13 ஆவது அரசியல் திருத்தச் சட்டமும் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே!

1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;.

பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம்.

அப்படியான ஒரு வற்புறுத்தலை பிராந்திய வல்லரசு என நாட்டாண்மை பேசும் இந்திய அரசின் பிரதமரான ராஜீவ் காந்தியாலும் மேற்கொள்ள முடியவில்லை, அல்லது அந்த அளவுக்கு அவரிடம் ஜே.ஆர். மீதான அழுத்தத்தைக் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை நிலை.

எமக்கு வீர வசனம் பேசிய ஜே.என். டிக்ஸிற் கூட வெறும் அற்பம் என்பதே அன்றைய நிலை. கொழும்பில் நடந்த படை அணிவகுப்பு மரியாதையின் போது ராஜீவ் காந்தியை தனது துப்பாக்கியால் தாக்கிய சிங்களச் சிப்பாயின் மன நிலைதான் அன்றும் இன்றும் என்றும் சிங்கள அரசுகளும் சிங்கள மக்களும் வைத்துள்ள இந்தியா மீதான மரியாதை!

ஈழத் தமிழருக்கு இதுவரை கிடைத்திராத மதி நுட்பமும் செயல் திறனும் ஆளுமையும் கொண்ட தலைமை தனியரசு நோக்கிய அரசையும், அரசுக் கட்டுமானங்களான வலிமை மிக்க தரை, கடல், வான் படைகளையும், காவல் துறை, நீதி, நிர்வாகக் கட்டமைப்புகளையும் கொண்டு இருக்கிறது

சிப்பாய் வெயிலால் பாதிப்புற்றார் என்றும் மனநிலை தவறினார் என்றும் ஒப்புக்கு ஜே.ஆர். சப்பைக்கட்டு கட்டியிருந்தாலும், உண்மையில் ஒவ்வொரு சிங்களப் பொதுமகனின் இந்தியா தொடர்பான மனநிலையும் அத்தகையதே. 1991 இல் இந்தியக் கட்டுரையாளர் ஒருவர் கொழும்பில் ஒரு சிங்களவரின் தேநீர்ச் சாலையில் வெண்சுருட்டு கேட்டபோது பீடி வேண்டாமா எனக் கேட்டுக் கடைக்காரர் கிண்டல் அடித்தார். அவர் பீடி என்றது இந்திய இராணுவத்தைக் குறித்த நக்கல் பேச்சு ஆகும்.

நேரு குடும்பத்துடனும் இந்திரா காந்தியுடனும் குடும்ப நட்புப் பாராட்டுவதாகக் கூறிவரும் சிறிமாவோ ஆட்சியின் போதும் இந்தியாவின் வங்க தேச மீட்புப் போரில் பாகிஸ்தானிய விமானங்களுக்குக் கொழும்பில் எரிபொருள் வழங்கித் தனது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சிங்களத்தின் வரலாற்றையும் நினைவு கொள்வது இத்தருணத்தில் அவசியம்.

1987 இல் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய சிப்பாய்க்கு மனநிலை பாதிப்பு என ஜே.ஆர் சமாதானம் கூறியதும், பின்னால் அவனுக்கு பதவி உயர்வு வழங்கிச் சிறப்பித்ததும் சிங்களத்தின் இந்தியா பற்றிய கணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்திய வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், இந்திய இராணுவத்துக்கு எதிராகவும் ஜே.வீ.பீ. கிளர்ச்சி செய்ததும், ஜனாதிபதி பிரேமதாசா புலிகளுக்கு ஆதரவு வழங்கி இந்திய இராணுவத்தை வெளியேற வைத்ததும் பழைய கதை.

இன்று மகிந்த அரசு இந்தியாவுக்கு நிலங்களையும் வர்த்தக வளங்களையும் வழங்கிப் பெரிய சுரண்டல் மோசடியைச் செய்கிறது. அரசிற்கு எதிராக ஜே.வி.பி. இன்று எழுப்பும் கூச்சலையும் கவனியாது தமிழகத்திலே புத்த விகாரைகளைக் கட்ட அனுமதிக்கும் தமிழக அரசுத் தலைமையும், இந்திய மத்திய அரசும் அதன் கொள்கை வகுப்பாளரும், நினைவு கொள்ளத் தவறிய அண்மைக்கால வரலாறுகளாகும்.

