சிங்களத்தின் தலையில் பேரடி கொடுத்த புலிகளின் "சிறுத்தீவு" நடவடிக்கை




எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த யூதர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க "புல்மஸ் நடவடிக்கை"யைப் போன்று கடற்புலிகளின் சிங்களத்தின் "சிறுத்தீவு" தளம் மீதான தாக்குதல் நடவடிக்கை அமைந்திருக்கின்றது.

புக முடியாத எதிரியின் கோட்டைக்குள் உள்நுழைந்து எதிரியின் தலைக்கு அடி கொடுக்கும் கொமாண்டோத் தாக்குதல்கள் நீண்டு செல்லும் போரில் போரிடும் தரப்புக்கு உளவுரணை வெகுவாக அதிகரிக்கச் செய்யும் என்று போர் மேதை மோசே தயான் தெரிவித்துள்ளார்.

யூதர்களின் முதன்மைத்தளபதியான அவர், சிறிய அணிகளை வைத்து கொமாண்டோத் தாக்குதல்களை நடத்துவதில் புகழ் பெற்றவர்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படைக்கோட்டைக்குள் கடற்புலிகளின் சிறப்புக் கொமாண்டோ அணியினர் நடத்திய வெற்றிகரத் தாக்குதலானது யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்காப் படையினருக்கு ஒரு நெத்தியடித் தாக்குதலாகும்.யாழ்ப்பாணத்தை பாதுகாக்கும் வகையில் சிங்களப் படைத்தரப்பு பல்வேறு உயர்பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ளது.

யாழ். கரையோரம் எல்லாம் தொடர் முட்கம்பிவேலியைப் போட்டு அவற்றில் அரண்களை அமைத்து படையினரை நிறுத்தியுள்ளது. யாழ்ப்பாண நகரின் தென்பகுதியான பண்ணை - யாழ். கோட்டை - குருநகர்- கொழும்புத்துறை - தென்மராட்சி என நீண்டு செல்லும் கடற்கரையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அதிகமாகும்.

பண்ணை தொடக்கம் பாசையூர் வரையில் கடலுக்குள் மிகச்செறிவான முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டு 50 மீற்றருக்கு ஒரு காவலரண் என செறிவான முகாம்களை சிறிலங்காப் படைத்தரப்பு அமைத்துள்ளது.

யாழ். நகரில் உள்ள 512 ஆம் பிரிகேட் தளத்துக்கு மிக அண்மித்த பிரதேசமாகும் இது.பண்ணையிலிருந்து தெற்காக யாழ். தீவகத்துக்கு மண்டைதீவு ஊடாக செல்லும் வீதி உயர்பாதுகாப்பு வலயமாகும்.வீதியின் இருபுறமும் முட்கம்பி சுருள்கள் வேலிகளாகப் போடப்பட்டுள்ளன.

உயரமான பண்ணைப் பாலத்தில் யாழ். கடலேரியின் கண்ணுக்கெட்டும் வளைவு வரை பூநகரி தொடக்கம் பெருங்கடல் வரை பார்க்கக்கூடியதாக பலமான அவதானிப்பு நிலையம் இருக்கின்றது. இது சிறுத்தீவின் மேற்குப்புற பாதுகாப்பு மற்றும் விழிப்பான நிலைகளாகும்.சிறுத்தீவின் தெற்கில் மண்டைதீவு உள்ளது.

மண்டைதீவில் ஒரு பெரும் கடற்படைத்தளத்தை சிறிலங்கா அமைத்துள்ளது."வேலுசுமண" என்ற பழைய கால சிங்களப்படைத் தளபதியின் பேரில் இது அமைக்கப்பட்டுள்ளது."வேலுசுமண" தளத்தில் ராடார் நிலையம், கடற்படை படகுகளின் தரிப்பிடம் அல்லது இறங்குதுறை ஆகியன பலமாக உள்ளன.மண்டைதீவு பிரதேசமானது பெரும்பாலும் கண்டல் காடுகளைக்கொண்ட தீவு.

அதன் கிழக்குப் புறத்தின் கரையோரம்தான் மக்கள் வாழும் பகுதி.கண்டல்காடு அனைத்துமே முட்கம்பி வேலிகள் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு கிழக்கு கரையில் "வேலுசுமண" கடற்படைத்தளம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.1990 ஆம் ஆண்டில் யாழ். கோட்டைப் படையினரை ஆக்கிரமிக்க சிறிலங்காப் படைத்தரப்பானது மண்டைதீவு நோக்கி "திரிவிடபலய" என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

கோத்தாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் படை நடத்தி 350-க்கும் அதிக அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து மண்டைதீவு கிணறுகளுக்குள் போட்டு எருவால் மூடினர்.

