'ஆர்ப்பரித்து வந்த பகையை அடித்து விரட்டிய புலிகள்"

சிங்களத்தின் புகழ் பூத்த இரண்டு டிவிசன் படையாட்களை முன்னகர்த்திப் புலி வேட்டைக்குப் புறப்பட்ட சிங்களப் படைத் தலைமை, எமது வீரர்கள் களத்தில் காட்டிய வீரத்தின் முன் நின்றுபிடிக்க முடியாது எதிர்பாராத தோல்வியோடு அவமானத்துடன் தமது படைகளை பின்வலித்துக் கொண்டனர்.

ஒரே நேரத்தில் முகமாலையின் வலதும் - இடதுமாகக் கைகளை அகல விரித்தாற் போல நீண்டு கிடக்கும் புலிகளின் முன்னரங்கத்தின் பல இடங்களிலும் உடைப்பை ஏற்படுத்திப் படைகளை உள்நுழைப்பதே படைத்தலைமையின் நோக்காகும்.

சிங்கள மரபுப் போர்ப் படைக்கு வலுவூட்ட ஆட்லறி - மோட்டார் மற்றும் டாங்கிகளின் உயர் சூட்டாதரவுடன் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படை எத்தனிப்பைப் புலி வீரர்கள் தமது முன்னரங்குகளிலேயே முறியடித்து விட்டனர்.

இரவுச் சண்டையின் 'வாத்தியார்களான” புலிகளுக்கே பாடம் புகட்டும் வகையில் இரகசிய இரவு நகர்வை மேற்கொண்ட சிங்களத்தின் 53 வது மற்றும் 55 வது டிவிசன் படையணிகள் புலிகளுக்குப் பாடம் புகட்டுவதற்குப் பதில் புலிகளிடம் மீண்டும் ஒரு பாடம் கற்றுத் தளம் திரும்பின.
அந்தச் சமரில் படைத் தலைமை தமது இருநூறு சிங்களச் சிப்பாய்களின் உயிர்களையும் அறுபத்தொரு படையாட்களின் பாதங்களையும் இழந்து பலநூறு சிப்பாய்களைக் காயங்களுக்குள்ளாக்கிக் கொண்டது.

இதேவேளை படைக் கல ரீதியிலான இழப்போ பாரியதாகும்.
கவசங்கள்..... துப்பாக்கிகள்....... ஏவுகருவிகள்..... ரவைகள்......... வெடிமருந்துகள்.... எனப் பட்டியல் மிக நீளமானது.
வெற்றியை எமது மக்களுக்குப் பரிசளித்து விட்டுக் களத்திலே இருபத்தைந்து புலி வீரர்கள் தலை சாய்த்தனர்.

ஆனையிறவு பெருந்தள வீழ்ச்சியின் பின்னர் வடபோரரங்க முன்னரங்கமே சிங்களத்தின் 'கௌரவச் சண்டைக்களமாக" மாறிவிட்டது.
புலிகளின் யாழ். நோக்கிய பாய்ச்சலைத் தடுத்து நிறுத்தவெனக் கூறிக்கொண்டு, புலிகளிடம் இழந்து போன தமது பழைய 'இரும்புக் கோட்டையான" ஆனையிறவை நோக்கிப் பாய விடுவதற்கென்றே பல ஆயிரக்கணக்கான சிங்களத்தின் புதல்வர்களைச் சிங்களம் இங்கு நிறுத்தியுள்ளது.

சிறப்புப் படையணிகள் - விசேட பயிற்சிகள் - அதிகரித்த படைக்கல சக்தி - மாறுபட்ட யுத்த தந்திரோபாயங்கள் - நீண்டகால தயார்ப்படுத்தல்கள் என்பவற்றினூடாக வடபோர்முனையில் ஒரு யுத்த வெற்றியைப் பெற்று அதனை ஒரு அரசியல் சாதனையாக்கச் சிங்களம் தனது மூளையைத் தோய்த்துத் தாக்குதல் திட்டத்தை வரைகின்ற போதும் அதனால் வடபோர் முனையில் எந்தவொரு வெற்றியையும் இதுவரை பெறமுடியவில்லை.

வட போர்முனையில் சிங்களப் படைகள் சந்தித்து வரும் இந்தத் தொடர் தோல்வியை - பாரிய பின்னடைவை - இராணுவ இயலாமையை எங்ஙனம் புலி வீரர்கள் ஏற்படுத்தி விடுகின்றனர் என அலசி ஆராயும் தென்னிலங்கை மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களின் இராணுவத் திட்டமிடலையும் - களத்திலே புலி வீரர்கள் காட்டும் தியாக சிந்தையையும் வியந்து பாராட்டுகின்றனர்.

