அனைத்துலகத்தின் சிறிலங்கா எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றுவது அவசியம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் செயற்குழுவில் மீள் நியமனம் பெற சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தோல்வியில் முடிந்திருக்கின்றது.

ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுள் 101 நாடுகளே சிறிலங்காவின் மீள் நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஏனைய 91 நாடுகளும் ஆதரவு தெரிவிக்கத்தவறியதால் சிறிலங்கா தனது பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்றது.

இது தமிழ் மக்களின் பரப்புரைக்குக் கிடைத்த ஒரு வெற்றி எனவே கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனில் இந்தப் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக்கொள்ள சிறிலங்கா பலமுனைகளிலும் போராடியது. இதற்காக சிறிலங்கா எடுத்துக்கொண்ட முயற்சிகள் தொடர்பாகவும் அதனை முறியடிப்பதற்கு தமிழ் மக்கள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பது பற்றியும் நிலவரத்தின் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

சிறிலங்கா இது விடயத்தில் அடைந்துள்ள தோல்வியானது சிங்களக் கடும்போக்காளர்களையும் அரசாங்க உயர்மட்டத்தினரையும் வெகுவாகப் பாதித்திருக்கின்றது என்பதை நிதானம் இழந்த முறையில் அங்கிருந்து வெளிவரும் கருத்துக்கள் புலப்படுத்தி நிற்கின்றன. இந்த விடயத்தைக் கையாண்ட விதம் குறித்து சிங்கள ஊடகங்களும் கூட அரசாங்கம் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இனப்பிரச்சினை விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு தரப்புமே தாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதனை விடவும் மற்றைய தரப்பைக் குற்றம் சுமத்துவதிலேயே அதிக நேரத்தையும் சக்தியையும் செலவு செய்து வருகின்றன. அரச கட்டமைப்பைக் கொண்டுள்ள சிங்கள தேசம் இது விடயத்தில் பல மடங்கு முன்னணியில் நிற்கின்றது.

தன் மீது சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் யாவற்றையும் "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற பிரம்மாஸ்திரத்தைப் பாவித்து முறியடித்து விடுவதற்கு சிங்கள தேசம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. அது மட்டுமன்றி உலக வல்லாதிக்க சக்திகளுடன் தனக்குள்ள இராஜரீக உறவுகளை, தொடர்புகளைப் பாவித்து அவற்றின் ஆதரவுடனேயே அனைத்து மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருகின்றன எனக்காட்டிக்கொள்ள முயல்வதுடன் சில வேளைகளில் அதனை வெளிப்படையாகவும் தெரிவித்து வருகின்றது.

நியாயம் என்ற அம்சத்தை விட பூகோள நலன்கள் என்ற அம்சம் தூக்கலாக இருப்பதால் ஒரு சில நாடுகள் சிறிலங்காவின் செயற்பாடுகளை - அவை கசப்பாக இருந்தபோதும் - சகித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதனால் அவை உதட்டளவில் சமாதானத்தைப் பேசிய வண்ணம் பின்கதவால் சிறிலங்கா போரை தொடர்வதற்கு ஏதுவாக ஆயுத, பொருண்மிய உதவிகளைத் தங்குதடை இன்றி வழங்கி வருகின்றன.

உலக நாடுகளின் ஒவ்வொரு அசைவிலும் நலன்கள் சம்பந்தப்பட்டிருப்பதனாலேயே சிறிலங்கா, இந்தியா - பாகிஸ்தான், அமெரிக்கா - சீனா, இஸ்ரேல் - ஈரான் எனப் பரஸ்பரம் பரம வைரிகளுடன் ஒரே நேரத்தில் தொடர்பு வைத்திருக்க முடிகின்றது.

இத்தகைய தொடர்புகள் தந்த உற்சாகம் காரணமாகக் கண்மண் தெரியாமல் நடந்து கொள்ள முயற்சித்ததாலேயே இன்றைய இக்கட்டான நிலை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துப் பிரிவுகளுடனும் சிறிலங்கா பகிரங்கமாக மோதிக்கொண்டது. இது தவிர அனைத்துலக மனித உரிமைக் காப்பு நிறுவனங்களுடனும் காட்டமாக நடந்து கொண்டது. அதன் விளைவாக அவை மேற்கொண்ட அனைத்துலக ரீதியிலான பிரசாரம், தமது சொந்த நலன்களையும் மீறி முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒரு சில நாடுகளுக்கு ஏற்படுத்தின.

மேற்குறிப்பிட்ட நாடுகள் இத்தகைய முடிவை எடுப்பதில் தமிழர் தரப்பின் பரப்புரையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பல்வேறு மட்டங்களிலும் மேற்கொண்ட பரப்புரையானது சிறிலங்கா அரசால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மாத்திரம் இன்றி தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தையும் ஏக காலத்தில் உணர்த்தியுள்ளது. இது தமிழ் மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.

91 நாடுகள் - இதனை வேறுவிதமாகக் கூறுவதனால் கிட்டத்தட்ட உலகின் அரைவாசி நாடுகள் - சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன.

இக்கருத்தை - சிறிலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை - தமிழ் மக்களுக்குச் சாதகமான ஒன்றாகக் கருதலாமா என்பது கேள்விக்குரிய விடயம்.

இதற்கு விடை காண்பதை விடுத்து இத்தகைய சிறிலங்கா விரோத நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றலாமா என்று சிந்திப்பதே அவசியமானதும் அனுகூலமானதும் காலத்தின் தேவையும் ஆகும்.

தமிழின அழிப்புக் கோட்பாட்டில் உன்மத்தம் கொண்டுள்ள சிங்கள தேசம் திருந்துவதற்கான வாய்ப்பு, கிட்டிய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே உள்ள சூழலை எமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு நாம் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எமது தேசத்தின் விடியல் தூரப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் முழுமூச்சாகச் செயற்பட முன்வர வேண்டும்

Comments