கோட்டையை படையினர் ஆக்கிரமிக்கும் வரை சிறுத்தீவில் சிறிலங்கா தரைப்படையினர் நிலைகொண்டிருந்தனர்.கோட்டைப் படையினர் 1990 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் அதிகாலை பின்பகுதி ஊடாக தப்பி மண்டைதீவுக்கு ஓட அவர்களையும் கொண்டு படைகள் ஊர்காவற்றுறைக்கு பின்வாங்கின. அதன்பின் மண்டைதீவு விடுவிக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டில் மீண்டும் "வலம்புரி" என்ற வல்வளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மண்டைதீவைப் படையினர் ஆக்கிரமித்தனர். அங்கிருந்து யாழ். நகரை கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக இருந்தது.ஆனால் கடைசி வரை அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.

மண்டைதீவை ஆக்கிரமித்த சிறிலங்காப் படையினர் சிறுத்தீவில் தமது நிலைகளை அமைத்து கடலிலும் யாழ். கரையோரத்திலும் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்தனர்.

1993 ஆம் ஆண்டில் மண்டைதீவில் கடற்படைத்தளம் ஒன்று அப்போது அமைக்கப்பட்டு அங்கு கடற்படையின் நீருந்து விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்றை கடற்புலிகள் இரவோடு இரவாக இழுத்துக்கொண்டு வந்துவிட்டனர்.

1994 ஆம் ஆண்டில் மண்டைதீவின் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி சிறிலங்காப் படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தினர். தொடர்ந்து சிறுத்தீவில் சிறிலங்காப் படையினர் நிலைகொண்டிருந்தனர்.

1995 - 1996 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தை சிறிலங்காப் படையினர் வல்வளைத்தனர்.

1990-களின் கடைசியில் தீவகத்திலிருந்து தரைப்படையினர் அகற்றப்பட்டு முழுமையாக கடற்படையினர் நிறுத்தப்பட்டனர். அப்போது மண்டைதீவு சிறுத்தீவில் "வேலுசுமண" கடற்படைத்தளம் அமைக்கப்பட்டது.மண்டைதீவுக்கு வடக்காக கண்டல் மரங்களைக் கொண்டதாக சிறுத்தீவு உள்ளது.

இந்த சிறுத்தீவு ஆட்கள் வாழாத, கடற்றொழிலாளர்கள் தொழிலுக்காக தரித்துச் செல்லும் மற்றும் கரையோரத் தொழில் செய்யும் இடமாகவே அமைந்திருந்தது. 1986 ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கு சிப்பி மற்றும் பவளப்பாறைகளை சுட்டு சுண்ணாம்பு எடுக்கும் தொழில் செய்யப்பட்டது. குகை போன்று கட்டப்பட்ட லூர்து நாயகி என்ற கத்தோலிக்க கோவில் இருந்தது.ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 12 ஆம் நாளில் இங்கு ஒருநாள் திருவிழா நடக்கும்போது மட்டும் மக்கள் அங்கு திரள்வார்கள்.

யாழ். கரையிலிருந்து கடற்றொழிலாளர்கள் நீந்தியும் நடந்தும் இத்தீவுக்குச் செல்வார்கள்.அந்தளவுக்கு ஆழம் குறைந்த கடற்பரப்பு அது. முன்னர் வெளிநாட்டு பாய்மரக்கப்பல்கள் கச்சாய்-அலுப்பாந்தித்துறைகளுக்கு வருவதற்காக ஊர்காவற்றுறையிலிருந்து பண்ணைப்பாலம் ஊடாக அமைந்துள்ள கிழவி வாய்க்கால் என்ற ஆழமான குறுகிய பகுதியை பயன்படுத்தின.இந்தப் பாதையின் ஊடாகவே நீந்திக் கடந்தும் நடந்தும் இத்தீவுக்கு தொழிலாளர்கள் செல்வார்கள்.உவர் மணலும் சதுப்பும் கண்டலும் நிறைந்த கடல் உயிர்களுக்கு வளமான பகுதியாக சிறுத்தீவுப்பகுதி உள்ளது.

1986 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினரின் அட்டூழியம் தொடங்க அப்பகுதிக்கு தொழிலாளர் செல்ல முடியாத ஆபத்தான பகுதியாக இன்றுவரை தொடர்கின்றது."வேலுசுமண" கடற்படைத்தளத்தின் வடக்குப் பகுதியில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயலை சிறுத்தீவு தளம் செய்தது.அங்கு அதற்காக ராடார் தளம் போடப்பட்டு அவதானிப்பு நிலையம் இருந்தது.

50 கலிபர் துப்பாக்கிகள்- ஏகே எல்எம்ஜி- பிகேஎல்எம்ஜி மற்றும் சிறு மோட்டார்கள்- குண்டு செலுத்திகள்- துப்பாக்கிகள் என வைக்கப்பட்டிருந்த பலமான "வேலுசுமண"வின் துணைத்தளமாக சிறுத்தீவு தளம் இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பே இந்தத்தளங்கள் தான் என்ற நிலைப்பாட்டில்தான் சிறிலங்கா கடற்படைத்தளம் இருக்கின்றது.