சகல வளங்களும் பொருந்திய ஒரு அரச படையை எமது விடுதலைச் சேனையைச் சேர்ந்த போராளிகள் தொடர்ச்சியாகத் தோற்கடிப்பதென்பது வெறுமனே அவர்களின் படைக்கலப் பிரயோகத்தால் மட்டும் நிகழ்ந்து விடுவதில்லை.

எமது விடுதலை வீரர்கள் களத்தில் காட்டும் அசாத்திய துணிச்சல் - அளவிட முடியாத அர்ப்பணிப்பு - அவர்களின் ஓர்மம் என்பவற்றோடு அவர்களின் தியாக சிந்தை என்பனவே இந்த வீரச்சாதனைக்குக் காரணமாக அமைந்து வருகிறது.

இந்தப் பெருமையெல்லாம் எங்கள் வீரர்களையே சாரும்...... இந்த வெற்றியை எப்படிப் பெற்றுத் தந்தார்கள்...... அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்..... முகமாலை முறியடிப்புத் தாக்குதலில் நிகழ்ந்த பல கதைகள் அதைச் சொல்லும்..........
பின்னிரவு தாண்டிய வேளை........ நிலவில் தோய்ந்து கிடந்தது வடபோர்முனை.......
சிங்கமுகமும் - புலி முகமும் சிவந்த விழிகளோடு நேர்... நேர்... சந்தித்து நிற்கும் போர்க்களம்.......
சிங்களத்தின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான சிங்களப் படைகளின் 53 ஆவது மற்றும் 55 ஆவது படைப்பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளான பிரிகேடியர் குணசேகரா மற்றும் பிரிகேடியர் சமந்த பண்டார ஆகியோரின் தலைமையில் ஐந்து பிறிகேட் நட்சத்திர வீரர்கள் புலிகளின் முன்னரங்குகளை நோக்கி நகரக் களமிறக்கி விடப்பட்டனர்.

எதிரிகளின் முன்னகர்வை அறிந்துகொள்ளவும்..... தாமதப்படுத்தவும்........ அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தவுமெனப் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு மற்றும் சிறப்புக் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் புதைத்து வைத்த மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகளை முடிந்தால் களையவும் முடியாவிட்டால் அழிக்கவுமென உயர் அதிர்வு கொண்ட 'டோபிடோக்களுடன்" சிங்களப் படைகள் முன்னகர்ந்தன.

தாராளமாக வீசப்படும் எறிகணைகள் புலிகளுக்கு ஏற்படுத்தும் அழிவும்-எவ்வேளையும் முன்னகர்த்தக்கூடிய நிலையிலிருக்கும் வட போர்முனைக்கென்றே உருவாக்கப்பட்ட கவசக் காலாட்படைப் பிரிவின் உதவியும் தமது முன்னேற்றத்துக்குக் கைகொடுக்கும் என்பது படைத் தரப்பின் நம்பிக்கை.

நேரம் அதிகாலை 2.30 தாண்டும் வேளை...........
ஊரெல்லாம் உறங்கி......... எங்கள் வீரர்கள்...... எல்லையில் விழித்திருந்த நேரம்.......
கிளாலிப் பக்கமாக முதலில் துப்பாக்கிகள் சட...... சடக்கவும்..... 'டோபிடோக்கள்" வெடிக்கவும் தொடங்க அதே சமநேரத்தில் முகமாலைப் பக்கமாகவும், துப்பாக்கி ரவைகளும்.... எறிகணைகளும்..... நெருப்பினால் கோடு கிழிக்க வடபோர்முனையின் கட்டளைத்தளபதி கேணல் தீபன், தளபதி குமணனை தொலைத் தொடர்புக் கருவியின் அலைவரிசையூடாக அழைத்தார்.....,

'குமணன்....... நிலைமை என்ன மாதிரி........ இது வழமையான சின்னதில்லை...... பெரிசு......... அதுக்கேற்ற மாதிரி ஒழுங்குபடுத்தித் தேவையானதை அனுப்புங்கோ......." என அறிவிக்க வடபோர்முனை முழுப் போர்க்கோலம் பூண்டது.......
சிங்களத்தின் ஆட்லறிகளும் - மோட்டார்களும் பல்குழல் வெடிகணைச் செலுத்திகளும்..... எண்ணற்ற எறிகணைகளை முன்னோக்கி ஏவ...... தமிழர் சேனையின் கிட்டுப் பீரங்கிப் படையணியும்.... குட்டிசிறி மோட்டார் படையணியும்..... குழல் வாய்வழியே குண்டுகளை துப்பி எதிர்ச்சமரில் ஈடுபடலாயின.

