'அதிர்ச்சித் தாக்குதல்களால் ஆட்டம் காணும் சிறிலங்கா"

சிறிலங்கா கடற்படையின் தாக்குதல் கலமான பி-438 முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் 22.03.08 அன்று தாக்கியழிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அனைத்தையுமே தகர்த்தெறிந்து விட்டோம், கடற்புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டோம், கடற்புலிகளால் இனிமேல் எந்தவொரு தாக்குதல்களையும் நடத்த முடியாது, அவர்களின் ஆயுதப்பாதை - வழங்கல் பாதை - முழுமையாகவே துண்டிக்கப்பட்டது என்றெல்லாம் மார்தட்டிக்கொண்டிருந்தது சிறிலங்கா கடற்படை.

அந்தப் பெருமிதத்துடன் தனது 60 ஆவது ஆண்டு விழாவையும் கோலாகலமாகக் கொண்டாடியது. அந்த நிகழ்வில் கடற்படையின் பெருமை பேசிய கடற்படை தளபதி ரியல் அட்மிரல் வசந்த கரன்னகொட, சிறிலங்கா கடற்படை வரலாற்றிலேயே தான் ஒரு சாதணையாளர் என்றும் கடற்புலிகளின் செயற்பாட்டை முற்றாக முடக்கிய பெருமை தனக்கே உரியது என்றும் பேருரையாற்றி பெருமையைக் கோர சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அதனை ஆமோதித்தார்.

ஆக, கடற்புலிகள் ஓய்வில் இருந்ததை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் சிறிலங்கா கடற்படை பற்றி பெரிதாக நம்பிக்கொண்டிருந்தது.

கடற்படை தலைமையக நடவடிக்கை மையத்தின் இருக்கையிலேயே காலத்தை கழித்து வரும் வழக்கத்தைக்கொண்ட வசந்த கரன்னகொட, அனுராதபுரம் சென்று ஓய்வெடுக்கும் அளவிற்கு கடற்புலிகளின் மௌனம் தாக்கம் செலுத்தியது என்று கூட கூறலாம்.

திருகோணமலை மாவட்டத்தில் 25.04.06 அன்று சிங்களம் தொடக்கிய தாக்குதலில் இருந்து தொடர்ச்சியாக தாம் வெற்றியடைந்து வருவதாக நம்பிக்கை கொண்டிருந்தது மட்டுமின்றி மற்றவர்களையும் நம்ப வைப்பதில் வெற்றி பெற்றிருந்தார்கள்.

அந்த வேளையில் தென் மாகாணத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித்தாக்குதல்கள், அனுராதபுரத்தில் பாய்ந்த கரும்புலி வீரர்களின் 'எல்லாளன்" நடவடிக்கை போன்றவற்றினால் சிறிலங்கா ஓரளவிற்கு நிலை குலைந்துதான் போய் இருந்தது.

சிங்களம் கலங்கிய நிலையில்தான் இருந்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் மீதான தாக்குதல் மூலம் சிங்களம் மீண்டும் ஒருமுறை தனது உளவுரணை உயர்த்திக்கொண்டது.

அந்த உளவுரண் பயனைக்கொண்டு 59 ஆவது டிவிசனை அமைத்து முல்லைத்தீவை குறி இலக்காகக்கொண்ட படை நகர்வையும் ஆரம்பித்தார்கள்.சிங்கள மக்களின் உளவுரண் உயர்வுக்காகவும், தமிழ்த் தேசியம் சார்ந்தோரின் உளவுரண் வீழ்ச்சிக்காகவும் சிங்களம் பாடுபட்டு உழைத்து ஓரளவு வெற்றியும் பெற்றது.

அந்த வேளையில்தான் நாயாறு கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த கடற்படைப் போர்க்கலம் கரும்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டது.2008 ஆம் ஆண்டில் சிங்களம் மீது நடத்தப்பட்ட வினைத்திறன் கூடிய தாக்குதலாக இது அமைந்தது. கடல் ஆட்சி என்ற விடயம் கடற்புலிகளிடமே உள்ளது என்பதனை சிங்களத்திற்கு உணர்த்தப்பட்ட அடியாக இது அமைந்தது.

