையில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. கடற்படையினாரின் வலிமை மிக்க தாக்குதல் படகு கடலடி தாக்குதல் மூலம் திடீரென வெடித்து சிதறியது படைத்துறை மட்டத்தில் பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது இந்த தாக்குதல் தொடர்பாக கடற்படைத்தரப்பில் மத்தியில் மூன்று முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.
ராடர்களின் திரைகளில் தெரியாத விடுதலைப் புலிகளின் நவீன ஸ்ரெல்த் ரக தாக்குதல் கலம் கரும்புலித் தாக்குதலை நடத்தியதா? கடற்படையினரின் படகுகளை தேடித்தாக்கும் சிறிய நவீன டோப்பிடோ கடற்கண்ணிவெடிகளை (Anti-ship torpedo) விடுதலைப்புலிகள் பயன்படுத்தினரா? சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்களை கொண்டு கரும்புலிகள் அதிவேகத் தாக்குதல் படகை தாக்கி அழித்தனரா? என்பவை தான் கடற்படையினர் மத்தியில் எழுந்திருக்கும் கேள்விகள் ஆகும்.
ஸ்ரெல்த் கடற்கலம் ராடர் திரைகளில் புலப்படாதவாறு வடிவமைக்கப்பட்ட அதிவேக கரும்புலித்தாக்குதல் படகாகும். கடல் அலைகளுடன் அலையாக பயணிக்கும் இந்த படகு 50 நொட்ஸ் வேகத்தை எட்டக்கூடியது.
2000 ஆம் ஆண்டு திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையான மார்பிள் பீச் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் விடுதலைப்புலிகள் இத்தகைய படகை பயன்படுத்தியிருந்தனர்.
வெடிமருந்துகளுடன், முன்புறத்தின் இருபுறமும் இரண்டு 122 மி.மீ எறிகணைகள் பொருத்தப்பட்ட இந்த படகு வேகமாக சென்று கடற்படை படகுடன் மோதும் போது ஏற்படும் சேதம் மிக அதிகமாகும்.
அமெரிக்காவின் ஸ்ரெல்த் 117 தாக்குதல் விமானத்தின் வெளிக்கட்டமைப்பை ஒத்த அமைப்புடைய இந்த படகுகளை ராடர்களில் அவதானிப்பது கடினமாகும். கடற்படையினர் கூறுவதுபோல இது ஒரு கண்ணிவெடித் தாக்குதலாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால் குறித்த படகை குறிவைத்து கடல் கண்ணிவெடி ஏவப்பட்டதா? என்பதே முக்கிய கேள்வி. இதனிடையே நீர்மூழ்கிப் படகின் தாக்குதலையும் நிராகரிக்க முடியாது என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் ஒரு முழுத்தேசத்திற்குரிய படைக்கட்டுமானங்களை வடிவமைப்பதிலும், அதிர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதற்கு ஏதுவாக படைக்கலங்களையும், தாக்குதல் உத்திகளையும் வடிவமைப்பதிலும் ஒருபோதும் பின்நிற்பதில்லை.
1990 களின் பிற்பகுதியில் தமது விமானப்படையின் வடிவமைப்பில் விடுதலைப்புலிகள் கவனம் செலுத்திய அதேசமயம் நீர்மூழ்கிக் கப்பல்களின் வடிவமைப்பிலும் அதிக அக்கறை செலுத்தி வந்துள்ளனர். இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது தகவல்களை வெளியிட்டே வந்துள்ளனர்.
1990 களின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வடமராட்சிக் கடலில் பரிசோதிக்கப்பட்டது. பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த நீர்மூழ்கிப் படகு நீரை உள்ளிழுத்து வெளியேற்றும் பொறிமுறை மூலம் அன்று பரீட்சிக்கப்பட்டது.
இதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள தீவுகளின் கப்பல் கட்டுமிடம் ஒன்றில் அரைகுறையாக வடிவமைக்கப்பட்ட சிறிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று (Half-built miniature submarine) தொடர்பான தகவல்களும் வெளிவந்திருந்தன.
இரண்டு அல்லது மூன்று பேர் பயணம் செய்யக்கூடிய இந்த சிறிய நீர்மூழ்கிக் கப்பல் 1990 களில் விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட கப்பலை ஒத்த வகை எனவும் இலங்கையின் புலனாய்வுத்துறை அன்று தெரிவித்திருந்தது.
கடற்சமரை பொறுத்தவரை அதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
மேற்பரப்பின் மீது நடைபெறும் சமர், வான்வழித் தாக்குதல், நீரடித் தாக்குதல் என்பனவே அவையாகும்.