நவீன போர்க்களம் ஒன்றின் வெம்மைக்குள் வடபோர்க் களமுனை தகித்துக் கொண்டிருந்தது.
கண்ணிவெடிப் பகுதியைத் தாண்டி முன்னேறிய எதிரி தடுப்பு வேலிகளையும் மண்ணணையையும் தாண்டிப் போராளிகளின் காப்பரண்களின் இடைவெளிகளைத் தமக்கான நுழைவுப் பாதையாக்கி....... காவலரண்கள் மீது உச்ச சூட்டு வலுவைப் பிரயோகித்துப் பலவீனமாக்கி நுழைய முயன்று கொண்டிருந்தான் எதிரி......

சுடுகலன்களின் உச்சப் பயன்பாட்டின் காரணமாக முட்கம்பிச் சுருள், தடுப்பு வேலி எல்லாமே தீப்பிழம்பாகிச் சூடேறி நின்றது களம். வலிந்த தாக்குதல் மூலம் உள்நுழைய முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் பணியில் போராளிகள்; ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

காவலரண்களைக் கைப்பற்ற எதிரி முயல்வதும்....... அதனைத் தடுத்து நிறுத்தப் போராளிகள் விளைவதுமாகச் சண்டை தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

எதிரிகளுக்கும், புலிகளுக்கு மிடையே சண்டை நெருக்கமான சண்டையாக மாற துப்பாக்கிகளின் சுடுதூரமும் எறிகணைகளின் வீச்சு இடைவெளியும் குறுக கைக்குண்டுகளைத் தாராளமாக எதிரி பயன்படுத்தினான். பதிலுக்குப் போராளிகளும் கைக்குண்டுத் தாக்குதலை நடாத்தும் அளவுக்கு குறுகிய இடைவெளியில் புலிகளும் படையினரும் மோதிக் கொண்டிருந்தனர்.

பலமான புலிகளின் அரண்களை நோக்கித் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்த எதிரி...... காப்பரண்கள் வீழாது போக..... கனரக ஆயுதங்களையும்..... குறி சூட்டாளர்களையும் போராளிகளின் அரண்களுக்கு மிக நெருக்கமாக ஐம்பது மீற்றருக்கும் குறைவான தூரம் வரை நகர்த்திப் போராளிகளுக்கு தொல்லை கொடுத்தான்.

சில காவலரண்கள் எதிரியிடம் வீழ்ந்தும்........ பல காவலரண்கள் வீழாமலும்....... இன்னும் பல காவலரண்களை எதிரியால் நெருங்கக்கூட முடியாமல் போராளிகளின் எதிர்தாக்குதல் சூடு பறந்து கொண்டிருக்கப் பொழுதும் விடியத் தொடங்கியிருந்தது.......
இரவு தொடங்கிய சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருந்த நிலையில் பல இடங்களில் போராளிகளின் காவலரண்களை எதிரி கைப்பற்றியிருந்தான்..... ஒவ்வொரு காவலரணையும் எதிரியிடம் பறிகொடுக்காமலிருக்கப் போராளிகள் தமது உயிரால் வேலியமைத்து நின்றனர்.

இறுக மூடிக்கிடக்கும் கோட்டைக் கதவைத் திறக்க முயலும் பகையாளிகளாய் எதிரி மூர்க்கத்துடன் அலையலையாய் போராளிகளின் அரண்களில் தொடர்ச்சியாக முட்டிக்கொண்டே இருந்தான்.
அஞ்சாது எதிரியின் போர்த் திமிருக்கு அன்று பதிலடி கொடுத்து அந்தக்கௌரவச் சண்டையில் வென்று தந்த புலிகளின் கதையிருக்கிறதே அது தனி வரலாறு..... சோகங்களை வென்று எங்கள் மண்ணின் மானத்தை வென்ற கதை..... வடபோர்முனையில் நின்ற போராளிகள் ஒவ்வொருவரும் போராடினார்கள்..... ஒவ்வொரு காவலரணும்.... ஒவ்வொரு சுடுகலனும் போராடின...... அந்தக் கதைகள் தான் இந்தக் கதைகள்......

ஏ-ஒன்பது சாலையின் வலது புறத்தேயிருந்த கலையரசனின் காவலரணைக் கைப்பற்ற எதிரி கடுமையான தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தான்.
காவலரணில் நின்றவர்களின் எதிர்த் தாக்குதலையும் மீறி எதிரி முன்னேற முயன்றான். ஒரு கட்டத்தில் எதிரி கலையரசனின் காவலரணிற்குக் கிட்டவாக நெருங்கிவிட்டான். நெருங்கியவன் கைக்குண்டுகளைக் காவலரணை நோக்கி அடுத்தடுத்து வீச...... குண்டோசையால் அந்தக் காவலரண் அதிரத் தொடங்கியது எதிரி காவலரணிலிருந்து பத்து மீற்றருக்குள் நெருங்கியிருந்தான்.