இந்தத்தாக்குதல் மூலம் கடற்படையின் கதி மட்டுமன்றி யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ள 40,000-க்கும் அதிகமான படையினரின் உயிர் வாழ்வும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. எனவே, யாழ். குடாநாட்டிற்கான இராணுவ வழங்கல் பாதையை பாதுகாப்பதற்காக தனது பெருமளவு வளத்தைச் செலவிட வேண்டிய நிலை சிங்களத்திற்கு ஏற்பட்டது.

வலிந்த தாக்குதல் எதனையும் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சிங்கள கடற்படையானது கடற்புலிகளிடம் இருந்து தமது வழங்கல் பாதையையாவது பாதுகாப்போம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

மார்தட்டிப் பேசிய வசந்த கரன்னகொட, கூனிக்குறுகிக்கொண்டு ஆய்வுகளில் ஈடுபட்டார். அழிக்கப்பட்ட கடற்புலிகள் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பதே அவரது ஆய்வின் கருப்பொருள்.

தமிழீழ தலைநகர் 10.05.08 அன்று அதிர்ந்தது.

திருகோணமலை மட்டுல்ல சிங்கள நாடும்தான்.

சிங்களம் அதிர்ச்சியில் உறைந்தது.

தாக்குதலின் தாக்கம் சிங்களத்தால் தாங்கமுடியாத அளவிற்கு பெரிதாக இருந்தது. 'ஆஏ இன்விசிபிள்" என்ற கப்பலை கையகப்படுத்தி அதற்கு A- 520 என்று பெயரிட்ட சிறிலங்கா கடற்படை, தமது ஆழ்கடல் போருக்கும், யாழ்ப்பணத்திற்குமான வழங்கலுக்கும் என அதனைப் பயன்படுத்தி வந்தது.

அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொண்ட இலவசக் கப்பல்களை வைத்துக்கொண்டே தனது ஆழ்கடல் கடற்படையைப் பேணிவரும் சிங்களம் அனைத்துலக கடற்பரப்பில் கையகப்படுத்தப்பட்ட 'ஆஏ இன்விசிபிள்" கப்பலை தனது வழங்கல் தேவைக்காக பயன்படுத்தி வந்தது.

கடந்த வருடத்தில் சிங்களத்தின் கடற்படை மேற்கொண்ட ஆழ்கடல் நடவடிக்கைகளின்போது A- 520 ,A- 521 ஆகிய கப்பல்களே முதன்மை வழங்கல் பணியை ஆற்றியிருந்தன.

யாழ். குடாநாட்டில் இருந்து மக்களை விரட்டி, வளமான மண்ணை உயர்பாதுகாப்பு வலயங்களாக வல்வளைப்பு செய்து நிலை கொண்டுள்ள படையினரின் முதன்மை வழங்கல் பாதையாக கிழக்கு ஊடான கடற்பரப்பும், திருகோணமலை துறைமுகமும், A- 520 கப்பலும்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்த நிலையில் நாயாறு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூலம் தமது வழங்கல் பாதையின் நிச்சயமற்ற தன்மையை உணர்ந்து சோர்ந்து போய் இருந்த சிங்களத்தின் மீது நடத்தப்பட்ட பெரும் அடியாகவே உச்சப்பாதுகாப்பு மிக்க திருமலை துறைமுகத்தில் வைத்து A- 520 கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கருதப்படுகின்றது.

தாக்குதல் நடத்தப்பட்ட மே மாதம் 10 ஆம் நாள், சிங்களத்தினதும் ஒட்டுக்குழுவினதும் நலனுக்கான மோசடித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. இயல்பிலேயே உயர் பாதுகாப்புடன் இருக்கும் திருகோணமலை அன்றைய நாளில் பல மடங்கு அதிகமான பாதுகாப்புடன் இருந்தது.

50 சிங்கள அமைச்சர்கள் தேர்தல் மோசடிக்காக கிழக்கிற்கு சென்றமையால் அவ்வாறான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் தான் தாக்குதல் நடந்துள்ளது. அதுவும் முழு வெற்றித்தாக்குதலாக அமைந்திருந்தது.