சிறுத்தீவைச் சுற்றி முட்கம்பிவேலி- முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டு ஈ எறும்பும் நுழையாது என்று இறுமாந்து இருந்தது சிங்களம்.இதற்கான வழங்கல் பாதை "வேலுசுமண" தளத்துடன் தீவின் தெற்குப்பகுதியில் மரக்கட்டைகளால் மண்டைதீவு வீதிவரை போடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கடல்பெருக்கு நேரத்தில் சிறு படகுகள் மூலம் இத்தளத்துக்கு வழங்கலை சிறிலங்கா கடற்படையினர் மேற்கொள்வார்கள்.மேலும் சிறிய ஆழம் குறைந்த கடலில் கண்காணிப்பு நடவடிக்கையைச் செய்ய படகுகள் சிறுத்தீவில் தரித்து நிற்கும். இதனை விட இந்தப்பகுதி தாக்கப்பட்டால் முறியடிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் ஆட்டிலெறிகள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையின் போது பல்குழல் வெடிகணைச் செலுத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு மண்டைதீவில் ஒரு தரையிறக்கத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அது மண்டைதீவின் தென்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அது ஒரு முதன்மைத் தாக்குதலாகவும் அமையவில்லை.

அப்போது மண்டைதீவு- அல்லைப்பிட்டி வரை படையினர் ஆட்டிலெறித் தாக்குதலை நடத்தியிருந்தனர்.உயர் பாதுகாப்பு வியூகங்களுக்கு மத்தியில் இருந்த "வேலுசுமண" சிங்கள கடற்படைத்தளத்தின் முதன்மைத்தளமான சிறுத்தீவுத் தளம் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை கடற்புலிகள் வெற்றிகரமாக ஒரு ஈரூடகத்தாக்குதலை நடத்தி அதனை முழுதாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவற்றில் இருந்த படையினருக்கு அழிவை ஏற்படுத்தினர்.அங்கு நின்ற படையினரில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் 3 பேரின் உடலங்களையும் ராடார்- 50 கலிபர் துப்பாக்கி- எல்எம்ஜி துப்பாக்கிகள் ஆகியவற்றையும் கடற்புலிகள் கைப்பற்றினர்.சிங்களப் படையினரால் இந்த தாக்குதலை தடுக்கவே முடியவில்லை.

கடந்த ஆண்டு இதே மாதம் 30 கடல் மைல் தொலைவுக்குச் சென்று நெடுந்தீவு "குயின்ராக்" கடற்படைத்தளத்தை கடற்புலிகள் ஈரூடகத் தாக்குதலை நடத்தி படையினருக்கு பேரழிவை ஏற்படுத்தி ராடார்கள் உள்ளிட்ட பெருமளவிலான படைப் பொருட்களை கைப்பற்றி அதே 30 கடல் மைல்கள் தொலைவிலான பின்தளத்தை வெற்றிகரமாக வந்தடைந்தனர்.

சிறிய அணிகளைக்கொண்டு ஈரூடகத்தாக்குதலை மேற்கொள்வதில் இதுவரையான வரலாற்றில் யூதர்களுக்கு முதலிடம் இருக்கின்றது.

இதில் எகிப்தின் சுயஸ் கால்வாய் கோட்டைத்தளத்தை அழித்த "புல்மஸ்" நடவடிக்கை முதன்மையானது. அதற்கு அடுத்த படியாக சிறிய அணிகளைக்கொண்டு எதிரியின் கோட்டைக்குள் கடல் வழி சென்று ஈரூடக கொமாண்டோத் தாக்குதலை நடத்தி எதிரிக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தி தளம் திரும்புகின்ற வல்லமை கடற்புலிகளிடம்தான் உள்ளது.

உலகளவில் பெரும் படைகளை வென்ற சிறிய படையணிகளின் போர் வரலாறுகளை நாம் பார்த்தோமானால் அதனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

சிறிலங்காப் படைக் கோட்டைக்குள் யாழ்ப்பாணத்தின் தலையில் கடற்புலிகள் பேரடி கொடுத்துள்ளனர். எதிர்பாராத வேளையில் எதிர்பாராத இடத்தில் இந்த அடி கொடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சீனன்குடாவுக்குள் கடற்படையின் வழங்கல் கப்பல், கடற்புலிகளால் அழிக்கப்பட்டு 28 நாட்களில் கடற்படைக்கு மற்றொரு பேரடி கொடுக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகள் தொடர்பில் சிங்களப் படைகள் வெளியிட்டு வரும் அறிக்கைகளின் உண்மைத்தன்மையை உணர்த்தும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது சிங்களக் கடற்படைக்கு இது ஒரு நெத்தியடி

Comments