கலையரசனின் காவலரண் எவ்வேளையிலும் எதிரியிடம் விடுபடலாம்...... என்கிற நிலை ஆனால் எந்தக் குழப்பமுமற்று கலையரசன் முகமாலைக் களமுனைத் தளபதி ஜெரிக்கு நிலைமையை அறிவித்துக் கொண்டிருந்தான்......
நெருங்கிவிட்ட எதிரியோடு எத்தகையதொரு சண்டை அங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறதென்பதை அறிவித்துக்கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் கலையரசன் கண்டல் களமுனைத்தளபதி ஜெரிக்கு அறிவித்தான்

எங்களுக்குக் கிட்டவா....... பத்து மீற்றருக்குள்ள எதிரி வந்துட்டான்.......
எனச் சொல்லிச் சில நிமிடங்கள் எதிரியை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தவன் அறிவித்தான்.....
'அண்ண நான்; காயப்பட்டுட்டன்" என சொன்னவன், 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...... எனச் சொல்ல கலையரசன் என்ன முடிவெடுக்க விளைகிறான் என்பதைப் புரிந்து கொண்டு வோக்கியில் கலையரசனைத் தொடர்பெடுத்த ஜெரி.... கலையரசன்...... கலையரசன்.......அவசரப்படாதையிங்கோ ஒரு பிரச்சனையுமில்லை.....உங்களுக்குச் சப்போட் வந்து கொண்டிருக்கு...... உடன....... உடன...... எடுக்கக்கூடிய ஒழுங்கு நடந்து கொண்டிருக்கு என்ற தளபதி ஜெரி...... உதவி அணியொன்றை கலையரசனின் காவலரணை நோக்கி அனுப்ப அந்த அணி மீதும் எதிரி கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தான்......
;இதற்கிடையில் மீண்டும் கலையரசன் தொடர்பெடுத்தான்.....'ஜெரியண்ண........ ஜெரியண்ண......."கலையரசன்... சொல்லுங்கோ........அண்ண...... எனக்குத் திரும்பவும்..... வெடி கொழுவி விட்டுது..... என்றவன் பலவீனமான குரலில்....... அந்த உறுதி மொழியை உச்சரித்தான்.'புலிகளின்... தாகம்.. தமிழீழத்..... தாயகம்....."

என உயிரடங்கும் குரலில் தொலைத் தொடர்பு கருவியூடாக அறிவிக்க அந்தக் காவலரணில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணரக்கூடியதாக இருந்தது...
ஆனாலும், தளபதி ஜெரியின் குரல் அலைவரிசையில் கலையரசனை அழைத்துக் கொண்டிருந்தது.....

'கலையரசன்...... கலையரசன்......"கலையரசன்..... கலையரசன்......பதில் சொல்ல அந்தக் காவலரணிலிருந்த கலையரசனால் முடியாதிருந்தது.
எதிரியின் தாக்குதலை முறியடித்துக்..... கலையரசனின் காவலரணை அணிகள் நெருங்கிய போது..... அங்கு எங்கள் லெப். கலையரசன் வீரச்சாவடைந்திருந்தான்.

தனது கையில் பட்ட முதல் காயத்துக்குக் குருதி வெளியேறாது கட்டுப்போட்டு விட்டுச் சண்டைபிடித்த..... கலையரசனுக்கு... இரண்டாவது காயம்..... நெஞ்சைக் கிழித்துக் குருதியை வெளியேற்றியிருந்தது...... கூடவே உயிரையும்...

சோதியா படையணிப் போராளிகள் நின்ற ஒரு காவலரண்......
நிற்பது பெண் புலிகள் தானே..... சுழட்டி வளைத்துப் பிடிக்கலாம் என்பது எதிரியின் நினைப்பு.....
அடித்து உடைத்துக்கொண்டு முன்னேறினான் எதிரி..... ஆனால், நின்றவர்கள் பிரபாகரன் வளர்த்த வீராங்கனைகளாயிற்றே.....
உள்ளே வருவது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை எதிரிக்குப் புகட்டத்தொடங்கினர் பிள்ளைகள்.