உண்மையில் சிங்கள கடற்படை ஓரு கப்பலை இழந்துள்ளது. காலியில் உள்ள வெடிபொருள் களஞ்சியத்தில் இருந்து ஏற்றி வரப்பட்ட பல கோடி பெறுமதியான வெடிபொருட்களையும் இழந்துள்ளது.

இவை பௌதீக ரீதியிலான இழப்புக்கள் மட்டுமே. இந்த இழப்பைக்கூட ஈடுகட்ட முடியாத நிலையிலேயே சிங்களம் இருக்கின்றது என்பதனை எவரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தளவு மோசமான நிலைக்கு சிங்களத்தின் பொருண்மியம் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது, வீழ்த்தப்பட்டுள்ளது.

ஆனால், எங்கேனும் கடன்பட்டாவது கலங்காமல் இருக்க முடியும் என்று சிறிலங்கா வேந்தன் கருதினாலும் யாழ். குடாநாட்டில் உள்ள படையினரை வாழ வைப்பது எப்படி என்ற கவலையில் கலங்கிப்போயுள்ளது சிங்களம்.

யாழ்ப்பாணத்திற்கான வழங்கல் பாதையின் முதல் அங்கம் 22.03.08 அன்;று அச்சுறுத்தப்பட்ட நிலையில் வழங்கல் பாதையின் 2 ஆவது அங்கமான திருமலைத் துறைமுகத்தில் துளிகூட பாதுகாப்பு இல்லை என்றாகியதோடு, வழங்கல் கப்பலும் அழிக்கப்பட்டு, வழங்கல் பாதையே கடற்புலிகளால் முடக்கப்படக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கான வழங்கல் பாதையை அதாவது, கடல்வழி வழங்கல் வழியை முழுமையாக அடைக்கும் பலத்தையும் திறனையும் கடற்புலிகள் நிறுவிக்காட்டியுள்ளார்கள்.

திருகோணமலைத் துறைமுகத்தில் மட்டுமன்றி எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடிய வல்லமை கடற்புலிகளுக்கு இருப்பதாக இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி வாசன் வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்த இடத்தை அவர் வெளிப்படையாகக்கூறியதன் மூலம் அனைத்துலக புலனாய்வுப் பணியகங்களின் கண்காணிப்புக்கு அமையவும் சிறிலங்காவின் துறைமுகங்கள் ஆபத்தானவை என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் சிறிலங்காவுக்கு வருகை தரும் வணிகக்கப்பல்களின் எண்ணிக்கை குறைவடையும் ஆபத்தும் அதன் காரணமாக கப்பல் கட்டணம், கப்பல் காப்புறுதிக்கட்டணம் என்பனவும் உயரப்போவது திண்ணம். ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மிகக்கூடிய பணவீக்கத்துடன் திண்டாடும் சிங்களம் மேலும், மேலும் சிக்கலை எதிர்நோக்கப்போகின்றது.

இதன் தாக்கம் அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகள் இப்போதே காணப்படுகின்றன. கடற்புலிகளின் அடிகள் மட்டுமே மேற்படி பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கும்போது தரையிலும் ஆகாயத்திலும் தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்து உறை நிலையில்தான் சிங்களம் இருக்கின்றது.

பெருமளவு பணத்தை செலவிட்டு இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் சரத் பொன்சேகாவால் உருவாக்கப்பட்ட 'மெக்" கவசப்படை தொடர்பான மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் ஆனையிறவில் கொடியேற்றும் நாளை எதிர்பார்த்திருந்த சிங்களம், ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள் முகமாலையில் வாங்கிய அடியும் அவர்களுக்கு அதிர்ச்சியானதே.

பெருமளவு வெடிபொருட்களையும் இழந்து, ஒரு பற்றாலியனுக்கு மேற்பட்ட படையினரையும் களமுனையில் இருந்து அகற்றியதுடன் நிற்காமல், சிங்களத்தின் நட்சத்திர தளபதி பிரகேடியர் சமந்த சூரிய பண்டாரவை இராணுவத்தில் இருந்தே விரட்டி விடும் அளவுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி தாக்கமாக இருந்தது.