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்ற நிலைப் பாட்டில் இந்தியா உள்ளது.

இந்திய அரசின் கொள்கை வகுப்பாளரும் தமிழகத் தமிழ்த் தலைவர்களும் இந்தியாவின் பாரம்பரிய சிறப்புக்களையும் தேசிய கௌரவத்தையும் எண்ணியும் பார்க்காது சிறி லங்கா அரசின் ஆரிய இன மேலாதிக்கச் சிந்தனைக்கு இசைந்தும் இணைந்தும் செயற்படும் போக்கே தெளிவாகிறது.

இந்திய மத்திய அரசுக் கொள்கை வகுப்பதில் ஆரிய மேலாதிக்க அதிகார வர்க்கத்தின் கை வலுப் பெற்றிருப்பதும், தமிழகத்தில் பிராமணீய சக்திகளும் ஆரிய மேலாதிக்க வெறி வசப்பட்டு ஆரிய பௌத்த சிங்களத்துடன் ஈழத் தமிழ் இன அழிப்பு வெறிச் சகதியில் சிக்கியுள்ளதும் தெரிகிறது.

ஈழத் தமிழரைச் சிங்களம் பலி எடுக்கையில் தமிழக மீனவர்களும் தமிழர் என்ற காரணத்தால் சிங்களக் கடற் படையினரின் கொலைப் பட்டியலில் சேர்க்கப் பட்டுப் பலி கொள்ளப் படுகிறார்கள்.

இவை கண்டும் தமிழக மீனவரும் தமிழர் என்பதால் அவலமான ஆதரவற்ற மக்களாய்க் கேட்பார் யாரும் இன்றிச் செத்தழிகிறார்கள்.

இதுவே கன்னடம், ஆந்திரம், கேரளத்து மீனவரானால் முழு இந்தியாவுமே போர்க் கோலம் கொண்டெழுந்து விட்டிருக்கும்.


தமிழன் அல்லாதவரின் கையில் தமிழக ஆட்சி சிக்கியிருப்பதால் தமிழர் நிலை கிள்ளுக் கீரையாய் உள்ளது. குறைந்த பட்சம் ஐ.நா.வில் இந்தியாவின் அனல் கக்கும் பேச்சொலி பிறந்திருக்கும்.

இவை ஏதும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாய் சிங்களத்தின் தமிழன அழிப்பும் தமிழரின் அழுகுரலும் ஆழ அமிழ்ந்து விடுமா?


அதனால்தான் சிங்கள இனவெறிப் பத்திரிகைகள் பிரசுரிக்கும் ஈழத் தமிழருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிரான பொய்ச் செய்திகளை இந்தியா ருடே, மற்றும் சில தமிழ் ஏடுகளும் வானொலி தொலைக்காட்சி போன்ற மின்னியல் ஊடகங்களும் அப்படியே விழுங்கி வாந்தி எடுப்பதும், றோ போன்ற அமைப்புகள் அவற்றை மேற்கோள் காட்டி மத்திய அரசின் கொள்கை வகுப்பாளரைக் கொண்டு ஈழத் தமிழரையும், தமிழகத் தமிழ் உணர்வாளர்களையும் அடக்கப் பயன் படுத்துவதும் அன்றாட நிகழ்வுகளாகித் தலை விரித்தாடுகின்றன.

இத்தகைய பக்கச் சார்பான இந்திய நடவடிக்கையால் சிங்களம் மேலும் ஈழத் தமிழர் மீதான கொடுங்கோல் வன்முறைகளை வரம்பு மீறிச் செய்வதை இன்று அகில உலகமே கவனத்தில் எடுத்துள்ளமை தெரிகிறது. இருந்தும் இந்திய அரசு ஈழத் தமிழர்களின் இன்னல்களைக் களைய முற்படாது கண்டிக்கவும் செய்யாது இருக்கும் நிலையில் இந்தியா அமைதி மூலம் தீர்வு எனப் பேசுவது நகைப்புக்கு இடமானது. மாறாக இந்தியா இலங்கைப் பிரச்சனைத் தீர்வில் முக்கிய பங்களிப்புச் செய்ய வேண்டும் எனப் பேசப்படவே அருகதை அற்ற நிலைதான் உண்மை.

தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க ஏற்ற ஒரு அரசை இலங்கையில் பேண இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் தலையால் கிணறு தோண்டுவது தெரிகிறது. இவர்களின் இழுபறியில் பாஞ்சாலியின் சேலை போல இலங்கை இழுக்கிற பக்கமெல்லாம் இழுபட்டுச் சிதைகிறது.

சிங்களமோ தனது மொழி தனது தேசம் தனது மதம் என்ற ஆரிய சிங்கள பௌத்த இன மேலாதிக்க வெறியில் பாஞ்சாலி போனால் என்ன பட்டத்து அரசு போனால் என்ன புலியை வெல்லும் பகடை ஆட்டம் ஒன்றிலேயே கண்ணாக இருக்கிறது. எந்தச் சிங்களக் கட்சி வந்தாலும் தனது ஆட்சிக் காலத்தில் இனவெறியை வைத்தே குப்பை கொட்ட முயலுகிறது. ஈழத் தமிழரும் பிற அரசுகளும் கொடுக்கும் அழுத்தம் காரணமாகத் தற்காலிக ஆறுதலுக்காக ஒப்பந்தங்கள் உடன் படிக்கைகள் செய்வதும் காலத்தை இழுத்தடித்துக் கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.

ஆறப்போட்டு நாறடிக்கும் கலை சிங்களத்துக்கு கைவந்த ஒன்று என்பதைத் தான் அனுபவித்து வரும் தொடர் ஏமாற்றம் காரணமாக தமிழர் தரப்பு நன்கு புரிந்து கொண்டு விட்டது. ஈழத் தமிழருக்கு இதுவரை கிடைத்திராத மதி நுட்பமும் செயல் திறனும் ஆளுமையும் கொண்ட தலைமை, தனியரசு நோக்கிய அரசையும், அரசுக் கட்டுமானங்களான வலிமை மிக்க தரை, கடல், வான் படைகளையும், காவல் துறை, நீதி, நிர்வாகக் கட்டமைப்புகளையும் கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே அறியப்பட்ட உலக அங்கீகாரம் கொண்ட தரப்பாக சிங்கள அரசு உள்ளது. அதனால் அதனை இல்லாமற் செய்ய முடியாது. கணவன் குடித்தாலும் அடித்தாலும் மனைவி ஐயோ என அலறிச் செத்தாலும், சாகடித்தாலும் பிரச்சனை தானாக என்றோ எப்படியோ தீரத்தான் போகிறது என்பது போன்ற கருத்தே பல உலக அரசுகளின் நிலைப்பாடாக உள்ளது.

பக்கத்து வீட்டுக் காரருக்கு பாத்தியதை அதிகம் உண்டு. அவர் மூட்டிய நெருப்பில் பிறரை எப்படிக் குளிர் காய விடுவது? அவரால் அமைதியாகத் தீர்த்து வைக்கவும் முடியாமல் போய்விட்டது. எனவே“ ரன் அவுட்“ கொடுக்கும் “அம்பயராகச்" செயற்பட எத்தனிக்கிறார். ஆனால் எதிர்த் தரப்பான புலிகள் இயக்கமோ 'சிக்ஸர்கள்" அடித்துக் களத்தை அமர்க்களப் படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆட்டத்தைப் புலிகளும் ஈழத் தமிழரும் ஆடி முடித்தால்தான் ஆட்டம் முடிவு காணும

ஆட்டத்தை நாம் எப்படி ஆடி முடிப்பது? எமது இனப் பிரச்சனை உச்ச நிலைக்கு வராமைக்கு 100 வருடங்களாக தமிழர் தமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இராது காலத்துக்குக் காலம் களத்தையும் வெற்றிக் கோட்டையும் மாற்றிக் கொண்ட பரிதாப நிலையே காரணம்.