அந்த அரணைக் கைப்பற்றுவதற்காக எல்லா முயற்சிகளையும் எதிரி செய்தான்..... ஆனால், அரண் மட்டும் எதிரியிடம் விடுபடுவதாக இல்லை...... எங்கள் பிள்ளைகள் விடுவதாக இல்லை.....
மீண்டும்..... மீண்டும்...... அலையலையாக எதிரி தாக்கினான்.... சுவரில் வந்து மோதும் பந்து போல மோதுவதும் போராளிகள் எதிர்த்து தாக்க அதே வேகத்தில் பின்னே சென்று... மீண்டும் உக்கிரமாகத் தாக்குவதுமாக இருந்தான்...

அங்கு ஒரு கடுமையான சண்டையின் மூலம் எதிரி கொடுத்துக் கொண்டிருந்த அழுத்தம் காரணமாக அந்த அரணைக் கைவிட்டுப் போராளிகள் பின்வாங்க வேண்டும்....... அல்லது பக்கவாடாக உள்ள அரண்களை நோக்கி நகர்ந்து எதிரியைத் தாக்க வேண்டும்... எனும் அளவுக்கு எதிரியின் சூட்டுவலு கடுமையானதாக இருந்தது...... ஆனால், அந்தக் காவலரணில் நின்ற சோதியா படையணிப் போராளிகள் அரணைக் கைவிடவும் இல்லை..... பக்கவாடாக இருந்த அரண்களை நோக்கி நகரவுமில்லை...... இறுதிவரை தமக்குத் தரப்பட்ட அந்த நிலையைக் காப்பதில் உறுதியோடு போராடினர் பெண்புலிகள்.

முன்னேறிய பகைவரை முறியடித்து அணிகள் அந்தக் காவலரண் பகுதிக்கு சென்ற வேளை அந்தப் போராளிகள் எத்தனை உறுதியோடு இறுதிவரை போராடியிருக்கின்றனர் என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
தமக்குக் கொடுக்கப்பட்ட அந்த நிலையைவிட்டுச் சற்றும் பின்னகராத அந்தப் போராளிகள்....... தம்மைக் களத்திலிருந்து வழி நடாத்திய அணித்தலைவி வீரச்சாவடைந்து, கட்டளைப் பீடத்தோடு தொடர்பெதுவுமற்ற நிலையேற்பட்ட போது குழம்பாது தளம்பாது இறுக்கமான அந்த நிலையை உடைத்திருந்தனர். அதேநேரம் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற இன்னுமொரு அணித்தலைவி அவர்களை வழிநடத்தி சிக்கலான நிலைமையைத் தளபதிகளுக்குக் கூட அறிவிக்காமல் தமது அரணை எதிரியைக் கைப்பற்றவிடாது தடுத்து நிறுத்தியிருந்தனர்.

நவம்பர் பப்பா எனப் படைச் சங்கேதப் பெயர் மூலம் அழைக்கப்படும் புலிகளின் பலமான காவலரண்களில் ஒன்று........
கலையரசன்......செம்பருதி.....அன்புச்செல்வன்....பொழில்......
நான்கு பேரும் அந்தக் காவலரணின் காவலர்கள்...... உள்ளே நுழைய முயலும் எதிரியைத் தடுத்து நிறுத்தும் தடுப்பாளர்கள்......
இந்தக் காவலரண் எமது போராளிகளைப் பொறுத்த வரையில் முக்கியத்துவம் மிக்கது......இது எதிரிக்குத்; தெரியும். அதனால் எதிரி அந்தக்காவலரணை பிடிப்பதற்காக தன்னாலான முயற்சிகள் எல்லாவற்றையும் மேற்கொண்டான்.

