லண்டனில் சிறிலங்கா அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர். பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிறவுண் தலைமையில் 12 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநாடு நடைபெற்ற பொதுநலவாய செயலக மார்ல்பரோ மண்டபம் அமைந்துள்ள பால் மாலில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மதியம் 12:00 மணிமுதல் பிற்பகல் 3:00 மணிவரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
பல்லின மக்களும் கலந்துகொண்டு சிறிலங்கா அரசுக்கு எதிரான தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ் மக்களுக்கு எதிரான போரை நிறுத்தக் கோரியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் நிறுத்தக் கோரியும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள என லண்டனின் பல பாகங்களில் இருந்தும் நகர மத்தியில் கூடிய இப்பெருங்கூட்டம் அந்நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.

ஆரம்பத்தில் சிறு கூட்டமாக தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், நேரம் செல்லச் செல்ல மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு சென்றதால், ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்து அருகில் உள்ள ட்ரவல்கர் சதுக்கத்திலும் மக்கள் சென்று கூடி தமது ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததனை விட அதிகமாக வந்து அலை மோதியதால் ஆர்ப்பாட்டத்துக்கு ஓதுக்கப்பட்ட இடம் காவல்துறையினரால் மேலும் விரிவாக்கப்பட்டு பாதுகாப்பு வேலி விரிவுபடுத்தப்பட்டது. பிரித்தானிய தமிழர் ஒன்றியத்துடன் இணைந்த பிரித்தானிய இளையோர் அமைப்பு, தெற்காசிய ஒற்றுமை அமைப்பு, சமாதானத்துக்கான ஒற்றுமை அமைப்பு, சோசலிச கட்சி, அனைத்துலக சோசலிச அமைப்பு, சிறிலங்கா இடதுசாரி அமைப்பான சமாஜக் கட்சியின் லண்டன் கிளை ஆகிய ஏழு அமைப்புக்கள இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
இதே இடத்தில், நேற்று அனைத்துலக மன்னிப்புச் சபை சிறிலங்கா அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தது.

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைகளை கண்டித்த இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

லண்டனில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் சிறப்பு அமர்வில் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவை உட்பட முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் குறித்து அனைத்துலக நாட்டுத் தலைவர்களுடன் கலந்தாலோசித்தனர்.

இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார்.

Comments