வடபோர்முனையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் வலிந்த தாக்குதல்களை முறியடித்து, அவர்களுக்கு பேரிழப்புக்களை ஏற்படுத்தி அத்தாக்குதல்களை வெற்றித் தாக்குதல்களாக்கியவர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.
தேசியத் தலைவர் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ள தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளுக்கு விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி, வடபோர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.
களமுனையில் நேற்று வெள்ளிக்கிழமை (27.06.08) நடைபெற்ற மதிப்பளிப்பு நிகழ்வில் வடபோர்முனை கட்டளைத்தளபதி கேணல் தீபன் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது:
வடபோர்முனையில் ஏற்படுத்தும் வெற்றிகளின் மாற்றம்தான் விடுதலைப் போராட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
வடபோர்முனை சிறிலங்கா அரசின் அரசியல் களமாக திகழ்கின்றது.
வடபோர்முனை சிறிலங்கா அரசின் திட்டங்களையும் சரத் பொன்சேகாவின் அறிக்கைகளையும் சிறிலங்கா அரசு நினைக்கிற ஒவ்வொன்றையும் உடைக்கின்ற வலுவுடையவர்களாக திகழ்கின்றவர்கள் எமது போராளிகள்.
தற்போது மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளை அழித்துவிட்டுத்தான் சமாதானத்திற்கு வருவதாகக் கூறுகின்றார். ஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க நினைத்தவர்கள் அழிந்த வரலாறுதான் உண்டு.
அத்துலத் முதலி, றஞ்சன் விஜயரட்ன எல்லாரும் இதனைத்தான் கூறினார்கள். அவர்கள் வரலாறில்லமால் போனார்கள். ஆனால் அர்பணிப்புள்ள களத்தில் உறுதியுடன் இருக்கும் போராளிகளுடன் மக்கள் சக்தி எம்முடன் இருக்கும் வரைக்கும் விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாது.
வடபோர்முனையில் சிறிலங்காவின் கவசப் படைப்பிரிவை எதிர்பார்த்து எமது படையணிகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
சிறிலங்காவின் கவசப்படை அவர்களின் உடல்களையும் காயக்காரர்களையும் காவும் ஊர்தியாக மாறும்.
வடபோரரங்கிற்கு சிறிலங்காப் படையினர் தேசிய முதன்மையை கொடுத்துள்ளனர். அதனை உடைக்க போராளிகள் உறுதியுடன் நின்று போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக்களத்தில் வெற்றிகளுக்காக எமது போராளிகள் குருதி சிந்தி தமது உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த அர்ப்பணிப்புத்தான் இந்த வெற்றிகளுக்கு காரணம் என்றார் அவர்.
நிகழ்வில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான சங்கர் வாசித்தார்.
Comments