எதிரிகள் அடித்துக்கொண்டு முன்னுக்கு வருவதும்....... போராளிகள் வந்தவனுக்கு திருப்பி அடிக்க பின்னகர்ந்து நிலையெடுத்து. மீண்டும் தனது சூட்டுவலுவை உயர்வாகப் பிரயோகித்துக்கொண்டு முன்னேற அங்கு ஒரு மறிப்புச் சண்டை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
இப்படிப் போராளிகளுக்கும் எதிரிகளுக்கும் இடையேயான கடும் தாக்குதல்களுக்குள் சிக்குண்டு அந்தக் காவலரண் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்தக் காவலரணின் முக்கியத்துவம் கருதி....... களமுனைத் தளபதி எந்தச் சந்தர்ப்பத்திலும் எதிரி காவலரணைக் கைப்பற்ற அனுமதித்து விட வேண்டாம் எனக் கட்டளை பிறப்பிக்க...... கலையரசன் பதில் சொன்னான்.... அண்ண.......
இந்தக் காவலரணை விட மாட்டம்...... அப்பிடி அவன் பிடிக்கிறதா இருந்தால்... நாங்கள் வீரச்சாவடைந்த பிறகு தான் அது நடக்கும்... நாங்கள் இதிலேயே வீரச்சாவடைவோமே யொழியப் பின்னுக்கு வரமாட்டம்... சொன்னதைப் போலவே,
லெப். கலையரசன்2ம் லெப். செம்பரிதி2ம் லெப். அன்புச்செல்வன்2ம் லெப். பொழில் ஆகியோர் இறுதிவரைப் போராடி அந்தக் காவலரணுக்குள்ளேயே வீரச்சாவடைந்தார்கள்....
இப்படித்தான் அன்று வடபோர்முனையின் ஒவ்வொரு களமுனையிலும் தீரம் மிகு போராட்டத்தை எங்கள் வீரர்கள் நிகழ்த்தினர். முகமாலையின் இடது பக்க கிளாலி நோக்கிய முன்னரங்கப் பகுதி....
களமுனைத்தளபதி கலையழகனின் கட்டளைப் பகுதி......
ஏற்கனவே சண்டை தொடங்கி விட்ட நிலையில் போராளிகளின் முன்னரங்கப் பகுதியை உடைக்க முயன்றுகொண்டிருந்தான் எதிரி......
டோபிடோவை வெடிக்க வைத்து........ அது ஏற்படுத்திய பாதை வழியே எதிரி முன்னேறுவது நட்சத்திரனுக்கு காவலரணில் இருந்து பார்க்கத் தெளிவாக தெரிகிறது.

முன்னேறிக்கொண்டிருந்த எதிரியை நோக்கிச் சுடத் தொடங்கிய நட்சத்திரன் கள முனைத்தளபதி கலையழகனுக்கு அறிவித்தான்.
அண்ண.... அவங்கள் இப்ப பண்டுல ஏறிட்டாங்கள்.......பண்டுல நிண்டு அடிச்சுக் கொண்டு இருக்கிறாங்கள்......
இப்ப..... அவனுக்கு..... நான் குண்டடிக்கிறன்
என எதிரி நாலுபுறமும் சூழ்ந்து விட்ட அந்த மோசமான நிலையிலும்...... கட்டளைப் பீடத்தோடு சீரான முறையில் தொடர்பை பேணிய கப்டன் நட்சத்திரன் நெருக்கடியான நிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாவிப்பதற்கென்றே வைத்திருந்த பாதுகாப்புக் குண்டை வெடிக்கச் செய்தான்......

இதற்கிடையில் ஏற்கனவே எதிரியின் துப்பாக்கி ரவையொன்று நட்சத்திரனின் தொடைப்பகுதியைக் கிழித்துவிட்ட நிலையில்... அதற்கு ஒரு கட்டுப்போட்டு விட்டு தொலைத் தொடர்புக் கருவியில் களமுனைத் தளபதிக்கு அறிவித்தான்.....
கலையழகண்ண........ கலையழகண்ண.......

காவலரணுக்கு மேல அவங்கள் ஏறிட்டாங்கள்........ ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்...... என்ர காவலரணுக்கு மேல செல்லைப்போடுங்கோ........
எனச் சொல்லிக் கொண்டிருந்தவனை மீண்டும் தாக்கியது... எதிரியின் துப்பாக்கி ரவையொன்று........இது இரண்டாவது காயம்...... இம்முறை தாக்கிய ரவை வயிற்றுப்பகுதியால் நுழைந்து உறுப்புக்களைத் துவம்சம் செய்தபடி வெளியேற நட்சத்திரனால் முடியாதுபோயிற்று.........

என்னால ஏலாமல் கிடக்கு.... என தொலைத்தொடர்புக் கருவியில் அறிவித்தவன் அந்த நிலையிலும் பொறுப்போடு அருகேயிருந்த தோழனிடம் தொலைத்தொடர்புக் கருவியை ஒப்படைத்துவிட்டு கடமையை நிறைவாக செய்த பெருமிதத்தோடு விழிகளை மூடினான் அந்த வீரன்.....
எதிரியிடம் வீழ்ந்து போன காவலரணை எங்கள் வீரர்கள் மீண்டும் கைப்பற்றி அந்தச் சாதனை வீரனின் உடலை மீட்டனர்........

இது ஏ-ஒன்பது சாலையின் இடதுபக்கம்........
முகமாலையிலிருந்து கிளாலி நோக்கிய ஐந்தாவது காவலரணைக் கைப்பற்றும் எதிரியின் முயற்சி.......
வேல்விழியனின் காப்பரணை துப்பாக்கி ரவைகளும்...... ஆர்பிஜி எறிகணைகளும் தாக்கிக் கொண்டிருந்தன.