அது மட்டுமல்ல, சிங்களத்தின் முதன்மையான வலிந்த தாக்குதல் டிவிசனாக இருந்த 53 ஆவது டிவிசனும் தனது உளவுரணை இழந்து போய் அடுத்த நடவடிக்கை குறித்து கதைக்கக்கூட முடியாத நிலையில் இருக்கின்றது.

அது போன்றே வருடக்கணக்காக மன்னாரில் முன்னேறும் 58 ஆவது டிவிசனும்;; வவுனியாவிலிருந்து முன்னேறும் 57 ஆவது டிவிசனும் ஆப்பு இழுத்த குரங்கின் நிலையாக அல்லாடிக்கொண்டிருப்பது அரசுக்கு அதிர்ச்சிதான்.

போரிடுவதற்கு சாதகமற்ற சூழலில்கூட புலிகள் இவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பது சாதாரண படையினர் மனங்களை மட்டுமன்றி படைத்தளபதிகளின் மனங்களையும் கலக்கமடையச் செய்துள்ளது.

58 ஆவது டிவிசன் தளபதியான பிரிகேடியர் சவீந்திர டி சில்வா வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டு, உல்லாசமாக பொழுதைக்கழித்து, அவரது உளவுரணை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதனை கலக்கத்தின் எடுகோளாகக் காட்டலாம்.

57, 58 ஆவது டிவிசன்களின் நிலை இப்படியிருக்க ஜனவரியில் தொடங்கிய முல்லைத்தீவுக்கான 59 ஆவது டிவிசனின் பயணமும் முள்ளில் சிக்கிய சேலையாக நகரவும் முடியாமல் மீறவும் முடியாமல் நடுவில் நிற்கின்றது.

வடபோரரங்கிலும், மன்னார் - வவுனியா களங்களிலும் புலிகள் பலமாக இருப்பதால் மணலாறு பலவீனமாக இருக்கும் என்று கருதி களத்தில் இறங்கிய பிரிகேடியர் நந்தன உடுவத்த வெற்றிச்செய்திக்கு பதிலாக தோல்விச் செய்திகளையே படைத்தலைமைக்கு அனுப்பி வருவதும் சிங்களத்திற்கு கலக்கமே.

நகரமுடியாமல் இறுகிப்போய் இருக்கும் படையினருக்கான நாளாந்த செலவை ஈடுகட்ட முடியாத நிலையில் அரசு இருக்கிறது. கடலிலும், தரையிலும் அடிக்கு மேல் அடிவிழுந்து அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்ட நிலையில் வான்புலிகளும் தமது பங்கிற்கு கடந்த மே மாதம் 27 ஆம் நாள் தாக்குதல் நடத்திவிட்டு பத்திரமாகத் தளம் திரும்பியது எயார் மாசல் றொசான் குணதிலக்கவுக்கு முகத்தில் அடித்தது போலாகி விட்டது.

சிறிலங்கா வான் படையின் உளவுரண்; பூச்சியத்திற்கு இறக்கப்பட்டது. சிங்கள ஊடகங்களே அவர்கள் மீது வசைமாரி பொழிந்தன. வான்புலிகள், களப்புலிகள், கடற்புலிகள் என எல்லோருமாக தத்தம் பங்குக்கு சிங்களத்தின் செருக்கை அடக்கிக்கொண்டிருந்த வேளை -
எப்படி நடந்தது?
யார் காரணம்?
என்று தெரியாமல் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே கொல்லப்பட சிங்களம் அச்சமடைந்து தனது பாதுகாப்பை உச்ச நிலையில் வைத்திருந்தது.

சிங்களத்தின் இதயம் கொழும்பு.கொழும்பின் இதயம் கோட்டை. ஆக, சிறிலங்காவிலேயே உயர் முதன்மைமிக்க இடமான அரச தலைவர் மாளிகை- செயலகம், கடற்படை தலைமையகம், வான்படைத் தலைமையகம், மத்திய வங்கி, உலக வர்த்தக மையம், 'விண்மீன்" விடுதிகள் அமைந்துள்ள கொழும்பு கோட்டைப்பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் சுமார் நூறு காவல்துறையினர் காயமடைந்ததுடன், சிலர் கொல்லப்பட்டமை அரசுக்கு விழுந்த பேரிடியே என்பதில் ஜயம் இல்லை.