இவ்வித அலைக்கழிப்புகளுக்கு எமது பக்கத்து நாட்டின் இயலாமையும் அதன் வெளியுறவுக் கொள்கையுமே காரணம் எனலாம். சிக்குப் படாத சிங்களத்தைச் சிக்க வைக்கும் பொறியாகத் தமிழரைப் பயன்படுத்தி தமிழரின் மீதான சிங்களத்தின் வெறித்தனத்தைப் கட்டுப்படுத்த முடியாத போது தமிழினத்தை இந்தியா நம்பவைத்துக் கழுத்தறுக்கிறது.

இப்போது தன்னால் எதுவும் ஆகாது எனத் தெரிந்தவுடன் எந்தச் சிங்களத்துக்கு எதிராக எமக்கு ஆயுதமும் பயிற்சியும் தந்து எம்மை ஆயுதம் ஏந்திப் போரிட ஊக்குவித்ததோ, இன்று அதே சிங்களத்துக்கு ஆயுதமும், பயிற்சியும் பணமும் கொடுத்து எம்மை அழிக்க இந்தியா இலங்கையை ஊக்குவிக்கிறது. நாம் எமது நண்பர் யார் எதிரி யார் எனத் தெரிந்து கொள்ளத் தவறிதன் விளைவா?

அல்லது சாட்சிக்காரன் காலில் விழுவதையும் விடச் சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற கருத்தில் பாரதம் நடந்து கொள்கிறதா என்பது தெரியாத புதிராக உள்ளது. எது எப்படியாயினும் அழிக்கப்பட்டு அழியும் இனமாக ஈழத் தமிழர் மட்டுமல்ல தமிழ் நாட்டுத் தமிழரும் இருப்பதுதான் உண்மை நிலை.

தமிழர் தமது தலைவிதியைத் தாமே தீர்மானிக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். தமிழினம் என்ன செய்யப் போகிறது ?

ஈழத் தமிழருக்கு ஒரு தனித் தமிழீழம்; வருவதை இந்தியா தடுப்பதே நோக்கமாக இருப்பதை நோர்வேயின் அனுசரனையுடன் தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சுக்களின் போது அது நடந்து கொண்ட விதத்திலேயே புரிகிறது.

எமது பிரச்சனை தீர வேண்டுமானால் அது தன்னால் தீர்க்கப் பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் போக்காக உள்ளது. ஆனால், அது நினைக்கிற படி அதனால் சாதிக்க முடியவில்லை. எனவே

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்ற நிலைப் பாட்டில் இந்தியா உள்ளது.

இந்தியாவும் சிங்களமும் அண்ணணைச் சாகடிக்க அனைத்து வழிகளையும் கடைப் பிடிக்கிறது. எனவே பேட்டை ரவுடிகள் முதல் பேமானி சோமாரிகள் வரை எல்லோரையும் இரு அரசுகளும் பயன்படுத்தி வருகின்றன. வரதராஜப் பெருமாள், ஆனந்த சங்கரி, டக்ளஸ், கருணா வரிசையில் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் புலிகளை அழிக்கும் போரில் குதிக்க இந்தியப் பிரதமரின் வருகைக்காகக் காத்திருக்கிறார். புலிகளை அழித்த பின்னரே தாலி கட்டப் போகிறேன் எனச் சபதமும் எடுத்துள்ளாராம். தாலிக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறா என்பதும் ஆய்வுக்கு உரிய விடையமே. முதலில் இவர் தமது கட்சி பெயரில் உள்ள “விடுதலைப் புலிகள்" என்ற சொற்களை அழித்து விட்டுப் புலிகளை அழிக்கும் சபதங்களை எடுத்தால் நம்பக் கூடியதாக இருக்கும். இவர் சபதம் பலிக்கிறதோ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சபதம் பலிக்கிறதோ தமிமீழம் பிறப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