மிகக்கடுமையான மோதுகை அந்த காவலரண் பகுதியில் நிகழ்ந்து கொண்டிருந்தது...... எதற்கும் அசைந்து கொடுக்காது நிமிர்ந்து நின்ற காவலரணை நோக்கி எதிரி தொடர்ச்சியாக ஆர்பிஜி எறிகணைகளை அரணை நோக்கி ஏவிய போதும் உள்ளேயிருந்த வீரர்களைப் போன்று உறுதி குலையாமல் நின்றது அந்தக் காவலரண்....... எதிரி காவலரணைக் கைப்பற்றுவதற்காக தான் கொண்டு வந்த அத்தனை ஆயுதங்களாலும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்த போதும் வேல்விழியன் நிலைமைகளைத் தெளிவாக...... தளபதிகளுக்கு அறிவித்தபடி...... கட்டளைகளை உள்வாங்கி எதிரியோடு பொருதிக்கொண்டிருந்தான்.

அண்ண.... என்ர பக்கம் பிரச்சினை இல்லை.......
கடுமையா அடிச்சுக் கொண்டிருக்கிறான்.........
என சொல்லிக் கொண்டிருந்த வேல்விழியனின் காவலரணை நோக்கி எதிரி ஏவிய ஒரு ஆர்பிஜி எறிகணை காவலரணில் மோதி வெடித்துச்சிதற..... அதன் இரும்புத்துண்டங்களில் ஒன்று வேல்விழியனின் கால்களில் ஒன்றைச் சிதைக்க... இன்னும் சில... வேல்விழியனின் உடலில் ஆங்காங்கே பொத்தல்களைப் போட்டது....
தாமதிக்க நேரம் இல்லை... அந்த நிலையிலும் வேல்விழியன் அறிவித்தான்.........
அண்ண எனக்கு காலில காயம்...... ஆனாப் பிரச்சினையில்லை......
மேலதிக சூட்டாதரவைத் தந்து கொண்டிருங்கோ.........
நான் தொடர்ந்து சண்டை பிடிக்கிறன்....

எனத் தன் வலியிலும் மேலானது தேசவலி என்பதுபோல சொல்லிக் கொண்டிருந்தவனின் அரணை நோக்கி உதவி அணியை அனுப்பிய போது.......... கடுமையான ஆர்.பி.ஜி தாக்குதலுக்குள்ளாகி சிதைந்து போய்க்கிடந்த காவலரணுக்குள் மயங்கிய நிலையில் உடைந்த காவலரனைப் போலவே கிடந்தான் வேல்விழியன்......... அணைத்துத்தூக்கி..... நெஞ்சணைத்த போதும்..... மயங்கியிருந்தவன் கண் விழிக்கவேயில்லை..... அவன் கண்விழிக்காமலேயே நிரந்தரமாய் கண்மூடிப்போனான்......

பல காவலரண்களைக் கைப்பற்றிய எதிரி வேல்விழியனின் காவலரணையும் அவனின் காவலரனுக்கு அருகிருந்த காவலரணையும் கைப்பற்றும் முயற்சியில் தோற்றுப்போயிருந்தான்...... எங்கள் வீரன் விழிமூடி வென்றிருந்தான்.

இரவுச்சண்டை கிளாலிப் பக்கம் தான் முதலில் வெடித்தது. போராளி பபிதன் கிளாலி கள முனைத்தளபதி குமணனுக்கு தொடர்பெடுத்து... முட்டிட்டாங்கள் என அறிவிக்க அதே சமநேரத்திற்கு பத்தாவது காவலரணை எதிரி மடக்க சண்டை தீவிரம் பெற்றிருந்தது.
பதினொராவது காவலரணில்...
பரந்தாமன்சுடர்மொழிதமிழ்நேசன்

முன்னனித் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு காவலரணை நோக்கி எதிரி முன்னேற முயன்றான்.
குமணண்ண... குமணண்ண.. என அழைத்த பரந்தாமன் காவலரனின் இரண்டு பக்கத்தாலும் எதிரி நெருங்கிவிட்டான்... என்பதை அறிவித்த பரந்தாமன் மேலதிக உதவியை அனுப்பக்கோரினான்.
இந்த பதினொராவது காவலரணில் நடைபெறும் கடுமையான சண்டையை பரந்தாமன் களமுனைத்தளபதி குமணனுக்கு தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருந்தவனின் தொடர்பு திடீரென அறுந்துவிட அங்கு ஏதோ ஒரு சிக்கல் நிகழ்ந்து விட்டதை குமணனால் உணரக்கூடியதாக இருந்தது.