இந்த ஒவ்வொரு தாக்குதல்களும் போருக்கு ஒவ்வொரு வகையான வியூகங்களை கொடுக்கக் கூடியவை.
இதில் நீரடித் தாக்குதலானது தாக்குதல் நடத்தும் கலம் எதிரியின் கண்களில் படாமல் பயணிப்பது அனுகூலமானது. அதாவது அது அதிக ஆழத்தில் பயணிக்கும் போது அதனை கண்டுபிடித்து தாக்கி அழிப்பது கடினமானது.
மேலும் கலம் எதிரியின் கண்களில் படாமல் பயணிப்பதனால் அது தனது இலக்குகளை மிகவும் அண்மையில் நெருங்கி அழித்து விடக்கூடியது.
நீர்மூழ்கிக் கப்பலானது இந்த நேரடியான தாக்குதல் அனுகூலங்களுக்கு அப்பால் பாரிய உளவியல் தாக்கத்தையும், எதிரிப்படைகளின் ஆள், ஆயுத வளங்களின் வீண் விரயங்களையும் ஏற்படுத்தக் கூடியது.
உதாரணமாக 1982 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கும் ஆர்ஜென்ரீனாவுக்கும் இடையில் நடைபெற்ற பேக்லன்ட் போரில் பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் ஹெங்குறொர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜென்ரீனாவின் ஏ.ஆர்.ஏ ஜெனரல் பெல்கிரேனோ என்ற கப்பலை தாக்கி மூழ்கடித்திருந்தது.
இதில் 323 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னர் தமது கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல்களுக்கு எந்த நேரமும், எந்த இடத்திலும் இலகுவாக உட்படலாம் என்பதை உணர்ந்த ஆர்ஜென்ரீனா கடற்படையினர் தமது கப்பல்களை போர் முடியும் வரை துறைமுகங்களுக்குள்ளேயே பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
அதாவது மிகவும் பரந்த கடற்பிரதேசத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறும் தாக்குதல்களை தடுப்பதற்கு எதிர்த்தரப்பு தனது அதிகளவான வளங்களை பயன்படுத்த வேண்டும் அல்லது களத்தில் இருந்து ஒதுங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. இதுதான் அதன் நேரடியற்ற மற்றும் உளவியல் தாக்கங்களுக்கான சிறு உதாரணம்.
இலங்கையைப் பொறுத்த வரையில் நாயாறு கடற்பரப்பில் இடம்பெற்ற தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலாக இருந்தால் அது அரசாங்கத்தின் கப்பல் வர்த்தகத்துறையிலும், படையினருக்கான விநியோக வழிகளிலும் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது. நாயாறு கடற்பகுதியில் நடைபெற்ற கடல் தாக்குதலில் மூன்று கடற்கரும்புலிகள் பலியானதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் ஸ்ரெல்த் படகு அல்லது நீர்மூழ்கி படகின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களை வலுவாக ஏற்படுத்தி உள்ளதாக தென்னிலங்கை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நீரடித்தாக்குதலானது கடற்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை எற்படுத்த வல்லது என்பதுடன் ஏறத்தாள நான்கு டிவிசன் இராணுவத்தினரும் பல ஆயிரம் கடற்படையினர் மற்றும் காவல்துறையினரும் முடங்கிப் போயுள்ள யாழ்.குடாநாட்டிற்கான விநியோக வழிகளிலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
இதனையே கடந்த செவ்வாய்கிழமை அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப்புலிகளின் படைத்துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாயாறு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடல் தாக்குதல் உத்திகள் தொடர்பாக தகவல் எதுவும் கூறுவதை தவிர்த்துக் கொண்ட அவர், இந்த தாக்குதல் உத்திகள் பல தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், படையினரின் விநியோகங்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய தாக்குதல் உத்திகளை எதிர்கொள்வதற்கு அரசிற்கு அதிக படைவளமும், நிதிவளவும் தேவை.
அதாவது நீண்ட கடற்பரப்பில் கண்ணிவெடிகளை தேடி அலைவதற்கும், நீர்மூழ்கிகளை கண்டறிவதற்கும் நவீன தொழில்நுட்பங்களும், பெருமளவான நிதிவளமும் தேவை. நடைபெற்றுவரும் போரினால் ஏற்கனவே இலங்கை அரசின் பொருளாதாரம் மிகவும் பாதகமான கட்டத்தை அடைந்துள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவு 22 சதவீதத்தை அண்மித்துவரும் இந்த நிலையில் புதிதாக திறக்கப்படும் களமுனைகளும் புதிய தாக்குதல் உத்திகளும் யாரும் எதிர்பார்க்காத திசையில் போரை நகர்த்த போகின்றது என்பது மட்டும் யதார்த்தமானது.
Comments