தன்னால் தீர்க்கப் படாத பிரச்சனை தீர்க்கப் படாமலே ஆறப் போட்டோ நாறப் போட்டோ இயற்கை மரணம் அடைய வைத்துவிடலாம் என்ற நினைப்பில் இந்தியா செயற்படுகிறது. எனவே எங்கள் ஈழச் சரித்திரத்தில் பிள்ளையானுக்கும் ஒரு இடம் அவர் விரும்பிய படி கிடைத்து விடும். ஈழத் தமிழர் முன் மிகப் பெரும் கேள்வியாக எழுந்து நிற்பது நாமும் இவர்கள் எண்ணப்படி நடந்து யார் காலிலாவது விழுந்து அழிந்து மடியப் போகிறோமா அல்லது கஞ்சியை ஆறப் போடாது சூட்டோடு சூடாகக் குடித்து மகிழப் போகிறோமா என்பதே.

1905 இல் உருவான யாழ்ப்பாண சங்கம் என்ற அரசியல் அமைப்பு வடக்கு கிழக்கில் தமிழருக்கான தனி ஆட்சி உரிமை கோரிப் பிரத்தானிய ஆட்சியாளருக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அன்றைய சிங்களத் தலைவர்களின் நண்பர் என்ற முறையில் சேர்.பொன். அருணாசலம் முழு இலங்கைக்குமான போராட்டமாகச் சிங்களத் தலைமையுடன் இணைந்து சேயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். சிங்களம் தமிழரின் தனித் தமிழீழம் உட்பட பல நிபந்தனைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் அவ்வாறு செயற்படச் சிங்களம் இணங்கும் பட்சத்தில் தமிழர் அமைப்பு சிங்களவருடன் இணைந்து இலங்கையின் சுதந்திரம் நோக்கிய பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடரும் என்ற கோரிக்கை அவரிடம் விடுக்கப் பட்டது. சேர்.பொன். அருணாசலத்துடன் சிங்களத் தலைமை இணக்கம் தெரிவித்துப் பின்னர் அதே இணக்கப் பாட்டை மீறித் தமிழரை ஏமாற்றியது.

1925 இல் கண்டித் தேசிய மாநாட்டில் சிங்களவர் தமக்குச் சமஸ்டி ஆட்சி வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க அங்கே வட- கிழக்கு, கண்டி, கரையோரம் என மூன்று அரசுகளாக சமஸ்டி ஆட்சி முறை இலங்கைக்கு வேண்டும் என முதன் முதலில் குரல் எழுப்பிய சிங்களவர்தான் எஸ்.பிள்யூ.ஆர்.டீ. பண்டார நாயக்க. அதே கோரிக்கையை யாழ் இளைஞர் சபையில் பண்டா முன் வைத்தபோது அதனை எதிர்த்து தனி அரசு கோரியது தமிழர் தரப்பு. இன்று அதே சமஸ்டித் தீர்வைக் காண்பதற்குக் கூட சிங்களம் தயாராக இல்லை. அத்தகைய சிங்களத்துடன் சமஸ்டி என்ற நிiயிலும் தமிழினம் வாழக் கூடிய சாத்தியப் பாடும் கிடையாது.

எனவே தமிழரின் தாகம் தனித் தமிழீழத் தாயகம் ஒன்றே என்ற இலக்கு நோக்கிய பயணத்தை விரைந்து முடிப்பதே சிறந்ததும் உகந்ததுமான வழியாகும். அதனால் இன்றே தனித் தமிழீழம் நோக்கி எமது அனைத்துச் செயற் பாடுகளையும் முன்னெடுப்போமாக.

ஈழத்தமிழினம் 100 ஆண்டுக் காலம் அரசியல் வனாந்தரத்தில் கானல் நீர் தேடிய மானாக அலைந்து தாகத்தால் நாவரண்டு சாகும் நிலையில் நிற்கிறது.

எமக்கு உயிர் காக்கும் அமுத சுரபியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனும் உள்ளனர்.

எம்மிடம் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றாகத் திரட்டிப் போரை வெற்றி கொள்வதே எம் இனத்தின் இருப்புக்கு உள்ள ஒரே வழியாக உள்ளது. முயல்வோம், முடிப்போம்!

வன்னித்தம்பி தங்கரத்தினம்


Comments