ஒன்றில் காவலரணிலிருந்த போராளிகளை எதிரி வீழ்த்தி காவலரணைக் கைப்பற்றியிருக்க வேண்டும்... அல்லது தொடர்போடு நின்ற பரந்தாமன் வீரச்சாவடைய ஏனையவர்கள் இன்னும் அந்த தொலைத்தொடர்பு கருவியூடாக நிலைமையை கட்டளைப்பீடத்திற்கு அறிவிக்காமல் இருக்க வேண்டும். அல்லது இன்னுமொரு குழப்பமும் நிகழ்ந்திருக்கலாம்... அதுதான் எதிரியின் ஒரு துப்பாக்கி ரவையோ... அல்லது ஒரு எறிகணையின் சிதறலோ... அல்லது தொழில்நுட்பக் கோளாறோ... ஏதோ ஒன்று தொலைத்தொடர்பு கருவியை செயலிழக்க செய்திருக்க வேண்டும்.
அதில் எது நிகழ்ந்திருக்கும்... சண்டை ஓய்ந்து எதிரிகள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் பரந்தாமனாக்களின் காவலரணிற்கு உதவி அணிகள் சென்ற போது...
அந்தக்காவலரணில் பல மணிநேரம் அங்கு ஒரு சண்டை நிகழ்ந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதே நேரம் உடைந்து போன தொலைத் தொடர்புக்கருவியின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
கப்டன் பரந்தாமன்லெப் தமிழ்நேசன்லெப் சுடர்மொழி ஆகியோர் வீரச்சாவடைந்திருந்தனர்.

இந்தக் காவலரணில் இன்னுமொரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்;ததை களமுனைத் தளபதி குமணன் நினைவு கூர்ந்தார்....
காவலரணைக் கைப்பற்றிய எதிரிகளில் ஒருவன் கப்டன் பரந்தாமன் கட்டியிருந்த மணிக்கூட்டை எடுத்து தனது கையில் கட்டியிருக்கிறான்.
பின்னர் எமது முறியடிப்பு அணிகள் தாக்குதலை முறியடித்து விரட்டிய போது பரந்தாமனின் மணிக்கூட்டை எடுத்த எதிரியை எமது வீரர்கள் வீழ்த்தி பரந்தாமனின் மணிக்கூட்டையும் எடுத்தனர்.

அந்தக் காவலரண் பகுதியில் எதிரியின் மூன்றுக்கும் மேற்பட்ட உடல்களையும் பல ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம் என்கிறார். குமணன்......

வடபோர்முனைச்சண்டை புலிகளுக்கே உரித்தான சண்டையாக இருந்தது.முன்னணி அரண்கள் பலவற்றை கைப்பற்றிய மகிழ்ச்சியோடு புலிகளைப் பின்தள்ளி ஆனையிறவை நோக்கி முன்நகரலாமென்ற எதிரியின் நம்பிக்கையை குழிதோண்டிப் புதைத்தனர் எங்கள் வீரர்கள்.......

முன்னகர்ந்த எதிரி எங்கள் வீரர்களின் வியூகத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாகிய நிலையில் கொண்டு வந்த சுடுகலன்களையும்...... வெடிபொருட்களையும் போட்டதைப் போட்டபடியே போட்டுவிட்டு ஓட்டமெடுக்க....... கூடவந்த சகாக்கள் எழுப்பிய அபயக்குரல்கள் அவர்களின் காதுகளில் விழவேயில்லை..... தாம் பிழைத்தாலே போதுமென சூனியப் பகுதியையும் தாண்டி தமது உள்ளரண்களுக்குள் ஓடித்தப்பினர்..........

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி..... என ஓடித் தப்பினர் பகைவர்அன்றைய சமரை கட்டளைத் தளபதி கேணல் தீபன் வழிநடத்த துணைத்தளபதி முகுந்தன் நிலைமைகளுக்கேற்ப செயற்பட முறியடிப்புத் தளபதி விக்கீசின் துணையோடு வீழ்ந்த அரண்களையும் எதிரி நிலையெடுத்திருந்த நிலைகளையும் எமது பீரங்கிப்படைகளின் உதவியோடு மீண்டும் கைப்பற்றி வென்றனர் தலைவர் பிரபாகரனின் வீரர்கள்.

இப்படி....... இப்படி....... பல சாதனைகளை........ எண்ணற்ற தியாகங்களை........ வீரத்தை............. ஓர்மத்தை.........
களத்திலே காட்டி வெற்றியை எமதாக்கினர் எங்கள் வீரர்கள் அன்று வடபோரரங்கிலே.
விடுதலைப் புலிகள் ஏடு (09.05.08)

Comments