போர்க்களம், பின்தளம், வழங்கல் பாதை என்று எல்லா இடத்திலும் நடக்கும் தாக்குதல்களால் நிலைகுலைந்து போய்விட்டது சிறிலங்கா. உள்நாட்டில்தான் அடிமேல் அடி விழுகின்றது என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த சிங்களம், அனைத்துலக சமூகத்தாலும் ஓரங்கட்டப்பட்டது சாதாரண விடயமல்ல.

ஜக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆலோசனை சபைக்கு சிறிலங்கா புதிதாக போட்டியிட்ட நாடல்ல. ஏற்கனவே அந்தச் சபையில் வாக்குப்பலத்துடனான அங்கத்தவத்தை கொண்டிருந்த நாடுதான் சிறிலங்கா.

கடந்த மாதம் 21 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் அந்த அங்கத்துவம் பறிக்கப்பட்டு அவையில் இருந்து விரட்டப்பட்ட சம்பவமானது தொடர் விளைவுகள் பலவற்றை ஏற்படுத்தப்போவது உறுதி.

ஏனெனில் சிறிலங்காவின் பொருண்மியத்தில் முதன்மைப் பங்கு வகிக்கும் தைத்த ஆடை ஏற்றுமதி துறைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. GPS + என்ற வரிச்சலுகை காரணமாக போட்டியற்ற சந்தை வாய்ப்பைக் கொண்டிருக்கும் சிறிலங்கா அதனை இழப்பதற்கான கட்டியமாகவே ஜ.நா.வில் ஏற்பட்ட தோல்வியைக் கொள்ளமுடியும்.

ஜ.நா. மனித உரிமைகள் குழுவில் இருந்து விரட்டப்பட்டதற்கு தமிழ் ஊடகங்களின் அனைத்துலகப் பரப்புரையே காரணம் என்று சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

போராடும் தமிழினத்தின் நியாயங்களை அனைத்துலக சமூகத்திற்கு எடுத்து விளக்கும் பணியை தமிழ் ஊடகங்கள் சிறப்பாகச் செய்வதனை அவரது கூற்று உறுதி செய்கின்றது.

எனவே தமிழ் ஊடகங்கள் தமது பணியை புதுப்பொலிவுடன் மேற்கொள்வார்கள்.


GPS + வரிச்சலுகை வாய்ப்பு சிறிலங்காவுக்கு கிடைக்காமல் போய்விட்டால் போருக்கு செலவிடுவதற்கே நிதி நெருக்கடி ஏற்படும்.

நாளாந்தம் பாடசாலைகள், மருத்துவமனைகள் மீது குண்டுகளைக் கொட்டவும் ஆழ ஊடுருவி வந்து அப்பாவிகளை கொல்வோருக்கு வழங்கும் பணமும் இல்லாத நிலைக்கு சிறிலங்கா தள்ளப்படும்.

எனவே, எமது தேச விடுதலைப் போராட்டம் தளத்தில் வேகம் கொண்டு வீறாப்புடன் முன்னேறும் இந்தத் தருணத்தில் புலத்தில் உள்ள பாச உறவுகள் தமது பணியை - பரப்புரையை - இரட்டிப்பாக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் ஏற்பட்டுள்ளது.

களத்தில் குருதியில் குளித்தும் போராளிகள் தளராமல் போராடி சிங்களத்திற்கு அடி மேல் அடி கொடுத்து அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர்.

அவர்களுக்கு உறுதுணை நிற்கும் உறவுகள் அடுத்து வரும் நாட்களில் அரசியல் பரப்புரைகளை ஜரோப்பாவில் மேற்கொண்டு சிறிலங்காவுக்கான GPS + வரிச்சலுகையை பறித்து தமிழர் மீதான போருக்கான பொருண்மியத்தை குறைப்பார்கள் என்ற பெரு நம்பிக்கையுடன் நிறைவு செய்கின்றேன்
.

கிளிநொச்சியிலிருந்து இ.தமிழ்நேசன்-

Comments